இந்த 21ஆம் நூற்றாண்டின் நாகரீக முகத்தை எமக்குக் காட்டிய உலகத்தை, தமிழர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பாரென்று, வன்னியிலிருந்து வெளியேறிய மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
வன்னிக்கள அனுபவப் பகிர்வில் மக்கள் சேவையாளர் தெரிவித்த கருத்து இது. ஆயுதம் ஏந்திப் போராடிய புலி உறுப்பினர் அல்ல இவர். சிங்களத்தின் பேரினவாத கோர முகத்தினை அம்பலமாக்கும் செய்தி இது.
35 வருடங்களிற்கு முன்னர், கிழக்குத் தீமோரில் படுகொலையான ஊடகவியலாளர் குறித்து, விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அடம் பிடிக்கும் மனித உரிமைக் காவலர்களின் நிகழ்ச்சி நிரலில், வன்னிப் படுகொலைகள், 2046 ஆம் ஆண்டளவில் பதியப்படலாம். விசாரணைகளின்றி காலத்தை இழுத்தடிப்பதற்கு, பல அரசியல் நலன் சார்ந்த காரணிகள் உண்டு.
ஆனாலும் அதனைத் துரிதப்படுத்துவதற்குரிய தேவை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரித்தானது. அரசியல் உரிமைக்காக மட்டுமல்ல, இன அழிப்பிற்கெதிராகவும் போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. நடந்து முடிந்துவிட்டதாகக் கருதப்படும் ஆயுதப் போராட்டத்தில், சர்வதேசப் பார்வை, பிராந்திய நாடொன்றின் நலன் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறுவோர், அடுத்த போராட்ட நகர்வில் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத் திட்டங்களைத் தெளிவாக முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
தேசியத் தலைவர், விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் தோழர்.க.வே பாலகுமாரன் உட்பட பல தமிழ்நாட்டுத் தலைவர்களும், இந்தியாவை நோக்கி நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் நடந்தது என்ன?இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட மக்களுக்கு உணவையும் மருந்தையும் அனுப்ப ஆவன செய்யுமாறு இந்திய அரசினை நோக்கி, பல திசைகளிலும் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டன. செவிடன் போன்று நடித்தவர்களின் காதுகளில் ஊதிய சங்கொலி போன்று எல்லாமே அமைந்து விட்டது.
பொது மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்குக் குரல் கொடுக்க மறுத்தவர்களின் நலன் குறித்து எவரால் கவலைப்பட முடியும்? பச்சையான கச்சை தீவையும், முழு இலங்கையையும் இழந்ததுதான், இந்திய நலன் விரும்பும் மத்திய கொள்கை வகுப்பாளர்கள் சாதித்த விடயங்கள். கொச்சினிலிருந்து கொழும்புத் துறைமுகத்திற்கு, கப்பல் சேவையை ஆரம்பித்தால், சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைத்தாகிவிட்டதென்று இவர்கள் ஆனந்தமடையலாம்.
இதனால் சனிப்பெயர்ச்சி மாற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, மலையாள மாந்திரீகர்களையும், அண்டசராசரங்களை அளந்தெடுக்கும் சோதிடர்களையும் கொச்சினிலிருந்து கொண்டு வரலாம். இந்தச் சனி விடயந்தான் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரை அச்சுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும், போர்க்குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, சோதிடர்களைவிட மந்திரவாதிகளே பெரும் பங்கினை வகிப்பார்கள். ஆகவே அலரி மாளிகையில், மகிந்த ஆட்சி நீடிப்பதற்காக பல யாகங்களையும் இவர்கள் நடாத்தலாம்.
நேர்வழியைக் காட்டிலும், குறுக்கு வழி நீளமானது என்கிற அறிவியல் உண்மையை இனித்தான் இந்தியா புரியப்போகிறது. தனது உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வுப் பேரவைகளை அழைத்து, பாகிஸ்தான், சிறீலங்காவிலிருந்து வரவிருக்கும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, விவாதிக்கவிருப்பதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.
இந்தக் கொள்கை வகுக்கும் கூட்டத்தில், சட்ட ஆலோசகர் உருத்திர குமாரன் தலைமையில் உருவாகும் நாடு கடந்த அரசின் செயற்பாடுகள் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் வளர்ச்சி குறித்து நிச்சயம் பேசப்படுமென்று நம்பலாம். இறுதிக்கட்டப் போர்வரை, இந்திய, மேற்குலக நலன்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக இருந்தது உண்மை. அதனை எமக்குச் சாதகமாக மாற்ற வேண்டுமாயின், தாயக புலம்பெயர் மக்களிடையே ஒரு பலமான ஒருங்கிணைந்த அரசியல் சக்தி தேவை.
அவ்வகையான இறுக்கமான, மக்கள் சக்தியின் அடித்தளத்திலிருந்து கட்டப்படும் அரசியல் தலைமையே, பிராந்திய சர்வதேச நலன்களோடு பேச முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது இந்திய அரசோ, புலம்பெயர் தமிழ் மக்களால் உருவாக்கப்படும், ஆரம்பப்படிநிலையிலுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுடனோ அல்லது அதன் செயற்பாட்டாளர்களுடனோ உறவாட முன்வரமாட்டார்கள்.
பொதுக்கருத்தினை உருவாக்க முனைபவர்கள், முரண் நிலையினை தூண்டிவிடும் கைங்கரியத்தில் ஈடுபடமாட்டார்கள். ஆகவே காத்திரமான விமர்சனங்களை உள்வாங்கும் மனோநிலையினை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இந்திய மக்கள் மீது எந்தவிதமான தனிப்பட்ட பகையும் தமிழர்களுக்கு இருந்ததில்லை. அதேவேளை அகதிகளாக தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்ததால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிர்ணயிக்கும் சக்தியை இந்தியாவிடம் எவரும் வழங்கவுமில்லை.
இந்தியாவை அனுசரித்துச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?
தற்காலிக இணைப்பில் வட கிழக்கு மாகாணசபை நீடித்திருக்கும். வரதராஜபெருமாள் தொடக்கம் பிள்ளையான் வரையான முதலமைச்சர்கள், காவல்துறைக்காகவும் காணி உரிமைக்காகவும் போராடிக்கொண்டிருப்பார்கள். அதுதான் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படாமலும், உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாமலும், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
இந்நிகழ்வுகளில் இன்னமும் மாற்றங்கள் தோன்றவில்லை.மாறாதவைகளே மாறிக்கொண்டிருக்குமென்கிற புதிய தத்துவமும் நிலை நாட்டப்பட்டிருக்கும். கொடுப்பவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்பவர்களிடம் எதை யாசித்துப் பெற முடியும்?
ஆகவே "நாடு கடந்த அரசு' ஒரு புதிய போராட்ட வடிவமென்று கூறுபவர்கள், அது குறித்தான உரையாடல்களை மக்கள் முன்கொண்டு செல்ல வேண்டும்.
மக்களின் நேரடியான பங்களிப்போடு உருவாக்கப்படும் போராட்ட வடிவங்கள், அசைக்க முடியாத சக்தியாக உருவாகுமென்பது வரலாற்று உண்மை. கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால், அது சக்தியாக உருவெடுக்குமென்கிற யதார்த்தம் இனியாவது உணரப்படவேண்டும்.
- இதயச்சந்திரன்
நன்றி: ஈழமுரசு
Comments