![](http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/september/13.09.09/sweetdreams.jpg)
ம.தனபாலசிங்கம்ஆஸ்திரேலியா சிட்னி நகரில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர். ஓய்வு பெற்ற கணக்கர், ஆழமான தமிழ் அறிஞரும்கூட. அவரது இளைய சகோதரர் தமிழீழ மண் மீட்புக்காய் தன் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்.
ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக உலக நாடுகள் பலவற்றிலும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் சிலரை இந்தி யாவின் வெளிநாடுகளுக்கான உளவு அமைப்பு "ரா' (தஆர) கடந்த 17 ஆண்டுகளில் விசாரித்துள்ளது. அவ்வாறு விசாரிக்கப்பட்டவர்களில் தனபாலசிங்கமும் ஒருவர். 2001-ம் ஆண்டு சிட்னி நகரில் "ரா' அமைப்பின் இரு அதிகாரிகள் அவரை நேர் கண்டனர். அவர்களுக்கு தனபாலசிங்கம் கூறிய பதிலின் ஒரு பகுதி இது:
""எனது உடல் மிகவும் பலவீனமுற்றிருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராய் இருப்பதற்கு அடிப்படைத் தேவையான மனத் துணிவும், அர்ப்பண உணர்வும் எனக்கு இல்லை. தமிழர் களாகிய எமது ஆதர்சனமான அந்த மாபெரும் இயக் கத்தில் அங்கமாக இருக்க வேண்டுமென்றால் "உயிரினும் மேலாய் என் சுதந்திரத்தை மதிக்கிறேன்; உயிரே போயினும் என் விடுதலையை விட்டுக்கொடுக்கவோ, விலை பேசவோமாட்டேன்' என்று குரல் எழுப்பி முழங்கு கிற அச்சமின்மையும், உறுதியும் தேவை. அது எனக்கு இல்லை.
நான் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினன் அல்லேன், பிரபாகரன் அவர்களை நான் சந்தித்தது மில்லை. ஆனால் உலகெங்கும் பல்வேறு நிலப்பரப்பு களிலும் தூரக்கடல்கள் கடந்தும் வாழ்கிற லட்சோப லட்சம் தமிழர்களைப்போல் எனக்கும் கனவொன்று உண்டு. மரணிப்பதற்கு முன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நேரில் காணவேண்டுமென்ற கனவு அது.
பணிவுடன் அந்த மாமனிதன் முன் தெண்டனிட்டுத் தலை வணங்கி, ""நன்றியப்பா... எமக்கான மாண்பினை மீட்டுத் தந்தமைக்கு நன்றி. உன்னால் தமிழர்களாகிய நாங்கள் இன்று தலைநிமிர்ந்து நடக்கிறோம். நன்றி... நன்றி!'' எனச் சொல்ல வேண்டும்.
இது மட்டுமே ஆஸ்திரேலியாவில் வாழும் பலவீனமான இத்தமிழனுக்கு இருக்கிற இறுதிக் கனவு. தனபாலசிங்கம்போல் உலகில் இன்று கோடி தமிழர் உண்டு.
தனக்குப் பாடல்கள், பொதுவில் இசை பிடிக்கும். ஆனால் பாட வராது என நான் நேர்கண்டபோது வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறி யிருந்தார். "உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய தமிழ்ப்பாடல் ஒன்றைச் சொல்லுங்களேன்' என்றபோது முகம் மலர்ந்தவராய்,
"அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா...
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா'
என்று உச்சரித்துப் பதிவாக்கினார். அப்பாடலில் தொடரும் வரிகளை அவர் சொல்லவில்லை. ஆனால் தனபாலசிங்கம் போன்ற பலநூறு தமிழர்களின் உணர்வுப் பதிவுகளை இந்நாட்களில் இணையதளங்களில் கண்ணுறும்போது வரலாற்றுப் புகழ்பெற்ற அப்பாடலின் தொடரும் மறக்க முடியாத வரிகளை இங்கு எழுதவேண்டும்போல் தோன்றுகிறது.
"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர், மானம் காப்போர் சரித்திரம்தனிலே நிற்கின்றார்.'
நடேசன் சத்தியேந்திரா லண்டனில் வாழ்ந்து வரும் புகழ்பெற்ற சட்ட நிபுணர். வாழ்வில் சந்திக்க வேண்டுமென விரும்பிய, விரும்பும் மனிதர்களில் இவரும் ஒருவர்.
அனைத்துலக அரசியல் சட்ட நுணுக் கங்களில் அசாத்தியமான நுண்ணறிவும் திறனும் கொண்டவர். 2002 அமைதிப் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகள் இவரை ஈடு படுத்தியிருக்க வேண்டுமென நண்பர்கள் பலரிடம் நான் கூறிய துண்டு.
நல்லவர், நடுநிலையாளர் என பலரும் சொல்லிக் கேட்டி ருக்கிறேன். அவரும் இணைய இதழ் ஒன்றில் எழுதியிருந்தார். ஒரு காலத்தில் பிரபாகரன் அவர்களுக்கு இணையானவராக மதிக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டு அவர்களை 1990-களில் நடேசன் சத்யேந்திரா சந்தித்திருக்கிறார். 1993-ல் கிட்டு வீரமரணம் அடைந்தபோது அவரைப்பற்றி சத்யேந்திரா பின்வருமாறு எழுதினார் :
""தமிழ் ஈழத்தின் உண்மையான அறிவுஜீவிகளில் ஒருவர் கிட்டு. புத்தகங்கள் படித்தும், பிறர் பேசக்கேட்டும் பெற்றுக்கொண்டவற்றை தம் சொந்த சிந்தனைகள்போல் சித்தரிக்கும் போலி அறிவு மரபுக் காரனல்ல கிட்டு.
எப்போது, எவ்வாறு செய்ய வேண்டுமென்ற தெளிவும், நேர்மை யுமின்றி "அப்படிச் செய்திருக்க வேண்டும்', "இப்படிச் செய்யவேண்டும்' என்றெல்லாம் வாய்ப்பந்தல் கட்டும் அரைகுறை அறிவுஜீவியுமல்ல கிட்டு.
விடுதலைப்பயணம் ஏதோ விரைவு ரயில் வண்டிபோல என்று நினைத்து துரித அதிரடி பலன்களை எதிர்பார்க்கும் முதிரா கனியுமல்ல கிட்டு. கிட்டு நிறைய படித்தார். தனது வாழ்வின் அனுபவங்களினூடே கற்றுக்கொண் டவைகளை படித்தவற்றோடு இணைத்தார்.
அந்த இணைவில் பிறந்த திட்டங்களை முன்னிறுத்தி, தான் சந்தித்த தமிழர்களை செயலுக்குத் தூண்டினார். அவரைப் பொறுத்தவரை சித்தாந்தம் என்பது யதார்த்த செயற்பாடாயிருந்தது.
கிட்டுவைப் பற்றி 1993-ம் ஆண்டு, தான் எழுதிய இவ்வரிகளை மீண்டும் மேற்கோள் காட்டி இப்போது எழுதி யுள்ள சத்தியேந்திரா அவர்கள்,
""கிட்டு போன்ற ஒரு மாவீரன் -அறிவாளி - மாமனிதன் தன்னிலும் மேலாக ஒருவரை தலைவன் என ஏற்றுக் கொள்வ தென்றால் அப்படியான தகுதிகள் அத்தலைவனுக்கு இருந்திருக்க வேண்டும்.'' தொடர்ந்து எழுதும் சத்தியேந் திரா, பிரபாகரன் தன்னிடம் அவ்வப்போது கூறும் சில விஷயங் களை கிட்டு கூறுவதுண்டு. அவற்றில் சில பிரபாகரனின் ஆளுமையை வெளிப்படுத்துவதாய் இருந்தன.
"பேச்சாளர்கள் தலைவர்களாவதில்லை, ஆனால் தலைவர்கள் சில வேளைகளில் பேச்சாளர்களாகவும் இருக்க வாய்ப் புண்டு!'
"தூங்குகிறவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது!'
"புதுடில்லிக்காரர்கள் வியாபாரிகள், எமது விடுதலை
வேட்கைக்கு அவர்கள் விலைபேசுகிறார்கள்!'
ஒருமுறை விடுதலைப்புலிகளின் லண்டன் அலுவலகப் பணியாளர் ஒருவர், தான் பலமுறை அணுகியும்கூட தமிழ்மக்கள் சரியான பதில் தரவில்லை, ஒத்துழைக்கவில்லை என சலித்துக் கொண்டபோது கிட்டு அப்பணியாளருக்குக் கூறினாராம், ""அதனாலென்ன... சரியான பதில் கிட்டும் வரை, ஒத்துழைப்பு வரும் வரை மீண்டும் மீண்டும் தொடர்ந்து சென்று பாரும், பேசும். உமக்குத் தெரியுமா... என்னை இயக்கத்தில் இணைய வைக்கவேண்டி தலைவர் என் வீட்டுக்கு ஆறுமுறையோ, ஏழு முறையோ வந்தார்''.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8THowagsw3Jp-2HZxf_t5njf0YgbePgoQopxF36-_j0DxUxEL-icAFAgWvhUeEA1K68U4RaHIxH2C4bKydPiD8XJ3Npg-Q_r05GSSTgYjAtcpmb60y64GlIKJ-ITEdpr5LChYcleOjyyb/s400/vizha+vizha+ezhuvOm.jpg)
விடாமுயற்சி பிரபாகரனது ஆளுமையின் மிகப்பெரிய பரிமளிப்புகளில் ஒன்றாக இருந்தது. அதுவே
""விழ விழ எழுவோம்'' என்ற புலிகளின் தாரக மந்திரமாகவும் மாறியது. "வெற்றி -பெற்றுக் கொள்வதற்கு, தோல்வி -கற்றுக்கொள்வதற்கு'
என்று பிரபாகரன் அடிக்கடி தளபதிகளிடமும் போராளிகளிடமும் கூறு வதுண்டாம்.
மக்கள் படும் துன்பங்கள்தான் அவரை கவலைக் குள்ளாக்குமேயன்றி தானும் இயக்கமும் சந்திக்கிற பின் னடைவுகள் புதிய உத்வேகத்தையே அவருக்குத் தந்திருக் கின்றன என்பதை நான் பேசிய எல்லா தளபதியர்களும் குறிப்பிட்டனர்.
இந்த அவரது குணாம்சம் இயக்கத்தின் இலட்சியம் நோக்கிய விடாப்பிடித்தனமான உறுதியை ஒவ்வொரு போராளியினதும் தாரக மந்திரமாக ஆக்கியிருந்த தென்பதே உண்மை.
அதேவேளை தமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பணிவும் அவரிடம் இருந்திருக்கிறது. "எங்கு பிழை விட்டோம் என்று யோசியுங்கள்' என்பதும் அவர் அடிக்கடி குறிப்பிடும் ஒன்று எனச் சொல்கிறார்கள். "சர்வாதிகாரி' என இந்திய -உலக ஊடகங்கள் அவர் பற்றி உருவாக்கிய பிம்பத்திற்கு அப்பால், யதார்த்தத்தில் கேள்வி கேட்கும் கலாச்சாரத்தை அவர் மிகவும் ஊக்கு வித்தார் என்றே பலரும் எனக்குக் கூறினர்.
நான் அவரை நேர் கண்டபோது "அச்சம் என்பது மடமையடா' பாட்டு தனக்குப் பிடிக்குமெனக் கூறியதை முன்னர் எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட மற்றொரு பாட்டு 1960-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த "உயிர் மேல் ஆசை' படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி கே.பி.சுந்தராம்பாள் பாடிய
"கேளு பாப்பா... கேள்விகள் ஆயிரம் கேளு பாப்பா...
கேட்டால் கிடைப்பது பொது அறிவு,
இந்த கேள்வியில் வளர்வது பொது அறிவு'
என்ற பாடல். அந்தப் பாடலில் தொடர்ந்து வருகின்ற
"கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்
அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்
பயந்தவன் தனக்கே பகைவனானான்
என்றும் துணிந்தவன் உலகிற்கு ஒளியானான்!'
என்ற வரிகளையும் சிலிர்ப்புடன் சொல்லிக் காட்டினார்.
மே-04 இளைய போராளித் தலைவர்களிடம்...
""கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்,
அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்!''
என்ற வரிகளையும் சொல்லி ஊக்குதல் தந்திருக்கிறார் பிரபாகரன். நிறைவாக அன்றைய நாளில் அவர் சொன்னது தமிழ் வரலாறு மறக்க முடியாத, மறக்கவும் கூடாத ஒன்று.
உலகத்தமிழ் மக்கள் அனைவருக்குமான சவால். அது என்ன?
(நினைவுகள் சுழலும்)
Comments