இந்த மக்கள் சக்தியைச் சிதைப்பதற்கான பெரும் திட்டமிடல்களுடன் சிங்கள தேசம் பலரை நம் மத்தியில் ஊடுருவச் செய்து, தகவல்களைத் திரட்டுவதுடன் பிளவுகளை உருவாக்கும் சதி முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. சிங்கள தேசத்தின் தமிழர்கள் மீதான யுத்தம் புலம்பெயர் தேசமெங்கும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்காக நம்மவர்கள் பலர் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளனர் என்ற அபாயகரமான உண்மைகளையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சமாதான காலத்தில் இவ்வாறு ஊடுருவல் செய்த பலர் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலமிழக்கச் செய்ததிலும், அவர்களது களமுனைத் தகவல்களை எதிரிக்கு வழங்கிப் பேரழிவுகளை உருவாக்கியதையும் இறுதிவரை கள முனையில் இருந்த பல போராளிகள் கண்ணீரோடு தெரிவிப்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். மிகவும் உசார் நிலையிலுள்ள சிங்கள உளவுப் பிரிவினரின் முழுக் கவனமும் புலம்பெயர் தமிழர்கள் மீது திருப்பப்பட்டுள்ளது. எத்தனை தமிழர்கள் இதுவரை விலை போயுள்ளனர் என்ற கணக்கு இப்போதைக்கு வெளிவரப் போவதில்லை.
புலம்பெயர் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதிலும், குழுக்களை உருவாக்குவதிலும் சிங்கள தேசம் எடுக்கும் முயற்சிக்குப் பலர் துணை போக ஆரம்பித்துள்ளதாகவே அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன. பிரான்சில் இந்த நிலை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகின்றது.
பிரான்சில் நடக்கும் போராட்டங்களில் தமிழ் மக்களைப் பெருந்தொகையில் திரட்டுவதற்காக களத்தில் முன்நின்று பாடுபடுபவர்கள் அழைப்பு விடும் நிலையில், அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சிலர் மேற்கொள்ளும் பிரச்சார நடவடிக்கைகளின் பின்னணிகள் அவதானமாக ஆராயப்பட வேண்டும். போராட்டத்தில் மக்கள் பெருந்தொகையாகக் கலந்து கொண்டால், தாம் மேற்கொண்டுள்ள சதி முயற்சிகள் தோல்வி அடைந்துவிடும் என்ற அச்சம் காரணமாக முன் நின்று பாடுபடும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது சேறு பூசும் அவதூறுகளும் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் கடந்த வருட மாவீரர் தின உரையில் மிகத் தெளிவாகவே புலம்பெயர் தமிழர்களுக்கும், இளையோர்களுக்கும் தனது ஆணையைத் தெரிவித்துள்ளார். ‘புலம்பெயர் தமிழர்களே, போராடுங்கள்!, இளையோரே, போராடுங்கள்!’ என்பது அவரது வேத வாக்கு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் பணியை தேசியத் தலைவர் அவர்கள் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளார். நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது விருப்பத்தை புலம் பெயர் தமிழர்கள் யாரும் தவிர்த்துவிட முடியாது.
எங்களது மண்ணின் விடுதலைக்காகவும், எங்களது மக்களின் விடிவிற்காகவும் தங்களை ஆகுதியாக்கி அந்த மண்ணில் தமிழீழக் கனவோடு கண்ணுறங்கும் 31,000 மாவீரர்களது தியாகமும், அந்தப் போர்க்களத்தில் தங்களைப் பலி கொடுத்த இலட்சத்திற்கும் மேலான தமிழர்களுக்கும், இறுதி யுத்த காலத்தில் சிங்கள தேசத்தின் இனஅழிப்புக் கொடூரங்களில் சிதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, உயிரோடு புதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், போராளிகள், தளபதிகள் அனைவருக்குமாக நாம் என்ன கைமாறு செய்யப் பொகின்றோம்?
இத்தனை தழிமர்களைக் கொன்று குவித்த பின்னரும் எஞ்சிய தமிழர்களை வதை முகாம்களுக்குள் வைத்து சித்திரவதைகள் புரியும், கடத்திச் சென்று படுகொலைகள் புரியும் சிங்கள தேசத்திற்கு நாம் என்ன பதில் கொடுக்கப் போகின்றோம்?
புத்தன் போதித்த அன்பு சிங்களவனுக்குப் புரியாத மொழி. காந்தி போதித்த அகிம்சை இந்தியாவுக்குப் பொருந்தாத மொழி. எங்கள் தேசத்து உறவுகளுக்கு எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை புலம்பெயர்ந்து, பாதுகாப்புடன் நீதி ஆட்சி செய்யும் நிலங்களில் வாழும் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்களே. நாங்கள் போராடுவதற்கும், எங்களுக்கான நீதியைக் கோருவதற்கும், எமது உறவுகளது அவலங்களுக்காகக் குரல் கொடுப்பதற்கும் நாங்கள் வாழும் ஜனநாயகத்தைப் பேணும் நாடுகள் என்றுமே தடை போட்டதில்லை. எமக்கான போர்க்களம் என்றுமே திறந்துள்ளது. போராட வேண்டியவர்கள் நாங்கள் மட்டுமே. போர்க் களத்தில் நாங்கள் போராளிகள் மட்டுமே.
எங்களுக்கான கடமைகளை நாங்கள் செய்வது மட்டுமே எமது பணி. யார் வருகிறார்கள்? யார் வரவில்லை? அவர்கள் வந்தால், நாங்கள் வரமாட்டோம்! அவர்கள் வராவிட்டால் நாங்கள் வரமாட்டோம்! என்ற வார்த்தைகளும் வாதங்களும் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க எண்ணுபவர்களின் தேசியத் துரோகமாகவே கணிக்கப்பட வேண்டும்.
தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது. தமிழ்த் தேசியத்திற்கான போர்க் களம் பொதுவானது. அங்கே நாம் வகிக்கும் பங்குகள் மட்டுமே எம்மை முதன்மைப்படுத்தும். மக்களே தலைமையைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளார்கள். மக்களே யாரை ஏற்றுக்கொள்வது, யாரை நிராகரிப்பது என்பதை முடிவு செய்வார்கள். தலைவர்களாக யாரும் தம்மை நியமித்துக் கொள்ள முடியாது என்ற யதார்த்தம் தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.
தமது போர்க்களத்தை வழிநடாத்த, நெறிப்படுத்த யாருக்கு முடியும் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.
தேசியத் தலைவரை நேசிப்பவர்களே! மாவீரர்களை பூசிப்பவர்களே! எங்கள் மக்களை சிங்கள இனவாத அழிப்பிலிருந்து மீட்போம் என்ற உறுதியுடன் அனைவரும் போர்க்களத்திற்கு வாருங்கள்! அங்கே உங்கள் திறமைக்கான பணிகளும் பதவிகளும் காத்திருக்கின்றது.
புலிக்கொடி ஏந்திப் புயலாக வாருங்கள்! இது புலிகளின் காலம் என்று உறுதியோடு வாருங்கள்!!
நன்றி: ஈழநாடு (பாரிஸ்)
Comments