தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிவைத்துள்ள மகிந்தவின் மறைமுகத் திட்டம்

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்து தமிழினத்தைப் பகடைக்காயாக்கி அதனை தமது அரசியல் ஆதாயத்துக்கு செம்மையாக பயன்படுத்துவது சிங்கள தேசத்தின் புதிய முயற்சியில்லை. தமிழினத்தினுள் உள்ள சில கோடரிக்காம்புகளை தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்திய சந்திரிகா அம்மையாருக்கு கதிர்காமர் போலவும் ரணிலுக்கு கருணா போலவும் மகிந்தவுக்கு பிள்ளையான் போலவும் எல்லாக்காலங்களிலுமே அரசுக்குச் சாமரம் வீசும் டக்ளஸ் தேவானந்தா போலவும் தமிழர்களின் கசப்பான வரலாறு நீண்டுகொண்டே செல்லும்.

அந்த வரிசையில் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் துண்டாடும் இரகசியத் திட்டத்துடன் களத்திலிறங்கியுள்ள மகிந்த அரசு சத்தம் சந்தடியில்லாமல் தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டுவருவதாக கட்சிவட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

அதாவது,

விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக மார்தட்டி மகிழ்ச்சியடையும் மகிந்த அரசுக்கு, சிறிலங்காவில் - சிங்கள தேசத்தின் செவிகளுக்கு ஒவ்வாத - தமிழ்த்தேசியம் மற்றும் தமிழர் உரிமை ஆகியவை பற்றி தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் பலமான அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.


tna1போர் முடிவடைந்த சூழ்நிலையில், தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீதான பார்வை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுவதற்கு இலங்கைத்தீவிலலுள்ள உள்ள ஒரே அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

ஆகவே, இப்போதைக்கு கூட்டமைப்பினருடன் வெளிப்படையாக முறுகல்பட்டுக்கொண்டால், அது தமக்கு மேலும் சிக்கலை கொண்டுவரும் என்பது மகிந்த அரசுக்கு உள்ளுர தெரிந்துள்ள விடயம்.

ஆகவே, இரகசிய சதி மூலம், கூட்டமைப்பினுள் இறுக்கமாக இருந்துவரும் அந்த ஒற்றுமையைச் சிதைத்துவிடவும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள் முறுகலை ஏற்படுத்தி, தமிழர்களின் ஜனநாயகக் குரலாக ஒலித்துவரும் கூட்டமைப்பின் அத்திவாரத்தினை அடியோடு அழித்துவிடவும் மகிந்த அரசு படிப்படியாக தனது காய்களை நகர்த்திவருவதாகவும் தெரியவருகிறது.

இதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் ஈ.பி.டி.பியின் உதவியுடன் காரியங்கள் நடந்துவருவதாக கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கட்சியைப் பிளக்கும் மகிந்தவின் வேலைத்திட்டத்துக்கு இலக்காகியிருப்பது ரெலோ எனப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள அமைப்பாகும்.

ஒரே தலைவர் என்ற நிலையை ஒழித்து, தமிழீழ விடுதலை இயக்கத்தினை (ரெலோ) வழிநடத்துவதற்கு என 12 பேர் கொண்ட நடவடிக்கைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் -

ஏற்கனவே கட்சியின் மத்திய குழுவில் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், எஸ்.ஏ.தவநாதன், எஸ்.ரூபராஜ், பொதுச் செயலாளர் பிரசன்ன இந்திரகுமார், விநோ நோகராகலிங்கம் ஆகியோருடன் சேர்த்து என்.சிறீகாந்தா, எஸ்.நிமலராஜ், விந்தன் கனகரட்ணம் மற்றும் இரு புலம்பெயர் தமிழர்கள் ஆகியோர் இணைக்கப்பட்டு புதிய நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தியின் பின்னணியிலேயே இந்தச் சதித்திட்டத்தின் ஆணிவேர் ஒழிந்திருப்பதாக விடயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதாவது, மன்னாரைச் சொந்த இடமாகக் கொண்ட ரெலோ நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் பணியாற்றிவந்த ரெலோ தொண்டர்கள் பலர் அடைக்கலநாதன் எம்.பி. சரியாக கவனிப்பதில்லை என்றும் கட்சிக்காக உழைக்கும் தமது தேவைகளை அவர் பூர்த்திசெய்வதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்து அக்கட்சியிலிருந்து பிரிந்து செயற்படதொடங்கினர்.

அக்காலப்பகுதியில், வவுனியாவிலிருந்த ரெலோவின் அதிருப்தியாளர்கள் குழுவை சேர்ந்த உதயன் என்பவர் வெளிநாடு ஒன்றுக்குச் சென்று அங்கிருந்து தனது சகாக்களுக்கு நிதி ரீதியாக சிறு உதவிகளைச் செய்துவந்தார். அடைக்கலநாதன் குழுவினரை விடுத்து தாம் தனியாக இயங்கவேண்டும் என்பதையும் அடிக்கடி அவர் கூறிவந்தார். இதேவேளை, ஈ.பி.டி.பி.யுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட உதயன், தமது சகாக்களின் நிலைமையைக் கூறி அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் பேச்சு நடத்தியிருக்கிறார்.

இந்தத் தருணத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்ட ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம், வவுனியாவிலிருந்த ரெலோ அதிருப்தியாளர்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்கி முழுமையாகவே அவர்களை கொள்கை ரீதியில் பிரித்துவிடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

இந்த உதவிகளுக்கு நன்றிக்கடனாக ஈ.பி.டி.பியுடன் இணைந்துகொள்வதாக ரெலோ அதிருப்தியாளர்கள் குழு கோரிக்கை விடுத்தபோதும், விடுதலைப்புலிகளின் கொள்கைகளை ஏற்று அவர்களுடன் பணிபுரிந்த ரெலோவிலிருந்து வெளியேறிய இவர்களை நம்பலாமா?

இவர்களை தனது கட்சிக்குள் இணைத்து, கடைசியில் வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாகிவிடாதா?
என்ற சந்தேகத்தில் அந்த விண்ணப்பத்தை ஈ.பி.டி.பி. நிராகரித்தவிட்டது.

அவர்களைப் பிரித்து எடுக்கவேண்டும், ஆனால் அதற்காக அவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாகவிருந்தது.

அரசின் திட்டத்தை இவர்களை வைத்து எவ்வாறு பந்தாடலாம் என்று போட்ட திட்டத்தின் எதிரொலிதான், வவுனியா ரொலோ முகாமில் சிறிது காலத்துக்கு முன்னர் இடம்பெற்ற திடீர் காவல்துறை தேடுதல் நாடகம்.

அதாவது, வவுனியாவில் ரொலோ குழுவினர் பொதுமக்களுக்கான தொலைக்காட்சி இணைப்பை வழங்கும் சேவையை மேற்கொண்டு வந்திருந்தனர். இந்தத் தொலைக்காட்சி இணைப்பு வழங்குபவர்கள் ஊடாக ரொலோ முகாமினுள் ஆயுதங்கள் ஒரு தொகுதியை உள்ளே வைத்துவிட்ட ரெலோ அதிருப்தியாளர்கள் - ஈ.பி.டி.பியினர், காவல்துறையிடம் தொடர்புகொண்டு, ரொலோ முகாமில் ஆயுதங்கள் உள்ளதாக தகவலையும் வழங்கினர். இதனை அடுத்து, முகாமை சோதனையிட்ட காவல்துறையினர், ஆயுதங்களை மீட்டுச் சென்றதுடன் அங்கிருந்த சிலரைக் கைதுசெய்து சென்று விசாரணை செய்தனர்.

மொத்தத்தில், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனை இந்தப் பொறிக்குள் சிக்கவைத்து அவரைச் சிறைக்குள் தள்ளுவதுதான் இரகசிய திட்டம். இதன்படி, தற்போது இந்த விடயத்துக்கு கை, கால் வைத்து, தற்போது இந்தியாவிலிருக்கும் செல்வம் அடைக்கலநாதன் நாடு திரும்பியவுடன் கைது செய்வதற்கான, பாரிய திட்டத்துடன் சிறிலங்கா காவல்துறையினர் காத்திருப்பதாக விடயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில், ஈ.பி.டி.பியுடன் சேர்ந்து இயங்குவதன் மூலம் அரசின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கும் ரெலோ அதிருப்தியாளர்கள் குழுவின் தற்போதைய தலைவர் உதயன், வவுனியா நகரசபைக்கான தேர்தலில் அரசு சின்னத்தில் போட்டியிட்டு 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிக்கொண்டார்.

தமது அணியை அரசியல் ரீதியாகத் தூக்கி நிறுத்துவதற்கு முயற்சித்த ரெலோ அதிருப்தியாளர்கள் குழுவின் அடுத்த நடவடிக்கையாகவே, தற்போது கட்சியின் மத்தியகுழுவைக் கூட்டி புதிய அங்கத்தவர்கள் சிலரை நியமிக்கும் வேலை நடைபெற்று முடிந்திருக்கிறது.

எது எப்படி நடைபெறுகிறதோ, ஊர் கூடி அடிபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல தருணம் பார்த்து அரசு எய்த அம்பு கூட்டமைப்பைக் குறிவைத்துக் குடைய ஆரம்பித்திருக்கிறது.

தாயகத்தின் தளம்பாத குரலாக தேசியத்தின் ஆன்ம பலத்தை இன்னமும் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தச் சலசலப்புகளுக்கு அஞ்சாது தனது பணியை முன்னெடுக்கும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் அடித்துக்கூறியுள்ளன.

முகிலன்

Comments