நீயும் வாழு, எம்மையும் வாழ விடு

`வாழு, வாழ விடு' கோட்பாட்டை பின்பற்றினால் மாத்திரமே உலகில் சமாதானம் நிலவும் இந்த கோட்பாட்டின் அடிப்படையில் உலக மக்கள் யாவரும் அடுத்தவர் நிம்மதியைக் குலைக்காமல் நாம் வாழ வேண்டும்.

தாம் என்ன உரிமைகளுடன் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனரோ அதே உரிமையுடன் மற்றவர்களும் வாழ உரிமையுண்டு என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். இதையே தமிழீழ மக்களும் சிங்கள தேசத்திடமும் உலக சமூகத்திடமும் அமைதிக்கான இன்றைய நாளில் வேண்டி நிற்கின்றனர்

உலக சமாதான தினமாக செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டில் உலகமெங்கும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சிறப்பு மாநாடுகள், சொற்பொழிவுகள், தீர்மானங்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. நாடுகளின் தலைவர்களின் சமாதானம் பற்றிய செய்திகள் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் என சகல ஊடகங்களினதும் முதன்மைச் செய்திகளாக வெளிவரப்போகின்றன. ஆண்டில் ஒரு நாளாவது சமாதானம் என்றால் என்ன? அதன் தேவை எதற்கு என்பதை உலகம் சிந்திக்க இந்நாள் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யதார்த்தமாக உலகை நோக்கும்போது எங்கே சமாதானம், எங்கே சமாதானம் என்று தேடுவது மட்டுமல்ல எது சமாதானம் என்று அறிந்து கொள்ளும் ஆர்வமும் கூட வருகின்றது.

உலக சமாதானத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சமாதானம் என்றால், என்ன என்று ஒரு வரையறை செய்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. உலகிற்கு சமாதானம் மிகவும் முக்கியமானது. சமாதானம் எவ்வாறு ஏற்படும் என்பதை வரையறை செய்வது அவசியமாகும்.

நாடுகளுக்கிடையே யுத்தங்கள் நிகழாதிருப்பது மட்டும்தான் சமாதான நிலையா? அல்லது நாடுகளெல்லாம் ஓரிடத்தில் கூடிப் பேசுவது மட்டும் தான் சமாதானமா?

சமாதானம் பற்றிப் பெயரளவில் பேசப்படும் இன்றைய நாளில் சமாதானம் என்றால் என்ன என்பது பற்றிச் சிந்திப்பது அவசியமாகும். அணு ஆயுத உற்பத்தி மூலமோ, ஆயுதக் கண்டுபிடிப்புகள் மூலமோ, சமாதானத்தை உலக அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. யுத்தத்தின் மூலம் சமாதானம் ஏற்படுத்த முடியாது.

இன்று நாடுகளுக்கிடையே பிரச்சினைகள், யுத்தங்கள் நடக்கின்றன. நாடுகளுக்குள்ளேயே பல்வேறு முரண்பாடுகளால் யுத்தங்கள், அட்டூழியங்கள் நடக்கின்றன. அது மட்டுமா? இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே, எத்தனை பிரச்சினைகள். யுத்தங்கள் நடைபெறுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தாது, இல்லாது செய்யாது அமைதியையோ, சமாதானத்தையோ உலகில் ஏற்படுத்த முடியுமா?

இவ்வாறான நிலையில் உலகிலே இல்லாத ஒரு விடயத்தைப் பற்றிச் சிந்திக்கும் நாளாகவே உலக சமாதான நாள் அல்லது உலக அமைதி நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப உலகிலுள்ள நாடுகளில் நமது தாய்த்திருநாடான இலங்கையை எடுத்துக் காட்டாகக் கொண்டு நோக்குவோம்.

இலங்கைத்தீவில் இரு மொழி பேசும் மக்களும் உலகிலுள்ள முக்கிய நான்கு சமயங்களைப் பின்பற்றும் மக்களும் வாழ்கின்றனர். உலகிலுள்ள சின்னஞ்சிறு நாடான இலங்கைத்தீவு இன்று சமாதானம் எங்கே என்று தேடி கொண்டிருக்கும் அவலத்தில் சிக்கித் திண்டாடுகின்றது. சமாதானத்தை, அமைதியைக் காண வழி தெரியாது தடுமாறிச் சீரழிகின்றது.

சமாதானம், அமைதிக்குப் பதிலாக தினந்தோறும் இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் பகைமை, வெறுப்பு, அச்சம் ஆகிய கொடிய சிந்தனைகள் விதைக்கப்பட்டு அவை கருகிவிடாமலிருக்க உரமூட்டி வளர்க்கப்படுகின்றன. நாளும், பொழுதும் இதே சிந்தனை மேலோங்கி செயற்படுத்தப்படும் நமது தாய்த் திருநாடான தமிழீழ மண்ணிலும் இலங்கையிலும் சமாதான, அமைதி தினம் கொண்டாடப்படுவது விநோதமானது. வேடிக்கையானது அல்லவா? இதுபற்றி எவராவது சிந்திப்பார்களா?

நாடுகளிடையே சமாதானம் மட்டுமா சமாதானம், அமைதிக்கு வழி இல்லை. அதற்கும் மேல் பல உள்ளன.

நாடு, இனம், மதம், மொழி, நிறம் போன்ற சகல வேறுபாடுகளுக்கும் அப்பால் தனிமனித சுதந்திரத்தை உரிய முறையில் பேணுவதும் அங்கீகரிப்பதும் நடைமுறையில் தடையின்றி அனுபவிப்பதுமே சமாதானம். உலகின் பொது அமைதி.

மொழி நீதியான அடக்குமுறைகள், சமய ரீதியான வெறுப்புணர்வு, இன ரீதியான, நிற ரீதியான பேதங்கள் நிலவும் ஒரு நாட்டில் அல்லது உலகில் சமாதானம் என்பது போலியானது.

நிம்மதியாக ஒருவன் நித்திரை கொள்ளக்கூடியதாகவோ, வீதியில் நடமாடக் கூடியதாகவோ, கல்வி, தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடியதாகவோ இல்லாதபோது அங்கே சமாதானம், அமைதி நிலவுமென்று கருதினால் அது பைத்தியம் முற்றிய நிலையன்றி பிறிதொன்றல்ல.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டெறிதல், சொத்துகளை அழித்தல், நிம்மதியாக வாழ்ந்த மக்களை அகதிகளாக்குதல், பட்டினிபோடுதல், கடத்தல், அடித்தல், கை கால் முறித்தல், சித்திரவதை செய்தல், மத, மொழி உரிமைகளைப் பறித்தல், வாக்குரிமையைப் பறித்தல் இவ்வாறு பல தீமைகளின் இருப்பிடமாக உள்ள நாடொன்றில் சமாதானம் அமைதி நிலவுமா? சமாதான தினம் கொண்டாடப்படுவதால் ஏதாவது பயன் ஏற்படுமா?

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2009 இன்றைய சமாதான தினத்திலே சமாதானம் என்றால் என்ன? சமாதானத்தின் மூலம் அமைதியை எப்படிக் காண்பது என்பது பற்றியாவது சிந்திப்போம்.

வாழு, வாழ விடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உலக மக்கள் யாவரும் அடுத்தவர் நிம்மதியைக் குலைக்காமல் நாம் வாழ வேண்டும். தாம் என்ன உரிமைகளுடன் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனரோ அதே உரிமையுடன் மற்றவர்களும் வாழ உரிமையுண்டு என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும்.

கொலை வெறிக்கும், கொடும் பகைக்கும் உரமூட்டி, வளப்படுத்தும் ஈனச் செயல்களிலிருந்து உலகம் விடுபடும் நாளே உலக சமாதான தினமாக, நிம்மதி நிலவும் அமைதித் தினமாக விளங்கும்.

இதையாருக்கு, எப்படிப் புரிய வைப்பதென்று தெரியாமல் தத்தளிக்கும் மனித நேய சிந்தனையாளர்களின் தவிப்புக்கு விரைவில் முடிவுகட்டப்பட வேண்டும். ஏன் என்று கேட்பாரை இகழ்வதும் இட்டது தான் சட்டம் என்று எண்ணுவதும் தான் என்ற மமதையுடன் செயற்படுவதும் பயனற்றது. நிலையற்றது என்பதை உலக நாடுகளை ஆட்சி செய்பவர்களும் அதிகாரம் செலுத்துபவர்களும் உணர்ந்து திருந்தும் நாளே உண்மையான சமாதான தினம். அமைதி தினம். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போதே உலக சமாதான தினம் கொண்டாடுவதில் அர்த்தம் ஏற்படும்.

எனவே இன்றைய இச் சமாதான வேண்டுகை நாளில் தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனை ஒன்றையும் கவனத்தில் கொள்ளல் மிக முக்கியமான் ஒன்றாகும்

  • பல்லாயிரம் மக்கள் தமது சொந்த வீடுகளிலிருந்து குடிபெயர்க்கப்பட்டு, நோயும் பிணியும் பசியும் பட்டினியும் வாட்ட அகதிமுகாங்களில் அல்லற்படுகிறார்கள். எம்மக்களது உயிர்வாழ்விற்கான உணவையும் மருந்தையும் மறுத்து, பாதையைப் பூட்டி, பட்டினி போட்டுப் படுபாதகம் புரியும் சிங்கள அரசு எம்மக்களுக்குக் கருணைகாட்டி, காருண்யம் செய்து, அரசியல் உரிமைகளை வழங்கிவிடும் என யாரும் எதிர்பார்க்கமுடியாது. அப்படி எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமே அன்றி வேறொன்றுமன்று.

    "அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது. "

    அறுபது ஆண்டுக்காலமாக அநீதி இழைக்கப்பட்டு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு, சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ குரல்கொடுக்கவில்லை...

    பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

கலாநிதி த. மனோகரன்

Comments