புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மீதான இந்தியாவின் போர் பிரகடனம்

விடுதலைப்புலிகளையும், தமிழ் மக்களின் விடுதலைப்போரையும் முற்றாக அழிக்கும் வரையிலும் ஓயப்போவதில்லை என்ற தனது கொள்கையை இந்தியா மீண்டும் ஒரு தடவை வலுவாக உலகிற்கும், தமிழ் சமூகத்திற்கும் எடுத்துக்கூறியுள்ளது.

ஈழ விடுதலை போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்புக்கள் கணிசமாக உள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் வெளியுலக நிதி முகாமைத்துவம் மாற்றங்கள் எதுவுமின்றி இயங்கி வருவதாகவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் இந்த வாரம் தெரிவித்துள்ளார். அதனை தாம் உன்னிப்பாக அவதானிக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதாவது இந்தியா தமிழ் மக்களுக்கு எதிரான தனது போரை அனைத்துலகத்திற்கு நகர்த்த தயாராகி விட்டது. நாராணனின் இந்த கூற்றானது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்தின் மீதான இந்தியாவின் போர் பிரகடனமாகவே தமிழ் மக்கள் நோக்குகின்றனர். இந்தியாவின் இந்த சவாலை சந்திப்பதற்கு தமிழ் மக்கள் தம்மை தயார்ப்படுத்தி வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பான திரு செல்வராஜா பத்மநாதனின் கடத்தலுடன் ஆசிய கண்டத்திற்குள் உள்நுளைந்துள்ள இந்திய - சிறீலங்கா அரசுகளின் கூட்டு நடவடிக்கை தற்போது மேற்குலகத்தின் வாசல்களையும், ஆபிரிக்க நாடுகளின் வாசல்களையும் அண்மித்துள்ளன. ஆனால் ஆசியக்கண்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை போல மேற்குலகத்தில் அவர்களால் இலகுவான நகர்வுகளை மேற்கொள்ள முடியாது என்பது நாம் அறிந்தவையே.

எனினும் புலம்பெயர் தமிழ் மக்களுக்குள் ஊடுருவி எமக்குள் எம்மை மோதவிட அவர்கள் முனையலாம். அனைத்துலகத்திலும் இயங்கிவரும் ஊடகங்களையும், அமைப்புக்களையும் கையகப்படுத்துவதற்கும் இந்தியா பலமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மக்களிடம் ஒரு கருத்து மாற்றத்தை உருவாக்க முடியும் என இந்தியா நம்புகின்றது. சிறீலங்காவிலும் தமிழ் ஊடகங்களினூடாக தன்னை வலுப்படுத்த அது முற்பட்டு வருகின்றது.

அண்மையில் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றிற்கு பல தடவைகள் விஜயம் செய்ய இந்திய பிரஜை ஒருவர் பல நாட்கள் பல மணிநேரம் காத்திருந்து குறிப்பிட்ட ஒரு ஊடகவியலாளரை சந்திப்பதற்கு முனைந்துள்ளார். இறுதியில் அவர் தனது முயற்சியில் வெற்றிபெற்ற போதும் அவர் ஏன் வந்தார், அவரின் நோக்கம் என்ன? என்பது தொடர்பான தெளிவான விளங்கங்களை அவர் கொடுக்கத்தவறியுள்ளார். ஆனால் அவர் சென்று விட்டார், மீண்டும் நாளை வருவார், நாளை மறுதினமும் வருவார் என அந்த ஊடகவியலாளர் மிகுந்த அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழ் மக்களிடம் பிரபலம் பெற்றுள்ள ஊடகங்கள் ஊடாக ஒரு கருத்து மாற்றத்தை கொண்டுவர இந்தியா வலுவாக முயன்று வருகின்றது என்பது தற்போது வெளிப்படையான ஒன்று. தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை முற்றாக நசுக்கிவிடவும், அவர்களின் அரசியல் அபிலாசைகளை உலகின் கண்களில் இருந்து மறைத்துவிடவும் இந்தியா முற்பட்டு வருகையில் சிறீலங்காவுக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான இரஜதந்திர மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன.

கடந்த வாரம் சிறீலங்கா அரசு ஐ.நாவின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) கொழும்புக்கான பிரதம பேச்சாளர் ஜேம்ஸ் எல்டன் என்பவரின் நுளைவு அனுமதியை இரத்து செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றியதை தொடர்ந்து மேற்குலகம் தனது அழுத்தங்களை அதிகரித்துள்ளது. சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம அரசியல் தலைவர் லைன் பெஸ்கோ கடந்த புதன்கிழமை (16) சிறீலங்காவுக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் சிறீலங்காவுக்கு ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விஜயம் மேற்கொண்ட போது சிறீலங்கா அரசினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளில் இருந்து சிறீலங்கா விலகியுள்ளதாகவும், அதனை சிறீலங்கா உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் ஐ.நா பகிரங்கமாக அறிவித்துள்ளதுடன், பெஸ்கொவின் விஜயமும் அதனை ஒட்டியதாகவே அமைந்துள்ளது. சிறீலங்கா தொடர்பாக ஐ.நாவின் செயலளர் நாயகத்தின் நடவடிக்கைகள் கடும் விமர்சனைங்களை எதிர்கொண்ட நிலையில் ஐ.நா தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவித்துள்ளன.

எதுவாயினும் சிறீலங்கா மீதான ஐ.நாவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளது என்பது தெளிவானது. இதனிடையே ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலும் சிறீலங்கா தொடர்பான விவகாரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்ற அச்சங்கள் சிறீலங்கா அரச தரப்பை ஆட்கொண்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முதல் முதலாக அமெரிக்கா பங்கு கொள்வதும் ஆசிய நாடுகளுக்கும், ஆபிரிக்க நாடுகளுக்கும் புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தொடர்பான சில நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவுகளை வழங்கினால் ஆசியா ஆபிரிக்க நாடுகள் மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சிறீலங்காவில் நடைபெற்ற போர் அதில் மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (21) அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்படவுள்ளதாக போரியல் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தூதுவர் ஸ்ரீபன் ராஃப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரச தலைவர் நீதியை நிலைநாட்டுவது தொடர்பாக தனது நகர்வினை மேற்கொள்வார் என தெரிவித்துள்ள ஸ்ரீபன் நாம் மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருகின்றோம் என்பதனை சிறீலங்கா உணர்ந்து கொள்ள வேண்டும் என கடுமையான தொனியில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தளமாக கொண்ட பாதுகாப்பு அமைப்பே காங்கிரஸின் கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இந்த அமைப்பு அமெரிக்க காங்கிரஸ் சபையினால் நடத்தப்படுவதுடன், அமெரிக்க அரசின் நிதி உதவிகளும் கணிசமான அளவில் அதற்குண்டு.மேற்குலக ஊடகங்களும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமது கருத்துக்களை மெல்ல மெல்ல மாற்றி வருகின்றன.

இந்த நகர்வின் மத்தியில் மேகுலகத்தின் நடவடிக்கைகளும் தீவிரம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் வன்னியில் மோதல்கள் உக்கிரமடைந்த போது தனது பசுபிக்பிராந்திய கட்டளை பீடத்தை வன்னியில் தரையிறக்க முனைந்த அமெரிக்க தற்போது மருத்துவ உதவிகள் என்ற போர்வையில் கால்பதித்துள்ளது. ஹவாய் தீவை தளமாக கொண்ட அமெரிக்க படையின் பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் சிறீலங்காவுக்கு வருகை தந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த மருத்துவக்குழுவில் அமெரிக்க வான்படை, கடற்படை, தரைப்படையினரை சேர்ந்த நான்கு சிரேஸ்ட்ட மருத்துவ அதிகாரிகளும், ஆறு ஏனைய மருத்துவ அதிகாரிகளும், ஒரு தொகுதி தாதிகளும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் தலையீடு காரணமாக அன்று தமது தரையிறக்கத்தை நிறுத்திக்கொண்ட அமெரிக்காவின் பசுபிக்கிராந்திய கட்டளை மையம் இந்திய மருத்துவக்குழுவினர் புல்மோட்டையில் இருந்து வெளியேறிய நிலையில் சிறீலங்காவை வந்தடைந்துள்ளது.

மேலும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான தீர்மானங்களில் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான போக்கை கடைப்பிடிக்கலாம் என்ற அச்சங்களும் சிறீலங்காவை ஆட்கொண்டுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் நேரடியாகவும் நேரடியற்ற விதமாகவும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தமது வேலைவாய்ப்புக்களை இழக்க நேரிடலாம் என தென்னிலங்கை அஞ்சுகின்றது. எனவே அதனை கையாழுவதற்கு அரச தலைவர் மகிந்த ரஜபக்சா தனது நேரடிக்கண்காணிப்பில் ஒரு குழுவை உருவாக்கியுள்ளதுடன், புலம்பெயர் நாடுகளில் உள்ள சிங்கள மக்களையும், அரசுக்கு சார்பான அமைப்புக்களையும் சிங்கள மக்கள் எதிர்நோக்க போகும் மனிதாபிமான நெருக்கடிகள் என்ற போர்வையில் களமிறக்கியுள்ளது.

ஆனால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அமைப்புக்களும், மக்களும் சிங்கள மக்களின் இந்த போராட்டங்களை முறியடித்து எமக்கு ஆதரவான மேற்குலகத்தின் நகர்வுகளை தக்கவைக்கவேண்டிய கட்டத்தில் உள்ளனர். மேற்குலகத்தை பொறுத்தவரையில் அவர்கள் சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். தற்போதைய அரசு நீக்கப்பட்டு முற்போக்குள்ள அரசு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் காத்திரமான பங்களிப்பை வழங்குமாக இருந்தால் தற்போதைய அரசுக்கு பல நெருக்கடிகள் ஏற்படலாம்.

தென்னிலங்கையில் ஏற்படும் பொருளாதார மற்றும் அதிகார நெருக்கடிக்கள் அரசின் தற்போதைய செல்வாக்கை சரித்து விடலாம் என நம்பப்படுகின்றது. தென்னிலங்கை தகவல்களின் பிரகாரம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் செல்வாக்கு கடந்த மே மாதம் 85 விகிதமாக இருந்ததாகவும் தற்போது அது 65 விகிதமாக குறைவடைந்து விட்டதாகவும் தெரிவிக்கின்றன.

ஆனால் சிறீலங்காவின் இந்த வீழச்சியையும், மேற்குலகத்தின் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் சரியாக பயன்படுத்தும் வலுவான பொறுப்பு ஒன்று புலம்பெயர் தமிழ் மக்களின் தோள்களில் வீழ்ந்துள்ளது. அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க நாம் ஒன்றுபடும் அதே சமயம் இந்தியாவின் புலம்பெயர் தமிழ் மக்கள் மீதான போரையும் வெற்றிகரமாக முறியடிக்கும் சவாலும் எம்முன்னால் உள்ளது.

- வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி: ஈழமுரசு (18.09.2009)

Comments