உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! : தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும், மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார். வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!

Imageஇந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக் கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ்மாநாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

“வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள்.

முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

ஆண்டுக் கணக்காக சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலக்கம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 25,000 மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.


போரில் தப்பிய மூன்று இலக்கம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக, சட்டதிட்டங்களுக்கு முரணாக, திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெணணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!

Imageஇந்தியத் தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை புரிந்த சிங்கள பயங்கரவாத அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான றிச்சர்ட் டிக்சன் எழுதியுள்ளார். மேலும் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவில்லை, தண்ணீர் இல்லை, மருந்து இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சின்னச் சின்ன கூடாரங்களில் வானமே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் படுத்து உறங்கி எழுகிறார்கள். தொடக்கத்தில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அரிசி, மா இரண்டையும் கொடுத்து சமைத்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். சமைப்பதற்கு விறகு வேண்டும். விறகு விற்றவர்கள் மீது சிங்கள இராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வதைமுகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐ.நா. உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. இந்து ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென்தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் ஸ்ரீலங்கா அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.

புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 தொன் உணவு. உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.

எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், இராடர், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!
Image

ஐ.நா.வின் மனிதவுரிமை அவையில் இலங்கை அரசு மனிதவுரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு வாக்களித்தது தமிழ்மக்களுக்குச் செய்த இரண்டகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்!

தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த இராபச்சே அரசுக்கு உலக நாணய நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது “நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்” என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!

முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல், உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, பொதுக் கூட்டங்கள், சட்டசபைத் தீர்மானங்கள், தந்திகள், கடிதங்கள் எல்லாமே வெறும் நாடகம் என நாம் குற்றம் சாட்டுகிறோம்!

"இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என அப்போலோ மருத்துவமனையில் படுத்த படியே முதல்வர் விட்ட அறிக்கை ஒரு ஏமாற்று வித்தை எனக் குற்றம் சாட்டுகிறோம்!

இனமானமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார் எனக் குற்றம் சாட்டுகிறோம்!

தமிழீழம் பற்றி முதல்வர் கருணாநிதி அடிக்காத குத்துக் கரணமே இல்லை எனலாம். 1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

ஒரு நாள் பார்த்து தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்பார். அடுத்த நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்க ஆதரவு இல்லை, ஆதரவை எப்போதோ திமுக விலக்கிக் கொண்டு விட்டது என்பார். ஒரு நாள் பிரபாகரன் எனது நண்பர் என்பார். மறு நாள் அவர் ஒரு பயங்கரவாதி, சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவர் என வசை பாடுவார்.
Image

இன்று “இனித் தமிழ் ஈழம் பற்றிப் பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும். தவிரவும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற வேண்டுகோள்களை முன்வைக்காமல், சிங்களவர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், சிங்கள பவுத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்கினியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள், தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று முதல்வர் பேசியுள்ளார். பேசியது சந்துமுனை அல்ல தமிழக சட்டமன்றம்!

மூன்று மணித்தியாலம் உண்ணாநோன்பு நோற்று “ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்” என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் “இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?” என்று செய்தியாளர்கள் கேட்ட போது “ மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று பதில் இறுத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்துவைத்து அழகு பார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்!

இந்திய அரசினாலும் தமிழக அரசினாலும் ஈழத்தமிழ் அகதிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். திபேத் ஏதிலிகளை வீடுகளில் குடிவைத்துவிட்டு தமிழ் அகதிகளை மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைத்திருக்கிறது இந்திய அரசு!

தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது அதிகார வெறியல்லவா?

வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதில் முதல்வர் கருணாநிதி கெட்டிக்காரர். ‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்தச் சிக்கலைக் கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.

ஒரு இலட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று இலட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதற்குப் பெயர் இயல்பு நிலையா? தமிழர்களுக்குத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எதுவும் இல்லை என்று கூறித் தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி சிங்கள மயப்படுத்துவதற்குப் பெயர் இயல்பு நிலையா? எது இயல்பு நிலை?

கொண்ட கொள்கையில் சறுக்குவது என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாக்குகளும் சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்!

தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!

Comments

Allin said…
we agree and accept each and every word of the statement. we therefore oppose m. karunanidhi the culprit.-Allin, Panippaalar of Itha Avai, Chennai