விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டால், இந்து சமுத்திர பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவில் நிரந்தர அமைதியை உருவாக்க முடியும் என்று நம்பியிருந்த மேற்குலக ராஜபக்ஷ சகோதரர்களின் அடாவடி நடவடிக்கைகளினால் ஆத்திரமுற்றுள்ளன.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது நட்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை அரவணைத்து ஆறுதல் படுத்துவதன் மூலமே இலங்கைத் தீவில் நீண்ட கால அமைதியை உருவாக்க முடியும் என்று எதிர்பார்த்திருந்த மேற்குலகுக்கு சிறிலங்கா ஆட்சியாளர்களின் அணுகுமுறை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை பிரிக்க முடியாத இலங்கைத் தீவிற்குள் நிவர்த்தி செய்துவிட வேண்டும் என்ற மேற்குலகின் விருப்பங்களுக்கு மாறாக சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது பழிவாங்கும் உணர்வுடன் கூடிய அடக்கு முறை ஊடாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றது.
இது மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப் போகாததனால், சிறிலங்காவுடனான மேற்குலகின் உறவு வேகமாக சிதைவுற்று வருகின்றது. சிங்கள தேசத்தின் கொடூரங்களிலிருந்தே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் உருவானது என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளத் தவறிய மேற்குலகு, விடுதலைப் புலிகளை இல்லாது ஒழித்துவிட்டால் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தது.
அமெரிக்கா மீதான 11 செப்ரம்பர் தாக்குதலின் பின்னரான ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு எதிரான உலகின் கருத்தியலை சிறிலங்கா தமிழர்களுக்கு எதிரான தனது இன அழிப்பு யுத்தத்திற்கான அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு தீவிரமாகச் செயற்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை விரிவு படுத்தும் நோக்கோடு போட்டி போடும் சீனாவும், இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சினையின் தார்ப்பரியத்தையும், அது தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பின் தள்ளின.
சீனாவின் பிடியில் இலங்கை முற்றாக வீழ்ந்துவிடக் கூடாது என்ற மேற்குலகின் விருப்பங்கள் இந்தியாவின் பக்கம் சாய்ந்ததனால் தமிழீழ மக்கள் தனித்து விடப்பட்டனர். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை இந்திய நிகழ்ச்சி நிரலுக்குச் சார்பாக நடந்து கொண்ட மேற்குலகு, இறுதி நாட்களில் தமது முடிவை மாற்றிக்கொள்ள முற்பட்ட போது, இந்தியா அதற்கு முட்டுக்கட்டை போட்டு, முற்று முழுதான தமிழின அழிப்பிற்கான கால அவகாசத்தை சிங்கள தேசத்திற்குப் பெற்றுக் கொடுத்தது.
மிகப் பெரிய மனிதப் பேரவலம் நடைபெற்று முடிந்த பின்னரும் இந்தியா தனது தமிழர் எதிர் நிலையிலிருந்து மீண்டு வராத நிலையில் மேற்குலகம் சிறிலங்கா மீதான அழுத்தங்களை இறுக்கி வருவதை தற்போது அவதானிக்க முடிகின்றது. இதன் ஒரு முக்கிய பாகமாகவே இலங்கைக்கு இதுவரை காலமும் வழங்கி வந்த ஜி.எஸ.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்தும் முடிவை ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ளது.
அத்துடன், சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்து ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பாலிக ஹோகன்ன, சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை பிரதி அமைந்நர் அர்ஜுன் ரணதுங்கா ஆகியோருக்கு இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது. அத்துடன், சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெலவுக்கு கனடா அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளது.
மேற்குலகை அலட்சியப்படுத்தும் சிறிலங்கா அரசின் போக்குக் காரணமாக மேலும் பல அழுத்தங்களை சிறிலங்கா அரசு எதிர்கொள்ள நேரிடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குலகின் விருப்பங்களுக்கு மாறாக வவுனியா முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும், மேற்குலகின் வேண்டுகோளுக்கு மாறாக ஐ.நா. பணியாளர்களை நாடு கடத்துவதும், ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு வழங்கிய 20 ஆண்டு கால கடூழியச் சிறைத் தண்டனையும் மேற்குலகை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
அத்துடன்,
அண்மையில் தமிழ் இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு சிங்களப் படையினரால் தலையில் சுட்டுத் தண்டனை வழங்கும் காட்சிப் பதிவும் மேற்குலகை ஆத்திரமடையைச் செய்துள்ளது.
இதுவரை காலமும் ஈழத் தமிழர்களின் அவலங்களை வெளிப்படுத்தாது, சிங்கள அரசு சார்பான தகவல்களை மட்டுமே பதிவு செய்து வந்த மேற்குலகின் பிரசித்தி பெற்ற ஊடகங்கள் தற்போது தமிழீழ மக்களது அவலங்களை வெளிக்கொணர ஆரம்பித்துள்ளதுடன், சிறிலங்காவை எச்சரித்தும் வருகின்றன.
கடந்த வாரத்தில் பிரான்சின் மிகப் பிரபல்யமான 'லு மோந்' நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சிறிலங்கா அரசின் தமிழின விரோத செயற்பாடுகளைச் சாடியுள்ளதுடன் எச்சரித்தும் உள்ளது. மேற்குலகின் இந்த மாற்றங்களினூடாக தமிழீழ மக்களை விடுவிக்கவும், எமது தாயக மண்ணை மீட்டெடுக்கவுமான போரை மீண்டும் புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு உள்ளது என்பதை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நியாயத்தின் பக்கம் சாய்ந்துவரும் சக்திகளினூடாகப் பயணிப்பதன் மூலமாக நாம் எம்மீதான தடைகளைத் தகர்த்து வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும். கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களில் நாம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் எமது மக்களை இன அழிப்பிலிருந்து காப்பாற்ற முடியாது விட்டாலும், எஞ்சியுள்ள எமது மக்களை மீட்கவும், அவர்களை வாழ வைக்கவும் நாம் போராடியே ஆக வேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களது போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் மேற்கொள்ள முயன்ற மீட்பு நடவடிக்கை
இந்தியாவால் தடுத்து நிறுத்தப்பட்டது.
எனவே, எமது போராட்டம் பயனற்றது என்ற எந்த முடிவுக்கும் வந்துவிடாமல், தமிழ் மக்கள் புலம்பெயர் தேசங்களில் மீண்டும் போராட்டங்களை நடாத்த வேண்டும்.
அதன் மூலமாக எமக்கான நியாயங்களை நாம் நிட்சயமாகப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் போராடாமல் விட்டுவிட்டால், நாளைய இலங்கைத் தீவில் தமிழர்களின் சுவடுகள் கூட காண முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுவிடும்.
- ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழநாடு (15.09.2009)
Comments