போரும் அதற்குப் பின்னாலான போக்கும்,விடுதலையானது அவசியம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டுள்ளது


மிருகத்தனமான ராணுவ வெற்றியும், மனிதத்தன்மையற்ற தடுத்து வைத்தல்களும் ஈழத் தமிழர்கள் தமது தேசிய அபிலாஷைகளை மறக்கச் செய்துவிடும் என்பது கொழும்பினதும், அதிகாரங்களினதும் நம்பிக்கை. இதுவே இவர்களின் போர் மார்க்கத்துக்கான தூண்டுதலாகவும் அமைந்தது.

ஆனால் போரும் அதற்குப் பின்னாலான போக்கும் ஈழத்தமிழர்களுக்கு தமது நாட்டின் விடுதலையானது முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அவசியம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டுள்ளது என்பதை அவர்கள் ஒருவரும் இன்னும் அறியவில்லை.ஆனால் ஆணவமும், பேராசையும் காரணத்தை ஒருபோதுமே பார்க்காது.

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடகத்தில் சில அதிகாரவர்க்கத்தினர் மிகவும் நேர்மையாக உள்ளார்கள். அவர்கள் சர்வதேசத்தின் அனைத்து தலையீடுகளுக்கும் செவிமடுத்து கருத்துக் கூறுகிறாரகள். தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழர்களின் நிலங்களையும் அவர்கள் வளங்களையும் அபகரிப்பதில் அவர்களுக்குள்ள பேராசையை அவர்கள் ஒருபோதுமே மறைக்கவில்லை.

இவர்களில் ஒருவர், தமிழ் அரசியல் தலைவர்கள் தமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து குரல் எழுப்பக் கூடாது என்று பயமுறுத்தப்படுவதை மிக வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆனால் தாம் கூறும் தீர்வுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தலையாட்ட வேண்டும் எனவும் மிரட்டப்படுகிறார்கள் என்பதையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.

வேறொரு அதிகார அமைப்பும் அங்கு உள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்காக அவர்கள் இப்போது கண்ணீர் சிந்துகிறார்கள், இலங்கையின் ஒற்றுமைக்காக வேறுபாடுகளைக் களைந்து தீர்வு காணப்பட வேண்டும் என ஆலோசனை கொடுக்கிறார்கள், வெளிநாட்டில் புலம்பெயர்ந்துள்ளவர்கள் கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள், இந்த நாடகத்தில் தாமும் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக குடியரசுக்குரிய மற்றும் பொருளாதார அழுத்தங்கள் கொடுப்பதுபோல தம்மைக் காட்டிக்கொள்கிறார்கள்.

முதலாவது வகை அதிகார அமைப்பினர், தமிழர்கள் படும் அவலங்களுக்கு தமது பொறுப்பை அடையாளங் காணாத நிலையில், பிந்திய வர்க்கத்தினர் குறைந்தது மறைமுகவாகவேனும் அதை அறிந்துள்ளதோடு உடனடியாக தேவைப்படுகின்ற சில மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் கோரிக்கை விடுகின்றனர்.

எனினும், இவர்களில் ஒருவருமே கொழும்பின் இன அழிப்புப் போக்கை மாற்றுவதில் ஒரு சிறிய அளவு மாற்றத்தைக் கூட இதுவரை ஏற்படுத்தத் திராணியற்றவர்களாக உள்ளனர். மாறாக, கொழும்பானது தனது சிங்களத்துக்குரிய சர்வாதிகாரப் போக்கின் சகல வடிவங்களையும் நாட்டில் மிக வேகமாக உருவாக்குகிறது.

நாட்டிலுள்ள தற்போதைய உண்மைநிலையானது நிரந்தர அமைதி, ஜனநாயக உரிமை, வேறுபாடுகள் களையப்பட்ட இறுதியான அரசியல் தீர்வு மற்றும் பிராந்திய/ உலகளாவிய கூட்டுறவு எனபனவற்றுக்காக நாட்டைப் பிரிப்பதே இப்போதைய தேவை என்பதை அனைவரினதும் அறிவும், உணர்வும் அவர்களுக்கு தெளிவாக உணர்த்தும்.

ஆனால் இலங்கையிலுள்ள தமிழ்த் தேசியத்தின் அபிவிருத்தியிலும், கோரிக்கைகளிலுமுள்ள முக்கியத்துவத்தை, நியாய நேர்மையைக் கண்டறிய வேண்டும் என எந்தவொரு அதிகாரங்களும் விரும்பவில்லை என்பதை தமிழர்கள் மிக அவதானமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். தற்போது இலங்கையில் உள்ளது 'சிறுபான்மைப் பிரச்சனை', இதை வேறுபாடுகளைக் களைந்து தீர்வு காணல், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளைக் கவனிக்க கொழும்பின்மீது சிறிதளவு சர்வதேச அழுத்தம் என்பவற்றின் மூலம் எளிதாகக் தீர்த்துவிடமுடியுமாக உள்ள நிலையில், தேசிய விடுதலை என்பது 'பயங்கரவாதத்தின் கோரிக்கை என்று நாங்கள் ஏற்றுக்கொண்டு நம்ப வேண்டும் என இலங்கை அதிகார வர்க்கங்கள் விரும்புகின்றன.

இந்த போக்கிற்குப் பின்னால் என்ன உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும், அதாவது அறிவான அரசியல் சிந்தனைகள் இல்லை என்பதையும் வெறும் அதிகார சந்தர்ப்பவாதம் தான் என்பதையும் அனைவரும் அறிவார்கள்.
தாம் செய்யும் எதுவுமே நாட்டின் பிரச்சனையைத் தீர்க்கப்போவதில்லை என்பது அதிகாரத்திலிருப்பவர்கள் முற்றுமுழுதாக அறிந்துள்ளனர்.

தமது மனப்போக்கின் நேர்மையில் இவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் புரட்சி வெடிக்கும் என்பது பற்றி அவர்கள் கவலை கொள்ள வேண்டிய தேவை இல்லை. இதில் அவர்கள் காட்டும் அதீத அக்கறையானது, அவர்களின் நடவடிக்கைகள் தப்பானவை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் மீண்டும் ஒரு ஆயுத போராட்ட்த்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்று கூறிய எம்.கே நாராயணனின் அண்மைக்கால அவதானிப்புகளில் இருந்து இந்தியாவின் குற்ற நெஞ்சிலிருந்து கிளம்பியுள்ள பயத்தைக் கண்கூடாகக் கண்டு கொள்ளலாம்.

இவர்கள் எல்லாருமே தமிழர்கள் அரசியல் ரீதியாகப் போராட வேண்டும் என்று அறிவார்ந்த ஆலோசனை கூறுகிறார்கள். இதிலுள்ள கபடத்தனம் என்னவென்றால், ஜனநாயக முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளில் கூட, தமிழர்கள் தமது விடுதலை வேட்கையைக் கைவிட்டு இலங்கையின் கூற்றுக்குத் தலையசைக்குமாறு வற்புறுத்தப்படுவதாகும்.

சுருக்கமாகச் சொன்னால், 'தோற்கடிக்கப்பட்ட தமிழர்களுக்கு' ஜனநாயக முறைப்படி அவர்களுக்கு என்ன தேவை என்று சொல்லக்கூட அரசியல் உரிமைகள் கிடையாது என்பதாகும்.

இந்த இடத்திலேதான் இலங்கையில் உள்ள தமிழர்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் உறுதியான ஒரு நிலைப்பாட்டைக் கண்டு அதை ஆணித்த்ரமாக குரலுயர்த்தி அறிவிக்க வேண்டும்.

1977 இல் தமிழர்கள் ஜனநாயக முறைப்படி தமது குரல்களை கடைசியாக உயர்த்தியபோது, தமது தாயகத்தில் அதாவது இலங்கையின் வடக்கு, கிழக்கில் சுதந்திரமான, கௌரவ தமிழீழ உருவாக்கத்துக்கான தெளிவான, அடக்கிக்கொள்ளமுடியாத ஆணையை தமது சுய தீர்மானத்தின் அடிப்படையில் அவர்கள் கொடுத்தார்கள்.

இந்தியாவை அல்லது மகிந்த ராஜபக்ஷவை அல்லது எந்தவொரு அதிகார வர்க்கத்தையும் திருப்திப் படுத்துவதற்காக, தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக தம்மைக் கூறுகின்ற தமிழர் தேசியக் கூட்டணி அல்லது பிற அரசியல் கட்சிகள் மக்களின் இந்த ஆணையிலிருந்து விலகிவிட்டதாக வெளிப்படையாகக் கூற உரிமை அற்றவர்கள்.

புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைத்து தமிழர்க்ளும் ஏற்றுக் கொள்ளும் புதிய அரசியலமைப்பு வரும்வரை, எமது அடிப்படைகளைக் தொலைக்காமல் அவர்கள் விவாதங்களில் ஈடுபடலாம். இதுவே இப்போதுள்ள புதிய ஒரு நிலைப்பாடாகும்.

சொல்வதைக் கூறுமாறு உத்தரவு போடுகின்ற கொழும்பு மற்றும் புதுடில்லிக்கு வெளியே சுதந்திர ஜனநாயக நாடுகளில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். எனவே தமிழர்க்ளின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவதில் இவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி உள்ளது.

ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழ் ஈழம் மற்றும் முன் நிபந்தனையாக தேவைப்படுகின்ற வட்டுக்கோட்டை அரசியலமைப்பு மற்றும் அடித்தள ஜனநாயக அமைப்பைத் தோற்றுவித்தல் என்பன குறித்து தமிழ் நெற் நீண்ட நாட்களூக்கு முன்னர் எழுதியிருந்தது.

கடந்த புதன்கிழமை பி.பி.சி யில் நாடு கடந்த தமிழீழம் குறித்த முன்மொழிவை ருத்திரகுமாரன் வழங்கியிருந்தார். அதில் அவர் தாய்நாடு மற்றும் சுய தீர்மானம் பற்றி மட்டுமே பேசியமை கவலைக்குரியது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மிக முக்கிய பகுதிகள் துண்டிக்கப்ப்ட்டிருந்தமை வருத்தமளிக்கிறது.

"நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" எனும் சொற்றொடரானது தமிழர்களின் மிகுதி அபிலாஷைகளையும் உள்ளடக்குவதாக இந்த நடவ்டிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வட்டாரங்கள் கூறின. ஆனால் 'தமிழ் நாடு' என்னும் சொற்றொடர் இந்தியாவிலுள்ள சகலதையும் குறிக்காது என்பதை அவர்க்ள் புரிந்த கொள்ள வேண்டும்.

தமிழர்கள் ஜனநாயக ரீதியில் என்ன ஆணையை வழங்கினார்கள் என்பதைக் கூறுவதில் ஏன் தயக்கம்? இதைத் தடுப்பது யார்?
நாடுகடந்த அரசாங்கம் என்பது அடையாளச் சின்னமான, அதோடு செயற்படுகின்ற ஒரு அமைப்பாகும், எனவே இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும் இப்போது தாங்கி நிற்கின்ற புலம்பெயர் தமிழர்க்ளின் சுதந்திரமான மன உறுதியுடன் அது அமைக்கப்படுதல் கட்டாயம். அனைத்து அரசாங்கங்களும் இதைக் கருத்திலெடுக்காத பட்சத்தில் ஜனநாயக ரீதியில் அமைக்கப்படும் மாற்று அரசாங்கமே இது.

சமரசப்பேச்சுக்களால் உடன்படிக்கை போடும் நோக்கத்துடன் மட்டுமே இது ஆரம்பிக்கப்படும் என்றால், நாடுகடந்த அரசாங்கத்தின் முழு கருதுகோளுமே தவறாக வழிநடத்தப்படும். சமரச பேச்சுகள் உடன்படிக்கைகளுக்கான மேடை இதுவல்ல. தமிழர்கள் தமது அபிலாஷைகளை சும்மா 'ஜனநாயக ரீதியில்' தெரிவித்தார்கள் என்று காட்ட வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் சமரசப் பேச்சுக்களுக்கான முன் நிபந்தனையாக இதை எடுக்க சில அதிகார வர்க்கங்கள் விரும்புகின்றன.

கொழும்பு மற்றும் சில அதிகாரங்கள் வழங்கியுள்ள விரோதத்தில், வாக்காளர் பதிவு மெற்கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருப்பது நாடு கடந்த அரசாங்கம் குறித்த அறிவித்தலிலுள்ள பாதுகாப்பற்ற மற்றொரு நடவடிக்கையாகும். மக்களைப் பலிகொள்வதில் சர்வாதிகார அரசாங்கம் இந்த வாக்காளர் பதிவை எவ்வாறு பயன்படுத்தியது என்பதை அனைவரும் அறிவார்கள். வாக்காளர் பதிவானது மையப்பகுதி ஆதரவாளர்களின் ஒரு பகுதியினரை மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளச் செய்யும், நாடுகடந்த அரசாங்கம் உண்மையான பிரதிநிதித்துவமாக இருக்காது. வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்படாமல், புலம்பெயர்ந்து நோர்வே நாட்டிலுள்ள தமிழர்களிடையே இந்த மே மாதத்தில் நடைபெற்ற வெற்றிகரமான வாக்குப்பதிவைப் பற்றிக் கருத்தில் எடுக்க வேண்டும்.

கடந்த புதன்கிழமை நாடு கடந்த அரசாங்கத்தின் முன்மொழிவின்போது கூறப்பட்ட 'தாய்நாடு' என்ற பதம்பற்றி பி.பி.சி இன் செய்தியாளர் கருத்திலேயே கொள்ளவில்லை. "ராணுவ தோற்கடிப்புக்குப் பின்னர், வெற்றிகரமாகச் செயற்படாது என்று பல அவதானிகளால் கருதப்படுகின்ற, தனி தாய்நாடு என்பதிலேயே இப்போதும் அக்குழு தெளிவாக ஒட்டியுள்ளது" என்று பி.பி.சி செய்தியாளர் கூறினார்.

புதிய மற்றும் உள்ளடக்கப்பட்ட மாதிரியுடன் இவ்வாறான் அரசாங்கம் உருவாக்கப்படும்போது, முயற்சிகளுக்கு ஏற்ற ஊக்கமான பிரதிவிம்பமாக இது இல்லை. புலிகளின் திட்டம் என்று முன்பே உருவாக்கப்பட்டுள்ள பிரதிவிம்பத்தையும் தாண்டி நாடுகடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் செல்ல வேண்டும்.

பி.பி.சி இன்படி, சுதந்திர நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களின் ஜனநாயக நடவடிக்கைகளில் ஒரு தலையீடும் கொள்ள வேண்டிய தேவை இல்லாதபோதும், கொழும்பு அரசாங்கமானது ருத்திரகுமாரனைக் கைது செய்வதிலேயே இப்போது குறியாக உள்ளது.

நாடுகடந்த அரசாங்கத்தை வெற்றிகரமாக அமைப்பதற்கான சிறந்த தேர்வு, அதை மேல்மட்டத்திலிருந்து ஆரம்பிக்காமல், அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறான அரசானது எவருடைய பயமுறுத்தல்களுக்கோ, கொள்ளையடிப்புக்கோ ஆளாக மாட்டாது. ஏனெனில் இது புலம்பெயர் மக்களிடத்தில் எல்லா இடங்களிலும் முதன்மைபெற்று வியாபித்திருக்கும்.

சுதந்திர, கௌரவ தமிழீழம் அமைக்கும் நோக்கில் ஒரு ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டு கவுன்சிலை அமைப்பது குறித்து நோர்வேயிலுள்ள ஈழத்தமிழர்க்ள் ஏற்கனவே க்லந்துரையாடி உள்ளனர். இதில் 99 வீதமான தமிழ் வாக்காளர்கள் தமது ஆணையைக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்கள் சகல நாடுகளிலும் இருந்தால், நாடுகடந்த அரசாங்கம் அமைப்பதன் கருவியாக இவை தொழிற்படும். அது அதிக பிரதிநிதித்துவ, ஜனநாயக, பாதுகாப்பான மற்றும் சக்தி வாய்ந்ததாக அமையும்..

நாடுகடந்த அரசாங்கம் தோன்றுவதற்கு முன்கூறப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரதான குறிக்கோளை மீண்டும் ஆணணயிடுதலானது ஜனநாயக முறையிலான அரசாங்கத்தின் குறிக்கோள்களை நிச்சயமான வழிமுறைகளில், ஒவ்வொருவரையும் சந்தேகத்துக்கிடமின்றி அல்லது மறுப்புக்கிடமின்றி சமாதானப்படுத்தி அமைப்பதற்கு மிக முக்கியமானது.

தமிழ்நெற் ஆசிரிய பீட கட்டுரை அதிர்வின் வாசகர்களுக்காக

Comments