காத்திருந்தேன்... கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்!

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலா காக் கடுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரையும், அவரது மேலதிகாரி மைக்கேல் ஓ டயரையும் இங்கிலாந்து வரை தேடிச் சென்று, ஜெனரல் டயர் நோய்வாய்ப்பட்டு ஜெனரல் டயர் இறந்துவிட, எஞ்சியிருந்த மைக்கேல் ஓ டயரை விழா ஒன்றில் சுட்டுக்கொன்றார் ஷாஹித் உத்தம் சிங். தன் தேசத்து மக்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட கொடியவனில் ஒருவனையாவது சுட்டுக் கொன்ற திருப்தியுடன் 31 ஜுலை 1940 அன்று இங்கிலாந்து நாட்டில் தூக்கிலிடப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டார்.

இவரது எஞ்சிய உடல் பாகங்கள் கல்லறையில் தோண்டி எடுக்கப்பட்டு, 1974-ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அரச மரியாதையுடன் அவரது பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மாவீரரைக் கவுரவப்படுத்தி 'காத்திருந்தேன்... கதை முடித்தேன்!' என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் நாடு போற்றும் வீரர்கள் வரிசையில் வரிசைப்படுத்தியிருந்தது. உண்மையாகவே, அந்த தேசிய உணர்வாளனின் தியாகம் போற்றப்பட வேண்டியதுதான். உலக மக்களும் அறிந்து கொள்ள வேண்டியதுதான். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஈழத் தமிழர்களான நாங்களும் இதய பூர்வமாக அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். இப்படியேதான் நாங்கள் எங்கள் நாட்டுப் படுகொலைகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்... இந்திய தேசத்தை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயர்கள் போலல்லாது நாங்கள் மலர்க்கொத்துக்கள் வழங்கி இந்திய அமைதிப்படையை வரவேற்ற காலம்... நம்பிக்கையோடு எம் தேசத்தின் அமைதிக் காற்றைச் சுவாசிக்கும் ஆவலில் குதூகலித்திருந்த காலம்... தமிழர்களைக் காப்பாற்ற என்ற கொட்டொலியுடன் 1987 இல் கால் பதித்த இந்திய அமைதிப்படையை நம்பி விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து அமைதி காத்த காலம்...

தமிழீழ மண்ணில் கால் பதிக்கும்வரை அமைதிப் படையாகவே வந்த இந்தியப் படை தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதும், சுய ரூபம் காட்டியது. சிங்கள தேசத்தின் காவல் படையாக மாறிய இந்திய அமைதிப் படையின் துரோகத் தனத்தைக் கண்டு கொதித்த தமிழர்களை பொறுமை காக்க வைத்து திலீபன் அவர்களிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வைத்து, காந்திய தேசத்திடம் நீதி கோரி, காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

1- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

என்ற சாதாரண கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று திலீபனால் ஆரம்பிக்கப்பட்ட தியாக வேள்வி இந்திய அரசால் கண்டு கொள்ளப்படாமலே விடப்பட்டது. உறுதி தளராத திலீபன் 26 செப்ரம்பர் 1987 சனிக்கிழமை காலை 10.48 மணிக்குத் தன் இறுதி மூச்சை எம் சுவாசத்தில் கலக்கவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.

எதிரியின் கொடுமையிலும் பார்க்க, துரோகியின் துரோகத்தின் வலி தமிழீழ மக்களின் நெஞ்சில் நெருப்பை மூட்டியது. இதைத் தொடர்ந்தும் இந்தியத் துரோகத்திற்கு குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகள் பலியானதால் உருவான கொந்தளிப்பு இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் திரும்பியது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படை ஆரம்பித்த நம்பிக்கைத் துரோகப் போர் யாழ். வைத்தியசாலையையும் விட்டு வைக்கவில்லை. யாழ். வைத்தியசாலைக்குள் புதுந்த இந்திய இராணுவம் அங்கு பணியாற்றிய வைத்தியர்கள், தாதிகள், நோயாளிகள் என்று யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது. தொடர்ந்து முன்னேறிய இந்திய இராணுவத்தின் கொலைக் கரங்களுக்கு சிறியவர், பெரியவர், இளைஞர், யுவதிகள், ஆண்கள், பெண்கள், வயோதிபர் என்ற வேறுபாடு தெரியவில்லை.

காந்தி தேசத்தின் படைகள் ஈழத் தமிழர்கள் சுமார் பத்தாயிரம் பேரைக் காவு கொண்டது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத இந்தியப் படை 31 மார்ச் 1990 அன்று அன்றைய சிறிலங்கா அதிபர் பிரேமதாசவால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. தமது உறவுகள் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் முகமாக, இந்தியத் துரோகங்களுக்கும் ஈழப் படுகொலைகளுக்கும் காரணமான இந்தியாவின் அந்த நாளைய பிரதமர் ராஜீவ் காந்தி அதே உத்தம் சிங் பாணியில் பலி கொள்ளப்பட்டார்.

அன்று துப்பாக்கியுடன் டயரை நெருங்க முடிந்த உத்தம் சிங் போல அந்த தமிழீழப் பெண்ணால் நெருங்க முடிந்திருந்தாலும் நிச்சயம் குறி தவறியிருக்கும் என்பதால், தன்னையே வெடிகுண்டாக்கித் தன் வீரசபதத்தை முடித்துக் கொண்டாள் என்று ஈழத் தமிழர்கள் அவரை மாவீரராக ஏற்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அன்று, உத்தம் சிங் எடுத்த முடிவைத்தான் பின்னர் தானு எடுத்தார். உத்தம் சிங் தேசிய வீரராக கவுரவிக்கப்பட்டது சரி என்றால், தானுவும் எமது மக்களால் தேசிய வீரங்கனையாகப் போற்றப்பட வேண்டியவர்தான். இந்தியா உத்தம் சிங்கிற்கு உரிய கவுரவம் வழங்க இங்கிலாந்து அரசு அனுமதித்தது போலவே, தமிழீழம் தானுவுக்கு உரிய கவுரவம் வழங்கப்போகும் காலத்தில் இந்தியாவும் அதற்கான அனுமதியை வழங்கவேண்டும்.

நன்றி: ஈழநாடு

Comments