கைதும் கடத்தலும்- தமிழர் நாம் அனுமதிப்பதா ?
சர்வ தேச விதி முறைகளை மீறும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்பாளரும் சர்வ தேச ராஜ தந்திரப் பேச்சாளருமான திரு.செல்வராசா பத்மநாதன் தெற்காசிய நாடொன்றிலிருந்த இலங்கை அரசினால் பலவந்தமாகக் கடத்தப் பட்டு விசாரணையில் உள்ளார்.
அவரிடம் ராஜீவ் காந்தியின் கொலை பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் குரலும் எழுந்துள்ளது. இதிலிருந்து அவரது கடத்தலுக்கும் விசாரணைக்கும் இந்தியாவின் பங்களிப்பு நேரடியாகவோ மறை முகமாகவோ கணிசமான அளவு இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளமை அதிகமாகவே தென்படுகிறது.
முன்னர் இந்திய அரச அறிக்கைகள் இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு அல்லாது இராணுவத் தீர்வு இருக்க முடியாது எனக் கூறிக் கொண்டே போருக்குத் துணை போனது. சந்திரிகாவின் ஆட்சிக் காலத்திலிருந்தே புலிகள் இயக்கத்தடன் நடந்த அமைதிப் பேச்சுகளை முறிக்கவும் இலங்கை அரசுகளை இராணுவ தீர்வு நோக்கி நகர்த்தவும் போரில் தானும் வலிந்து பங்கெடுக்கவும் தவறவில்லை.
இன்னமும் இந்தியா அத்தகைய நிலைப்பாட்டினையே கே.பி. கைது உட்பட தமிழர் விடையத்திலும் தொடர்ந்து செயல்படுகிறது என அனுமானிப்பதில் தவறு இருக்காது.
இலங்கை அரசு இதே போன்ற கடத்தலைச் செய்ய முடியாத நிலையில் அந்நிய தேசங்களில் கொலைகளைக் கூட நடத்தித் தனது தமிழினத்தின் மீதான அடக்கு முறைக்கு வழி சமைக்க வல்ல வசதியும் வாய்ப்பும் கொண்டுள்ளது. இத்தருணத்தில் சில வருடங்களுக்கு முன்னர் பாரிஸ் நகரில் கொல்லப் பட்ட நாதன் கஜன். ஆகியோரின் சாவுகளை எமது நினைவில் கொள்வது பயனாக இருக்கும்.
இப்போது இலங்கை அரசு குறிவைத்திருப்பது உருத்திர குமாரன் எனக் கூறிக் கொண்டாலும் அதன் உண்மையான தாற்பரியம் நாடு கடந்த தமிழிழ அரசுப் பிரகடனமும் அதனால் இலங்கை இந்திய அரசுகளின் திட்டங்களில் ஏற்படப் போகும் சிக்கல்களுமே.
இலங்கை அரசைப் பொறுத்தவரை பிரபாகரனும் புலிகள் அமைப்பும் அழிந்து விட்டதால் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்ட ஒன்றாக அகில உலகமும் ஏற்க வேண்டும் என்பதாகும்.
நாடு கடந்த தமிழீழ அரசு என ஒன்று உயிர் பெற்று விட்டால் அது மேலும் ஒரு பலமான செயற்பாடாகி புலம் பெயர் தமிழரின் சர்வதேச விவாதப் பொருளாகிவிடும். என்ற அச்சம்.
இராணுவ மற்றும் ஆட்சி அதிகார அடக்கு முறைகளால் உள்நாட்டு அரசியல சக்திகளின் கழுத்தை நெரித்தே தமிழர் பிரச்சனைக்குச் சமாதி கட்டிவிட இலங்கை அரசு நினைக்கிறது. அதன் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் இந்திய அரசுக்கு இலங்கை அரசின் ஆசைகளை நிறை வேற்றுவதே தலையாய கடனாக இருக்கிறது.
நடந்து முடிந்த போரிலும் அதன் பின்னர் ஐ.நா. விவாதம், மக்கள் மீள் குடியேற்றம், போர்க் குற்ற விசாரணைகள் போன்ற விடையங்களில் இலங்கையின் தேவைகளே இந்தியாவின் தேவைகளாக உள்ளன. பல முறை அமெரிக்கா எமது விடையங்களில் தயக்கம் காட்டக் காரணமாக இருப்பதும் இந்தியாவின் கரமே.
இந்நிலையில் ஈழத் தமிழினத்தின் வாழ்வுக்கும் வளத்துக்கும் ஒரே ஒரு ஆதாரமாக இருப்பது நாடு கடந்த தமிழீழ அரசும் அதனை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுமே. இந்தக் காரணத்துக்காகவேனும் கே.பி.விடையத்தில் அதிக அளவு அக்கரையும் எதிர்ப்பும் காட்ட வேண்டியவர்களாகப் புலம் பெயர் தமிழர் இருக்கின்றனர்.
இத்தகைய வரலாற்றுக் கடமையைப் புலம் பெயர் தமிழினம் செய்யாது தவறு விடும் காரணம் என்ன ?
இந்தத் தவற்றுக்கு யார் பொறுப்பு ?
இலங்கை இந்திய அரசுகளின் அத்து மீறல்களால் உருத்திர குமாரனுக்கோ அல்லது நாடு கடந்த தமிழீழச் செயற்பாட்டளர் எவருக்குமோ பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத நிலையே உள்ளது.
எனவே புலம் பெயர் ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளுக்கு உலக அரசுகளிடம் பாதுகாப்பு உத்தரவாதம் கேட்க வேணடும். அத்தகைய உத்தரவாதத்தை உலக அரசுகள் எமக்கு வழங்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு ஜனநாயக உரிமைகளைப் பேணும் புலம் பெயர் அரசுகளுக்கும் இருக்கிறது.
அடுத்த பெரு வெள்ளம் எம்மை நோக்கி வரும் முன்பாக நாம் உலக அரசுகள் மூலம் எமது குரலையும் ஆட்சேபனைகளையும் அந்தந்த நாடுகளில் உரக்க எழுப்புவோமா?
நிலவரம்
வி.எதிர்மன சிங்கம்
Comments