இழந்த தாயகத்தை மீண்டும் பெற தமிழ் வணிகர்கள் ஆற்றக் கூடிய பங்குநமது வணிகப் பெருமக்களுக்குச் சில ஆலோசனைகள்

வன்னியில் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களும் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலைகள் நமது நினைவில் உள்ளன. இப்போதைக்கு, நமது இராணுவப் புரட்சி பின்னடைவைச் சந்தித்து இருப்பது மறுக்க முடியாத உண்மை. சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு, இலங்கைத் தீவில் இனிப் பிரச்சினை ஒன்றும் இல்லை.

தமிழர்கள் ஆகிய நமக்கு, நமது தமிழ் ஈழத்தை நமது மண்ணை, நமது உரிமைகளை வென்றெடுக்கும் பொறுப்பு அப்படியே உள்ளது.இந்தப் பொறுப்பை நமது தலைமுறையே நடத்தி முடிக்காவிட்டால், அடுத்த தலைமுறை, அதற்கடுத்த தலைமுறை என்று நமது நோக்கத்தை அடையும்வரை நாம் தொடர்ந்து போராடியே தீர வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் நமது வணிகப் பெருமக்கள் அளிக்கக் கூடிய பங்கு பற்றி இக் கட்டுரையில் சில கருத்துக்களை முன்வைக்கிறேன். பொதுவாக, நாம் சமீபத்தில் சந்தித்த தோல்வியால் துவண்டுவிடக் கூடாது என்றும் மாறாக தைரியமாக, உறுதியாக தமிழ் ஈழம் நோக்கி நடைபோட வேண்டும் என்றும், யூத மக்கள் நாட்டை இழந்து, 2000 ஆண்டுகள் நாடு - நாடாக அலைந்து, முடிவாக அவர்களது இஸ்ரேலை அமைத்ததை உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் அமைந்ததில் அமெரிக்காவின் பங்கு மிக, மிகப் பெரிது. 1920 முதலே, உலகின் முதல் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரம் என்பது அனைவரும் அறிந்ததே.அந்த முதல் பொருளாதாரத்தில் யூத மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. எஃகு உற்பத்தியில், வங்கிகளில், மண் எண்ணெய் கார் தயாரிப்பில், செய்தித்துறை, கலைத்துறை ஆகியவற்றில் அவர்கள் முதல் இடத்தில் நிற்கின்றனர்.

அவர்கள் ஆதரிப்போர் நியூயோர்க் நகர மேயர்களாகவும், செனட்டர்களாகவும் பதவி வகிக்கிறார்கள். யூதர்கள் ஆதரவு இன்றி எந்த ஒரு அமெரிக்கரும் குடிவரவுத் தலைவர் ஆக முடியாது என்ற நிலை அங்கு காணப்படுகிறது. மேலும், இஸ்ரேல் முன்னேற்றத்துக்கு உதவ ஆண்டுதோறும் அமெரிக்க யூதர்கள் ஒரு பெருந் தொகையை அளிக்கிறார்கள்.


அத்துடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்க செனட் மன்றத்திலும், அமெரிக்கப் பிரதிநிதிகள் மன்றத்திலும் அதிக எண்ணிக்கையில் ஆன உறுப்பினர்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.
இவற்றைப் பற்றி எல்லாம் படிக்கும் போதும், சிந்திக்கும்போதும், நமது தமிழ் வணிகர்களின் பெரும் பங்கு நமக்குத் தெரிகிறது. முதலில் நமது வணிகர்கள் மீது நமது நம்பிக்கையைத் தெரிவிப்போம். அவர்கள் தமிழ் மக்களின் இன்பதுன்பத்தில் பங்கேற்றவர்கள். பங்கு பெறுபவர்கள்.
நமது மக்களுக்கு மேலும், மேலும் அவர்கள் உதவுவார்கள். தொடர்ந்தும் உதவுகிறார்கள். அவர்களைப் பார்த்து நாம் பெருமைப் படுகிறோம்.

பாரிசிலேயே 20, 25 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்றால், எத்தனை தமிழ்க் கடை இருந்தது என்பது நினைவில் வரும். இன்று லாச்சப்பல் (La Chapelle) பகுதியில் நம்மவர்கள் இல்லாத இடம் இல்லை. நம்மவர் தொடாத துறை இல்லை, உணவுக் கடையா? மளிகைச் சாமான்களா? நூல்கள், செய்தித் தாள்களா? கணினி, அச்சகங்களா? தொலைபேசி அட்டை கடைகளா? இசை, வீடியோ, டி.வி.டி விற்பனை கடைகளா? சிகை அலங்காரமா? காய் - கறி வியாபாரமா? இறைச்சி கடையா? மீன் கடையா? என்ன இல்லை?

சில ஆண்டுகளுக்கு முன் Dijon நகரில் வாழும் எனது முதல் பெரிய அதிகாரியுடன் பேசிக் கொண்டிருக்கையில், “தமிழர்கள் லாச்சப்பல் பகுதி முழுதிலும் வியாபாரம் ஆரம்பித்து விட்டார்கள். அல்லது இல்லங்களை வாங்கிவிட்டார்கள் என்று எனது நண்பர் ஒருவர் கூறினார். இது சரியான தகவல்தானே” என்று கேட்டார் - நான் ‘ஆம்’ என்று பதில் அளித்தேன்.

இன்று லாச்சப்பல் பகுதியில், பிரஞ்சுக்காரர்கள் நம்மவர்களுடன் வியாபாரம் செய்வதைக் காண்கிறோம். நமது உணவுக் கடைகளில் அவர்கள் நமது உணவுகளைச் சுவைப்பது அன்றாடங் காணும் காட்சியாகிவிட்டது. எதிர்காலத்தில், நாம் நமது வணிகப் பெருமக்களிடம் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

1. கடைகள் விரிவு படுத்தப்படவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும், நமது வரவு (Chiffred'affaires) அதிகரிக்க வேண்டும். பாரிசில், இன்னும் நாம் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடையவில்லை. பல வகைகளில், பார்த்தால், நமது கடைகள் சிறிதாகவே உள்ளன.

2. கூட்டுறவு முறையில் நாம் ஒரு தமிழ் வங்கி திறக்க வேண்டும்.
(1952இல், நான் கூட்டுறவு முறையுடன் தொடர்பு கொண்டேன். காரைக்கால் பகுதியில், திருநள்ளாறு கொம்முய்ன் மத்திய பள்ளியில் கடைசி வகுப்பில் படித்த காலம் அது. பிரஞ்சுக்காரர்கள் அப்போதும் எங்கள் பகுதியில் ஆட்சி நடத்தினார்கள். எனது ஆசிரியர் திரு.இராமநாதன் அருமையான மனிதர். வகுப்பில் நாங்கள் 30 மாணவர்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் முதலாகப் போட்டோம் - 30 ரூபாய் சேர்ந்தது. மாணவர்களுக்குத் தேவைப்படும் பயிற்சி சுவடிகள் , மட்டப் பலகை, பென்சில் போன்றவற்றை 30 ரூபாய்க்கு வாங்கினோம்.

தலைவர், பொருளாளர், செயலாளரைத் தேர்ந்து எடுத்தோம். ஒவ்வொரு வகுப்பு நாளிலும், காலையில் விளையாட்டு நேரத்தில் (15 நிமிடம்) வியாபாரம் செய்தோம். 30 ரூபாய்க்கு வாங்கியதை, ஏறத்தாழ 60 ரூபாய்க்கு விற்றோம். மேலும் சாமான் வாங்கினோம். எங்கள் வியாபாரம் ஏறத்தாழ 9 மாதம் நடந்தது. வருட முடிவில் 1 ரூபாய் போட்ட எங்களுக்கு, 4 ரூபாய் இலாபம் கிடைத்தது.)

கூட்டுறவு முறை ஒரு அருமையான தத்துவம், நடைமுறை. துரதிருஷ்ட வசமாக, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், கூட்டுறவுத்துறை என்றால், திருடர்கள் திருடுவதற்கு என்றுள்ளதாக மாறிவிட்டது. இங்கே, 50 வணிகர்கள் சேர்ந்து, ஆளுக்கு 1000 ஈரோக்கு பங்கு
போட்டால், 50,000 ஈரோக்கள் ஆகும்.அதே முதலை, 100 வணிகர் போட்டால் - 100.000 ஈரோக்கள்... 200 வணிகர், 1000 முதல் என்றால் - 2 இலட்சம் ஈரோக்கள் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் 50, 100, 200 வணிகர்களும் பொதுச் சபையாகக் கூட வேண்டும். ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும். ஆரம்பத்தில், ஒரு சிறிய இடத்தில் இந்த மூவரும் வரவுகளையும், செலவுகளையும் (கடன் வழங்குதல்) கவனிக்கலாம்.

10.000 ஈரோக்கள் கடன் வழங்கும் திட்டம் என்றால், 20 பேருக்கு வழங்கலாம். வரும் வட்டியில் கடைக்கான வாடகை, மின் செலவு ஆகியவற்றைக் கவனிக்கலாம். வட்டி என்றால் இலங்கையில் கொடிய வட்டி முறை அல்ல. பிரான்சின் வட்டி முறை. கூட்டுறவு என்ற சொல்லுக்கு நேர்மை, நாணயம், உண்மை என்ற பொருள் உண்டு.

இந்தக் கூட்டுறவு முறையால் புதியவர்கள் கடைகள் திறக்கவும், பழையவர்கள் கடைகளை விரிவு படுத்தவும் உதவலாம். கடன் பெற்றவர்கள், தவணை முறையில் கடனைத் திருப்பி அளிக்க வேண்டும்.

3. இளந் தலைமுறையும், வணிகரும்
நமது பெற்றோர், நமது பிள்ளைகளை, பெரும்பாலும் மருத்துவர், இன்ஜினியர் ஆகிய துறைகளிலேயே ஈடுபடுத்துகின்றனர். குசயªஉந சில் புகள் பெற்ற வியாபாரக் கல்லூரிகள் (Ecole supe'rieure de commeree) உள்ளன. இத்துறையிலும் நம் பிள்ளைகள் நுழைய வேண்டும். மேலும், நமது சமூகத்துக்கு, கணக்காளர்கள் கணக்கு ஆய்வாளர்கள் (eoperts comptables) போன்றோரும் தேவை.

நமது பிள்ளைகள், உயர்நிலைக் கல்லூரிகளில், Conseillire d'orieutation பல்கலைக் கழகங்களில் பல்வேறு வகைக் கல்விகள் பற்றிய ஆலோசகர்களை அணுகி ஆலோசனை பெறலாம். பயின்று வெற்றி பெறலாம்.

4. தொழிற்சாலைகள், பண்ணைகள்
நாம் முயற்சி செய்தால், இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் இறக்குமதி செய்யும் பொருட்களை இங்கேயே உற்பத்தி செய்யலாம், அல்லது தயாரிக்கலாம். பாரிஸ் பகுதியில், 77வது மாவட்டக் கிராமங்களில் நிறையப் பண்ணைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவற்றை விலைக்கு வாங்கலாம், அல்லது வாடகைக்கு எடுக்கலாம்.

அவற்றில், குளிரால் பாதிக்கப்படாத அளவில், கண்ணாடி அல்லது ப்ளாஸ்டிக்கால் சுவர் எழுப்பலாம். சூரியனில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சாரத்தால், வெப்பத்தை அதிகரிக்கலாம். இவ்வறைகளில் இவற்றில் வெப்ப நாட்டுக் காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். (கத்தரி, அவரை, புடலை, சுரை.... அப்படியே நாட்டில் தயாரிக்கப்படும் சாராயம், பீர் ஆகியவற்றை நம்மவர்கள் விரும்பிக் குடிக்கிறார்கள். இங்கே, நமது வணிகர்கள் அவற்றை தயாரிக்கலாம்.

முடிவாக, தமிழ் வணிகர்கள் தமிழ் மக்களைச் சேர்ந்தவர்கள். தமிழ் மக்களின் வாழ்விலும், உயர்விலும் இவர்கள் பங்கு அதிகம். இவர்கள் வியாபாரம் மேலும், மேலும் உயரவேண்டும். இன்றுள்ள வளர்ச்சி போதாது - மேலும் வளர வேண்டும். நம்மில் சிலரிடையே விளங்கும் அயோக்கியத்தனம், மோசடி, திருட்டு ஆகியவை மாற வேண்டும்.

மாறாக, உழைப்பு, உண்மை, நாணயம், நம்பிக்கை வளர வேண்டும். தமிழ் மக்கள் இழந்த தாயகத்தை மீண்டும் பெற, மீண்டும் அடைய, தமிழ் வணிகர்கள் ஆற்றக் கூடிய பங்கு மிக, மிகப் பெரிது. ஒரே வார்த்தையில் கூறுவதானால், அவர்கள் மேலும், மேலும் வளரவேண்டும்.

-செவாலியே, முனைவர் சுகிர்தராஜ்

ஈழமுரசு (11.09.09)

Comments

must buy tamil product. must enter politics in all countries. more than that always for the truth. never become slaves of our enemy countries. be united.