ஈழத்திலிருந்துகடந்த மாத இறுதியில் இரண்டு தமிழ் கத்தோலிக்க ஆயர்கள் வந்திருந்தார்கள். அரசியல் பேச வரவில்லை, பேசவுமில்லை. தமிழகத்துப் பேராயர்கள், ஆயர்களிடம் தங்கள் மக்களின் சிலுவைப் பாதையைச் சொல்லி நம்பிக்கையும், தோழமையும் பெறவே வந்தார்கள். அறையைத் தாழிட்டு ஆயர்களோடு நெஞ்சம் திறந்த அவர்களால் அழாதிருக்க முடியவில்லை.
ஆம், ஆயர்களும் அழுதார்கள். நம்பிக்கைகள் யாவும் தகர்ந்து போய்விட்டதொரு காலத்தில் மேய்ப்பர்களுக்கும் ஆறுதல் தேவையாகிறது. மானத்தை, தன்மதிப்பை உயிரினும் மேலாய் பேணியதோர் மனிதக்கூட்டம் இன்று ஒருவேளை உணவுக்காய், அவலத்தை தந்தவனிடமே பிச்சைப் பாத்திரம் ஏந்தி தலைகுனிந்து நிற்கும் அவலத்தை எந்த மேய்ப்பனால் தாங்கிக் கொள்ள முடியும்?
அக்டோபர் மாதம் அடைமழைக்காலம் தொடங்குமுன் அத்தனை மக்களும் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும். இல்லையேல் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் மக்கள் சாக நேரிடும் என எச்சரிக்கை அறிக்கையொன்று ஐ.நா.அவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாய் ஒசசஊத ஈஒபவ ஊலடதஊநந என்ற ஐ.நா.செய்தி நிறுவனத்தில் எமக்குள்ள தொடர்புகள் கூறுகின்றன. ஆனால் கிராதக ராஜபக்சே அரசின் அருகாமைக் கூலிகள் போல் ஆகிவிட்டிருக்கும் ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூனும் அவரது செயலர் விஜய் நம்பி யாரும் இந்த அறிக்கை வெளி வந்து விடாதபடி அமுக்கி வைத்திருக் கிறார்களாம். தமிழர்கள் நமக்கு உலகில் இன்று நண்பர்கள் எவருமில்லை என்பது மட்டுமல்ல, நியாயத்தின் காவலர்களாய் இருக்க வேண்டியவர்கள் கூட ஒட்டுமொத்தமாய் நமக்கெதிராய் அணிவகுத்து நிற்கிறார்கள். எல் லோராலும் கைவிடப்பட்டவர் களானோம்.
மூன்று லட்சம் தமிழ் மக்கள் திறந்த வெளியில் சிறையிடப்பட்டு கடந்த வெள்ளியோடு நூறு நாட்கள் ஆயிற்று. இவர்கள் எக்குற்றமும் செய்யாதவர்கள். பலமுறை அடித்துத் துவைக்கப்பட்ட அப்பாவிகள். முக்கிய மாக, ஏழைகள். இவர்களை நூறு நாட்கள் அடைத்து வைத்திருந்தது சட்டவிரோதமான செயல். இந்த திறந்த வெளிச் சிறைகளை பேணத்தான் இந்தியாவும் ஆயிரம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கிறது. தவறு, குற்றம், பாவம். இந்தியாவின் பணம் நமது பணம். தங்கள் வாழ்விடங்களில் மீண்டுமொரு சிறு வாழ்வை சூன்யம் விட்டுச் சென்ற புள்ளிகளிலிருந்து தொடங்கத்தான் நமது பணம் பயன்பட வேண்டுமேயன்றி அக்கிரமத்தின் சங்கிலிகளை மேலும் இறுக்கவும், அழுத்தி இறுக்கும் நுகத்தடிகளை அதிகமாக்கவுமல்ல. சட்டவிரோதமான பொதுமக்கள் சிறைகளைப் பேண துணைநிற்கும் நம் நாட்டு அதிகாரிகள் மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிகிறார்கள். இறை நீதி இவர்தம் தலைமுறைகளை சும்மா விடாது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லா பகுதிகளும் கண்ணிவெடிகள் கொண்டிருப்பவை அல்ல. அதிகபட்சமாய் பத்து சத நிலப்பரப்பில் அவை இருக்கலாம். நேர்மை இருந்தால் கடந்த நூறு நாட்களிலேயே அப்பகுதிகளை அடையாளம் கண்டு சிவப்புக்கொடி நட்டிருக்க முடியும். மழைக்காலம் தொடங்குமுன் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் மனம் இல்லை. அதனிலும் மேலாய் திறந்தவெளிச் சிறைகளிலேயே பாதித்தமிழர்கள் அழிந்தும், பலவீனமுற்று வாழத் தகுதியற்றவர்களாயும் ஆகிடவேண்டுமென ராஜபக்சே அரசு நினைக்கிறது. இதற்கு உதவத்தான் நமது ஆயிரம் கோடி ரூபாய். தமிழ் மக்களைப் போக விடு என உத்தரவிடும் ஒழுக்கம் நமது வெளியுறவுக் கொள்கைக்கு என்று வரும்?
இன்றுவரை முல்லைத்தீவிலிருந்து எத்தனைபேர் தப்பி வந்தார்கள், அவர்கள் பெயர் என்ன, ஊர், விபரங்கள் என்னவென்ற முறைப்படியான பதிவுகள் எதுவும் இல்லை. அதனைச் செய்வதற்கு ஐ.நா.அவை நிறுவனங்கள் எதையும் ராஜபக்சே அரசு அனுமதிக்க வில்லை. வலுவோடு இருக்கிற தமிழ் வாலிபர்களை இரவோடு இரவாய் தினம் எட்டு, பத்து என தீர்த்துக் கட்டும் கொடுமையை படிப்படியாய் நடத்தி முடிக்கத் தோதாகத்தான் இன்றுவரை முறைப்படியான பதிவு எதுவும் செய்யப்படவில்லை. இதனை முன்பு நாம் சொன்னபோது இங்குள்ள பெரிய ஆங்கிலப் பத்திரிகை முதலாளி "புலிகளின் பிரச்சாரகர்' என்று எள்ளினார். இந்த வாரம் இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஒளிக்கோப்பு உலகை உலுக்கி, நமது அச்சங்களெல்லாம் எத்துணை உண்மையானவை என்று மீண்டும் நிரூபித்துள்ளது.
இப்படியாக எத்தனை படுகொலைகள் நடந்தன? நாம் பார்த்த ஒளிக்கோப்பு காட்டும் கொடூரம் பட்டப்பகலில் நடந்திருக்கிறது. எனில் கொடும் இரவுகளில் எத்தனை தமிழ் உயிர்கள் காற்றோடு கலந்தனவென்று எவருக்குத் தெரியும்? எனவேதான் உலக அமைப்புகளின் பார்வைக்கு வதைமுகாம்கள் வருவதை திட்டமிட்டு இலங்கை அரசு தடுத்து வருகிறது. உண்மையில் இலங்கையால் மட்டுமே முடிகிற காரியமல்ல அது. இந்தியா மட்டும் தன் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மீது கொஞ்சம் இறுக்கமும், தமிழர் மீது கொஞ்சம் இரக்கமும் வைத்தால் போதுமானது. மற்றவை தானாக நடக்கும்.
இந்தியாவைப் பகைத்துக் கொண்டு ராஜபக்சே ஊழிக்கூத்தெல்லாம் ஆடமுடியாது. இந்தியா கண்ணசைத்தால் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் ராஜபக்சேவை இறுக்க அணிவகுக்கும். சீனாவிடம் கூட நேரடியாகப் பேசி சரிக்கட்டும் ராஜதந்திர வலு இந்தியாவுக்கு உண்டு. இந்தியா இன்று குறி முண்டுக் கோவணம் கட்டி ராட்டை சுற்றிய மாமனிதனின் நாடல்ல. இது பெரிய வல்லரசு. செலவழிக்கும் திறனுள்ள சுமார் 40 கோடி நடுத்தர மேல் வர்க்கங்களை கொண்ட வருங்கால உலகச் சந்தை. இந்த சந்தையின் கண் சீறல்களுக்கு வியாபாரம் செய்ய விரும்பும் நாடுகள் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஆத லால்தான் இந்தியா மனது வைத்தால் நிலை மை நிச்சயம் மாறும் என நம்பிக்கையோடு சொல் கிறோம்.
இந்தியா தானாக மாறாது. தமிழகம்தான் இந்தியாவை மாற்ற முடியும், மாற்ற வேண்டும். அக்பர், அன்புடை நேரு இப்படி ஓரிருவரது காலங்கள் தவிர்த்து புதுடில்லி தர்பார் நெஞ்சிரக்கம் கொண்டு மானுடத்தை அரவணைத்ததாய் வரலாறு இல்லை. ஆனால் தமிழகம் ஒன்றுபட்டு நினைத் தால் புதுடில்லி மாறும். எனவேதான் வசைபாடு படலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மிச்சமிருக்கும் தமிழரையேனும் காத்திட எல்லா கட்சியினரும், அமைப்புகளும் இணைந்து ஒரு குரலாய் புதுடில்லியில் ஒலிக்க வேண்டுமென பாதம் விழுந்து மன்றாடுகின்றோம். உண்மையில் காங்கிரஸ் கட்சி எனக்கு பிடித்த கட்சிதான். இரண்டாம் தலை முறை தலைவர்களை அக்கட்சி அடை யாளம் கண்டு புடமிடும் காட்சி காண சிலிர்ப்பாயிருக்கிறது. நாளைய தேசம் குறித்த நம்பிக்கையும் பிறக்கிறது. ஆனால் தமிழகத்து காங்கிரஸ் பெரியோருக்கு தோழர் திருமாவளவன் மீது வருகிற கோபத்தில் கால் சதமேனும் ராஜபக்சே மீது வராதாவென்றுதான் ஒவ் வொரு நாளும் கடவுளை பிரார்த்திக்க வேண்டியிருக்கிறது. ஆண்டவா, அதிசயம் நடத்திக் காட்டு. பேராயர்களைப் பற்றி தொடக்கத்தில் கூறியிருந்தேன்.
எனது வாழ்வில் மறக்கவே முடியாத பேராயர் ஒருவரை நான் பதிவு செய்ய வேண்டும். அவர்தான் நினைவில் வாழும் முன்னாள் மதுரை பேராயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்கள். மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் மேல் மட்டிலா மதிப்பும் உள்ளார்ந்த நம்பிக்கையும் கொண்டவர். எப்போது அவரை சந்தித்தாலும் கலைஞரை சிலாகிப் பார். என்னை தெரிவு செய்து மணிலா வேரித்தாஸ் வானொலிக்கு அனுப்பி வைத்ததும் அவர்தான். குருகுல வாழ்வுக்கு ஒன்பதாம் வகுப்பில் என்னைத் தேர்வு செய்ததும் அவர்தான். 14-ம் வயதில் நாங்கள் 27 பேர் தெரிவு செய்யப்பட்டோம். தேர்வு நடைமுறைகளெல்லாம் முடிந்தபின் ஆசி பெறவேண்டி பேராயர் அலுவலகம் சென்று வரிசை யில் நின்றோம். பேராயர் முன் முழந்தாள்படியிட்டு அவரது மோதிரத்தை முத்தம் செய்ய வேண்டும். பேராயர்களின் மோதிரத்தை முத்தம் செய்வது கத்தோலிக்க மக்களிடையே பொது வழக்கம். எனது முறை வந்த போது நான் முழந்தாள்படியிடவுமில்லை, மோதிரத்தை முத்தம் செய்யவுமில்லை. கரங்கள் தொழுது வணக்கம் செய்தேன்.
""என்னடா... பேராயரின் மோதிரத்தை முத்தம் செய்யத் தயக்கமா?'' என்றார். நான் எப்பதிலும் சொல்லவில்லை. முதல் நாளாகிய அன்றே என் குருகுல வாழ்வு முடிந்து போகுமென்றுதான் அருகில் நின்ற ஆசிரியப் பெருமக்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் மாமனிதர், மகான், தலைவர். குருகுல இயக்குநரான பின்னர் ஆயராக உயர்வு பெற்ற லியோன் தர்மராஜ் அவர்களை அன்றிரவே தனியாக அழைத்துக் கூறியிருக்கிறார், "அந்தக் காஞ்சாம்புரத்துப் பையனை கவனித்துக் கொள்ளுங்கள், வித்தியாசமான ஆளாய் வருவான் போல் தெரிகிறது' என்றிருக்கிறார்.
பௌத்த மகாநாயகதேரோவாக இருந்திருக்க வேண்டிய ஆஸ்வல்ட் கோமிஸ் என்ற சிங்களப் பேராயர் ஒருவர் போப்பாண்டவர் அரசு நடத்தும் உரோமாபுரி வரைக்கும் சென்று எப்படியாவது வேரித்தாஸ் வானொலியிலிருந்து என்னை நீக்க வேண்டுமென நீண்ட சதிசெய்த 2000-ம் ஆண்டில், கால்கள் அசைக்க முடியாமல் படுக்கையில் இருந்து கொண்டே சிங்களப் பேரினவாத இலங்கை திருச்சபையின் சதிக்கு செவிட்டிலறை கொடுத்து பின்வாங்கச் செய்த அந்தத் தலைவனை எப்படி நான் மறப்பேன்?
என்ன நடந்ததென்பது சுவாரசியமானது. உலகத் திருச்சபை, ஆசியத் திருச்சபை இரண்டையும் தன்வயப்படுத்தி சிங்களம் திமிருடன் நின்ற காலை மதுரை மாநகரில் படுக்கையில் இருந்து கொண்டே
""இலங்கையில் தமிழ்த் திருச்சபை அச்சுறுத்தப்படும் திருச்சபை. அவர்களால் அங்கு ஓங்கிக் குரல் எழுப்ப முடியாது.
எனவே தான் அவர்களது குரலாய் தமிழகத் திருச்சபையும், ஆயர்களும் இங்கிருந்து பேச வேண்டியுள்ளது. ஃபாதர் ஜெகத் கஸ்பர் எனது நம்பிக்கைக்குரியவர். அவரது குரல் எனது குரல். எனது குரல் தமிழகத் திருச்சபையின் குரல். அவரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது''
என்று பெரிய அதிகாரிகளுக்குப் பதில் சொன்ன அந்தச் சூரியனை மனதில் நான் தொழாத நாளில்லை. எனக்காகப் பேசியதற் காகவல்ல, துன்புறும் என் இனத்திற்காகப் பேசியதால்.
(நினைவுகள் சுழலும்)
Comments