தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்?


விதியே, விதியே, தமிழச் சாதியை
என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ?


என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடிய தற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன.

நூறாண்டு காலம் முடிந்த பிறகும் கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கிறது.

இலங்கையில் நடந்து முடிந்த போரில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்க பதைக்க படுகொலைசெய்யப்பட்டனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப் பட்டு சொல்லொண்ணாத சித்திர வதைகளுக்கு ஆளாகிவருகின்றனர். குறைந்தபட்ச அடிப்படைத் தேவை களும் சுகாதார வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்துவைக்கப் பட்டுள்ள தமிழர்களை சிங்கள இராணுவம் மட்டுமல்ல இயற்கையும் கொடுமைக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தமிழர்களைச் சூழ்ந் திருக்கிறது. கூடாரங்களுக்குள்ளும் வெளியிலும் பெரும் வெள்ளம் புகுந்து கொண்டதால் அதற்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் நடுக் கும் குளிரிலும் நோயாளிகள், குழந்தை கள் உட்பட அனைவரும் மழையில் நனைந்தவண்ணம் தவிக்கிறார்கள். கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ள வர்களுக்கு கடந்த சில நாட்களாக உணவும் வழங்கப்படவில்லை. வெள்ளத் திலிருந்தும் மழையிலிருந்தும் தப்பித்து வெளியேறுவதற்கு முயற்சி செய்த மக்களை சிங்களப்படையினர் சுற்றி வளைத்துத் தடுத்துத் தப்பிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சுடப்படுவார்கள் என எச்சரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

முகாமிலுள்ள மக்களைப் பராமரிக் கும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக் காத நிலையிலும் அவர்களுக்குத் தேவையான கூடாரங்கள், சமையல் பாத் திரங்கள் போன்றவற்றை அய்.நா. அகதி கள் அமைப்பு (மசஐஈத) வழங்கிவரு கிறது. இந்த மூன்று இலட்சம் மக்களுக் கும் தேவையான உணவுப் பொருட்கள் அய்.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் மூலம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த அமைப்பே அந்த உதவியை மக் களிடம் நேரடியாக வழங்குவதற்கு சிங்கள இராணுவம் அனுமதிக்கவில்லை. இராணுவம் மூலம் மட்டுமே எந்த உத வியும் அளிக்கப்படவேண்டும் என பிடி வாதமாக கூறுகிறது. ஆனாலும் அவர் களும் அதைச் சரிவரச் செய்வதில்லை.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்து 25,000க்கு மேற்பட்ட இளைஞர்களை தனியாகப் பிரித்து அவர் களுக்கு புலிகள் என்று முத்திரையிட்டு மிகக்கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கிவருகின்றனர்.

3000க்கும் மேற்பட்ட இளம் பெண்களை அவர்களின் குடும்பத்தினரி டமிருந்து பிரித்து இராணுவம் கடத்திச் சென்றுள்ளது. அவர்கள் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை.

போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னரும் அப்பகுதிக்கு பத்திரிகையாளர்களையும் மற்ற ஊடகங் களையும் சிங்கள அரசு அனுமதிக் காததை சர்வதேச பொது மன்னிப்புச் சபை மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளது.

மற்றொரு கடுமையான குற்றச் சாட்டினையும் சர்வதேச பொது மன்னிப் புச் சபை கூறியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் சிக்கியிருந்த பகுதிகளுக்கு அருகில் பீரங்கி நிலைகள் அமைக்கப்பட்டிருந்ததை காட்டும் சான்றுகள் செயற்கைக்கோள் படங்களில் காணப்படுவதாகவும் இப்பகுதியில் சிங் கள இராணுவம் தாக்குதலைத் தீவிரப் படுத்துவதற்கு முன்பாக ஏப்ரல் 19ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங் களில் இடுகாடு எதுவும் காணப்பட வில்லை என்றும் ஆனால் போர் முடி வடைந்த பிறகு மே 24ஆம் தேதி எடுத்த படத்தில் அந்தப் பகுதியில் 1346 சவக்குழிகள் இருப்பதை காணமுடிகிறது என்றும் ஒவ்வொரு சவக்குழியிலும் நூற் றுக்கணக்கான உடல்கள் புதையுண்டு கிடப்பதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை மிகக்கடுமையான குற்றச்சாட்டினை கூறியுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது இட்லரின் நாஜிப்படையினர் யூத இன மக்களைக் கொடூரமாக கொன்றுகுவித்த செய்திகள் உலகையே அதிரவைத்தன. ஆனால் அதையும் விஞ்சும் அளவுக்கு இராசபக்சேயின் இராணுவம் தமிழர் களுக்கு எதிரான அட்டூழியங்களை எவ் விதமான தங்குதடையின்றி நிறை வேற்றிக்கொண்டுள்ளது.

அய்.நா.பேரவையோ அல்லது இந்தியா உள்பட உலக நாடுகளோ இந் தக் கொடுமைகளை தடுத்து நிறுத்தவும் குறைந்த பட்சம் ஏன் என்று கேட்கவும் கூட முன்வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

இன்றைய மனித உரிமை மீறல்கள் நாளைய அகதிகள் உருவாக்கத் திற்கு அடிப்படை என்ற உண்மையை உலகம் உணரத் தவறியது ஏன்?

வாழையடி வாழையாக தாங்கள் வாழ்ந்துவந்த பாரம்பரியமான ஊர் களையும் வீடுகளையும் துறந்து மக்கள் வெளியேறவேண்டிய அவசியம் எப் போது நேர்கிறது? கொலை, கொள்ளை, சித்திரவதை, பாலியல் வன்முறை, சிறைக்கொடுமை, சுற்றிவளைக்கப்படுதல் போன்ற மிரட்டல்கள் உருவாகும்போது மக்கள் தங்கள் மண்ணில் இருந்து ஏதிலிகளாக வெளியேறுகிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது பல்வேறு நாடுகளில் அகதிகள் உருவா னார்கள். எனவே இதுபற்றி ஆராய்ந்த அய்.நா. பேரவை அய்.நா அகதிகள் ஆணையர் ஒருவர் தலைமையில் அமைப்பு ஒன்றினை உருவாக்குவதென முடிவு செய்தது. அப்படி உருவாக்கப் பட்ட அமைப்புதான் மசஐஈத ஆகும். 1951ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி யன்று இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிற்று. உலகெங்கும் எந்த நாட் டில் அகதிகள் உருவானாலும் அவர்களு டைய துயரம் துடைக்கும் பணியில் இது முழுமையாக ஈடுபட்டது. இதற்கான பட் டயத்தில் 125 நாடுகள் கையெழுத்திட் டன. ஆனால் இந்தியாவும் இலங்கையும் இந்தப் பட்டயத்தில் கையெழுத்திட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகமுழுவதிலும் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் அந்நிய நாடு களுக்கு இடம் பெயர்ந்த 70க்கும் மேற் பட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 145 இலட்சமாகும். உள்நாட் டிலேயே அகதிகளாக தவிப்பவர்களின் எண்ணிக்கை 54 இலட்சமாகும். அய்.நா. அகதிகள் ஆணையம் தலையிட்டதின் பேரில் அதன் துணையோடு சொந்த வீடுகளுக்கு திரும்பிய அகதிகளின் எண் ணிக்கை 40 இலட்சமாகும். அகதிகள் என்ற தகுதி வழங்கப்படாமல் அய்.நா. வின் பாதுகாப்பில் உள்ள அகதிகள் எண்ணிக்கை 35 இலட்சமாகும்.

இப்படி உலகமுழுவதிலுமுள்ள பல்வேறு நாடு களைச் சேர்ந்த அகதிகளை அய்.நா. அகதிகள் ஆணையம் பராமரிப்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எந்த நாடும் மீறுவதில்லை. ஆனால் இந்தியாவும் இலங்கையும் மட்டுமே அய்.நா. அகதிகள் ஆணையம் தங்கள் நாடுகளில் உள்ள அகதிகள் பிரச்சினை யில் தலையிடுவதை அனுமதிக்க மறுத்து வருகின்றன.

ஆசியாவில், கம்போடியா, மியான் மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர் களின் விளைவாக ஏராளமான மக்கள் அகதிகளாகியுள்ளனர். 1948ஆம் ஆண்டு அய்.நா. பேரவை வெளியிட்ட மனித உரிமைகளுக்கான உலகப்பிரகடனம் மிக மிக முக்கியமானதாகும். மனித உரிமை களிலிருந்து அகதிகள் பாதுகாப்பு என்பதை பிரிக்க முடியாது.சொந்த நாட் டில் வாழ இயலாத நிலையில் அந்நிய நாடுகளில் அடைக்கலம் புகுவது சட்ட ரீதியாக ஏற்கத்தக்கது என மனித உரிமை குறித்த உலகப் பிரகடனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அடைக்கலம் புகுந்த நாட் டில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் அகதிகளுக்கும் உண்டு என்பதை இந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.

ஆனால் அய்.நா. பட்டயத்தில் கையெழுத்திடாத இந்தியாவும் இலங்கையும் அகதிகளை அய்நா. பிர கடனங்களுக்கு எதிராக நடத்துகின்றன. இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாட்டு அகதிகளையும் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்திய அரசு நடத்துகிறது.

இந்தியாவில் அடைக்கலம் புகுந்த திபேத் அகதிகள் சுதந்திரமாக நடமாட வும் சொந்தமாக தொழில் வணிகம் புரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் புரிய அந்நிய நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் விளை வாக இந்தியாவில் அவர்களின் குடியிருப் புகள் வழிபடு தளங்கள், பள்ளிக்கூடங் கள், மருத்துவமனைகள் போன்றவை சகலவசதிகளுடன் அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்வு மேம்பாடு அடைந்துள்ளது.

அதைப்போல இந்தியாவிற்கு வந்து சேர்ந்த வங்க அகதிகள் நடுவே தொண்டாற்றுவதற்கு அன்னைத் தெரசா தலைமையிலான தொண்டு நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. வேறு பல நாடு களும் உதவிகள் புரிந்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் வங்க அகதிகளுக்கு உதவுவதற்காக மக்களிடம் நிதி திரட்டி அளித்தன. எல் லாவற்றிற்கும் மேலாக வங்க அகதிகள் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் குடி யேற்றப்பட்டு விவசாயம் செய்வதற்கு நிலமும் வீடுகட்ட உதவியும் வழங்கப் பட்டு அவர்கள் மிக நல்ல நிலைமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய உதவிகள் எதுவும் இலங்கை யில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. மற்ற நாடுகளோ, உலகத் தொண்டு நிறுவனங்களோ அவர்களுக்கு உதவவும் இந்தியா அனுமதிப்பதில்லை.

இந்தியாவில் திபேத் அகதிகள் 10,80,000 பேர்களும், வங்க தேச அகதிகள் 5,35,000 பேர்களும் இலங்கை அகதிகள் மலையகத் தமிழர்கள் உட்பட 7,35,000 பேர்களும் உள்ளனர். இவர்கள் தவிர, மியான்மர், ஆப்கானிஸ்தான், நேபாளம் உட்பட பல்வேறு நாட்டு அகதிகளும் உள்ளனர். இலங்கைத் தமிழ் அகதிகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சுதந் திரமாகவும் வளமாகவும் வாழ்கின்றனர். தமிழ் அகதிகளுக்கு மட்டுமே சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தரும் சொற்ப உதவியில் அவர்கள் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர் களுக்காக அரசாங்கம் கட்டித்தந்த குடி யிருப்புகள் காலப்போக்கில் சிதிலமாகி விட்டது. அவர்களுடைய குழந்தை களுக்கு பள்ளிகள் கிடையாது. மருத்துவ மனைகள் கிடையாது. மொத்தத்தில் வேண்டாத விருந்தாளிகளாக அவர்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறார்கள்.

1965ஆம் ஆண்டு சிறீமாவோ- சாஸ்திரி உடன்பாட்டின் விளைவாக இந்தியாவுக்குத் திரும்ப நேர்ந்த ஐந்தரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் இன்றளவும் வாழமுடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள். அவர்களை அந்தமான் தீவில் குடியேற்றி நிலமும் வீடும் அளிக்கவேண்டுமென மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துக்கட்சி குழு டில்லி சென்று பிரதமர் இந்திராவை சந்தித்து வலியுறுத்தியது. ஆனால்அந்தக் கோரிக்கை இன்று வரையிலும் நிறைவேற்றப்பட வில்லை.

1983ஆம் ஆண்டிலிருந்து சிங் கள இராணுவ வெறியர்களின் தாக்குதல் களுக்குத் தப்பி படகுகள் மூலம் தமிழ கத்திற்கு தப்பி ஓடிவரும் ஈழத் தமிழர் களை சிங்களக் கடற்படை துரத்தித் துரத்தித் சுடுகிறது. அதில் தப்பி இராமே சுவரம் வந்து சேரும் அகதிகளை தமிழ கப் போலிசும் இந்திய அரசின் உளவுத் துறையும் மிகக்கடுமையான விசார ணைக்கு உட்படுத்துகின்றனர். போராளி கள் என சந்தேகிக்கப்படும் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைச் சாலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சிறப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருப்பவர்கள் சொல்லமுடியாத சோகங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்களில் பலர் மீது எவ்வித வழக்கும் கிடையாது. போராளிகள் என்ற சந்தேகத் தின் பேரில் ஆண்டுக் கணக்கில் விசா ரணை எதுவுமில்லாமல் வாடுகிறார்கள். இலங்கைக்கு பொருட்களை கடத்தினார் கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பிணை விடுதலை பெற்றபிறகும் கூட அவர்கள் விடுதலை பெற முடியவில்லை. இன்னும் சிலர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்த பிறகும் அரசு அவர்களை விடு தலை செய்ய மறுக்கிறது. சட்ட விரோத மான முறையில் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து தாங்கள் கொடுமைப் படுத்தப்படுவதை எதிர்த்து சில நாட்களுக்கு முன்னால் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற் கொண்ட பிறகு சிலரை மட்டும் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் போரில் படுகாயம் அடைந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனை களில் சிகிச்சைபெற்றிருந்தவர்களை தமி ழக அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத் தது. அங்ககீனமான பலர் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தேசிய மனித உரிமைக் கமி ஷனிடம் நான் புகார் செய்தபோது கமிஷனின் தலைவராக இருந்த நீதியர சர் ரங்கநாத் மிஸ்ரா அவர்களே வேலூர் சிறப்பு முகாமிற்கு வந்து நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களையெல்லாம் உடனே விடுதலைசெய்யும் ஆணை பிறப்பித்தார். ஆனால் இதற்கு சில ஆண்டுகள் ஆயின என்பதுதான் மிகக் கொடுமையானதாகும்.

இந்தியாவில் 25 ஆண்டு காலத் திற்கு மேலாக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு குடி யேறியோர் அந்தஸ்து வழங்கவேண்டு மென வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த குரு இரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதன்முதலாக இத்தகைய கோரிக்கையை துறவுக்கோலம் பூண்ட ஒருவர் எழுப்பியிருப்பது வரவேற்கத்தக் கது மட்டுமல்ல பாராட்டத்தக்கதுமாகும்.

இலங்கையில் மின்வேலி முகா மிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் 3 இலட் சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை உட னடியாக விடுவித்து அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் இலங்கை அரசோ அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என அலட்சியமாக பதில் கூறுகிறது. 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக முகாம்களில் ஈழத்தமிழர்களை இந்தியா அடைத்து வைத்திருக்கும் போது நாங்கள் சில ஆண்டுகள் அவர்களை முகாம்களில் வைப்பதில் என்ன தவறு என்று அவர்கள் கேட்கிறார்கள்.

கனடா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு 3 ஆண்டு காலத்தில் குடியுரிமையே வழங்கப் படுகிறது. வேறுபல அய்ரோப்பிய நாடு களிலும் இவ்வாறே செய்யப்படுகிறது. இங் கெல்லாம் வாழுகிற ஈழத்தமிழ் அகதிகள் சொந்தமாக தொழில் செய்யவும், வணிகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய குழந்தைகள், அந்தந்த நாடுகளின் பள்ளிகளில் சேர்ந்து பயிலு கிறார்கள். அந்தந்த பள்ளிக்கூடங் களிலேயே அவர்கள் தமிழைக் கற்கவும் அந்த அரசுகள் வசதிசெய்து கொடுத் துள்ளன. அந்நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளில் எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழர்களும் மருத்துவ உதவிபெறு கிறார்கள். ஆனால் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே இத்தகைய மனித நேய உதவிகள் மறுக்கப்படுகின்றன.

இந்தியாவின் பாராமுகத்திற்குரிய காரணம் நமக்கு புரிகிறது. ஆனால் அய்.நா.வும் மற்றும் உள்ள உலக அமைப்புகளும் தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளில் இருந்து ஏன் தவறினார்கள் என்பது இன்னமும் புரியாத புதிர்தான். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக் கொண்ட பல இலட்சம் தமிழர்கள் பதைக் கப் பதைக்க படுகொலை செய்யப்படு வதை தடுத்து நிறுத்த இந்தியா தவறியது வேறு ஆனால் உலகம் ஏன் தவறிற்று? குறிப்பாக அய்.நா. பேரவை அடியோடு செயலற்றுப்போயிற்றே அது ஏன்? இந்த கேள்விகள் உலகத் தமிழர்களின் உள்ளங் களைக் குடைந்துகொண்டு இருக்கின்றன.

1991ஆம் ஆண்டில் ஈராக்கின் வடபகுதியிலிருந்து 15 இலட்சம் குர்தீஷ் இன மக்கள் ஈராக்கிய இராணுவத்தினரால் சுற்றிவளைத்துக்கொள்ளப்பட்டபோது 5-4-1991இல் அய்.நா. பாதுகாப்பு குழு கூடி குர்தீஷ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அபாயம் சர்வதேச அமைதிக்கும் பாது காப்பிற்குமே அபாயகரமானது என்ற தீர்மானத்தை (எண் 688) நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, அந்த மக்களைக் காப் பாற்றுவதற்கு எல்லாவகையான உதவியும் செய்யவேண்டுமென அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. மேலும் அய்.நா. பட்டயத் தின் ஏழாவது பிரிவு கூறியுள்ளபடி குர்தீஷ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவேண்டியது அவசிய மாகும் என்றும் அதற்காக வான், கடல், நில வழியாக படைகள் உடனடியாக அனுப்பப்பட்டு சர்வதேச அமைதியை நிலைநிறுத்த உதவவேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்திற்று. இந்தத் தீர்மானத்தைப் பயன்படுத்திதான் அமெ ரிக்கா தனது படைகளை ஈராக்குக்கு விரைந்து அனுப்பியது. 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் குர்தீஷ் மக்களை பராமரிக்கும் பொறுப்பு அய்.நா.அகதிகள் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைப்போல முன்னாள் யுகோஸ் லேவியாவில் இணைந்திருந்த போஸ்னி யோவைச் சேர்ந்த சரஜிவோ நகரில் சிக் கிக்கொண்ட ஐந்து இலட்சம் மக்களைப் பாதுகாக்க அய்.நா. பாதுகாப்பு படையை அனுப்புவது என பாதுகாப்புக் குழு முடிவு செய்தது. அதேபோல குரோஷி யாவில் உள்ள செர்பிய மக்களைப் பாதுகாக்கவும் அய்.நா. பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது. இதன் விளைவாக 35 இலட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். போஸ்னியோ நாட்டில் பல்வேறு பகுதி களில் சிக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு விமானம் மூலம் உதவிப்பொருட்களை வீசி அவர்களைப் பாதுகாக்கும் கடமை யையும் அய்.நா. செய்தது. இந்தப் பணி யில் கனடா, பிரான்சு, ஜெர்மனி, பிரிட்டன் அமெரிக்கா உட்பட 20க்கு மேற்பட்ட நாடுகள் பங்கு எடுத்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் பல பகுதிகளில் இவ்வா றெல்லாம் மனித நேயமுடன் செயல்பட்ட அய்.நா.வும். மேற்கு நாடுகளும் இலங்கை யில் சிங்கள இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க எதுவுமே செய்யவில்லையே ஏன்?

மேற்கு நாடுகளின் சரக்குகளை விற்பனை செய்வதற்குரிய மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருவதும் அந்த இந்தியா இலங்கைப் பிரச்சினை யில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பதும் இதற்குக் காரணமா? அல்லது தங்களின் பெரிய சந்தையை இழக்க மேற்கு நாடுகள் விரும்பாதது இதற்கு காரணமா?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உன்னதமான தத்துவத்தை உல கிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர் கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித் தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப் படி உலகம் முழுவதும் மனித குலத் திற்குச் சொந்தமானது.

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கை யில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர் களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை.

இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி.

- பழ. நெடுமாறன்

Comments