![](http://www.tamilkathir.com/uploads/images/aaivu/2009/08/180909%20008.jpg)
சிறுபான்மை தேசிய இனமென்பதற்குப் பதிலாக ‘சிறுபான்மை மக்கள்' என்கிற குறுகிய வட்டத்திற்குள் இதனை அடக்கிக் கொள்ளலாம். இதனையே ஒடுக்கும் பெரும் தேசிய இனங்களும், அதற்கு முண்டு கொடுக்கும் நாடுகளும் ஏற்றுக்கொண்டு, தமது நலனிற்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன.
தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட ஓர் இனமாகவும் தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுப்பார்கள். சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட நாள் தொடக்கம், திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களால் கபளீகரம் செய்யப்பட்ட தமிழர்களின் பூர்வீக நிலங்கள் குறித்த அக்கறை இவர்களிடம் இல்லை. தோற்கடிக்கப்பட்ட மக்களுக்கு எதுவித அரசியல் உரிமையும் கிடையாது என்பதோடு ஜனநாயக முறையில் போராட முடியாது என்பதையும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை, தேசிய இன விடுதலைப் போராட்டமானது பயங்கரவாதமாகப் பார்க்கப்படுகின்றது. அவ்வாறு பார்ப்பதன் ஊடாகவே தமது நலன்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதே வல்லரசாளர்களின் கணிப்பு. அறம் சாராத, அதிகார சந்தர்ப்பவாதத்திலிருந்து கிளம்பும் பேரினவாதச் சிந்தனைகள், நல்லிணக்கம் அபிவிருத்தி ஊடாக, சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுகின்றது. அதற்குத் தாளம் போடுவதையே வல்லாதிக்க நாடுகளும் விரும்புகின்றன.
இனி, தமிழ்த் தேசியம் என்கிற சொல்லாடலே, தமிழ் மக்களின் போராட்டங்களில் இருக்கக்கூடாதென்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது.அதேபோன்று, ‘தமிழீழம்' என்கிற இலட்சியம் இல்லாமல் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை நடத்தலாமென்று மேற்குலகு விரும்புகிறது. ஆனால், இவர்களில் எவருக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை குறித்து கரிசனை இருப்பதாகத் தெரியவில்லை. முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்படும்போது, கண்ணையும் காதையும், வாயையும் பொத்திக்கொண்டவர்கள், எஞ்சியிருக்கும் மக்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுப்பார்களென்று எதிர்பார்க்க முடியாது.
அண்மையில் புதுடில்லியில் நடைபெற்ற மாநிலங்களின் காவல்துறை உயர்நிலை அதிகாரிகளின் மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.கே.நாராயணன் உதிர்த்த கருத்துச் சிதறல்களை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். புலிகளுக்கு புத்துயிர் அளிக்க புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராகி வருகின்றார்களாம். மறுபடியும் ஒரு ஆயுதப் போராட்டம் துளிர் விடுவதாகவும், அதற்கான பெருமளவு நிதியுதவிகளை வழங்க தமிழ் மக்கள் முனைவதாகவும் நாராயணன் கூறுகின்றார்.
எதனையும் எதிர்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக மகிந்தர் பாணியில் சவால் ஒன்றும் இவரால் விடப்பட்டுள்ளது. ஆகவே, இந்திய நலனும் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளதென்பவர்கள், நாராயணனின் அகண்ட பிராந்திய வல்லாதிக்க பார்வையினையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியப் பேரசு உடைந்து சின்னா பின்னமானால் சீனாவின் ஆதிக்கம் குறிப்பாக சிறீலங்காவில் அதிகரித்து ஈழத்தமிழரின் அரசியல் நலனை நிரந்தரமாக அழித்துவிடுமென்கிற ஒரு வாதத்தை இவர்கள் முன் வைக்கலாம்.
ஆனாலும், உடையாத இந்தியா, ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக, சிங்களப் பேரினவாதத்தை பகைத்துக்கொள்ளுமா என்கிற கேள்வியையும் இன்னொரு சாரார் முன்வைப்பார்கள். கேந்திர முக்கியத்துவ இடங்களைத் தக்க வைக்க, பிராந்திய வல்லாதிக்க சக்திகள் முன்னெடுக்கும் நகர்வுகளில், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் நலன்கள், பகடைக்காயாகவே பயன்படுத்தப்படுகின்றன.
எதுவுமே புரியாதவர் போன்று நாராயணன் உதிர்க்கும் அரசியல் கருத்துக்கள் இதற்கு வலுச் சேர்க்கின்றது. இந்தியாவின் பிரச்சினை புலிகளல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.விடுதலைப் புலிகளுக்குப் பதிலாக வேறெவரும், தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தால், அவர்களையும் நசுக்கிவிட வேண்டுமென்பதே நாராயணன் போன்ற இந்திய கொள்கை வகுப்பாளர்களின் ஏகோபித்த முடிவு. ஆனாலும், 48 இலிருந்து 77 வரை முதலாளித்துவ ஜனநாயக வழியில் அரசியல் போராட்டம் நடத்தியவர்கள், வட்டுக்கோட்டை தீர்மானம் ஊடாக தமிழீழத் தனியரசுதான் ஓரே தீர்வென்பதை முன்வைத்தார்கள்.
அதற்கான அங்கீகாரமும் மக்களால் வழங்கப்பட்டது. இடையில், அமைதிப் படையாக உள்நுழைந்து இந்தியாவால் உருவாக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளினால் ‘ஈழப் பிரகடனம்' செய்யப்பட்டது. 1976 இலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதம் தாங்கிய அரசியல் போராட்டத்திலும்'தமிழீழம்' என்கிற இலட்சியமே முன்வைக்கப்பட்டது. ஆகவே, ஈழத் தமிழினத்தின் ஆயுத, அரசியல் போராட்டம் யாவற்றிலும் பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் கோட்பாடு, வலியுறுத்தப்பட்டு வந்திருப்பதை நோக்க வேண்டும்.
இதில் போராட்ட வடிவங்கள் மாறினாலும் இறுதி இலக்கு தடம்புரளாமல், காவிச் செல்லப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளலாம். இந்நிலையில், ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டாலும், விடுதலைப் புலிகள் இன்னமும் அழியவில்லை என்கின்ற நாராயணனின் பார்வையினை பல கோணங்களில், ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். சிறீலங்காவில் இந்தியா காட்டும் கரிசனையும், எல்லை தாண்டுவதாக சீனா மீது இவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களும் ஒரே தளத்தில் உருவாக்கப்படும் விவகாரங்கள் போல் தெரிகிறது.
ஈரானிய அதிபர் அகமதுநிஜாத்தின் மறுஅவதாரம் போல், மேற்குலகை அச்சுறுத்தும் மகிந்தரின் நடவடிக்கைகளையிட்டு இந்தியாவிற்கு கலக்கமுண்டு. ஜீ.எஸ்.பி. பிளசை நிறுத்தினால் சீனா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் எமது வியாபாரத்தை கொண்டு செல்வோமென்று மேற்குலகை அதிரவைக்கும் சிங்களம், நாளை இதே பாணியில் இந்தியாவையும் வெருட்டலாம். ஆறு கடக்கும் வரைதான் அண்ணனும் தம்பியும்.
போர்க் குற்றச்சாட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றும் வரையில்தான், இந்தியாவின் இராஜதந்திரப் பலம் மகிந்தருக்குத் தேவை. சிங்களத்தின் இழுத்த இழுப்பிற்கு ஆடும் நாராயணன் போன்றவர்களுக்கு, இச் சூத்திரம் புரிய, சில நாட்கள் செல்லும்.
- இதயச்சந்திரன்
Comments