திசநாயகம் வழக்கு: தீயினால் தீர்ப்பு எழுதிய சிறிலங்கா நீதிமன்றம்

சிறிலங்காவில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கையாக தொடர்ந்து இடம்பெற்றுவந்த ஊடகவியலாளர்கள் மீதான அரச பயங்கரவாதத்தின்,பின்னைய சம்பவமாக தமிழ் ஊடகவியலாளர் திசநாயகம் அவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் பயங்கரவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலான கட்டுரைகள் அடங்கிய “நோர்த் ஈஸ்டெர்ன் கெரால்ட்” எனப்படும் ஆங்கில சஞ்சிகையை எழுதி அச்சிட்டு வெளியிட்டதைற்காக ஐந்து வருட கடூழிய சிறையும் –

பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து சஞ்சிகை நடத்தியதன் மூலம் பணம் பெற்றுக்கொண்டமைக்காக ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் –

இவ்வாறான ஒரு சஞ்சிகையை வெளியிட்டதன் மூலம் சமூகங்களின் உணர்வுகளுக்கு பங்கம் விளைவித்தமைக்காக பத்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் –

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றினால் தீர்க்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு முன்னர் 200 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது முதல் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக அடிப்படை மனித உரிமைகள் மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டபோது அதனை சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர் குழுவே விசாரணை செய்து வழக்கை நிராகரித்தது வரை சிறிலங்காவின் நீதித்துறையில் வழங்கப்பட்ட எத்தனையோ விநோதமான தீர்ப்புக்களின் வரிசையில் தற்போது –

ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பும் சிறிலங்கா அரசின் முற்றுமுழுதான அரசியல் ஊடுருவல் மிக்க முடிவாகவே காணப்படுகிறது என்பதை வெளிப்படையாக காணமுடிகிறது.
Thisaa2
கொழும்பை தளமாக கொண்டு ஊடகவியலாளர் திசநாயகம் அவர்களால் நடத்தப்பட்ட நோர்த் ஈஸ்டர்ன் கெரால்ட் எனப்படும் பத்திரிகை தமிழ்த்தேசியத்தின் குரலாக - ஆங்கிலத்தில் வெளிவந்த - தரமான வார சஞ்சிகை. அதில் பத்தி எழுத்தாளர்களாக இருந்தவர்கள் அனைவரும் பிரபலாமான தமிழ் புத்திஜீவிகள். பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் வி.ரி. தமிழ்மாறன், பேராசிரியர். சிற்றம்பலம், பேராசிரியர். சிவசேகரம், பேராசிரியர். பஸ்ரியாம்பிள்ளை, ஊடகவியலாளர் சிவராம் போன்றவர்களின் வாராந்த அரசியல் ஆய்வுகளும் சிறிலங்கா அரசு மீதான விமர்சனங்களும் தமிழ்த்தேசியத்தின் மீதான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பான கருத்தாடல்களும் அதில் வெளிவந்தன. தமிழ் மக்களை அரசியல் வழிப்புநிலையில் வைத்திருந்த தரமான சஞ்சிகையாக நோர்த் ஈஸ்டர்ன் கெரால்ட் வெளிவந்துகொண்டிருந்தது என கூறலாம்.

Thisaa2

இந்த சஞ்சிகையை அச்சிட்டு வெளியிட்டுவந்த திசநாயகம் அவர்கள், அந்த சஞ்சிகையில் பத்தி எழுத்தாளராகவும் ஆசிரியர் தலையங்கம் மற்றும் தலைப்பு செய்தி ஆகியவற்றில் சுடச்சுட அரசியல் மற்று மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் சிறந்த செய்தியாளராகவும் சஞ்சிகையின் முதுகெலும்பாக பணியாற்றிவந்தார்.

நோர்த் ஈஸ்டேர்ன் கெரால்ட் சஞ்சிகை கொழும்பிலிருந்து தமிழர்களுக்கு ஆதரவாக அவர்கள் தரப்பு செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டதால் அதனை கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் தவறாது படித்து, அதன் மூலம் சிறிலங்கா அரசின் பல்வேறு திரைமறைவு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டன. இது அரசுக்கு பெரும் சங்கடத்தை கொடுத்தது.

அதன் விளைவாக, திசநாயகம் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொழும்பில் வெளிவந்துகொண்டிருந்த தமிழ்த்தேசியத்தின் குரலான நோர்த் ஈஸ்டேர்ன் கெரால்ட் சஞ்சிகையை வெளிவர அனுமதிப்பதில்லை என்பதில் திட்டமிட்டு செயற்பட்ட சிறிலங்கா அரசு, அதனை திசநாயகத்தின் காவல்நீடிப்பு மூலம் அரங்கேற்றுவது என்பதில் உறுதியுடன் செயற்பட்டது.

கைது செய்யப்பட்ட திசநாயகத்துக்கு எதிராக முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நோர்த் ஈஸ்டேர்ன் கெரால்டில் திசநாயகம் அவர்கள் எழுதிய இரண்டு விடயங்கள் மிகப்பாரதூரமானவை என்றும் அவை பங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களாகவும் பதிவு செய்யபட்டன.

அதாவது –

2006 ஆம் ஆண்டு ஆடி மாதம் வெளிவந்த சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் – “சிறிலங்கா அரசு வடக்கு மக்களுக்கு பாதுகாப்பு வழங்காது என்பது வெளிப்படையான விடயம். ஏனெனில், அரச படைகள்தான் மக்கள் மீதான கொலைகளின் பிரதான சூத்திரதாரிகள்” – என்று திசநாயகம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த சஞ்சிகையில் எழுதப்பட்ட பத்தி ஒன்றில், கிழக்கில் வாகரை மீதான அரசின் படை நடவடிக்கையை விமர்சிக்கையில் – “அப்பாவி மக்கள் மீதான இந்த படை நடவடிக்கையானது அவர்களுக்கு உணவு,மருந்து மற்றும் அத்தியாவசிய தேவைகளை வழங்காது பட்டினி போட்டு அவர்களை அங்கிருந்து கலைத்து கிழக்கின் சனத்தொகையில் தமிழமக்களின் எண்ணிக்கையை குறைப்பதை நோக்கமாக கொண்டது” – என்று குறிப்பிட்டிருந்தார்.
Thissaa
இவற்றின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்ட திசநாயகத்தின் மீது பின்னர் பல்வேறு வழக்குகள் சோடிக்கப்பட்டன.

தென்னிலங்கையிலிருந்து தமிழர்களுக்கு ஆதரவாக – சர்வதேசம் புரிந்து கொள்ளும் மொழியில் – ஒரு குரல் வெளிவரக்கூடாது என்ற நோக்குடன் சிறையிலடைக்கப்பட்டார்.

திசநாயகம் மீதான கைது ஊடக சுதந்திரத்தை மீறுவது என்றும் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன என்றும் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் ஆகியவை குரல் எழுப்பின. கடந்த மே மாதம் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் விடுத்த அறிக்கையில் ஊடகவியலாளர் திசநாயகம் தொடர்பாக அவரது பெயரை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தமை, சிறிலங்கா அரசுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்த நடவடிக்கையாக அமைந்தது.

அமெரிக்க அதிபர் விடுத்த அந்த அறிக்கையில் –

“செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் சமுதாயத்தின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்தமையையும் உண்மைகளை வெளிக்கொணர்வதில் காண்பித்த ஆர்வத்தையும் விட திசநாயகம் போன்றவர்கள் செய்த குற்றம் எதுவும் கிடையாது” – என்று குறிப்பிடப்பிட்டிருந்தது.

இவ்வாறிருக்கையில், திசநாயகம் மீதான தீர்ப்பினை வழங்கியுள்ள சிறிலங்கா நீதிமன்றத்தினை அரசு தனது அரசியல் இலாபத்தக்கு லாவகமாக பயன்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

விடுதலைப்புலிகளின் பயங்கரவாத்த்தை ஆதரித்து தனது சஞ்சிகையில் எழுதினார் என்று குற்றம்சாட்டியிருக்கும் நீதிமன்றம், “சனல் – 4” தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிக்கொடூரமாக அரச பயங்கரவாத கொலைக்காட்சியினை ஆதரித்து கொழும்பில் பத்திரிகைகளில் எழுதும் சிங்கள ஊடகவியலாளர்களை கைது செய்து, இப்படியான ஒரு தீர்ப்பினை வழங்குமா?

அவ்வாறு அரச பயங்கரவாதத்தை மேற்கொண்ட நாட்டின் இராணுவ அதிகாரிகள் யாராவது இவ்வாறு தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? மாறாக அவர்களுக்கு பதவி உயர்வுகள்தான் வழங்கப்பட்டிருக்கின்றன.

சமுதாயத்தின் உணர்வுகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான ஊடகவியலை திசநாயகம் மேற்கொண்டார் என்று குற்றஞ்சாட்டி அதற்கு பத்து வருட தண்டனையை வழங்கியிருக்கும் நீதிமன்றம், தமிழ்மக்களின் மீது சிங்கள அரசும் அதன் அரசியல்வாதிகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை எந்த குற்றத்தின் கீழ் பதிவுசெய்யப்போகிறது?

“சிறிலங்கா சிங்கள பௌத்த நாடு. இங்கு தமிழ்மக்கள் பெரும்பான்மையின சிங்கள மக்களுடன் ஒட்டி வாழவேண்டியவர்களே தவிர உரிமைகளை கேட்கக்கூடிய இனம் அல்ல” - என்று கூறிய முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா போன்றவர்களை எந்தவகை குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பது?

சிறிலங்கா அரசு மீண்டும் ஒரு தடவை தனது அரச பயங்கரவாதத்தை ஊடகங்களின் மீது செலுத்தி தனது நாட்டில் ஜனநாயகம் எனப்படுவதை சவக்குழியிலேயே சுதந்திரமாக சுற்றித்திரிய இடமளித்திருக்கிறது.

ஈழநேசன்

Comments