இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்..fullpost{display:inline;}
இவர்களுக்கும், இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று
காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுக்கு கனடா படைப்பாளிகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கை..
" கடந்த 60 ஆண்டுகளாக மத்தியில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்த ஆட்சிதான் இருந்து வந்திருக்கிறது. எனவே தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசு க்கு இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு பின்பற்றுகிறது என்பது தேவையற்ற வாதம்" என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளது நல்ல பகிடி.
பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், துணைப் பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் சிறிலங்காவிற்கு ஹெலிகாப்டர்கள், ராடார்கள், உளவு, புலனாய்வு, வட்டியில்லா நிதி கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். அவற்றை வைத்துத்தான் சிங்கள பவுத்த வெறிபிடித்த மகிந்த ராசபக்சே கும்பல் 25,000 பொது மக்களைக் கொன்றொழித்தது.
அண்மையில் சானல் 4 ஒளிபரப்புச் செய்த காணொளியை நீங்கள் பார்க்கவில்லையா? கண் துணியினால் கட்டப்பட்டு கைகள் பின்னால் பிணைக்கப்பட்டு தரையில் வைத்து முதுகுப் புறமாக பலப் தமிழ் இளைஞர்கள் சிங்கள ராணுவ வெறியர்களால் பத்தடி தொலைவில் இருந்து சுட்டுக் கொல்லப்படுவதை அந்தக் காணொளி காட்டியது.
சிறிலங்கா சிங்கள -பவுத்த இனவெறி ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய இனப் படுகொலைக்குப் பொறுப்பாக இருந்த இனத் துரோகிகளையும் பேரினப் படுகொலைக்காரர்களையும் வரலாறு பதிவு செய்யும்.
ஷேக்ஸ்பியர் கூறுவது போன்று ஏழேழு கடல் அளவு நீர் கொண்டு கழுவினாலும் இவர்களின் கைகளில் படிந்த குருதிக் கறையைப் போக்க முடியாது.
இந்த ஆண்டு ஜெனிவாவில் ஐ.நா. மனிதவுரிமை அவையில் சிறிலங்கா மீது போர்க்குற்றம் சாட்டி மேற்குலக நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்துப் பேசியதும் அல்லாமல் எதிர்த்து வாக்களிக்கவும் செய்தது.
திருகோணமாவட்டத்தில் உள்ள சம்பூரை சிங்கள ராணுவம் 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் மூலம் சம்பூர் உட்பட முதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூதூர் கிழக்கில் 20,000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 23 ஊர்களைச் சேர்ந்த 17,000 மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.
எனினும் மே 30, 2007 ஆம் ஆண்டு ராசபச்சேயினால் வெளியிடப்பட்ட அதி சிறப்பு அரச அரசாணை மூலம், 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புப் கொண்ட மூதூர் (கிழக்கு) மற்றும் சம்பூர் பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதில் ஜூன் 16, 2007 அன்று மூதூர் கிழக்கையும் சம்பூரையும் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசு அரசாணை மூலம் அறிவித்தது. அதே அரசாணையின் மூலம் முதலீட்டு சட்ட அவைச் சட்டததின் கீழ் 675 ச.கிமீ (260 ச.மைல்அல்லது 500 ஏக்கர்) பரப்பளவு கொண்ட ஒரு சிறப்பு பொருளாதார வலயமும் உருவாக்கப்பட்டது.
அரசினால் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த பூர்வீகப் பகுதிகளினுள் அமைக்கப்பட்டிருந்த 300 வீடுகள் மண் அகழும் இயந்திரத்தினைக் கொண்டு தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன், 500 ஏக்கர் கொண்ட இந்த நிலப்பகுதியில் இந்தியாவின் 100 மெகாவாட் மின் உற்பத்தி அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கான அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இந்திய அரசு சம்பூரில் 500 மெகாவாட் ஆற்றலுடைய ஒரு அனல்மின் உலையை கட்ட ஸ்ரீலங்கா அரசோடு உடன்பாடு செய்துள்ளது.
இந்தியா சார்பாக இந்திய அரச நிறுவனமான தேசிய அனல் மின் கழகமும், (National Thermal Power Corporation (NTPC) ஸ்ரீலங்கா அரசு சார்பாக இலங்கை மின்சார கழகமும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. 5-50 விழுக்காட்டில் இரண்டு நாடும் முதலீடு செய்யும். அமெரிக்க டாலர் 500 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் உலை 2012 இல் முடிவு பெறும்.
சம்பூர் நகரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் கடலடி கம்பிவடங்களை அமைக்கும் திட்டம் என்பன தொடர்பிலான ஒப்பந்தங்கள் அடுத்த கிழமை இந்தியா - சிறிலங்கா இடையே கையெழுத்திடப்படவுள்ளது.
இதன் மூலம் இடம்பெயர்ந்த 2000 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்லாது தடுக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாக வாழ்ந்த வாழ்விடங்கள் அநீதியான முறையில் பறிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நிலத்தை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு ஆய்வு செய்யுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு விட்டது.
மூதூர் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு சிங்கள – பவுத்த பேரினவாதியான ராஜபக்சே செவிசாய்க்க மாட்டார் என்பது தெரிந்ததே.
காலம் காலமாக வாழ்ந்த நிலத்தில் மூதூர் கிழக்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படாதது மட்டுமல்ல அவர்களது நிலம் அனல் மின்உலை கட்டுவதற்கு இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா தாரைவார்த்துக் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த மின் உலைத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் தமிழ்மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை பணவருவாய் தான் தனது குறிக்கோள் என்று இந்தியா சொல்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்ற மாதிரி ஏழைகளின் கண்ணீரில் இந்தியா பணம் ஈட்டப் பார்க்கிறது.
தமிழ்மக்களுக்கு எதிராக இந்தியா செய்யும் இந்த இரண்டகம் "தமிழின விரோதப் போக்கு" இல்லையா? இதைவிடப் பச்சை இரண்டகம் வேறு இருக்கமுடியுமா?
இதுதொடர்பாக மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது ...
கடந்த 2006 ஆம் அண்டு ஏப்ரில் மாதம் இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையால் மூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாம் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எமது மீள்குடியேற்றத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.
அதேசமயம், கடற்கரைச்சேனை சம்பூர் கிழக்கு சம்பூர் மேற்கு கூனித்தீவு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கணிசமான நிலப்பரப்பினை இந்தியாவிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அக்கிராமங்களைச் சேர்ந்த எம்மை பள்ளிக்குடியிருப்பு இறால்குழி ஆகிய பிரதேசங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அறிகின்றோம்.
முற்றுமுழுதாக விவசாயமும் கால்டை வளர்ப்புமே எமது தொழில்களாகும். நாம் வாழ்ந்த பிரதேசம் அதற்கேற்ற நீர்வளம் நிலவளம் மேய்ச்சல் தரைகள் சந்தை வாய்ப்பு என்பனவற்றைக் கொண்டுள்ளன.
ஆனால் தற்போது எம்மைக் குடியமர்த்த தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசம் இந்த வாய்ப்புக்கள் அற்ற பிரதேசம் ஆகும்.
'வெறும் குடியிருப்புக்கள் மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமானதல்ல" என்ற அடிப்படையில் எமது சம்மதம் இன்மையை ஏற்கனவே அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.
எனினும் இம் முயற்சிகள் கைவிப்படாத சூழ்நிலையில் நாட்டின் தலைவர் என்ற வகையில் எமது நியாயபூர்வமான கோரிக்கைகளை தங்களிடம் தெரிவித்து அதற்கான பரிகாரத்தினை எதிர்பார்க்கின்றோம்.
1) இழந்த எமது இயல்பு வாழ்வை மீட்டுத்தந்து எமது சொந்தக் கிராமங்களிலேயே மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுங்கள்
2) எமது கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு பரிசீலனை செய்யுங்கள்
3) எமது கிராமங்களை உள்ளடக்காத வகையில் அல்லது எமது குடியிருப்புக்களாவது பாதிக்கப்படாத வகையில் அடையாளம் கண்டு நில ஒதுக்கீட்டை மேற்கொள்ள உதவுங்கள்
4) மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற பிரதேசத்தில் எம்மைக் குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சியினை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்
5) எமது மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் வாழ்வுக்கும் எதிர்கால நன்மைக்கும் ஏற்றவிதத்தில் மீள்குடியேற்றத்தினை தொடர நடவடிக்கை எடுங்கள்.
காலம் காலமாக அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு நீண்ட துயரத்தினைச் சந்தித்து இன்று இயல்பு வாழ்வைப் பறிகொடுத்து நிர்க்கதியாகியுள்ள எமக்கு தங்களால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இக் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
நாட்டின் தலைவர் என்ற வகையிலும் பெருமை மிக்க புத்த மதத்தினைப் பின்பற்றும் உத்தம தலைவன் என்ற வகையிலும் தங்களிடம் இருந்து ஒரு நியாயபூர்வமான முடிவுக்காய் காத்திருக்கின்றோம்."
இப்போது நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்?
இவை தமிழர்களுக்கு எதிரான பச்சைத் துரோகம் இல்லையா?
தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா?
இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவர்களுக்கும் இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று கூறியுள்ளார் நக்கீரன்.
Comments