பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் ஆயிரத்திற்கும் அதிகமான குழிகளை வெட்டி அதிலிருந்து மண்ணோடு கலந்த தண்ணீரை எடுத்து பிறகு வடிகட்டி அந்த மக்களுக்கு அளித்தனர்.
கிளிநொச்சியை கைப்பற்றியதற்குப் பிறகு கண்ணில் கண்ட தமிழர்களையெல்லாம் சுட்டுப் படுகொலை செய்த சிறிலங்க ராணுவம், பதுங்கு குழியில் இருந்த மக்களை டாங்கிகள் ஏற்றியும், பதுங்கு குழிகளுக்குள் கையெறி குண்டுகளையும் வீசிக் கொன்றதென நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழர்கள் மீது சிறிலங்க ராணுவம் நடத்திய இனப்படுகொலையை மே 12 ஆம் தேதி வரை அங்கிருந்து கண்டு பிறகு காயமுற்று, சிறிலங்க ராணுவத்தின் பிடியில் இருந்து சமீபத்தில் தப்பித்து வெளியேறி வெளிநாட்டிற்கு வந்துள்ள மருத்துவப் பணியாளர் ஒருவர் தான் கண்ட காட்சிகளை விளக்கியுள்ளார்.
கிளிநொச்சியை கைப்பற்றியதற்குப் பிறகு முன்னேறிய சிறிலங்க ராணுவம், தர்மபுரம், வடக்கச்சி, விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை கடந்தபோது, ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்துகொண்டு முன்னேறியது என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியை எட்டுவதற்கு முன்னரே 8,000 பேர் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர் என்று தொண்டு நிறுவனத்தின் மருத்துவ ஊழியராகப் பணியாற்றிய அந்த நபர் கூறியுள்ளார்.
அவர், தனது மொழியில் அளித்த குறிப்புகளை நார்வே தமிழர் நல அமைப்பு தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளது.
அவர் அளித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வருமாறு :
முள்ளிவாய்க்கால் பகுதியில் தஞ்சமடைந்திருந்தபோது அவர்கள் மீது சிறிலங்க ராணுவத்தினர் கடுமையான தாக்குதல் நடத்தியபோது தாங்க முடியாமல் வெளியேறிய மக்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஊடுருவிய சிறிலங்க அரசின் கைப்பாவைகளே காரணம் என்றும், அவர்களின் நடவடிக்கை கண்டு விடுதலைப் புலிகளின் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கிளிநொச்சியை பிடித்த பிறகு மருத்துவமனையை குறிவைத்து சிறிலங்க படைகள் தொடர்ந்து எறிகணை வீசி தாக்குதல் நடத்தியவண்ணம் இருந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றிய பிறகு உடையார்கட்டு பகுதியில் இருந்த ஒரு பள்ளியில் தற்காலிகமாக மருத்துவமனை இயங்கியது. அதன் மீது மட்டும் 2,000 எறிகணைகள் வீசப்பட்டன. இதனைக் கண்டு பொதுநல ஊழியர்களும், மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்திருந்த 3 லட்சம் மக்களுக்கு வெறும் 30,000 பேருக்கு மட்டுமே போதுமான அளவு உணவை ராணுவம் அனுமதித்தது.
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காகத் தேவைப்படும் மயக்க மருந்துகளோ உயிர் காக்கும் மருந்துகளோ அனுப்பப்படவில்லை.
குழந்தைகளுக்கான பால் உணவுகளைப் பெறுவதற்காக வரிசையில் நின்றுக்கொண்டிருந்த மக்களின் மீது சிறிலங்க ராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை இழந்தனர். பல குழந்தைகள் தாய்களை இழந்தனர்.
இதேபோல, உணவுப் பொருட்களுக்காக காத்து நிற்கும் மக்களின் மீது சரியாக குறிவைத்து எறிகணை வீச்சு நடத்தப்பட்டது. ஆளில்லா விமானம் அளிக்கும் விவரங்களைக் கொண்டு இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பொதுமக்களுக்கு போதுமான உணவு இல்லாதபோது, போராளிகளுக்கு சேமித்து வைத்திருந்த உணவுகளை மக்களோடு பகிர்ந்துகொண்டனர் விடுதலைப் புலிகள்.
பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் ஆயிரத்திற்கும் அதிகமான குழிகளை வெட்டி அதிலிருந்து மண்ணோடு கலந்த தண்ணீரை எடுத்து பிறகு வடிகட்டி அந்த மக்களுக்கு அளித்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அம்மக்கள் இருந்தபோது தொற்று நோய் ஏதும் அங்கு இல்லை. ஆனால், அப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனைகளுக்கு எறிகணைத் தாக்குதலால் காயமுற்ற கருவுற்றப் பெண்களும், குழந்தைகளும் வந்தவண்ணம் இருந்தனர்.
காயம்பட்டவர்களை கொண்டுசெல்ல சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் கப்பல் வந்தபோதெல்லாம் எறிகணைத் தாக்குதல் அதிகமாக நடந்தது.
பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மாத்தளன், பொக்கனை ஆகிய இரண்டு பகுதிகளையும் சிறிலங்க ராணுவம் கைப்பற்றிய அன்று (ஏப்ரல் 20) ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.
மே 12 ஆம் தேதி எறிகணைத் தாக்குதலில் நான் காயமடைந்தேன்.
மே 15, 16 தேதிகளில் பல நூறு ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு சிறிய நிலப் பகுதிக்குள் சிறிலங்க ராணுவம் நுழைந்தது. அப்பொழுது வெளியேற முயன்ற நான், 300க்கும் அதிகமான உடல்களை தாண்டிச் சென்றேன். காயங்கள் பட்டு பலரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்தை சிறிலங்க படையினர் கைப்பற்றியதற்குப் பின்னர் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்.
சிறிலங்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் அந்த மக்களை வெயிலில் நிற்க வைத்து தாகத்தால் தவிப்பதை சிறிலங்க ராணுவத்தினர் ரசித்தனர்.
அங்கிருந்த பலர் அவர்களின் உறவினர்களின் கண்களுக்கு எதிரே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போரின் இறுதிகட்டத்தில் சில நாட்களில் மட்டும் 18,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர். 7,000 பேர் படுகாயமுற்றனர். 5,000 பேர் ஏதாவது ஒரு அங்கத்தை இழந்து ஊனமுற்றுக் கிடந்தனர். பல்லாயிரக்கணக்கான பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆனார்கள். நூற்றுக்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
சிறிலங்க தரப்பில் வறுமையின் காரணமாக அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்கள்தான் பெரும்பாலும் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு கருதி தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
Comments