ஜே.வி.பியைப் போன்று விடுதலைப்புலிகளை கையாளுமா இலங்கை அரசு?


வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த அரசு என்பன கி.மு., கி.பி. போலாகி விட்டன. இந்நிலையில் முகாம்களுக்குள் முடங்கியுள்ள 3 இலட்சம் மக்களின் அவல வாழ்விற்கு முன்னால், இவை குறித்து உரையாட முடியுமா? அல்லது விவாதிக்க முடியுமாவென்கிற கேள்வி, சில புலம் பெயர் அறிவு ஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது.

அதற்கான மாற்றுக் கருத்துகளையும் வழிமுறைகளையும் முன்வைப்பதே ஆரோக்கியமிக்கதாக இருக்க முடியும்.வட்டுக்கோட்டை பிரகடனம் வெறும் விவாத பொருளாகி, வரலாற்றில் ஒரு மிகச் சிறிய அம்சமென சித்திரிக்கப்படுகிறது.

சர்வதேச அரங்கில் ஏற்படும் மாறுதல்கள் குறித்தும், அவை பற்றியதான மேலெழுந்த வாரியான விளக்கங்கள், விரிவாகப் பேசப்படாமல் வாய்ப்பாடுகள் போன்று ஒப்புவிக்கப்படுகின்றன.ஆனாலும் கடந்த மே 19 வரை நிகழ்ந்த யுத்தத்தின் பின்புலத்தில், பெரும்பாலான சர்வதேச வல்லரசாளர்கள் மேற்கொண்ட ஒரு வழிப் பயணத்தை, சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிராந்திய, மேற்குலக ஏகாதிபத்தியங்கள் யாவும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை தமது நலன்களுக்கூடாகவே பார்த்தன. அம் மக்களின் நீண்ட அரசியல் அபிலாஷைகளை பயங்கரவாதமென்கிற திரை போட்டு மூடியன.

இதில் எந்தப் பயணத்தை மேற்கொண்டாலும், அது முதலாளித்துவ ஜனநாயகமாக இருந்தாலும் அல்லது வன்முறைப் போராட்ட வடிவமாக இருந்தாலும், அதன் கருத்து நிலை காவிச் செல்லும், பிரிவினையை நோக்கிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை அவை நிராகரித்தது.

இன முரண்நிலையைத் தமக்குச் சாதகமாகவும், நலன்களைப் பூர்த்தி செய்யவுமே, இப்போராட்டத்தை இவர்கள் கையாண்டார்கள்.

பெருந்தேசிய இன ஒடுக்கு முறையாளர், எதுவித தீர்வினையும் முன்வைக்க மாட்டார்களென்பதைப் புரிந்தும், ஒடுக்கப்படும் தேசிய இனத்தை பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதிலேயே தமது காலத்தைச் செலவிட்டார்கள்.

தமிழ் தேசிய இனத்தின் குடிசனப் பரம்பலைச் சிதைக்கும், திட்டமிடப்பட்ட பெரும்பான்மையினக் குடியேற்ற வாதக் கொள்கைகளே, போராட்ட வடிவத்தை மாற்றியது.

அதேவேளை, இந்திய நலனும், தமிழினத்தின் அரசியல் நலனும் ஒரு பொது தளத்தில் சந்திக்க வேண்டுமென பெருமூச்சு விடுபவர்கள், எந்த இந்திய நலன் குறித்து பேசுகிறார்களென்று தெரியவில்லை.

சாதீய இன ஒடுக்குமுறையைப் பாதுகாக்கும் இந்திய கட்டமைப்பா? அல்லது சமூகப் புரட்சியாளர்களை வேட்டையாடும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனா? அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கி, பிராந்திய ஆதிக்க கனவில் மிதக்கும் இந்திய வல்லாதிக்கத்தின் நலனா?

இதில் எந்த நலனோடு ஈழத் தமிழினத்தின் அரசியல் அபிலாஷை, சமரசம் செய்யவேண்டுமென்பதை தெளிவாகச் சொல்ல வேண்டும்.

தற்போதைய உலக ஒழுங்கில், இந்திய நலனோடு ஒத்துப் போக வேண்டுமாயின் அரசு வழங்கும் குறைந்தபட்ச தீர்வினை ஏற்றுக் கொண்டால், பாரத தேசத்தின் பிராந்திய நலன் பாதுகாக்கப்படும்.

முப்பது வருடகால, ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டதால், மாற்றுவழி சிந்தனைக் களத்தினை, இந்திய சரணாகதிச் சித்தாந்தத்தினால் நிரப்பி விடலாமென்று எண்ணுகிறார்கள்.இதைவிட அரசோடு பேசி, அதே தீர்வினை இலகுவாகப் பெற்று விடலாம். ஆனாலும், பழைய 13 ஆவது திருத்தச் சட்ட இணைப்பு, சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி தீர்வு, பற்றியதான விடயங்கள் குறித்து அரசாங்கம் கருத்தில் கொள்ளாது.

தற்போது, தென்னிலங்கையில் செயற்படும் சிங்கள கடும் போக்காளர்கள், யுத்தம் முடிந்ததால், தீர்வு தேவையில்லை என்கிற விதத்தில், தமது பரப்புரையை முன்வைக்கிறார்கள்.ஜனாதிபதித் தேர்தல் நடைöபறும்வரை, யுத்த வெற்றியால் பெறப்பட்ட பெரும்பான்மையின மக்களின் ஆதரவினைத் தக்க வைக்க வேண்டிய தொரு அவசியமும் ஆளுங்கட்சிக்கு உண்டு.இதில் பிரதான எதிர்க்கட்சியின் பரப்புரைகள் பலமாக அமையப் போவதில்லை. அவர்கள் உருவாக்கப்போகும் புதிய அணிகளும், காத்திரமான எதிர்ப்பரசியலை உருவாக்கி, மக்களை அணி திரட்ட உதவாது.

உதாரணமாக சர்வதேச போர்க் குற்றநீதிமன்று, படைத்தரப்பிற்கெதிராக முன்னெடுக்கும் எந்தவிதமான நகர்வுகளையும் முறியடிப் பேன் என்று ஜனாதிபதி கூறுவதையே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழிமொழிகின்றார்.

õன் மேற்கொண்ட ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளவில்லையென்றும் ரணில் விக்கிரமசிங்க தற்காப்பு நிலையெடுக்கிறார்.

மிகவும் உணர்வு பூர்வமான, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை இதுவென்று ரணிலுக்குப் புரியும். எனினும் வாக்கு வங்கி அரசியலில் உள்ள சாதக, பாதக அம்சங்களை, இன அரசியல் ஊடாகப் பார்ப்பதில், ஆளும் கட்சிக்கு எவ்விதத்திலும் சளைத்தவர்களல்லர் எதிர்க்கட்சியினர்.

ஆனாலும், பொருளாதார அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, இனவாத அரசியலின் வீரியம் குறைவடையும் வாய்ப்புகள் இருப்பதால், 3 இலட்சம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கானகாலக்கெடு மற்றும் அரசியல் தீர்வு பற்றியதான உரையாடல் என்பவற்றை முன் வைப்பதனூடாக, வெளிநாட்டு உதவிகளைப் பெறலாமென்று அரசாங்கம் காய்களை நகர்த்துகிறது.

அதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள சில விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களை விடுவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றான எதிர்ப்பரசியலையும் அரசாங்கம் உருவாக்க எத்தனிக்கக்கூடும்.

ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற ஜனநாயக நீரோட்டக் கலப்பில், இத்தகைய பங்கினை, அன்று அமெரிக்கா வழங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள சில விடுதலைப் புலிகளை, ஜனநாயக நீரோட்டத்தில் இணைய வைத்தால், புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நாடுகடந்த அரசு உருவாக்கமும், வட்டுக்கோட்டை பிரகடனத்தை முன்னிலைப்படுத்தித் தோற்றமுறும், மக்கள் பேரவைகளும், பலவீனமடைந்து, நீர்த்துப் போகலாமென்று சிலர் கணிப்பிடுகின்றனர்.

அதேவேளை, புலம்öபயர்ந்த ஈழத் தமிழ் மக்களின் பங்களிப்பு குறைவடைந்து அதன் எதிர்விளைவாக, சர்வதேசத்தின் அழுத்தங்களும், அரசாங்கம் மீது பிரயோகிக்கப்படாமல் தடுக்கப்படும்.

இதற்குள் போர்க்குற்றச்சாட்டுகளும் மறைக்கப்பட்டுவிடும். பெயர் விபரம் பட்டியல் இல்லாத 3 இலட்சம் தமிழ் மக்களும், போராளிகளும் விடுவிக்கப்பட்டு, இயல்பு வாழ்விற்குத் திரும்ப வேண்டுமாயின், சிறையிலடைக்கப்பட்ட சில தலைவர்கள் ஜனநாயக அரசியல் பாதைக்குள் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டுமென அரசாங்கம் நிர்ப்பந்திக்கலாம்.

அதில் இணைந்து கொள்ளக்கூடியவர்கள் பெயர்ப்பட்டியலில் லோரன்ஸ் திலகர், க.வே. பாலகுமாரன், கே.பி, யோகரெத்தினம் யோகி போன்றோரைக் குறிப்பிட்டு செய்தியொன்றும் கசிய விடப்பட்டுள்ளது.

இச்செய்தி மக்களின் நாடித் துடிப்பை அளந்து பார்க்கும் உளவியல் பரப்புரையாகவும் இருக்கலாம்.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய, இலங்கை அரசுகளிடம் முன்வைக்கவிருக்கும் அரசியல் தீர்வுத்திட்டத்தை பொறுத்தே, இப்புதிய "விடுதலைப் புலி' ஜனநாயக பிரவேச அரசியல் அனுமதிக்கப்படும்.

அதேவேளை, இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் விடுதலைப் புலிகள், அரசின் இத்தகைய நகர்விற்கு ஒத்துப் போவார்களா வென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதயச்சந்திரன்

நன்றி - வீரகேசசரி வாரவெளியீடு

Comments