![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSdik3UVZjY9X4ETs9zEXEyPO4Q8mSGZ8HOeLS8oj1Pp94d2gR9glJxLqY4Nmeoa184nDTaNL9nFSHC0ZEdFtYDZFuRq0jGvxjsanuOe5aJQiFK4iI7n2fceUjskcWQKfhIMTHPZZlGq0c/s400/1233628861_eelam.jpg)
"பிரபாகரன் என்ற மனிதர் உயிரோடு இருக்கிறார்.அவரால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டுக்கோப்புடன் இருக்கிறது. சிங்களப் படைகளின் அராஜகங்களை எதிர்க்கவும், பதிலடி கொடுக்கவும் முடிந்த பலத்துடன் இன்றும் களத்தில் நிற்கிறது ………." என்னும் நிலை ஈழ மண்ணில் நிலவி வந்தபோது,
பதுங்கிக் கிடந்த சிலர்
இப்போது.. இவை எதுவுமே இல்லை 'ஈழக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது'- இனி இலங்கையர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள், ‘தமிழர்’கள் அல்ல என்று ராஜபக்ஷே அறைகூவல் விடுத்த பின்னர் – துணிந்து தங்கள் புற்றுகளிலிருந்து வெளியே வந்து…. "நாங்கள் தமிழரல்ல; இலங்கையர்கள்" என்று கூறத்தொடங்கியுள்ளார்கள்.
இதற்கு, இவர்கள் கூறும் காரணங்களோ, சிறு குழந்தை கூடக் கைகொட்டிச்சிரிக்கும் வகையில் உள்ளது!
இலங்கையில், அதிலும் தமிழர் பகுதிகளில் "தலித்துகள்" கொடுமைப்படுத்தப்பட்டார்கள் "மேல் சாதி"த் தமிழர்கள் மட்டுமே அங்கு அரசியல் "பண்ணி"க்கொண்டிருந்தார்கள். ஏனையோரெல்லாம் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இதனையே புலிகள் இயக்கமும் தங்கள் "துப்பாக்கி"களின் வலிமையோடு தொடர்ந்து செய்து வந்தார்கள்.
இன்றோ, சிங்கள பௌத்த "தேவன்" ராஜபக்ஷே; தமிழ் "அரக்கனை?" வீழ்த்தி அந்நாட்டில் தர்மம் தலைதூக்குவதற்கு வழிசமைத்துவிட்டார் என்று "பரணி" பாடிக்கொண்டிருக்கிறது இந்தப் புதுமைப் புன்மைக் கூட்டம்!
இலங்கையின் அரசியல் வரலாற்றில்-தமிழர்கள் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்பட்டு வந்தார்கள் என்பதனையும்; அதனை எதிர்கொள்ளும் வகையிலும்-தட்டிக் கேட்டிடவும், அந் நாட்டில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன என்பதையும்.
அவை யாவும் ஆயுதக்கலாச்சாரத்தினை வழிமொழியவில்லை என்னும் உண்மையையும் இவர்கள் சுலபமாக மறந்துவிட்டு-அல்லது மறந்துவிட்டதுபோல் நடித்துத் தங்கள் பிழைப்புக்காக; தாம் புதிதாக வரித்துக்கொண்ட சிங்கள் எஜமானர்களுக்காகப் பரிந்துபேச முற்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் கூறுவது போன்று, வர்க்கபேதம்,சாதி பேதம் காரணமாக ஒடுக்கு முறைகளையும் அவமானங்களையும் சம்பந்தப்பட்ட பிரிவினர் எதிர்கொண்டிருந்ததை மறுக்கவில்லை. ஆனால், அவர்களது நியாயமான போராட்டங்களுக்கு, இன்று இவர்களால் குற்றம் சுமத்தப்படும் எல்லா உயர்சாதித் தமிழர்களும் எதிராகச் செயற்பட்டார்கள் என்றோ அவர்களது போராட்டங்களை முற்றாக ஆதரிக்கவில்லை என்றோ கூறிவிடமுடியாது.
இன்று சிங்கள அரசு செய்தது போன்று, ஐந்து மாத இடைவெளியில் ( இது 2009ம் ஆண்டின் ஆரம்பம் முதல் மே வரை) ஏறக்குறைய முப்பதாயிரம் உயிர்களை-அவையாவும் தமிழர்கள் என்னும் ஒரேயொரு காரணத்துக்காக- கொன்றொழித்த கொடூரத்துக்கு சமமாக இந்த "சமதைகோரிய" சக இனத்தினரைப் பழிவாங்கியதாகவும் தகவல்கள் இல்லை.
காலங்கலமாகப் பேணப்பட்டுவந்த ஒரு சமூகவழக்கத்தினை "கால ஓட்டத்தி"னோடு சீராக்கும் முயற்சிகள் எல்லாத்தமிழர்களாலும் மேற்கொள்ளப்பட்டுவந்திருக்கிறது. இதனை எவரும் மறுக்கவும் முடியாது.
எனவே இதனை ஒரு காரணமாகக் கொண்டு இன்று தமிழர்களது விடுதலைப் போரினைக் கொச்சைப்படுத்தும் வகையில் இவர்கள் செயலாற்றுவது நியாயமல்ல!
இலங்கை அரசால் அண்மையில் நிகழ்த்தப்பட்டது, சர்வதேசங்களாலும் கண்டிக்கப்பட்ட ,மனிதபிமானமற்ற "தமிழினப் படுகொலை".
ஈழத்தில் வாழுகின்ற தமிழர்கள்; அவர்கள் எந்தச் சாதியை, எந்த வர்க்கத்தை, தரத்தைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் "தமிழர்கள்" என்பதால்,மனித விழுமியங்கள் அனைத்தையும் மதியாது சிங்கள அரசால் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த இனப் படுகொலையினை, தமிழ் தெரிந்திராத; தமிழ்க்கலாச்சாரம் பற்றிக் கேள்வியுற்றுமட்டும் இருக்கிற மேற்குலகமும், மனிதாபிமானிகளும் அங்கு அவதியுறும் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்ததும்-தம்மால் இயன்ற உதவிகளை அளிக்கமுன்வந்ததும்- சக மனிதன் வேதனைப்படும்போது எழுந்தோடிவந்து அரவணைக்கும் ‘மனித மாண்பை’ உலகறியப் புலப்படுத்திய செயலாகும்.
இந் நேரத்தில், தமிழராய்- அதுவும் "ஈழத்தமிழன்" என்னும் காரணத்தால் வெளிநாடுகளில் புகலிட வாய்ப்பினைப்பெற்றிருக்கும் சிலர், சிங்களத்துக்கு ஆதரவாகக் குரல்தரும் ஈனத்தனம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இவர்கள் யாவரும் ஒருமித்த குரலில் கூறுவதெல்லாம், "புலிகள் பாஸிஸ்டுகள். அவர்களால் எதிராளிக் குழுக்களைச்சேர்ந்த தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்தப் புலிகளை அழித்த ராஜபக்ஷே தமிழர்களின் 'ஆபத்பாந்தவன்' 'தர்மிஷ்டன்' என்றெல்லாம் புகழ்பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் வேடிக்கை யாதெனில், இவர்கள் இவ்வாறு "ராஜபக்ஷே புகழ்" பாடுவது தமிழால்.!( விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்கிலத்திலும் உண்டு) இதற்கும் ஒருபடி மேலே சென்று,அவர்கள் தங்களை "இலங்கைத் தமிழர்" என்றும் சொல்லிக்கொள்வார்கள்.
தமிழின் "பெருமை"யும் "இலங்கை"யின் சிறுமையும்
இந்த இலங்கைத்தமிழர் என்னும் இன அடையாளந்தான், இவர்களைக் கடந்த இருபத்தைந்து வருடங்களாக இவர்களுக்குப் புகலிட வாய்ப்பினைப் பெற்றுத்தந்தது.
தனியாகத் தமிழர்கள் என்னும் அடையாளம் மட்டும் போதுமானதல்ல. காரணம், இந்தியத் தமிழர்களுக்கும், மலேசியத் தமிழர்களுக்கும் வேறு நாடுகளில் வாழும் எந்தத் தமிழருக்கும் இல்லாத சலுகை ‘இலங்கைத் தமிழருக்கு’ வழங்கப்பட்டிருக்கிறது.
அதனைப் பயன்படுத்தி இவர்கள் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்கள்.சுதந்திரமாக "வலைப் பூ"க்களை உருவாக்கி தங்கள் எண்ணங்களை எழுத ஆரம்பித்தார்கள்.சிலர் பிறந்த மண்ணில் கிட்டாத சொகுசு வாழ்க்கையையும்,கட்டற்ற கலாச்சாரப் பிறழ்வுகளையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.கூடவே தமது இனத்தைக் காட்டிகொடுக்கவும், எதிரிகளுக்கு "சாமரம் வீசவும்" கற்றுகொண்டார்கள்.
இவர்கள், இத்தனையையும் பெற்றதற்கு , இவர்கள், இலங்கை மண்ணில் தமிழராகப் பிறந்து, சிங்கள அரசின் அடக்கு முறை மற்றும் உயிருக்கான மிரட்டல் ஆகியவற்றுக்கு உள்ளாகியதுதான் முக்கிய காரணம் என்பதை இவர்களே மறுக்கமாட்டார்கள்!
"இலங்கைத் தமிழர்" என்று குறிப்பிடுவதன் வழியாகத், தமிழராய்ப் பிறந்திருக்கும் பெருமைக்கும் "இலங்கை"யின் அடக்கு முறைகளால் உயிர்-உடமை-மான இழப்புகளை எதிர்கொள்ளும் சாத்தியங்கள் அதிகம் என்னும் "சிறுமை"க்கும், அதன்வழி புகலிடந்தேடி "அகதி"களாய் வாழும் நிலையைப் பெறுவதற்கும் துணைசெய்த ஓர் "முரண் பட்ட" அடையாளத்தை இது சுட்டிநிற்கிறது.
உண்மையில், "இலங்கை" என்னும் முன் ஒட்டு, அந்நாட்டில், கடந்த முப்பது ஆண்டுகளாய் தமிழினம் பயமின்றி வாழ்வதற்கான சூழலை மறுக்கும் ஓர் நாடு எனத் தன்னை இனங்காட்டி நிற்கிறது.
1983 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இனப்படுகொலை, இதற்கு வித்திட்டிருந்தாலும், அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் "அன்றாட நிகழ்வுகளாகிப் போன" இனப் படுகொலைகளும், மனித உரிமை மீறல்களும்- அதற்குப் பதிலடியாக தமிழ் ஆயுதக்குழுக்களின் எதிர்த் தாக்குதல்களும் உட் பூசல்களும் இந்த ‘இலங்கைத் தமிழர்’ விடயத்தில் அவர்களை உலக "ஏதிலி" இனமாக மாற்றி அதற்கு அங்கீகாரத்தையும் அளித்துவிட்டிருந்தது.
இன்று, தாம் "இலங்கையர்" என்னும் அடையாளத்தை மட்டுமே நிலைநிறுத்திக் கொள்ள ஆசைபடுவதாகக் கூறும் இவர்கள் இந்த ‘இலங்கை’யின் பின்னே துருத்திக் கொண்டிருக்கும் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் தமிழர் என்னும் இன அடையாளத்தைத் துறக்க முனைவது வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது.
இன்று "வன்னி" முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் தங்கள் நல் வாழ்வுக்காக மன்றாடி ஏங்கிக் கொண்டிருக்கும் உயிர்கள் அனைத்தும் "இலங்கையர்" என்பதால் அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் எல்லாரும் "தமிழர்கள்" என்பதால் மட்டுமே அவர்களுக்கு இந்தக்கதி ஏற்பட்டிருக்கிறது.அவர்களோடு எந்தவொரு சிங்களரும் அங்கிருப்பதாகத் தகவல் இல்லை.சிங்களர்களெல்லோரும் தெருக்களில் கூடிக் கும்மாளமிட்டதாகத்தான் தொடர்புசாதனங்கள் சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியிட்டனவேயன்றி அந்த இனத்தின் ஒரு "பாதாள உலக தாதா"கூட இந்தத் திறந்த வெளிச் சிறைகளிலே இல்லை!
இலங்கைத் தமிழர்களது முன்னாள் தலைவர்களான, சேர் பொன்னம்பலம் இராமநாதன் தொடங்கி……….. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் வரையிலான மிதவாதத் தலைவர்கள் அனைவரும் அரசியல் ரீதியாகப் போராடியதெல்லாம்; இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்களது மண்ணில் அந்நாட்டில் வாழும் பெரும் பான்மை இனமான சிங்களருக்கு உள்ள உரிமைகளோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான்.
அந்தத் தீவில் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் காற்றின் வேகத்தால் வழிமாறிவந்த வட இந்தியாவின் "அடங்காத" அரச வம்சத்து வாரிசின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் முன்னே, அந்நாட்டின் பூர்வ குடிகளெனப் பெயர்பெற்றிருந்த தமிழர்கள் மண்டியிட்டு அடங்கி அடிமைகளாய் மாறிவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தலைவர்கள் அனைவரும் போராடினார்கள்.அதனைத் தமிழினமும் ஆதரித்தே வந்தது.
அவர்களது அரசியல் போராட்டத்தின் அடுத்த கட்டமாகவே ஆயுதப் போராட்டம் தோற்றம் கண்டது.
புலிகளின் போராட்டம்
"தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரர்கள்" என்ற ஆரம்பக் குழப்பங்கள் நீங்கி, தடியெடுத்த ஒருவனே தலைமையேற்ற வரலாறுதான்; பிரபாகரனது வருகையாக அமைந்தது.
இவ்வாறு குறிப்பிடுவதால், பிரபாகரன் செய்தவை அனைத்தும் சரியானவையே என்பதல்ல. சரியோ, தவறோ அதனைக் காலம் தீர்மானிக்கும். ஆனால், அவரின் பின்னால் நின்ற போராளிகள் யாவரும் தங்கள் சுகவாழ்வுக்காக அல்லது தமது மச்சான்,மாமன்,மருமகன்மார், அவர்களது குடும்பத்தார்,உறவினர்கள் எல்லோரும் பதவிகளையும்,பொருட்களையும் பெற்று உல்லாசமாக "உலகவலம்" வரவேண்டும் என்னும் பேராசையால் உந்தப்பட்டுப் களமாடிப் பலியானார்கள் என்று எவராவது கூறினால் அவர்களை வள்ளுவன் சொன்ன, "மக்கட் பதடி" என்னும் வார்த்தையால்தான் சுட்டவேண்டும்.
இந்தத் தன்னலமற்ற போராளிகளைத் தமிழினமே ஆதரித்து "மா வீரர்கள்" எனப்போற்றியது.
இவையனைத்திற்கும் மேலாக- உலகப் பந்தின் பல நாடுகளிலும் வாழும் பல்லின மக்கள் மத்தியில் ஈழத்தமிழனின் உரிமை வேட்கையினையும், சிங்கள அடக்குமுறைகு எதிரான உறுதியையும்-சுமார் மூன்று "தசாப்த்தங்களா"க இன அழிப்பினின்றும் பாதுகாத்துவந்த திறனையும் இங்கு எவரும் குறைத்து மதிப்பிட்டுவிடவும் முடியாது.
பொதுவாக, விடுதலைப் புலிகள் இயக்கம், சக போராளி இயக்கங்களை அழித்தன என்னும் குற்றச் சாட்டின் பின்னணியில் இன்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஈழப் போரின் வலிமையினை இது போன்ற நடவடிக்கைகள் நலிவடையச் செய்தன என்றாலும், அவ்வாறு மோதிக்கொண்ட ‘ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப்’ போன்ற இயக்கங்கள் இந்தியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுத் ,தமது அதிகாரத்தினை நிலைநாட்டியபின் அதன் செல்லப்பிள்ளையாகச் செயல்படும் எண்ணத்தோடு செயலாற்றின என்னும் தகவலும் உள்ளது.
இந்தச் சகோதர யுத்தத்தின் பின்னணியில், ’இந்திராவுக்கு’ப் பின் வந்த இந்திய அரசு ஊக்கம் அளித்திருக்கிறது! போதாதென்று, தமிழகத்திலும் கலைஞர் ஒருபக்கமும், எம்.ஜி.ஆர் மற்றொரு பக்கமுமாக நின்று இந்தப் போராளிகளுக்கு மறைமுகமாக ஆதரவு நல்கியிருக்கிறார்கள்.
உலகின் பல போராளி இயக்கங்களிடையே இதுபோன்ற உட்பகைகள், யார் பலவான் என்னும் போட்டி நிலவுவது சாதாரணமானதுதான். அவ்வாறான போட்டிகள் முற்றும் போது, ஆயுதங்களைக் கையில் வைத்திருக்கும் போராளிகள் ஒருவரை மற்றவர் சுட்டுக்கொண்டார்கள். சாதாரண அரசியல் வாதிகளெனில், ஒருவேளை தரக்குறைவாக ஒருவரை மற்றவர் தாக்கிப்பேசுவதோடு நின்றிருப்பார்கள். இங்கே பலப்பரீட்சை ஆயுத தாரிகளிடையே ஏற்பட்டகாரணத்தால், ஆயுதப் பிரயோக உத்தியிலும்,கட்டொழுங்கிலும் பெயர்பெற்ற ‘புலிகள் இயக்கம்’ ஏனைய இயக்கங்களை அடக்கி, ஈழத்தின் உண்மையான போராளிகள் தாமே என்பதை உலகிற்கு நிரூபித்திருந்தது. இதில் புலிகளை மட்டும் குற்றம் கூறுவது நடுநிலையாக அமைந்துவிடாது. ஏனெனில், ஆயுதங்களைக் கையிலேந்தியவர்கள் தம்மைத் தாக்கமுற்படுபவர்களைப் பதிலுக்குத் தாக்குவது என்பது தவிர்க்கமுடியாததே.புலிகளும் இதையேதான் செய்தார்கள்!
"ஈழத் தமிழனுக்கு உரிமைகள் வேண்டியதில்லை; அவன் அந்நாட்டிற்கு உரியவனல்ல. எனவே சிங்கள அரசிடம் சில சலுகைகளை மட்டும் பெற்று வாழப்பிறந்தவன். பெரும்பான்மைச் சிங்கள சமூகத்திடம் தமக்குத் தேவையானவற்றை யாசித்துப் பெறுவதற்கன்றி இவனுக்கு வேறெந்தத் தகுதியும் கிடையாது……" என்று கூறுவதும்;
முப்பது ஆண்டுகாலமாக ஓர் கட்டுக்கோப்பான இயக்கத்தினை வழிநடத்தி, சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனமான கொலைவெறியினை ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்துவதற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த ஒரு போராளிக்குழுவை……… சுமார் இருபது நாடுகளின் ஆயுத உதவியோடும், நல்லாசியோடும் நசுக்கி அழித்ததைப் பெருமையாகப் பேசும் ஒரு நாட்டின் "உண்மைக் குடிமகன்" என்று மார்தட்டிப் பேசுவதும் ஒன்றுதான்!
தங்களுக்கென்று பாரம்பரிய பிரதேசமும், பண்பாடும், மொழியும் கொண்ட ஒரு மக்கட்கூட்டம், தனிநாடு என்றும் தாயகம் என்றும் சிந்திக்கக்கூடாது என்று எவரும் கூறிவிடமுடியாது.
இதன் அடிப்படையில், தமிழ் மொழிக்காகவும், இனத்துக்காகவும் ஈழத்தின் மூத்த அரசியல் வாதிகள் ஆரம்பத்திலிருந்தே போராடியது குற்றமல்லவெனில், அடுத்தடுத்து நிகழ்ந்த பேரினவாத அடக்குமுறைகளாலும், வன்கொடுமைகளாலும் பாதிப்புற்றுத் தங்கள் பாதுகாப்புக்கென ஆயுதம் ஏந்திய இந்தப்போராளிகளின் செயல்களும் குற்றமற்றவையே! மற்றவர்கள் ஒருவேளை இதனைக் குற்றம் என்று சொன்னாலும் தமிழ் உணர்வுடையவர்கள் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்வது கடினம்.
தனிமனிதச் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் வலியுறுத்தும் சர்வதேசச் சட்டங்கள் எதுவும், அந்தத் தனிமனிதர்கள் கூட்டாக இயங்குவதை; அது தனி இனமாக நாடாக இருப்பதைத் தடைசெய்யமுடியாது என்பதே உண்மை.
ஆகவேதான்,
"சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும் போது
ஒந்தமிழே சலசலத்து ஓடவேண்டும்"
என்னும் பண்டிதர் சச்சிதானந்தனின் கவிதைவரிகளை இத்தனை விரைவில் மறந்து விட்டு, "நாம் தமிழரல்ல; இலங்கையரே" என்று, முள்ளிவாய்க்கால் சாம்பல்மேட்டின் மேல் நின்று ஆனந்தக்கூத்தாடும் மனவக்கிரம் எந்தத் தமிழனுக்கும் வந்துவிடக்கூடாது என்று விரும்புகிறோம்.
ஈழநேசன்
Comments