இப்போது ஈழத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே பாக்கியாக உள்ளன. ஒன்று, தற்போது மேற்குலகில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை முறையாகப் பயன்படுத்தி தமிழீழத்தை நோக்கி நகர்வது. மற்றொன்று, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து தமக்கான பாதுகாப்பை நிச்சயப்படுத்திக் கொள்வது.
தற்போது மேற்குலகிலும், அமெரிக்காவிலும் சிங்கள அரசின் இனவாதத்திற்கெதிரான கருத்துக்களும் கண்டனங்களும் வலுவடைந்து வருகின்றன. பல திசைகளிலுமிருந்து சிங்கள அரசுக்கெதிரான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த சாதகமான அரசியல் சூழ்நிலைகளை மிகச் சாதுரியமாகவும் விரைவாகவும் பயன்படுத்துவதனூடாக தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை நோக்கிய பயணத்தை வென்றெடுக்க முடியும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
கேந்திர முக்கித்துவம் வாய்ந்த அமைவிடம் தவிர்ந்த எந்த முக்கியத்துவமும் இல்லாத இலங்கைத் தீவில் இந்தியாவும் - சீனாவும் நிகழ்த்திவரும் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியே ஈழத் தமிழர்களின் வாழ்வு நிலையைச் சிதைத்து வருகின்றது. ஈழத் தமிழர்களின் இந்திய ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக அவர்கள் மீதான நம்பகத் தன்மையை இழந்த சீனா சிங்கள தேசத்தின் ஊடாக இலங்கைத் தீவில் நிலை கொள்ள முனைகின்றது. அதற்கு, சிங்கள மக்களது இந்திய எதிர் நிலையும், பவுத்த மதமும் பலமான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளன.
சீனாவின் ஆதரவு சக்தியாகவே புரிந்து கொள்ளப்பட்ட சிறிலங்காமீது அழுத்தங்களை மேற்கொண்டு எதனையும் சாதிக்க முடியாத நிலையில், ஈழத் தமிழர்களது பிரச்சினையின் ஊடாக சிறிலங்காவைப் பணிய வைக்கும் சாத்தியப்பாட்டை இந்தியா கையில் எடுத்தது. தெற்கே சீனா தனது நிலைகளைப் பயன்படுத்திவரும் நிலையில், இந்தியா திருகோணமலையை பிரதான தளமாகக் கொண்டு தமிழீழப் பகுதியில் தன்னை நிலைப்படுத்தும் முயற்சியில் முனைந்து செயல்பட்டு வருகின்றது.
இந்தியாவின் இந்த பிராந்திய வல்லாதிக்கப் போட்டி ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. இது ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தையே சூறையாடிவிடும் என்ற மிகத் தெளிவான கணிப்பை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர். இதனாலேயே, விடுதலைப் புலிகள் திட்டமிட்ட வகையில் மிகக் கொடூரமாக இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டனர். இதை நிரூபிக்கும் வகையில், 'இந்தியா நடாத்தவேண்டிய யுத்தத்தையே நாம் நடாத்தி முடித்தோம்' என்ற யுத்தத்தின் பின்னரான இலங்கையின் அறிவிப்பை இந்தியா நிராகரிக்காமல் அதனை ஏற்றுக்கொண்டது.
முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்குப் பின்னரான இந்திய எதிர்பார்ப்பு திசை மாற ஆரம்பித்தது. சீனாவின் இலங்கை மீதான அக்கறைக்கு எதிராக இந்தியாவுக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியிருந்த மேற்குலகும், அமெரிக்காவும் ஈழத் தமிழர்களின் பேரழிவாலும், தொடர்ந்தும் சிங்கள அரசு நிகழ்த்திவரும் அரச பயங்கரவாதத்தாலும் திகைத்துப் போயுள்ளன. இந்த அரசுகள் மட்டுமல்ல, இங்குள்ள மனிதாபிமான அமைப்புக்களும், ஊடகங்களும் கூட சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளைக் கண்டிக்கத் தலைப்பட்டுள்ளன. இதனால், இதுவரை காலமும் இந்தியா எந்த வகையிலாவது தமக்கு உதவும் என்ற நம்பிக்கையில் இருந்த ஈழத் தமிழர்கள் இந்தியக் கொடூரங்களைச் சகிக்க முடியாத நிலையில், மேற்குலகின் மாற்றங்களினூடாகப் பயணிப்பதே தமக்குப் பாதுகாப்பானது என்று எண்ணத் தலைப்பட்டனர். இது இந்தியா எதிர்பாராதது.
தனது பருத்த சந்தையைக் குறி வைத்துள்ள மேற்குலகு, தனது எல்லா நடவடிக்கைகளையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று நம்பியிருந்த இந்தியாவுக்கு மேற்குலகினால் சிறிலங்காமீது அதிகரித்துவரும் அழுத்தங்கள் பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. மேற்குலகின் இலவசங்களிலும் கடன்களிலும் தங்கியிருந்த சிறிலங்கா, மேற்குலகின் அழுத்தங்களை சீனா, பாக்கிஸ்தான், ஈரான் உட்பட்ட புதிய நட்பு நாடுகளின் உதவியுடன் முறியடிக்கும் புதிய வியூகத்தை சிறிலங்கா மேற்கொண்டுள்ளது. இதனால், இந்தியா நானும்தான் என்று சிறிலங்காவுடன் தனது கூடா நட்பைத் தொடர்ந்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அப்பம் பகிரப்போன இந்தியா தற்போது ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவை நம்ப இனியும் தயாராக இல்லாத நிலையில் உள்ள ஈழத் தமிழர்களின் பிடியை நழுவ விட்டுவிட்டால், சிங்கள தேசத்தில் தான் செல்லாக்காசாகவே மதிக்கப்படுவோம் என்பது இந்தியாவுக்குப் புரியாத விடயம் அல்ல. உறங்கு நிலையில் உள்ள சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்பு நிலை எப்போது வேண்டுமானாலும் வெளிக்கிளம்பும் என்பது இந்திய சமாதானப் படை காலத்திலேயே உணரப்பட்ட விடயம். ஏற்கனவே, ஜே.வி.பி. போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் இலங்கைத்தீவில் நிகழ்ந்த அத்தனை அழிவுகளுக்கும் காரணம் இந்தியாவே என்று குற்றம் சாட்டியுள்ளது.
சிங்கள இனவாத பூதம் மேற்கிளம்பாமல் இருப்பதற்காகவே, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை செல்வதற்கு முன்னர் தனது யுத்தக் கப்பல் ஒன்றை கொழும்புக்கு அனுப்பி, போர்ப் பயிற்சியை சிங்களப் படைகளுக்கு வழங்கியது. ஈழத் தமிழர்களை இதே நிலையில் வைத்து தனக்கான போர்க் கருவியாகப் பயன்படுத்தும் நிலையிலிருந்து இந்தியா மாறுவதற்கான எந்த சாத்தியப்பாடும் தென்படவில்லை.
இலங்கைக்குப் பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழக நாடாளுமன்றக் குழுவின் கருத்துக்களும், நடந்து கொண்ட முறையும் இதையே நிரூபிக்கின்றன. இந்த தமிழக நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கிய டி.ஆர். பாலு அவர்களது அணுகுமுறையை அவதானித்த யாழ்ப்பாண ஊடகமான வலம்புரி தனது ஆசிரியர் தலையங்கத்தில் 'முன்பு அனுமான் வந்தனால் இலங்கை அழிந்தது. தற்போது சனீஸ்வரன் வந்துள்ளது' என்று பதிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் கொடுத்து அனுப்பப்பட்ட பொன்னாடை மகிந்தவுக்குப் போர்த்தப்பட்ட போதே அது நன்றாகவே நிரூபணமாகிவிட்டது.
இந்த நிலையில், மேற்குலகின் மனமாற்றங்களையும் மனிதாபிமான சிந்தனைகளையும் எமது குறிக்கோளை வென்றெடுப்பதற்கான சக்தியாக புலம்பெயர் தமிழீழ மக்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்த வேண்டும். அது சாத்தியப்படாமல் போனால், இந்தியாவின் கருவியாகத் தொடர்ந்தும் ஈழத் தமிழர்கள் பயன்படாத வகையில், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை ஈழத் தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனூடாக தமிழீழம் என்ற இலக்கை அடைய முடியாமல் போனாலும், ஈழத் தமிழர்கள் தமக்கான பாதுகாப்பு அரண்களைப் பலப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இரு தெரிவுகளை மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு இந்தியா விட்டு வைத்துள்ளது!
நன்றி - ஈழநாடு
Comments