தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னைப் புனரமைக்க வேண்டும்!

ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்தும், தொய்வுறாமல் முன்னெடுத்துச் செல்லக் கூடிய வலுவும், காத்திரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரமே உள்ளது என்பது வெள்ளிடைமலை.

tnatamileelamquestionஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காத்திரமாக முன்னெடுத்து வந்த விடுதலைப் புலிகளின் தலைமை எதிர்பாராத விதமாக நிர்மூலமாக்கப் பட்டதுடன், தனது தமிழர்களுக்கு எதிரான போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டதாகக் கொக்கரிக்கும் சிங்களப் பேரனவாதம், விடுதலைப் புலிகள் மீளவும் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதைத் தடுத்துவிடத் துடியாய்த் துடிக்கின்றது. இதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும், தனது முகவர்கள் ஊடாகவும் பல்வேறு நாசகார சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் பண்டு தொட்டு இருந்துவரும் ஒற்றுமையின்மை, 21 ஆம் நூற்றாண்டிலும் நீடித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து ஒரு தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுவது என்பதுவும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளவும் தனது தலைமைத்துவத்தின் கீழ் ஒருங்கிணைத்துக் கொள்வது என்பதுவும் தொடர்ந்தும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது. இது செய்யப்பட்டு ஆகவேண்டிய பணியே ஆயினும் அதற்கான முயற்சிகள் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. கால அவகாசத்தை வழங்க எதிரிகள் விரும்பவும் மாட்டார்கள். யாழ் மற்றும் வவுனியாவில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல்கள் இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. நாம் எம்மை ஒழுங்கமைத்துக் கொண்டு மீள அரசியல் நடத்துவோம் என கால அவகாசத்தைக் கோர முடியாத அளவிற்கே காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்களின் அரசியல் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சுற்றியே சுழல வேண்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பூரணமாக நம்பி தமிழ் மக்களின் எதிர்காலத்தை ஒப்படைத்துவிட முடியுமா? அந்த அமைப்பின் சார்பில் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொள்கைப் பிடிப்பு மிக்கவர்களா? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்படுவதை மறுப்பதற்கில்லை.

ஆனால், இன்றுள்ள சூழலில் வேறு மார்க்கம் ஏது?

எனவே, தமிழ் மக்களின் இறுதி இலக்கை எட்டுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சென்னெறியை மாற்றியமைக்க என்ன செய்ய முடியும் எனச் சிந்திப்பது பொருத்தமாக அமையலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியற் கட்சி அல்ல. தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஸ் அணி) ஆகிய கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு (முன்னர் இந்த அமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அங்கம் வகித்திருந்தது). இந்தக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஒரு இறுக்கமற்ற ஐக்கியத்தைப் பேணியவாறே இந்த அமைப்பில் இணைந்து செயற்பட்டு வருகின்றன. அதேவேளை, சமாந்தரமாக தத்தமது கட்சிகளின் தலைமைப் பீடங்களையும் பேணியும் வருகின்றன.

துரதிர்ஸ்டவசமாக, இந்தக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் எவையுமே, தங்கள் கட்சிகளை முறைப்படி இயக்குவதில்லை. வருடாந்த மகாநாடுகளோ, அங்கத்துவம் சேர்த்தலோ, மாவட்ட மட்ட மற்றும் கிராமிய மட்ட அமைப்பாளர் நியமிக்கப்படலோ, உத்தியோகத்தர் தெரிவோ நடைபெறுவதில்லை. தேர்தல் காலங்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைக் கூட தேடித்தான் பொறுக்க வேண்டிய நிலையே உள்ளது.

இதுவரை காலமும் நிலவிய சூழலில் மேற்கூறிய விடயங்கள் சாத்தியமற்றவையாக இருந்திருக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில் அவை சாத்தியமானவை மட்டுமன்றி செய்தே ஆகப்பட வேண்டியவையுமே. ஆனால், இங்கே எழுகின்ற கேள்வி என்னவெனில் இந்த நான்கு கட்சிகளும் தனித்தனியே தமது கட்சிகளைப் புனரமைக்க வேண்டுமா? அல்லது அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புனரமைக்க வேண்டுமா என்பதே.

தனித்தனியே கட்சிகளைப் புனரமைக்க முயற்சிப்பது கட்சிகளைப் பொறுத்த விடயம். ஆனால், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வென்றெடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புனரமைப்பதே செய்யப்பட வேண்டிய பணியாகும்.

தனது அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டும் ஒரு தந்திரோபாயமாக, திடீர்த் தேர்தல்களை நடாத்துவதை ஒரு வழக்கமாக மகிந்த அரசு கொண்டிருக்கிறது. தமிழ்ப் பிரதேசங்களைப் பொறுத்தவரை யாழ் மற்றும் வவுனியா தேர்தல்கள் மகிந்த அரசு எதிர்பாத்திராத முடிவையே தந்துள்ளன. இந்நிலையில் புதிய பரீட்;சைகளுக்கு சிங்கள அரசு முயலாவிடினும், அடுத்த வருடத்தில் அரசுத் தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடாத்தியாக வேண்டியுள்ளது.

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை இப்போதிருந்தே தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, இது தொடர்பாக கட்சித் தலைமை சிந்திக்க வேண்டும். தமிழ் மக்களின் ஐக்கியத்தைக் குலைப்பதற்குக் கடந்த காலத்தில் காரணமாக இருந்த, அல்லது எதிரிகளினால் உபயோகிக்கப்பட்ட அம்சங்களைக் கவனத்திற் கொண்டு புதிய தலைமைத்துவமும், செயற்திட்டமும் அமைய வேண்டியது அவசியம்.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாலுள்ள மிகப் பாரிய சவால் தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கையான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப் போவது கூட்டமைப்பே என்பதை நிரூபிப்பது ஆகும். இதற்கூடாகக் கட்டியெழுப்பப்படும் நம்பிக்கையே மக்களைக் கட்சியின்பால் ஈர்க்கக் கூடியது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மக்களின் அவநம்பிக்கை தெளிவாகத் தென்பட்டது. எனவே, மக்கள் மத்தியில் தன்னை வலுவாக நிறுத்தக் கூடிய செயற்திட்டங்களை கட்சி முன்வைக்க வேண்டும்.

அத்துடன், பாரம்பரிய வழிமுறைகளைத் தவிர்த்துவிட்டு புதிய பாணியில் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். இளையோருக்கு வாய்ப்பு வழங்குதல், மகளிருக்கான இட ஒதுக்கீடு, பிரதேசவாரியான பிரிநிதித்துவம் போன்ற விடயங்களில் கவனஞ் செலுத்த வேண்டும். மேலும், கட்சியின் கிளைகளை புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் உருவாக்க வேண்டும். இது கட்சிக்கு பொருளாதார ரீதியிலும், தார்மீக ரீதியிலும் பலத்தைத் தரும். இது விடயத்தில் ஜே.வி.பி.யை முன்மாதிரியாகக் கொள்வது நல்லது.

ஒரு மக்கள் சக்திக்கு பரந்துபட்ட வெகுஜன ஆதரவு மிக அவசிமானது. போர்க் குணாம்சம் மிக்க மக்கள் சக்தியைத் திரட்டிக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களுள் ஒன்றாக தொழிற் சங்கங்களை உருவாக்குதல், விவசாயிகள் சங்கங்கள், மீனவர் சங்கங்களை அமைத்தல்;, முக்கியமன அம்சங்கள் தொடர்பில் போராட்டங்களை நடாத்துதல், கட்சிக்கென தனியான ஊடகங்களை தாபித்தல் என்பவற்றில் கவனஞ் செலுத்துவது ஆரோக்கியமானது.

கட்சித் தலைமைப் பீடத்துக்கு மேலதிகமாக, அறிஞர் பெருமக்கள், சமூகத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய ஒரு ஆலோசனைச் சபையை வைத்திருத்தல் சாலச் சிறந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவான காலகட்டத்தில் நான்கு கட்சிகளையும் ஒரே அணியின் கீழ் கொண்டு வருவதே மிகச் சிரமமாக இருந்தது. எந்தவொரு கட்சியும் தனது தனித்துவத்தை இழந்து ஓரணியாக மாறுவதற்குத் தயாராக இருக்கவில்லை. அதேவேளை, 2000ஃ2001 ஆம் ஆண்டுகளில் நிலவிய அரசியல் சூழலும், விடுதலைப் புலிகளின் ஆளுமையும் கூட்டமைப்பு உருவாக இடம் தந்தன.

எனினும், இன்றுள்ள கையறு நிலையைக் கவனத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

ஈழ மண்ணை இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த காலத்தில், இந்திய உளவு நிறவனமான ‘றோ”வின் முயற்சியால் தமிழ்த் தேசிய இராணுவம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவப் படை ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. இதன் ஆங்கிலப் பதத்தின் சுருக்கம் வுNயு (வுயஅடை யேவழையெட யுசஅல) என்பதாகும்.

தமிழ் (தேசியக்) கூட்டமைப்பு உருவான காலகட்டத்தில், அதன் உருவாக்கத்தில் காத்திரமான பங்கு வகித்தவர்களுள் ஒருவரான ‘மாமனிதர்” டி. சிவராம், புதிதாக அமையும் அணியின் பெயர் TNA என அமைய வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்த் தேசியத்தைக் கருவறுக்க உருவாக்கப்பட்ட TNA என்ற பெயரால் தமிழ்த் தேசியத்தைக் கட்டிக் காக்கப் போகும் புதிய அணி அமைய வேண்டும் என அவர் விரும்பினார்.

அவரின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பங்கு கொண்டோர் அனைவரும் ஏற்றுக் கொண்ட நிலையிலேயே TNA (Tamil National Alliance) உருவானது. ‘மாமனிதர்” டி. சிவராமைப் போன்ற பலரும் கண்ட கனவு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே. இந்தக் கனவிற்காக பலர் தமது உயிரை விலையாகத் தந்துள்ளனர். ‘மாமனிதர்” யோசப் பரராஜசிங்கம், ‘மாமனிதர்” நடராஜா ரவிராஜ், ‘மாமனிதர்” சிவனேசன் என மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், ‘மாமனிதர்” சந்திரநேரு, ‘மாமனிதர்” சிவமகாராசா என இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது உயிரை விலையாகத் தந்துள்ளனர்.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான கனகரெத்தினம் சிறைவாசம் அனுபவிக்க மற்றும் மூவர் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் அனுபவித்து வருகின்றனர். எனவே, இந்த விடயங்களைக் கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் நிதானமாகவும், சாதுரியமாகவும் முடிவுகளை எடுக்க வேண்டும்.

-சண் தவராஜா-

Comments