தமிழர்களை கொன்றொழித்த மகிந்தாவும் உதவி வழங்க மறுக்கும் உலகமும்....

முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்காவிட்டால் ஐ.எம்.எப். கடனை நிறுத்த வேண்டும்: ஆண்ட்ரூ ஸ்ட்ரோலின்

  • வன்னியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் முடக்கி வைத்துள்ள 2.65 இலட்சம் தமிழர்களை உடனடியாக விடுவிக்க சிறிலங்க அரசு மறுத்தால், அந்நாட்டிற்கு உறுதியளித்துள்ள ஐ.எம்.எப். கடனை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பன்னாட்டு சிக்கல் ஆய்வுக் குழு ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் பரிந்துரைத்துள்ளது.

மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைக் குழுவிற்கு வன்னி முகாம்களின் நிலை குறித்து அக்டோபர் 1ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்த பன்னாட்டு சிக்கல் ஆய்வுக் குழுவின் (International Crisis Group) இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்ட்ரோலீன், வட கிழக்குப் பருவ மழை துவங்குவதற்குள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து, அவர்கள் யாரோடு தங்க விருப்பப்படுகிறோர்களோ அவர்களிடம் செல்ல சிறிலங்க அரசு அனுமதிக்காவிட்டால், அந்நாட்டிற்கு பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்.) அளிக்க ஒப்புக் கொண்டுள்ள 2.6 பில்லியன் நிதி உதவியின் இரண்டாவது கட்ட நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் இணைந்து நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசு கூறும் காரணங்கள் போலியானவை!

  • முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்காததற்கு சிறிலங்க அரசு இரண்டு காரணங்களைக் கூறுகிறது. ஒன்று, அவர்கள் வாழ்ந்த இடங்களில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன, அவைகளை அகற்றிய பின்னரே அங்கு அவர்களைக் குடியமர்த்த முடியும் என்று கூறுகிறது. ஆனால், கண்ணி வெடிகளே இல்லாத பல நகரங்கள் உள்ளன, அங்கு அவர்களின் பல உறவினர்கள் உள்ளனர், அவர்களுடன் சென்று தங்கிக் கொள்ள அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்ட்ரோலீன், கொழும்பு சொல்லும் இக்காரணம் அடிப்படையற்றது என்று கூறியுள்ளார்.

    இரண்டாவதாக, முகாம்களில் உள்ளவர்களோடு கலந்திருப்பதாக சிறிலங்க அரசு கூறும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள். அவர்களைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறுகிறது. ஆனால் அந்தப் பணி எப்படி நடத்தப்படுகிறது என்று இதுவரை யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை எவ்வளவு

    பேரை அவ்வாறு சோதனை செய்து முடிவு செய்திருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. அந்த நடவடிக்கையை கண்காணிக்க பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்து உறுப்பினர்களைக் கூட அனுமதிக்கவில்லை. முகாமில் உள்ளவர்களோடு பேசினால் கூட அதுபற்றி எவருக்கும் தெரியவில்லை. நான்கு மாதங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறியுள்ளது, அவ்வாறு சோதித்ததற்குப் பின் யாரையும் விடுவிக்காதது ஏன்? என்று ஸ்ட்ரோலீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மன்னாரில் உள்ள முகாம்களில் உள்ளவர்களுக்கு பகல் நேரத்தில் மட்டும் வெளியில் சென்றுவர அனுமதி அட்டை வழங்குவதாக அரசு கூறுகிறது. இதனை மிக அதிகமான அகதிகள் வாழும் வன்னி மற்றும் திரிகோணமலை முகாம்களில் நடைமுறைப்படுத்தாதது ஏன்? மேலும், ஒருவருக்கு அனுமதி அட்டை வழங்கப்படுகிறது என்றாலே அவரை நன்கு சோதித்து விட்டார்கள் என்றுதானே பொருள்? பிறகு எதற்காக அவர்களை பகலில் மட்டுமே வெளியில் சென்றுவர அனுமதிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்ட்ரோலீன், அப்படி யாருக்கும் அனுமதி அட்டை வழங்கப்பட்டதை நடைமுறையில் காண முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    முகாமில் இருந்து இதுவரை 10,000 பேர் விடுவிக்கப்பட்டதாக சிறிலங்க அரசு கூறுகிறது, இது உண்மையில்லை. 3,300 பேர் மட்டுமே வன்னி முகாமில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டு வேறொரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு செப்டம்பர் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையை ஆதாரம் காட்டியுள்ளார் ஸ்ட்ரோலீன்.

மழைக்கு முன் வெளியேற்ற வேண்டும்!

தற்பொழுது மிகவும் ஆபத்தான நிலையில், நெரிசலாக இந்த முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து விடுவிக்க வேண்டும். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடம் பெயர்ந்த மக்கள் அனைவரையும் தங்கள் விருப்பப்படி சுதந்திரமாக, கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வெளியேற அனுமதிக்க வேண்டும்.

இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை எனில், அவர்களை அவர்கள் விரும்பும் உறவினர்களுடன் சென்று தங்க அனுமதிக்க வேண்டும். பருவ மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால் அதனை உடனடியாகச் செய்வது மிக அவசியமாகும்” என்று கூறியுள்ள ஸ்ட்ரோலீன், இதனைச் செய்ய சிறிலங்க அரசிற்கு அழுத்தம் தர, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்:

  • 1) முகாம்களில் உள்ளவர்களுக்கு சுதந்திரமாக நடமாடும் உரிமை உள்ளதென்பதை தெளிவாகவும், உரத்த குரலிலும் உலகிற்கு கூற வேண்டும்,

    2) முகாம்களுக்குச் சென்று பார்க்க மனித உரிமை அமைப்புகளுக்கு அனுமதி அளித்திட வேண்டும்,

    3) பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்தின் பார்வையில் எல்லா விதமான சோதனைகளையும் நடத்துமாறு பணிக்க வேண்டும்,

    4) ஒரு குறுகிய கால வரையறைக்கு மட்டுமே முகாமில் உள்ளவர்களுக்கு உதவ முடியும் என்று சிறிலங்க அரசிற்கு அறிவிக்குமாறு ஐ.நா. அவையை வலியுறுத்துங்கள்,

    5) சிறிலங்க அரசிற்கு பன்னாட்டு நிதியம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ள 2.6 பில்லியன் கடனின் இரண்டாம் பகுதியை அளிக்காமல் நிறுத்‌தி வைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஸ்ட்ரோலீன் பரிந்துரைத்துள்ளார்.

Comments