பிரான்சில் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தீர்மானத் தேர்தல்

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தாயகம் நோக்கி இன்றைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதையும் அதனுடைய ஒரு களமாகவே எதிர்வரும் 12, 13 திகதிகளில் தமிழர் அமைப்புக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டை தேர்தல் அமையப்போகின்றது. இது தொடர்பில் பிரான்சு தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

அன்பான தமிழீழ மக்களே!

ஈழத்தமிழினம் தான் இழந்ந உரிமையை மீண்டும் பெற்றிட பல அறவழிப் போராட்டங்களை நடாத்திய போது அப்போராட்டங்கள் யாவும் ஆளும் கட்சிகளால் ஆயுதம் கொண்டு அடக்கப்பட்டதும் பல உயிர்கள் எடுக்கப்படுவதும் வழமையான வாழ்வாகி தமிழர்களுக்கு போனதால் தமிழீழத் தந்தை அமரர் எஸ்.ஜே. வி.செல்வாநாயகம் அவர்கள் 1976ல் தமிழீழ மக்கள் சுதந்திரமும், சந்தேசமாகவும் வாழவேண்டுமாயின் அது நாங்கள் இழந்து போன இறைமைகொண்ட சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற்றெடுப்பதே என்று அறுதியும் இறுதியுமாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது அதனை ஆதரித்து அதற்காக அங்கீகாரத்தை 1977 ல் வட்டுக்கோட்டை என்னும் பிரதேசத்தில் ஐனநாயகத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் நிரூபித்து காட்டியிருந்தனர்.

அதனை ஏற்றுக் கொள்ளாத சிங்கள இனவாத அரசுகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை புறம் தள்ளி திட்டமிட்ட இனக்கலவரங்களை உருவாக்கி, தமிழ் மக்கள் தொடர்ந்து உயிர், உடமை, நிலம் பறிப்பு, கைதுகள், படுகொலைகள், காணாமல் போதல் போன்ற தமிழருக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதால் தமிழ் மக்கள் தமது உயிர் வாழ்விற்காக ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே உண்மையானதாகும். இந்த போராட்டம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளின், மக்களின் உயிர் அர்ப்பணிப்பினால் தமிழீழ மக்களுக்கு உலகில் ஒரு உயர்வான நிலைக்கு இட்டுச்சென்றதோடு நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கும் எமது உரிமை போராட்டம் உலகத்தின் இன்றைய விருப்பான சமாதான அரசியல் மூலம் குறிக்கோளை அடையலாம் என்பதால் அந்த அற்புதமான தியாகப் போராட்டம் மௌனித்து நிற்கின்றது என்பதே உண்மை.

அதே நேரத்தில் எமது மக்களின் இன்றைய அபிலாசைகளையும், 1977ல் தமிழ் மக்கள் கொடுத்த அங்கீகாரத்தையும் 32 வருடங்களின் பின் ஈழத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை நாடி பிடித்து பார்க்கும் செயலில் சர்வதேசம் நாட்டம் கொண்டுள்ளதையும் புரிந்து கொள்வோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! சர்வதேசம் இன்று ஈழத்தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை விரும்பியோ அன்றில் விரும்பாமலோ ஒரு தீர்வை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதற்கு காரணம் இனவெறி பிடித்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கு 60 வருடங்களுக்கு மேலாக கொடுமைகள் இழைத்த போதும், அவர்களின் வாழ்விடங்கள் திட்டமிட்ட ரீதியில் பறிக்கப்பட்டபோதும், உள்நாட்டுப் பிரச்சனை எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்கள் கைதுகளும், காணாமல் போதல், படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் படிப்படியாக உச்சமடைந்து மக்கள் போராட்டமாக பரிணமித்து சிங்கள தேசத்திற்கு சரிநிகராக தமிழ் மக்கள் உயர்வடைந்து நின்ற போதும், அதனை அடக்குவதற்கு இந்திய அரசு அமைதிப்படை என்ற பெயரில் எமது மண்ணையும், மக்களையும் தாங்கொணா துன்பப்படுத்திய போதும் எமது இனப்பிரச்சனையின் தீர்வுக்கு மூன்றாம் தரப்பாக உலக நாடுகள் உதவிட வேண்டும் என்ற எங்கள் தேசிய ஆன்மா கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்திய போதும்,

சர்வதேசம் வரை கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் இலங்கை அரசினால் புறம்தள்ளப்பட்டு மீண்டும் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட போதும், உலகம் முழுவதும் ஓடிச்சென்று வகை தொகையின்றி ஆயுதங்களை கொள்வனவு செய்த போதும், உலகத்திற்கு பயங்கரமான நாடுகள் என்ற நாடுகளுடன் நட்பையும் இராணுவ உதவிகளையும் பெற்றுக்கொண்ட போதும், தடைசெய்யப்பட்ட குண்டுகளை வாங்கி குவித்த போதும்,பயங்கரவாதத்துக்கெதிரான போர் எனக்கூறிக்கொண்டு எமது மக்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனஅழிப்பை தொடங்கி சொல்ல முடியாத துன்பங்களை எம்மக்களுக்கு ஏற்படுத்திய போதும், கொத்துக் கொத்தாக எம்மவர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், இன்று முகாம் என்ற பெயரில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பழிவாங்கல் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு தினம் தினம் கொன்றொழித்து வருவதை ஆதார பூர்வமாக சர்வதேச ஊடகங்கள் தெரியப்படுத்த போதும் வேடிக்கை பார்த்த,

பார்த்து வரும் சர்வதேசம் தனது மனசாட்சிக்கு விடைகாணும் ஒரு முயற்சியாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தாயகம் நோக்கி இன்றைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதையும் நாம் புரிந்து கொள்வோம். அதனுடைய ஒரு களமாகவே எதிர்வரும் 12, 13 திகதிகளில் தமிழர் அமைப்புக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டை தேர்தல் அமையப் போகின்றது. அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! நாம் இழந்தவைகள் கொஞ்சம் நஞ்சமல்ல! அதை உங்களுக்கு மீண்டும் தெரியப்படுத்தும் காலமும் இதுவல்ல! நீங்கள் ஒன்றும் தேசப்பற்று இல்லாத தமிழரும் அல்ல! இத்தேர்தலில் நாம் அளிக்கப்போகும் வாக்குகள் எமது தமிழ் மக்களின் தலைவிதியை கூட தீர்மானிக்கப்போகும் ஒரு பெரும் சக்தியாகக்கூட இருக்கலாம்! பற்பல அற்புதமான தியாகங்களை புரிந்தவொரு இனத்தில் இருந்து தோன்றியவர்கள் நாம்.

இன்று ஒரு மணி நேரம் செய்யப்போகும் ஒரு தியாகம் எம்மை மண்ணுக்காக, எம்மை நம்பி மானம் காத்து மண்ணில் சாய்ந்த மாவீரர்களுக்காகவும், முட்கம்பி வேலிகளுக்கு துன்பமே வாழ்வாகி வாழும் எம்மக்களுக்காகவும், எதிர்கால வாழ்வே இனி என்ன என்று தெரியாமல் இருக்கும் எங்கள் மண்ணின் விலைபேச முடியாத வீர, வீராங்கனைகளின் வாழ்வில் எதிர்பார்த்த கனவை நனவாக்கும் என நம்புவோம், புறப்படுவோம்!, செயற்படுவோம்! வாக்களிப்போம்! மற்றவர்களையும் உரிமையுடன் வாக்களிக்க வைப்போம்! காலம்: டிசெம்பர் 12, 13, சனி, ஞாயிறு காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 16.00 மணிவரை இத்தேர்தலில் வாக்களிக்கும் தகுதி கொண்டவர் 18 வயதிற்கு மேற்பட்ட தமிழீழத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். இந்நபர் தான் வசிக்கும் (Residence) இடத்தில் உள்ள அல்லது அதற்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கு

mail: mte.france@gmail.com

தொலை பேசி இல : 06 15 88 42 21

டிசெம்பர் 12,13, 2009 தேர்தல்

ஏற்பாட்டுக்குழு

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Comments