பிரித்தானியத் தலைநகரில் Essexல் கடந்த ஞாயிறு நடந்த பிரித்தானியத் தமிழர் பழமைவாத அமைப்பினர் (BTCA) ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரித்தானியப் பாராளுமன்றப் பழமைவாதக் கட்சியின் உறுப்பினர்கள் தம் ஆழ்ந்த கவலையையும் தீவிர ஆதரவையும் தெரிவித்துள்ளனர். ஆறு மாதங்கள் தடுப்புமுகாம் வாழ்க்கை என்பது மிக மிக நீண்டகாலம் என்றும் அந்த மக்கள் வலி அளவு கடந்தது என்றும் கூறியதோடு, தற்போதைய பிரித்தானிய அரசாங்கம் செயலைவிட வெறும் சொற்களையே சிறீலங்கா விடயத்தில் வெளியிடுகிறதென்றும் குற்றஞ்சாட்டினர். ஒரு உறுப்பினர் கூறுகையில் இந்தவதை முகாம்கள் தனக்கு ஹிட்லரின் (Auschwitz) அவுஸ்விட்ச் நாசி வதை முகாம் போன்ற பார்வையை உண்டுபண்ணுவதாகவும் கூறினார்.
இந்த நீண்ட இனவிரோதக் கொடுமையை அனுபவித்து வரும் தமிழ்மக்களுக்கு இருநாடு என்ற தீர்வு தவிர வேறெதுவும் அமைதியைக்கொண்டு வராது என்பதில் தம் உறுதியைத் தெரிவித்தனர். இப்படியான கருத்துக்களும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம். மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அனைத்தும் எதிர்வரும் மழைக்கால அபாயத்தைச் சுட்டிக்காட்டியும் அதை எல்லாம் அலட்சியம் செய்யும் சிறீலங்காவின் ‘தேசிய இனக்குரோதத்தின் அதீத வெளிப்பாடே தமிழ்மக்களைச் சிறையிட்டு சித்திரவதை செய்துவருவது என்று சர்வதேசம் புரியத் தலைப்பட்டுள்ளது. சிங்கள அரசாங்கத்தின் ஆதிக்கம் என்றுமே தமிழர்களை ஏற்றுக்கொண்டதில்லை.
அடக்கி ஆண்டு அழித்து விடவே முயல்கிறது. தனது இராணுவத்தையும் முழுமையாகச் சிங்களத் தனி இனவாத இராணுவமாகவே 1962ல் இருந்தே வளர்த்தெடுத்தது. இந்த இராணுவக் கட்டமைப்புக்களை பிரித்தானியாவும் மேலும் சில மேற்கத்தேய சக்திகளுமே இணைந்து கட்டியெடுப்பிக் கொடுத்திருந்தன. இன்று தாங்கள் வளர்த்தெடுத்தவர்களே தங்கள் மீது முட்ட வருவதைத் தாமதமாகவே உணரத் தலைப்பட்டுள்ளது. பிராந்தியப் பயங்கரவாத அரசுகளோடு கைகோர்த்து அவர்கள் வழங்கிய இராணுவத்தளபாட, ஆளணி, புலனாய்வுப் பங்களிப்போடு நீண்ட போரை நிகழ்த்திப் புலிகளின் மரபு வழித்தாக்குதல் சக்தியை மட்டுமே சிறீலங்காவால் அழிக்க முடிந்துள்ளது. ஆனாலும் இந்த அரச பயங்கரவாதம் தமிழர்களை நிரந்தரமாகப் பணிய வைத்துவிடமுடியாது.
கறுப்பு யூலை படுகொலைகளோ அல்லது 2009ல் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களோ தமிழர் போராட்டக் குணத்தை அடக்கிவிட முடியாது. புலம்பெயர் தமிழர்களாகிய நாம் அடக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்கள் குரல்களுக்காக எமது குரலைக் கொடுக்க வேண்டிய கடமையைப் பெற்றுள்ளோம். இந்த சர்வதேச நாடுகள் இன்றும் எம் இன அடக்குமுறை போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் இன்னமும் ஒரு செயற்திட்டத்தை வகுக்க முடியாமலே உள்ளனர். நாம் கேட்கும் சுயநிர்ணய உரிமையை இன்றும் ஒருநாட்டுக்குள் பயன்படுத்தும் செயற்திட்டம் இன்றைய உலக ஒழுங்கில் சரிவரப் புரிந்து கொள்ளப்படலாம்.ஐ.நா சாசனம் இரண்டு காரணிகளில் இதைப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றது.
முதலில் ஒரு சுதந்திர நாடுகளின் உறவுகளைப் பேணுவதிலுள்ள உரிமைகளுக்கும் மற்றையது ஒரு நாட்டின் ‘அனைத்து மக்களுக்கும்' ஆன உரிமையாகவும் பார்க்கப்படுகின்றது. மக்கள் எனும்போது அது நேரடியாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் மக்கள் அல்லது பல நாடுகளின் மக்களின் கூட்டம் எனவே பொருள்படுகிறது. ‘மக்கள்' என சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது ஒரு நாட்டிற்குள் உள்ள இரு இனங்களின் அடையாளங்களை நிலைநிறுத்தவும் அவர்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தவும் பயன்படாது. ஆனால் விதிவிலக்காக சுயநிர்ணய உரிமையை ஒரு இனம் தன் அடையாளத்தைத் தேசிய அடையாளத்திலிருந்து வேறுபடுத்தி நிலைநாட்ட பின்வரும் காரணிகள் அங்கீகாரம் வழங்கும்.
காலனிய ஆதிக்கம் - நிழல் அரசாங்கம் - அல்லது மனித உரிமை மீறல்கள் குறிப்பாக இனப்படுகொலைகள் - இந்த நிலைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகள் காரணியாகும்போது - போன்றவை சொல்லப்படுகின்றது. சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பிறகும் தமிழ்மக்கள் இன்றும் காலனிய ஆதிக்கத்தின் கீழ் உள்ளது போன்ற அநீதிகளிற்கும், அழிவுகளிற்கும் முகம் கொடுக்கின்றார்கள். இதை காலனிய ஆதிக்கம் என்று இந்த சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் - குறிப்பாகக் காலனியத்தை ஏற்படுத்திய பிரித்தானியா தமிழர்களால் ஏற்படுத்தப்பட்ட நிழல் அரசு பயங்கரவாத்திற்கெதிரான போர் என்ற உருமறைப்பில் அழிக்கப்பட்டுள்ளது. ஜ.நாவும் மேற்கத்தேய சக்திவாய்ந்த அரசுகளும் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அங்கீகரிக்க மறுக்கின்றன.
ஆனால் இதைவிடக் குறைந்த அழிவுகள் கொண்ட நாடுகளில் ‘இனப்படுகொலை' நடந்ததாக இதே சக்திகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன. ஒன்றுக்குமேற்பட்ட நாடுகளில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதை புதுடெல்லி சதிசெய்து தடுக்கிறது. இந்த தமிழர்களுக்கான இந்திய நயவஞ்சகத்திற்கு தாங்குதூணாக டெல்லியைத் தாங்கிப்பிடிக்கும் கருணாநிதிக்கு அவர் இனத்துரோகத்திற்காக நாம் ‘நன்றி' சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். வேறு சில சந்தர்ப்பங்களில் ஒரு நாட்டிற்கெதிராக சுயநிர்ணய நீதிக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் எந்த ஒரு செயற்பாட்டு இயந்திரமும் இன்றைய உலக ஒழுங்கில் சர்வதேசத்திடம் இல்லை.
இதிலும் மோசமாக இன்றைய உலக ஒழுங்கில் சுயநிர்ணயத்திற்காக எழுப்பப்படும் குரல்கள் எல்லாம் அந்தந்த நாடுகளில் ‘பயங்கரவாதமாக' திரிபுபடுத்தப்படுகின்றது. பிணக்கு உள்ள ஒரு நாட்டில் அந்த நாட்டின் பாதுகாப்பிற்கான உரிமையையும் (RSE RIGHT TO SECURITY) தேசிய இனத்தின் சுயநிர்ணயத்திற்கான உரிமையையும்(RSD RIGHT TOSELF dETERMNATION) வேறுபடுத்திப் பார்க்கும் செயற்திட்டமும் தகுதியும் சர்வதேச நாடுகளிடம் இல்லாமையால் கடந்த இரு தசாப்தங்களாக உலகநாடுகளின் உள்ளீட்டில் நிகழும் போராட்டங்கள் பிழையாகவே அணுகப்பட்டுள்ளன. ஒரு தேசியத்தின் சுயநிர்ணயத்திற்கான உரிமை அந்த இன மக்களாலேயே முடிவு செய்யப்படல் வேண்டும்.
இல்லையெனில் அது தவறாகவே வழிநடத்தப்படும். 1984 இற்குப் பின் ஐ.நா உறுப்புநாடுகள், ஒரு சுயநிர்ணய உரிமையை நிர்ணயிப்பதிலும், அந்த உரிமையைச் செயற்படுத்துவதிலும் அடைந்த தோல்விக்கு ஒரு வாழும் சாட்சியங்களாக உள்ளன என்று சுயநிர்ணய உரிமைகள் நிபுணர் Mark Lehman குறிப்பிடுகின்றார். இவர் ஒரு புதிய நீதிமன்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைகளை அணுகும் செயற் திட்டமொன்றை வரைந்துள்ளார். ஆனால் இது செயற்பாட்டிற்கு வரப் பல வருடங்களாகலாம் எனவும் கணிக்கின்றார். 1984ல் சோவியத் ஒன்றியமும், லெனினின் சுயநிர்ணயக் கோட்பாடும் உடைக்கப்பட்டது. எனவே எந்தவொரு ஈழத் தமிழர் அமைப்பும் வெறும் சுயநிர்ணய உரிமையோடு மட்டும் நின்றுபோனால் நாம் தோல்வி காணப்பட்டு சிறீலங்கா அரசிடம் கையளிக்கப்படுவோம்.
எமது இறுதிநோக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கூறியதுபோல் ஒரு சுதந்திர இறைமையுள்ள தமிழீழத் தனியரசாகவே இருக்கவேண்டும். இது ஏற்கனவே தமிழர் தாயகமாக இருந்து காலனிய ஆதிக்கத்தில் இழக்கப்பட்ட வழக்குக் கிழக்குப் பகுதியை உள்ளடக்கியதாக அமையும். விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஏற்படுத்தியிருந்த நிழல் அரசாங்கத்தின் பலமே அவர்களை நோக்கிச் சர்வதேசத்தையும், சிறீலங்காவையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவந்தது. பேச்சுவார்த்தை நிழல் அரசின் பலத்திலும், அவர்களின் நியாயத்திலும் உறுதிப்பட இருந்ததால் அவர்கள் சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்தும் பரீட்சார்த்த முயற்சியைச் செய்துபார்த்தார்கள். ஆனால் அவர்கள் என்றும் தனித்தமிழீழ அரசிற்கான போராட்டத்தைக் கைவிடவில்லை.
இதனாலேயே கூட்டரசுகளின் துணையோடு பிணக்குவியல்களின்மேல் நடந்துசென்று பெரும் விலைகளைக் கொடுத்து சிறீலங்காவால் எமது போராட்டப் பலம் நசுக்கப்பட்டு எமக்கான பேச்சுவார்த்தைத் தகுதி இழக்க வைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ் மக்கள் மீண்டுமொரு மாதிரி அரசை உருவாக்கி பலம் பெறவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேசங்களில் வாழும் புலம்பெயர் மக்கள் சர்வதேசத்திடம், சர்வதேச நியமங்களின் அடிப்படையில் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திக் குரல் கொடுப்பதன் மூலம், ஐ.நா சாசனத்தில் கோரப்பட்டதுபோல் ஒன்றிற்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் மக்களின் குரல் மூலம் எமது சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்தக் குரல் தமிழ் நாட்டில் ஒலித்திடாமல் இருக்க, கொங்கிரசிற்கு வால்பிடிக்கும் கருணாநிதி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் சக்தியை அடக்கியதோடு, சட்ட சபையிலும் தமிழீழ விடுதலைக்கு எதிரான தீர்மானத்தை எடுத்திருந்தார்.
அதனால் இந்தத் தடைகளை மீறும் சக்தி புலம்பெயர் தமிழர்கள் எம்மிடமே உள்ளது. ‘பிரிவினை என்பது எப்போது ஒன்றிற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களால் கோரப்படுகிறதோ அக்கணமே அது உள்நாட்டு விடயம் என்பதைக் கடந்து சர்வதேச விடயம் ஆகிவிடுகின்றது' என்று Vita gudeleviciute என்பவர் பால்டிக் சட்டங்கள் பற்றி சர்வதேசப் பத்திரிகைகளிற்கு எழுதியிருந்தார். மேலும் ஒரு நாட்டிற்குள்ளான பிரிவினைவாதம் ஏற்படும்போது அது உள்நாட்டு விவகாரமாக அமைந்துவிடும். அங்கு சிறுபான்மை, சுயநிர்ணய உரிமை என்ற சொற்களிற்கு இடமில்லாமல் போய்விடும். கருணாநிதி சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி தமிழீழ ஆதரவைப் பிரகடணப்படுத்தியிருந்தால் தமிழர்களின் விடுதலைப்போரும், தமிழீழத் தனியரசிற்கான சட்டரீதியான சர்வதேச அங்கீகாரமும் உடனடியாக வழங்கப்பட்டிருக்கும்.
இதற்கெல்லாம் தமிழர்களிற்கு இன்றைய முக்கிய தேவை உடனடியாக, நசுக்கப்பட்ட எமது மாதிரி அரசாங்கத்தை இங்கு புலம்பெயர் மண்ணில் நிறுவி அதன் பலத்தின்மூலம் எமது இலக்கை அடையவேண்டும். இதற்காகவே மீண்டும் மீண்டும் இங்கு அமைக்கப்படவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசு அமையும்போது அது தன் அடிப்படைக் கொள்கையாக சுதந்திர, இறையாண்மையுள்ள தனித் தமிழீழ அரசை உருவாக்குதல் என்ற கொள்கையினைக்கொண்டிருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. எமக்கு இன்று புலம்பெயர் தேசத்தில் இருக்கும் இந்த ஒரே தெரிவை எந்த சதிக்குள்ளும் சிக்கவிடாது உறுதியானதாக அமைப்பதே எம் தலையாய கடமையாகும்.
இந்த அமைப்பானது தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சபைகள் மூலமே பிரதிநிதித்துவப்படுத்தப்படும். இந்த சபை நோர்வேயில் உருவாக்கப்பட்டுவிட்டது. பிரான்சு வட்டுக்கோட்டைத் தீர்மான்திற்குரிய மக்கள் ஆணையும், நாடுகளின் சபைக்கான தெரிவுக்குழுவிற்கான தயார்ப்படுத்தல்களும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜேர்மனி மற்றும் ஏனைய நாடுகளிலும் பேரவைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்குத் தன்னாலான இராஜதந்திர நடவடிக்கைகளை சர்வதேசம் நோக்கிய குற்றச்சாட்டுக்களாக சிறீலங்கா மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது.
தனது புலனாய்வாளர்களை புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களில் தமிழர்கள் மத்தியில் முடக்கி விட்டுள்ளது. இம் முயற்சிக்கான பரப்புரைகளைச் செய்யும் இணையத் தளங்களையும், ஊடகங்களையும் முடக்கும் நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடுவதாக சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் பிரியதர்சன யாப்பா வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இந்த சிறீலங்கா அரசின் இராஜதந்திர நடவடிக்கைகளையும், கண்டம்தாண்டிய சிங்கள பயங்கரவாதத்தையும் முறியடிக்கும் முகமாக எமது அரசியல் எழுச்சி அமையவேண்டும். அடக்குமுறையாளர்களைவிட, விடுதலைக்காகப் போராடுவோர் பன்மடங்கு பலமுள்ளவர்கள், உறுதியானவர்கள் என்பதை வெளிக்காட்ட வேண்டும். அடைக்கப்பட்ட குரல்களின் விடுதலைக்காக எமது குரல்கள் ஓங்கி ஒலிக்க ஒன்றிணைவோம்.
-சோழ.கரிகாலன்
நன்றி:ஈழமுரசு
Comments