ஈழப் படுகொலைகளும், இந்திய ஊடகங்களின் வன்மமும்

  • ஊடகவியலாளர்களை கொலை செய்தும் ஒடுக்கியும் அச்சுறுத்தியும் துரத்தியும் விடும் நாடாக மாறியிருக்கிறது இலங்கை.

  • போரில் இந்தியாவின் பங்கு குறித்து தமிழகத்தின் எந்த ஊடகங்களும் நேர்மையான முறையில் எழுதவில்லை

மக்களை மூளைச் சலவை செய்யவும் அச்சுறுத்தவும் தாங்கள் சேவை செய்யும் அதிகார பீடங்களின் ஊது குழலாகவும், தாங்கள் நம்பும் சாதி, மதம் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் கார்ப்பரேட் சக்திகளாகவும் மாறியிருக்கின்றன இந்திய ஊடகங்களும் பெரும்பாலான ஊடகவியளார்களும்.

உலகெங்கிலும் உண்மைக்காவும் படுகொலை செய்யப்படும் மக்களுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் கவலைப்படும் ஊடகவியளார்களின் கதி அச்சப்படும் வகையில் அதிகரித்துச் செல்கிறது.

இடது திவீரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம். என்றெல்லாம் கட்டி எழுப்பப்படும் அமெரிக்க நலன்களும், அதையொட்டி இராணுவ அனர்த்தனங்களுக்கு இடையில் சிக்கி அழியும் மக்கள் குறித்து பேசுவதற்கும் எந்த ஊடகங்களும் தயாரில்லை. ஆப்கானில் எண்ணெய் லாறியில் இருந்து வழிந்தோடும் எண்ணையை பிடிக்க காலிக் குடங்களோடு திரளுகிற மக்களை குண்டு வீசிக் கொல்கிறது அமெரிக்கப் படைகள்.

அவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கிறது மேற்குலக ஊடகங்கள். பி.பி.சி, சி.என்.என். போன்ற ஏகாதிபத்திய உடகங்களுக்கு மாற்றாக அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் உருவாகி வளர்ந்தாலும் அதன் தேவைகள் ஒப்பீட்டளவில் போதுமானதாக இல்லை.பாக்தாத்தில் வைத்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீசி மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்று இப்போது விடுதலையாகியிருக்கும் சையத்தும் சரி, இந்திய உள்துறை அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் மீது செருப்பு வீசி சஸ்பெண் செய்யப்பட்டிருக்கும் ஜர்னைல் சிங் போன்றவர்களின் செயல் குறித்து விவாதிக்கக் கூட எந்த ஊடகங்களும் தயாரில்லை.

பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கிலும் அன்றாடம் வீசப்படும் குண்டுகள் குறித்து பிராந்திய மொழி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில்லை. காஷ்மீரிலும் இந்தியாவின் வடகிழக்கிலும், சட்டீஸ்கர்,மேற்குவங்கம் போன்ற மாவோயிஸ்டுகள் செல்வாக்குச் செலுத்தும் மாநிலங்களில் இந்திய இராணுவம் செய்கிற மனித உரிமைப் படுகொலைகள் குறித்தும் தடுத்து தனிமைப்படுத்தி ரகசிய வதை முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்து இந்திய ஆங்கில ஊடகங்கள் வாயே திறப்பதில்லை. இன்றைக்கு உலகமே இராணுவக் கண்காணிப்பின் கீழ் வாழ்கிறது. இந்தக் கண்காணிப்புகள் மாநில போலிஸ், மத்தியப் படைகள் என விரிவடைந்து சென்றாலும் இவர்களின் சீருடை தரித்த கண்காணிப்பின் கீழ் சிறுபான்மை மக்கள் அவர்களின் மத அடையாளங்களை பேணி சுதந்திரமாக வாழ முடியாத சூழல். இந்தியாவில் ஊடகங்களில் மக்களின் முற்போக்கு இயக்கங்களுக்கு எதிரான, இடஒதுக்கீடு உரிமைக்கு எதிரான போக்குகள் ஊடகங்களில் காணப்படுகிறது.

பொதுவாக இந்திய அரசு அல்லது ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழலாகவே இந்திய ஊடகங்கள் மாறி விட்ட சூழலில் இருந்துதான் ஈழத் தமிழர்கள் மீதான போரின் போதும் போருக்குப் பின்னரும் இந்திய ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து எழுதத்தோன்றுகிறது.

வன்னிப் போரும் ஆங்கில ஊடகங்களும்

வன்னி மக்கள் மீதான போர் 2007 – ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகாலம் நடந்த அந்தப் போரின் தெரிப்புகள் இந்தியாவிலோ, தமிழகத்திலோ இல்லாமல் இருந்தது. அவ்வப்போது தமிழக ஊடகங்களில் புலிகள் தொடர்பான கட்டுரைகள், அதுவும் வீரசாகசக் கதைகளைக் கொண்ட கட்டுரைகள் மட்டுமே வெளிவந்தன.

2007ல் மாவிலாறு பகுதியை இராணுவம் கைப்பற்றிய போது நான் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் சுப.தமிழ்செல்வனையும், இராணுவப் பேச்சாளர் இளந்திரையனையும் நேர்காணல் கண்டிருந்தேன்.

போரின் கொடூரமான ஒரு பக்கத்தை பேசவோ, இந்தப் போர் ஈழ மக்களின் சிவில் சமூக வாழ்வின் மீதும், அவர்களின் உயிர்வாழ்வின் மீதும் எவளவு மோசமான பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்றோ அறியாதவர்களாகவோதான் இருந்தார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களும் போரின் கோடூர முகம் குறித்து போர் துவங்கிய காலத்தில் பேசவில்லை, 2008 – ஆம் செப்டம்பருக்குப் பிறகு போர் தீவீரமாகி 2009 ஜனவரியில் கிளிநொச்சி விழுந்த போதே தமிழகத்தில் போராட்டங்கள் தீவீரமாகின அதுவும் சிறு சிறு அமைப்புகள் ஆங்காங்கு போருக்கு எதிராக போராடி வந்தார்கள். வெகுமக்களை மையமிட்டு நடத்தப்படும் அரசியல் கட்சிகள் அதன் பின்னே களத்தில் குதித்து அதை மாபெரும் சூதாட்டமாக மாற்றின.

  • தியாகி முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்குப் பின்னர் எழுந்த நெருப்பை அணைப்பதில் எல்லா தேர்தல் கட்சிகளுமே தீவீரமாக இருந்தது. ஆனால் பெருந்தொகையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டது தமிழக மக்களிடையே கடுமையான அனுதாப அலையை தோற்று வித்தபோது அது ஆளும் கட்சிகளுக்கு அரசியல் நெருக்கடியாகவும், எதிர்கட்சிகளுக்கு அல்வாவாகவும் மாறிவிடும் என்கிற சூழலில் குதர்க்கமான பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது சடுதியாய் தமிழகம் பற்றி எரிவதைப் போன்ற ஒரு தோற்றம் கட்டமைக்கப்பட்டது.
  • அனைத்துக்கட்சிக் கூட்டம், ராஜிநாமா நாடகம், மனிதச் சங்கிலி நாடகம், என ஈழப் போராட்டம் சூதாட்டமாக மாற்றப்பட்டு வெகுமக்கள் மயப்படுத்தப்பட்ட போது தான் இந்திய ஆங்கில ஊடகங்களின் அகோரமான தாக்குதல் தொடங்கியது. அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான இனவெறிப் பிரச்சாரத்தை துவங்கி வைத்தது இந்து பத்திரிகைதான். நெருக்கடிகளை எப்படியாவது சாமாளித்தாக வேண்டிய சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது திமுக. 14,10,2008 செவ்வாய்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏற்பாடாகியிருந்தது. அன்று வெளியான இந்துப் பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி The Dangers of Tamil Chauvinism. )http://www.thehindu.com/2008/10/14/stories/2008101454490800.htm) என்ற கட்டுரையை எழுதியிருந்தார். தமிழக மக்களை நச்சு விதைகளாகவும் இனவாதிகளாகவும் சித்தரிக்கும் கட்டுரை அது. புலிகளுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழகமே கிளர்ந்தெழுந்து விட்டது போன்ற தோற்றத்தையும் அதனால் இந்திய இறையாண்மையே கேள்விக்குள்ளாகும் சூழலும் எழுந்துள்ளதாகவும் அக்கட்டுரை சித்தரித்தது. அதில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களைக் கூட முட்டாள்கள் என்கிற ரேஞ்சில்தான் எழுதியிருந்தார் மாலினி பார்த்தசாரதி. அதுதான் இந்தப் போரின் மீதான தமிழக மக்களின் அனுதாபத்தையும் துடிப்பையும் இனவாதமாக சித்தரித்த முதல் எழுத்து. அந்த புள்ளியில் இருந்தே ஆங்கில ஊடகங்கள் ஈழம் குறித்து திட்டமிட்ட பொய்பிரச்சாரத்தை துவங்கினார்கள்.கிளிநொச்சி விழ்ந்த போது ஒரு உயிரழப்பு கூட இல்லாமல் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக ராஜபட்சேவின் நேர்காணலை வெளியிட்டார் இந்து ராம்.

முத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டி தமிழகம் முழுக்க எழுந்த அதிர்வலையும் கொளத்தூரில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திரண்ட முற்போக்கு எண்ணம் கொண்டவர்களின் கூட்டத்தையும் தீவீரவாத கூட்டமாகவும் பெரும் கலவரச் சூழல் எழுந்துள்ளது என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

ஆனால் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசியல் கட்சிகளைச் சாராதவர்கள் அரசியல் கட்சிகளின் மேல் கடும் வெறுப்புற்றவர்கள். முத்துக்குமாரின் மரணத்தை ஒட்டு அது பற்றி செய்திகளை வெளியிட்ட ஆங்கில ஊடகங்கள் அதை ஒரு மனநோயாக சித்தரித்து மனோவியல் நிபுணர்களின் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள் என்பதோடு, வழக்கறிஞர்களின் போராட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளின் போராட்டங்களையும் தேச நலனுக்கு எதிரானது எனச் சித்தரித்து அரசின் ஒடுக்குமுறைக்கு தூபமிட்டதும் இதே ஆங்கில ஊடகங்கள்தான்.

ஏன் இப்படி?

புலிகளின் தோல்வியை இவர்கள் ஈழ மக்களின் தோல்வியாக மட்டும் பார்க்கவில்லை, தமிழகத் தமிழர்களின் தோல்வியாகப் பார்த்தனர். தவிரவும் இந்துஸ்தானத்திற்கு எதிரான திராவிடக் கருத்தியல் அதன் இடஒதுக்கீடு கொள்கை, பிராந்திய தன்மை இவைகள் எல்லாமே பார்ப்பனீயத்திற்கு எதிரானவை என்பதிலிருந்து ஆங்கில ஊடகங்களின் வன்மம் துவங்கிறது.

உயர் கல்வித்துறையில் இட ஒதுக்கீடு, மண்டல் கமிஷனுக்கு ஆதரவான நிலை, என்கிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக் கோர்க்கைகளில் தமிழகம் தனித்து நடப்பதிலிருந்து இந்த வன்மம் துவங்குகிறது.

  • அந்த வன்மத்தின் உச்சத்தைத்தான் நாம் மே மாதம் புலிகள் மீதான போர் முடிவுக்கு வந்த போது ஆங்கில ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தில் பார்த்தோம். பொதுவாக போரின் முடிவு என்பது பயங்கரவாதத்தை அழித்த அரசின் வெற்றி என்ற பார்வைதான் ஆங்கில ஊடகங்களின் பார்வை.ஆனால் இந்தப் போர் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களையும் பல்லாயிரம் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அழித்து துயரமான ஒன்றாக முடிவுக்கு வந்தது குறித்து கவலையற்று, பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடினார்கள்.

இந்திய ஆங்கில ஊடகங்கள். மே மாதம் 19 ஆம் திகதில் தொடங்கி அடுத்த ஒருவார காலத்திற்கு ஆங்கில ஊடகங்களின் பிரச்சாரம் என்பது இராவணனை அழிக்கும் தசரா விழா போன்று கொண்டாடப்பட்டது. பிரபாகரன் எப்படி இறந்தார்? அது குறித்து பிரமுகர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று சோ ராமசாமியையும், சு.சாமியையும் பேட்டி எடுத்து தொடர்ந்து ஒளிபரப்பியது ஊடகங்கள்.

எங்கோ சாலையில் நடந்து போகிற ஒருவரிடம் .பிரபாகரன் இறந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கிறார் டைம்ஸ் நௌவ் செய்தியாளர் அவர் தீவீரவாதி கொல்லப்பட்டது குறித்து மகிழ்ச்சி என்கிறார். உடனே செய்தியாளர் கேமிராவுக்குள் வந்து தமிழக மக்கள் பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார். என்.டி.டி.வி, சி.என்.என்.ஐ.பி.என், டைம்ஸ் நௌவ், ஹெட்லைன்ஸ் டுடே என எல்லா ஆங்கில ஊடகங்களுமே மூன்றாம் தரமான மஞ்சள் ஊடகங்களாக மாறிப்போனது அப்போதுதான்.

சந்தீப் குமார் ரத்தோய், பர்கா தாத்தா, டைம்ஸ் நௌவ் செய்தியாளர் என எல்லா அதிமுகக்கிய இந்திய ஊடக முகங்களும் இனவாதிகளாக மாறி நீண்ட கால வன்மத்தை தமிழக மக்கள் மீது பொழிந்து கொண்டிருந்தார்கள். போர்க்காலத்தில் ஈனத்தனமான பல செய்திகளை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு அகதி முகாம் பற்றி குறிப்பிடத்தக்க கட்டுரை ஒன்றை கொண்டு வந்தது. மலையாளியான ஜெயாமேனன் எழுதிய அந்தக் கட்டுரை பாவத்தைக் கழுவுகிற பிலாத்துவின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கட்டுரை. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியான சிற்ந்த கட்டுரைகளை வெளியிட்டது தெஹல்கா இதழ்தான்.

போர் காலத்தில் இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியாவில் எங்கெல்லாம் பயிர்ச்சி எடுக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறான பயிர்சிச்கள் உதவிகள் வழங்கப்பட்டது என்றும். இந்தியா இலங்கை அரசிற்கு எவ்வாறு உதவுகிறது என்றும் பல கட்டுரைகளை இந்தியாவின் கோரமுகத்தை அம்பலப்படுத்தி தெஹல்கா எழுதியது. ஆனால் இந்து ராம் போன்ற இடது சாரி முகமூடிகள் இன்று வரை தொடர்ந்து போருக்குப் பின்னரும் இலங்கை அரசின் அங்கீகரிக்கப்படாத இந்தியத் தூதர்கள் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை இனப்படுகொலை வெளிக் கொணர்ந்த ஊடகங்கள்.மக்களினங்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விசாரணைக்குட்பட்டே வருகிறது.

படுகொலை நிகழ்த்தும் நாடும் அதைச் சூழ நிலவும் பிராந்திய அரைசியலும் உலகநாடுகள் எவ்விதமான துருவ அரசியலில் தங்களைப் பிணைத்துள்ளன என்பதைப் பொறுத்தும் இத்தகைய விசாரணைகளை முன்னநகர்த்துகின்றன. நாஜிப்படுகொலைகள், ருவாண்டா படுகொலைகள், உள்ளிட்ட படுகொலைகளுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு இனப்படுகொலைதான் இலங்கையிலும் நடந்தது. பொதுவாக குறிப்பிட்ட இனத்த்தை முடக்கி அழிக்கவோ, பலவீனமாக்கவோ நினைத்து இவ்விதமான இன அழிப்புகள் நடந்து சில காலம் பின்னரே இப்படுகொலைகள் உலகின் கண்களுக்குத் தெரியவரும். ஆனால் இலங்கையில் போர் தீவீரமாக நடந்த 2009 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்காலில் பகுதிக்குள் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்குள் நடந்தவை அப்பட்டமான இனப்படுகொலை என்று உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள்.

தமிழகத்தில் கடும் கொந்தளிப்பான போராட்டங்களும், அதை அச்சுறுத்தி அடக்குகிற நிலையும் காணப்பட்டது. போர் முடிந்த பிறகு மேற்குலக ஊடகங்கள் இனப்படுகொலைக்கான ஆவணச் சாட்சியங்கள் சிலதை வெளியிட்டன. அந்த வகையில் டைம்ஸ் இதழ் போர் முடிவுக்கு வந்த மே மாதம் இறுதியில் 29ஆம் திகதி முதல் கட்டுரையை வெளியிட்டது.

இறுதிப்போரின் போது இருபதாயிரம் மக்கள் சிங்களப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்றது அந்த புலனாய்வு அறிக்கை. பீரங்கிகள், கனரக ஆயுதங்களை பயன்படுத்தி சர்வதேச போர் நெறிகள் எல்லாவற்றையும் மீறி கனரக ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட கொடூர யுத்தம் என்று இதை வர்ணித்த டைம்ஸ் இதழ் தனது புலனாய்வுச் செய்தியாய் இதை பதிவு செய்தது.

இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் எடுக்கப்பட்ட பேரழிவைக் காட்டும் புகைப்படங்களோடு வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரை ” பீரங்கித் தாக்குதல் மற்றும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பல நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் பீரங்கி தாக்குதலை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்தது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒரு லட்சம் தமிழர்கள் இருப்பதாகவும், இப்பகுதியில் தாக்குதல் நடத்தப்படாது என்றும் இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் டைம்ஸ் இதழ் நடத்திய புலனாய்வு விசாரணை மற்றும் புகைப்படங்களில், இலங்கை ராணுவம் உலக நாடுகளுக்கு அளித்த உறுதி மொழியை மீறியுள்ளது தெரிய வந்துள்ளது. போஸ்னியாவில் 1995-ம் ஆண்டு ஏற்பட்ட மனிதப் படுகொலை மற்றும் சூடானில் உள்ள தார்ஃபூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களைப் போல இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் அமைந்துள்ளது என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாதுகாக்கப்பட்ட பகுதியில் மட்டும் இலங்கை ராணுவ நடவடிக்கையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது”

சில நாள் இடைவெளிக்குப் பிறகு டைம்ஸ் இக்கொலைகளை வார இறுதிக் படுகொலைகள் என்று கடுமையாகச் சாடி செய்தி வெளியிட்டது.

பிரெஞ்சு ஊடகமான லே மாண்டே போன்ற இதழ்கள் 13 சதுரகிலோ மீட்டருக்குள் ஐம்பதாயிரம் மக்கள் சிக்கி அவர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்படுவதாக எழுதியது . இதில் நாம் சந்திக்கும் ஒரு முரண் என்னவென்றால் போர்பகுதிக்குள் எழுபதாயிரம் மக்கள் இருப்பதாக இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி பாராளுமன்றத்தில் சொன்னார். பல ஊடகங்களும் ஐம்பதாயிரம் என்றும் எழுபதாயிரம் என்றும் சொன்னன.

உண்மையில் அங்கு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து புலிகள் சொல்லி வந்தார்கள். இந்தியாவும் இலங்கை அரசும் வேண்டுமென்றே மக்கள் எண்ணிக்கையை குறைத்துச் சொல்ல உண்மையான மக்கள் எண்ணிக்கை எவளவு என்று தெரியாத ஊடகங்களோ அனுமானமாக மக்கள் எண்ணிக்கையை வெளியிட்டாலும் அவர்களின் அக்கறையை நாம் மதிக்கத்தான் வேண்டும். போருக்குப் பின்னர் பான்கிமூன் நடந்து கொண்ட விதம், இந்திய வம்சாவளியில் வந்த விஜய்நம்பியாரை இலங்கை விவாகரங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்தது குறித்தும் அவரது தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசின் இரணுவத்திடம் ஊதியம் பெற்றுக் கொண்டு இராணுவ அட்வைசராக இருப்பது குறித்தும் இனனர் சிட்டி பிரஸ் நேரடியாகவே ஐநாவின் தூதுவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு விஜய் நம்பியாரின் இந்திய சார்பையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் நடந்து கொண்டதையும் கூட இன்னர் சிட்டி பிரஸ் வெளிக் கொண்டு வந்தது. அத்தோடு பெருந்தொகையான மக்கள் இனப்படுக்கொலை செய்யப்பட்ட போது அதுகுறித்து அமைதியாக இருந்து கழுத்தறுத்துவிட்டார் பான்கிமூன் என்று கடுமையாக பான்கிமூனைச் சாடியது இன்னர் சிட்டி பிரஸ்.

இந்த ஊடக நிறுவனத்தின் கடுமையான சாடலுக்குப் பின்னர்தான் பான்கிமூன் மென்மையாகவேனும் இலங்கை அரசை கண்டிக்க முன்வந்தார். போருக்குப் பின் பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டு முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களில் 13,000& க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள் குறித்தும் காத்திரமான கேள்விகளை அது எழுப்பியது.

மௌனித்திருந்த மேற்குலக ஊடகங்கள் ஓரளவுக்கு செய்திகளை வெளியிட்டன. டைம்ஸ், லே மாண்டே, இன்னர் சிட்டி பிரஸ், வரிசையில் இலங்கை அரசின் இனவாதக் கொலைகளுக்கு ஆதாரமாக உறுதியான இரண்டு ஆவணங்களை வெளியிட்டது சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம்.

ஏனைய ஊடகங்களைக் காட்டிலும் சேனல் 4 நிறுவனத்தின் பணி இலங்கைப் போரில் அளப்பரியது. ஐடிஎன் செய்தி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் சேனல் 4 மார்ச் மாத இறுதியிலேயே தனது படப்பிடிப்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. இரும்புத்திறை போட்டு மூடப்பட்டு பெருமளவான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இடத்திற்கு இலங்கை அனுமதித்தது சில ஊடகவியளார்களை மட்டும்தான். மேற்குலக ஊடகங்களுக்கு கண்டிப்பான முறையில் அனுமதி மறுக்கப்பட்டது. சில தமிழக ஊடகவியளார்கள் அங்கு செல்ல முயன்றோம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ( சில இலங்கை ஆதரவு தமிழக. ஆங்கில, ஊடகவியளார்கள் இலங்கை அரசின் மறைமுக நிதி உதவியோடு அங்கு சென்றும் வந்தார்கள். இந்து ராம் இராணுவ ஹெலிகாப்டரிலேயே வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்) என்பதை எல்லாம் தாண்டி மக்கள் சார்ந்து எழுத நினைத்த எவருக்குமே அங்கு அனுமதி இல்லை. இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி செய்தியாளர்கள் மட்டும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இப்படிப் போன ஒரு சிங்கள ஊடகவியளார்கள் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சில மடிக்கணனிகளை திருடிய சம்பவம் கூட நடந்தது. இந்நிலையில் சானல் 4 தொலைக்காட்சியின் செய்தியாளர் நிக் பேட்டன் வால்ஷ், தயாரிப்பாளர் பெஸ்ஸி டூ, கேமராமேன் மாட் ஜாஸ்பர் ஆகியோர் வவுனியாவுக்குள் நுழைந்து அங்குள்ள அகதி முகாம்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி முதல் செய்தித் தொகுப்பை வெளியிட்டார்கள். பெருமளவான தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாகவும், அவர்கள் எந்த நம்பிக்கையும் அற்று கொடூரமான கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தியை பதிவு செய்தார் நிக் பேட்டன்.

வவுனியா ஆரம்ப சுகாதார மையத்திற்குள் ரகசிய கேமிராவைக் கொண்டு போய் அங்கிருந்த நோயாளிகள், குவித்து வைக்கப்பட்டிருந்த பிணங்கள் குறித்த செய்திகளை எல்லாம் முதன் முதலாக கொண்டு வந்தவர்கள் இக்குழுவினரே, மிக முக்கியமாக சேனல் 4 தொலைக்காட்சி கனரக ஆயுதங்கள் போரில் பயன்படுத்தப்பட வில்லை என்று இந்தியா இலங்கை அரசுக்குக் கொடுத்த நற்சான்றிதழை உடைத்தெரிந்தார்கள். அவர்கள் தொகுத்தளித்த இந்த செய்தி ஆவணம் மே 5 ஆம் நாள் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது அது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் மூன்று பேரும் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.

பின்னர் ஜனநாயத்திற்கான ஊடகவியளார் அமைப்பு வெளியிட்ட கொடூரமான இனப்படுகொலை விடீயோவை வெளியிட்டதும் சேனல்4 தொலைக்காட்சிதான்.

இத்தனை ஊடகங்கள் இவளவு கேள்வி எழுப்பியும், போர் தொடர்பாகவும் இனப்படுகொலை தொடர்பாகவும் இவளவு ஆவணங்கள் வெளிக் கொணரப்பட்ட பிறகும் ஏன் இலங்கையைச் சூழ அமைதி நிலவுகிறது என்றால் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் இந்திய வர்த்தக நலனுக்காகவும் இலங்கையில் உருவாகியுள்ள புதிய சந்தையை சுவைப்பதற்காகவும்தான் இதில் அமைதிகாக்கின்றன. மேலும் இவ் ஊடகங்களும் மேற்குலகமும் இலங்கை அரசிடம் பெரிதும் வேறு படுவது தன்னார்வக்குழுக்கள் தொடர்பாகத்தான். அவர்கள் தன்னார்வக்குழுக்களை முகாம்களுக்குள் அனுமதிக்கக் கோருகிறார்கள். ஆனால் இலங்கையோ இராணுவச் சர்வாதிகார பார்மா போன்று தன்னார்வக்குழுக்கள் உள்ளிட்ட எல்லா வெளி உதவிகளையும் தான் பெற்றுக் கொள்ளமட்டுமே நினைக்கிறது. தன்னார்வக்குழுக்கள் பௌத்த இறைமையை சிதைத்து விடும் என இலங்கை அரசு நம்புகிறது.

ஆனால் இலங்கைக்குள்ளேயோ முகாம்களுக்குள்ளேயோ அனுமதிக்க மறுக்கிற தன்னார்வக்குழுக்களை புலம்பெயர் நாடுகளில் ஊக்குவிக்கிறது. அதுவும் ஏற்கனவே உள்ள ஏகாதிபத்திய தன்னார்வக் குழுக்களை அல்ல இலங்கைத் தமிழர்களைக் கொண்ட புதிய குழுக்களை உருவாக்கி அதற்கு நிதி உதவி அளித்து புலத்தில் உள்ள புலி ஆதரவைச் சிதைப்பது புலி ஆதரவாளர்களை கைது செய்வது, அரசியல் எழுச்சி ஏற்படா வண்ணம் மக்களைக் குலைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இக்குழுக்களை பயன்படுத்துகிறது இலங்கை அரசு.போருக்குப் பின்னர் இலங்கை அரசின் பெரும்பங்கு நிதி இலங்கைக்கு வெளியில் அதன் ராஜதந்திர நடவடிக்கைக்காக செலவிடப்படுகிறது ராஜதந்திர நடவடிக்கை என்பது முன்னெடுக்கப்படுவது இந்த தன்னார்வக்குழுக்கள் மூலம்தான். சென்னையில் பணியாற்றிய அம்சா பதவி உயர்வு பெற்ற பிரிட்டனுக்குச் சென்றதும் இதற்காகத்தான்.

தமிழக ஊடகங்கள்

ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்கள் மீது மிக மோசமான விஷத்தைக் கக்கி நச்சை விதைத்த போது கிட்டத்தட்ட அந்த நாட்களில் தமிழ் மக்கள் மிகவும் மன அயர்ச்சி அடைந்திருந்தார்கள்

.ஆங்கில ஊடகங்களின் இழிவான பிரச்சாரத்திற்கு எதிர்பிராச்சாரம் செய்து தமிழக மக்களை ஓரளவுக்கேனும் மன ஆறுதல் கொள்ளச் செய்யும் வேலையை எந்த ஊடகங்களும் செய்யவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் பந்த் நடந்தால் அதை ஒரு விடுமுறை தினமாக கொண்டாடி சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்பின பிரதானமான இரண்டு தொலைக்காட்சிகள். தமிழக அச்சு ஊடகங்களோ விற்பனையை பிரதானமாகக் கொண்டிருந்தாலும் ஆனந்தவிகடன், நக்கீரன், குங்குமம் இதழ்கள் தொடர்ந்து போர்க்காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்காக செய்திகளை வெளியிட்டன. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஈழப்போர் குறித்த செய்திகள் வெளியிடாமல் தவிர்த்தன அல்லது தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை பாதிக்காத வகையில் அச்செய்தி திரித்து எழுதப்பட்டதாக இருந்தது. தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் தெரிந்த அன்றே ஈழப் போரின் முடிவுகளும் பெரும் துயரமான செய்திகளாய் நமக்கு எட்டின. புலிகள் அழிக்கப்பட்டார்கள். பல்லாயிரம் போராளிகள் அவர்களின் குடும்பங்களோடு கொல்லப்பட்டார்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். போர் முடிந்தது ஜனநாயக சக்திகளுக்கு துயரமானதாகவும், பேரினவாதிகளுக்கு உற்சாகமளிக்கும் வகையிலும் போர் முடிவுக்கு வந்தது. நாற்பது வருட பிரச்சனையை நான்கு நாளில் முடிக்க முடியாது என்றவர்கள். போர் முடிவுக்கு வந்தது குறித்து மகிழ்ந்தார்கள்.

  • வன்னி மக்கள் மீதான இந்தப் போரைப் பொறுத்தவரையில் தமிழக ஊடகங்கள் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசவில்லை. எந்த நேரத்தில் எது முக்கியம் அற்றதோ அது குறித்துப் பேசினார்கள். போர் நடந்த போது இவர்கள் மக்கள் படுகொலைகள் குறித்துப் பேசாமல் வேறு விஷயங்களைப் பேசினார்கள். போர் முடிந்த பிறகு துயரமான மக்கள் படுகொலை குறித்துப் பேசாமல் பிரபாகரன் வருவார் ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும் என்கிறார்கள். பழைய புகைப்படங்களை பிரசுரித்து அது குறித்த காலத்தைப் பதிவு செய்யாமல் பொதுத் தன்மையோடு எழுதி நேற்று நடந்தது போல சித்தரிக்கிறார்கள். பிரபாகரன் இந்தியாவின் உதவியோடு தப்பியதாகவும் எழுதினார்கள். பேரினவாத படுகொலையை சிங்களப் படைகளின் முதுகெலும்பாக நின்று நடத்தியதே மத்திய காங்கிரஸ் அரசுதான்.

  • ஆனால் போரில் இந்தியாவின் பங்கு குறித்து தமிழகத்தின் எந்த ஊடகங்களும் நேர்மையான முறையில் எழுதவில்லை.மாறாக இவர்கள் போரின் மீதான மத்திய அரசின் பங்கு குறித்தோ கடைசி நேரத்தில் புலிகளுக்கு தமிழகம் செய்த துரோகம் குறித்தோ பேசாமல் வீரசாகசக் கதைகளை எழுதி வருகிறார்கள். அரசியல் அழுத்தங்கள், சார்ந்திருக்கிற அணிகளுக்கு ஏற்றது மாதிரி ஊடகங்கள் ஈழப் போரின் மீதான கருத்துக்களை வெளியிட்டு வந்தன. இதுதான் தமிழ் ஊடகங்களின் செயல்பாடாக இருந்தாலும் தினத்தந்தி, தினமணி, ஆனந்தவிகடன், நக்கீரன், குங்குமம் போன்ற இதழ்கள் போர்க்காலத்தில் மக்களின் துன்பம் குறித்த செய்திகளை வெளியிட்டன. ஆனால் அது அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தது என்பதுதான் உண்மை.

மற்றபடி சென்னையில் இருந்த இலங்கை அரசின் துணைத்தூதர் அம்சாவின் செயல்பாடுகள் ஊடகவியளார்கள், அரசியல்வாதிகளை மையமிட்டு இருந்தன. ஊடக நிறுவனங்களின் பிரதான பொறுப்பாளர்கள் பலரும் அம்சாவிற்கு நெருகக்மாக இருந்தார்கள். போரின் முடிவுக்கு முன்னரும் பின்னரும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அம்சா இவர்களுக்கு விருந்து கொடுத்தார். பரிசும் கொடுத்தார் சில நேர்மையான ஊடகங்கள் இதை புறக்கணித்தாலும் இந்தப் போர்ச்சூழல் அதிக வருவாயை ஈட்டித் தரும் தந்திரம் மிக்கதாய் இருக்கிறது என்பதை உணர்ந்த பத்திரிகையாளர்களோ இலங்கை அரசின் அனுகூலங்களை அனுபவித்தார்கள் என்பது மறுக்க முடியாத அசிங்கமான உண்மை. சிலர் கொழும்புவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குளிப்பாட்டப்பட்டார்கள். சிலர் சென்னையிலேயே குளிப்பாட்டப்பட்டார்கள். ரகசியாமான விருந்துகள் அம்சா இங்கிருந்து செல்லும் வரை நடந்தது. புதிய தூதர் கிருஷ்ணமூர்த்தி பதவியேற்றதும் அதற்கும் விருந்து நடைபெற்றது இன்றும் ஊடகவியளார்கள், இலங்கைத் தூதர் கூட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் யாரிடமும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அம்சா வீசி எரிந்த வெள்ளிக்காசுகளை வாங்க மறுத்து இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த ஊடகங்கள் தமிழகத்திலேயே ஒடுக்குமுறைக்குள்ளாகியது. நக்கீரன் மீது அம்சா வழக்குத் தொடர அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்.

மக்கள் தொலைக்காட்சி போர் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக இலங்கையின் வடக்கில் அதன் ஒளிபரப்பு தடுக்கப்பட்டது. ஏன் தமிழக ஊடகவியளார்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் ஊடக முதலாளிகளும் தொழில் அரசியல் கூட்டுக்கு ஏற்பவே இவ்விஷயத்தை அணுகினார்கள். ஊடக முதலாளிகளின் இந்த தொழில்சார் ஊடக தர்மத்தை ஊடகவியலாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக எழுதி. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஊடகவியளார்கள் இலங்கையில் படுகொலையானார்கள். கடைசியாய் நாம் லசந்தா பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டதையும், திசநாயகத்திற்கு இருபாதாண்டுகால கடும் சிறைத் தண்டனை கிடைத்ததையும் நாம் கண்டோம்.

  • இருபது உயிர்கள் பலியாகி சிறைக் கொட்டடிகளில் கிடந்து இனப் படுகொலைக்கு எதிராக இன்றளவும் தலைமறைவாக பல நாடுகளிலும் மறைந்திருந்து தொடர்ந்து எழுதுகிறார்கள் சிங்கள இனத்தைச் சார்ந்த ஊடகவியளார்கள். ஆனால் தமிழ், தமிழர் பெருமை பேசும் தமிழ் ஊடகவியளார்கள்?

திசநாயகத்தோடு கைது செய்யப்பட்ட ஜசீகரனும் அவரது மனைவி வளர்மதியும் இன்றும் விசாரணைக் கைதிகளாக கொழும்பு மகசீன் சிறையில் கிடக்கிறார்கள். ஆனால் அஞ்சாமால் சிங்கள இனவாதிகளுக்கு எதிராக சித்திரவதைகளையும் கடந்து போராடுகிற அவர்கள் ஏதோ ஒரு வகையில் இனப்படுகொலை ஆவணங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் இந்திய ஆங்கில ஊடகங்களோ இலங்கை அரசிற்கு எதிராக உருவாகும் ஆவணங்களை அழிக்கிறார்கள். அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் இருந்து அவர்களை பாதுகாக்கிறார்கள்.

டி.அருள் எழிலன்

தொடர்புபட்ட ஆக்கம்

தமிழ் மக்களையே ஏமாற்றும் தமிழ் ஊடகத்துறை..........?

Comments