இவர் முகம் சுளிக்கவேண்டும் என்பதற்காகவே அந்த வார்த்தையை ஜெயலலிதா பயன்படுத்துகிறார். எவர் முகம் சுளிக்கவேண்டும் என்பதற்காக இந்த வார்த்தையை கருணாநிதி பயன்படுத்துகிறார்? முதல்வர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிற சந்தர்ப்பங்கள் எல்லாமே, தனது பதவியைப் பயன்படுத்தி தொப்புள்கொடி உறவுகளைக் காப்பாற்ற அவர் தவறிவிட்டார் என்று அழுத்தம்திருத்தமாக குற்றம் சுமத்தப்படும் சந்தர்ப்பங்கள் தான். அப்போதெல்லாம், சகோதர யுத்தம் என்று ஆரம்பித்துவிடுகிறார். சென்ற ஆண்டு அக்டோபரில், தமிழினத்தை அழித்தொழிக்கும் பணியை ராஜபட்சே சகோதரர்கள் தொடங்கினார்கள். அவர்களுக்கு இங்கே ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசின் ஆசீர்வாதம் இருந்ததா இல்லையா என்பது ஊரறிந்த ரகசியம்.
அப்போது அந்த அரசில் தி.மு.க. இருந்ததா இல்லையா? தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கொலைவெறித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாகப் பதவிவிலகுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தாரா இல்லையா? தாக்குதல் நிறுத்தப்படாத நிலையில், சொந்தச் சகோதரர்களைக் காப்பாற்றத் தவறிய நிலையில், சொன்ன வார்த்தையைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் பத்திரமாகப் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்களா இல்லையா? இதற்கு முதல்வர் பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆளுங்கட்சியின் தூண்களாகத் திகழும் அன்புச் சகோதரர்கள் அழகிரியும் ஸ்டாலினும், சகோதரி கனிமொழியுமாவது பதில் சொல்லவேண்டும்.
பிரணாப் முகர்ஜி வந்து முதல்வரைச் சந்தித்தபோது இருவரும் என்ன பேசினார்கள் என்பது, அழகிரியையும் ஸ்டாலினையும் விட கவிஞர் கனிமொழிக்குத் தான் அதிகமாய்த் தெரியும். அந்த வகையில், இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் கடமை அவர்களைவிட கவிஞருக்கு அதிகம். அக்டோபரிலிருந்து முழுவீச்சில் கொலைவெறித் தாக்குதலை நடத்துகிறது இலங்கை. 'தன்னுடைய சொந்த மக்களை விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொல்லும் ஒரே நாடு என்னுடைய நாடுதான்' என்று நேர்மையோடும் நியாயத்தோடும் மனிதநேயத்தோடும் எழுதியதற்காக அடுத்த ஓரிரு மாதங்களில் ராஜபட்சேக்களால் கொல்லப்படுகிறான் சிங்களப் பத்திரிகையாளன் லசாந்த விக்கிரமதுங்க. ஒரு சிங்களப் பத்திரிகையாளனுக்கு இருந்த ஆண்மையும் துணிவும் தமிழர்களுக்கு இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்த்ததில் என்ன தவறு? அந்தச் சமயத்திலாவது 'சகோதர யுத்தம்' என்று திசைதிருப்பும் இழிகுணத்திலிருந்து விடுபடவேண்டும் என்று விரும்பினோம்.
நமது விருப்பம் நிறைவேறவில்லை. அந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலும் அப்படித்தான் அறிக்கை விட்டது அறிவாலயம். அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். பள்ளிக்குழந்தைகள், விமான ஓசை கேட்டதும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பதுங்குகுழிகளை நோக்கி ஓடுகிறார்கள். தன்னளவுக்கு வேகமாக ஓடமுடியாமல் கண்ணெதிரே விமானக் குண்டுவீச்சில் சிதறும் தந்தையின் உடலை நோக்கித் திரும்பி ஓடுகிறான் 14 வயது மகன். பள்ளி மாணவிகளை உதவிக்கு வைத்துக் கொண்டு பதுங்குகுழிக்குள்ளேயே உயிர்காப்பு அறுவை சிகிச்சை செய்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியொரு துயரச் சூழலில், 'சகோதர யுத்தம்' என்று பக்கம் பக்கமாக அறிக்கை எழுதிக்கொண்டிருப்பது எவருக்காவது சாத்தியமா? அதுவும் சாத்தியமாயிற்று முதல்வருக்கு.
போரை நிறுத்தி தமிழர்களைக் காப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தார் முதல்வர். அறிக்கை விட்டார், இறுதி வேண்டுகோள் என்றார், கடைசி முறையாக இறுதி வேண்டுகோள் என்றார், இன்னொருமுறை இறுதி வேண்டுகோள் என்று சொல்லி காமெடி கருணாநிதி ரேஞ்சுக்குப் போனார். எதுவரை வேண்டுகோள் விடுவீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, போர்முடியும் வரை வேண்டுகோள் விடுவேன் என்று அதிரடியாய் பதிலளித்தார். போர் நின்று விட்டதாக சிதம்பரம் சொன்னதை நம்பி, சாகும் வரை உண்ணாவிரதத்தையே கைவிட்டார். அவர் கைவிட்டது உண்ணாவிரதத்தை அல்ல. அந்த நிமிடத்திலும் குண்டுவீச்சுக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருந்த லட்சோ லட்சம் அப்பாவித் தமிழர்களை. அவர் உண்ணாவிரதத்தை நிறுத்திய கணத்திலும் வன்னி மண்ணில் குண்டுமழை பொழிந்தது. 'பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ மன்னன், யானே கள்வன்' என்று சொல்லி அரியணையிலிருந்து சரிந்துவிழுவதெல்லாம் நம்மூர்த் தலைவர்களுக்கு சாத்தியமில்லை.
அதற்கெல்லாம் ஒரு அரசியல் நேர்மை வேண்டும். முதல்வர் கருணாநிதி வெள்ளந்தியாகப் பேசுகிறவரோ எழுதுகிறவரோ அல்ல. ரொம்ப விவரமானவர். சகோதர யுத்தம் என்று அடிக்கடி பேசும் அவருக்கு இந்திய அமைதி காப்புப் படை இலங்கையில் என்ன செய்தது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அந்த அடிப்படையில் அவர்மூலம் ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஜெயவர்த்தனேயுடன் 1987 ஜூலை இறுதியில் ராஜீவ் கையெழுத்திட்ட ஒப்பந்தம், 'தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு' என்கிற தந்தை செல்வாவின் பிரகடனத்துக்கு விரோதமானது. அதனாலேயே, மற்ற சில அமைப்புகள் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டபோதிலும் விடுதலைப் புலிகள் அதை ஏற்க மறுத்தனர். எனினும், கடைசியில் ஆயுதங்களை ஒப்படைக்க முன்வந்தனர். அதற்குக் காரணமாயிருந்தது, சமாதானத் தீர்வை புலிகள் ஏற்கவே மாட்டார்கள் என்கிற தவறான அபிப்பிராயத்துக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்கிற நியாயமான அச்சமும், அரசியல் நிர்பந்தங்களும் தான்.
விடுதலைப் போரில் ஈடுபட்ட எல்லா நாடுகளிலுமே, போராடுகிறவர்களுக்குள் பல்வேறு குழுக்கள் இருந்ததுண்டு. அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருந்ததுண்டு. ஈழத்திலும் இருந்தது. இந்தியாவுக்கு அது தெரியும். யார் யார் புலிகளுக்கு எதிரானவர்கள் என்பதும் தெரியும். இந்தியாவுக்குத் தெரியுமென்றால், பிரதமர் ராஜீவுக்கும் தெரிந்திருக்கும். 1987 ஆகஸ்ட் முதல்வாரத்திலிருந்து ஆயுதங்களை ஒப்படைக்கிறார்கள் புலிகள். ஒருபுறம் புலிகளிடம் ஆயுதங்களை வாங்கிக்கொண்டிருந்த இந்தியா, இன்னொருபுறம் புலிகளைத் தீர்த்துக்கட்ட அவர்களுக்கு எதிரான அமைப்புகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆதாரத்துடன் புலிகள் அதைச் சுட்டிக்காட்டியபோது, அங்கிருந்த இந்திய அமைதி காப்புப் படை உயர் அதிகாரிகளால் மறுக்க முடியவில்லை. raw தான் இதைச் செய்கிறது என்பது அவர்கள்மூலம் அம்பலமானது.
ஈழப் போராட்டத்திற்காகக் கோடிகோடியாய் அள்ளிக்கொடுத்தவர்களில் எம்.ஜி.ஆர். முதலிடத்தில் இருக்கிறார். அவரைப் போன்ற உயர்ந்த மனிதர்களின் உதவியால் குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்த ஆயுதங்களை வாகனம் வாகனமாய்க் கொண்டுவந்து புலிகள் ஒப்படைத்தார்கள் என்பது சாதாரண வரலாறல்ல. இந்தியா மீதான நம்பிக்கையுடன் தொடர்ந்து 20 நாட்கள் ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப் புலிகள், இந்தியாவின் துரோகம் அம்பலமானதும் ஒப்படைக்கும் பணியை நிறுத்திக்கொண்டனர். தவறு எவருடையது? சகோதர யுத்தம் பற்றி மூச்சுக்கு மூச்சு பேசும் முதல்வர் கருணாநிதி, ராஜீவ்காந்தி அரசின் இந்த நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றியும், சகோதரர்களுக்குள் யுத்தத்தைத் தூண்டிவிட ராஜீவ் அரசு முயன்றது பற்றியும் எப்போதாவது மூச்சு விட்டதுண்டா? இப்போதாவது இதுகுறித்த தனது கருத்தை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். சகோதர யுத்தத்தை ஏற்படுத்த முயன்றவர்கள் யார்யார் என்பதை அறிந்துகொள்ள முயலவேண்டும்.
சகோதர யுத்தங்களுக்குக் காரணமானவர்களுடன் ஒட்டோ உறவோ கிடையாது என்று அறிவிக்கவேண்டும். செய்வாரா கருணாநிதி? ராஜீவுக்குத் தெரியாமலேயே இது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது... என்று கருணாநிதி நினைத்தால் அது ராஜீவைக் காப்பாற்றுவதாக இருக்காது, அவமதிப்பதாகவே இருக்கும். ராஜீவ் அப்போது பிரதமர். அவருக்குத் தெரியாமல் இது நடந்திருந்தால், பிரதமர் நாற்காலிக்கு அவர் தகுதியற்றவர். அவருக்குத் தெரிந்து நடந்திருந்தால், நேர்மையானவரென மதிக்கத் தகுதியற்றவர். அவர் எந்த விதத்தில் தகுதியற்றவர் என்பதை கலைஞரின் முடிவுக்கே விட்டுவிடுவோம். பழங்கதை பேசிப் பயனில்லை. இது நமக்குத் தெரிந்திருந்தாலும், பழசையே பேசிக்கொண்டிருக்கும் முதல்வருக்காக இதை எழுதவேண்டியது அவசியமாகிறது. 'அடைந்தால் திராவிடநாடு அடையாவிட்டால் சுடுகாடு' என்றெல்லாம் வசனம் மட்டுமே பேசியவர்களில்லை ஈழத்தின் பெருமைக்குரிய போராளிகள்.
தங்கள் இலக்கை அடைவதற்காக, அறிவு, உழைப்பு, மனோதிடம் அனைத்தையும் ஒருங்கிணைந்து போராடினார்கள். அவர்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் பொய்யான பரப்புரைகளை எவரும் செய்ய அனுமதிக்கக்கூடாது. சகோதர யுத்தம் என்றாலென்ன? ஒரே குடும்பத்துக்குள் ஏற்படுகிற மோதல் தானே! ஒரு உயர் குடும்பத்துக்குள் ஏற்பட்ட மோதல், அப்பாவிப் பத்திரிகை ஊழியர்கள் மூவர் உயிருக்கே உலை வைக்கவில்லையா? இவ்வளவுக்கும் பிறகும் அந்தக் குடும்பத்தில் சகோதரத்துவம் குறைந்துவிடவில்லை என்பது முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாதா என்ன? வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட எங்கள் சொந்தங்களைக் காப்பாற்ற, எந்தவகையில் 'சகோதர யுத்தம்' தடையாக இருந்தது என்பதை முதல்வர் கருணாநிதி விளக்கவேண்டும். எமதர்மனிடமிருந்து கூட காப்பாற்றிவிடமுடியும், ராஜபட்சேக்களிடமிருந்து காப்பாற்றவே முடியாது என்று நினைத்திருந்தால் வெளிப்படையாக அதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
தமிழருக்குத் துரோகம் செய்யும் காங்கிரஸ்தான் அவரது கையைக் கட்டியிருந்தது என்றால், அதைச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அது ஊரறிந்த ரகசியம். 1975ல் காங்கேசன்துறை இடைத்தேர்தலில் போட்டியிட்டபோதே, 'தனி நாடு வேண்டுமென்றால் எனக்கு வாக்களியுங்கள்' என்று வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்து மாபெரும் வெற்றிபெற்றவர் தந்தை செல்வா. அகிம்சைப் போராட்டங்களெல்லாம் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டபின்தான், தனிநாடு கேட்டார் அவர். அந்த வலியை வேதனையையெல்லாம் உணரமுடியாத ராஜீவ், செல்வாவின் விருப்பத்துக்கு நேர்மாறான தீர்வை எட்ட முற்பட்டார். சிங்களர்களுடன் சகோதரர்களாய் இருக்கும்படி தமிழர்களுக்குப் போதித்தார். கருணாநிதியோ சகோதர யுத்தத்தைக் கைவிடுங்கள் என்கிறார். நிறுத்தப்படக்கூடிய யுத்தமா அது? ராஜீவ் காட்டிய பாதையில், அடித்தாலும் உதைத்தாலும் அவன்தான் புருஷன் என்று ஜெயவர்தனேயுடன் கைகோத்துக்கொண்ட பெளத்தபெருமாள், வரதராஜபெருமாள். ராஜபட்சேக்களுடன் கைகோத்தால்தான், தமிழர்களுக்கு கலைநயம்மிக்க கல்லறை கட்டமுடியும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கைகொண்ட தொட்ட பெருமாள்கள் டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும்.
இவர்களுடன் சகோதரர் கருணாநிதி, சகோதரி சோனியா ஆகியோரும் கைகோத்துக் கொள்ளட்டும். நமக்கு ஆட்சேபனையில்லை. அதற்காக, 'இனி நாமெல்லாம் சகோதரர்கள், வாருங்கள்... எங்களுடன் கைகோத்துக்கொள்ளுங்கள்' என்று தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று திண்டுக்கல் பஸ்ஸுக்கு டிக்கெட் போடும் டிராவல் ஏஜெண்ட் மாதிரி சவுண்ட் கொடுக்காதீர்கள். நுவரெலியாவின் மரக்கன்றுகளைக் கிளிநொச்சியில் கொண்டுவந்து நட்டு, இங்கேதான் பாதுகாப்பாய் உணர்கிறேன், அங்கே சோறுமட்டும்தான் கிடைத்தது, இங்கே சுதந்திரமும் கிடைக்கிறது என்று சொன்ன மலையகத் தமிழரைப் பார்த்து நெகிழ்ந்திருக்கும் எவரும், ராஜபட்சே-சோனியா-கருணாநிதி-கருணா கூட்டணியின் கையில்தான் ஈழத் தமிழர்களின் சுபிட்சம் இருக்கிறது என்று அருட்தந்தை யாராவது ஆரூடம் சொல்வதைக் கேட்டு அதிர்ந்துவிடமாட்டார்கள். பல்பொடி வியாபாரியின் பல்லில் ரத்தம் கசிவதைப் பார்ப்பவர்கள், பல்பொடி வாங்குவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
30.10.09ல் வெளிவந்த 'தமிழக அரசியல்' வார இதழில் பிரசுரமான கட்டுரை
-புகழேந்தி தங்கராஜ்
Comments