ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கும், இன்றைய மக்களின் சீரழிவு நிலமைகளுக்கும் இலங்கைத் தமிழரால் நடாத்தப்படும் ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.
உண்மைக்கு முன்னால் நடுநிலைமை இல்லை என்ற தத்துவத்தையும், இலட்சியத்தை வெல்ல வேண்டுமானால் சத்திய சோதனைகளை அனுபவித்தும், சத்திய போதனைகளை கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கின்ற கொள்கையை இலட்சியமாகக் கொண்டு ஊடக உலகுக்குள் கருத்துரைப்பவர்கள் நாம்...
மாற்றுக்கருத்துக்களுக்கு ஆரோக்கியமாக மதிப்புக் கொடுப்பவர்கள். மக்களே எமது ஆசானகள் என்பதுவும் அவர்களுக்காகவே நாம் என்பதுவும் உண்மைகளை எடுத்துச்சொல்லி தவறுகளை சுட்டிக்காட்டி கையிலுள்ள பேனாவால் கருத்துச்சொல்ல முற்படுபவர்கள். திறந்த வெளி அரங்குக்குள் விவாதிப்பவர்கள் மாற்றுக்கருத்துடையவர்களோடு மனம்திறந்து விவாதிப்பவர்கள். பொய்யுரைத்து கைப்பையுக்குள் காசு போடுபவர்கள் அல்லர். மாற்றுக்கருத்துரைப்புக்களில் சமூகத்துக்கு நல்லவை என்று அறியப்படுவனவற்றை துணிந்து மக்களிடம் எடுத்துச் செல்பவர்கள் என்ற நம்பிக்கையில் கீழ்வரும் ஆக்கத்தினை காலத்தின் தேவை கருதி மீள் பதிப்புச் செய்கின்றோம் சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் சில தகவல்களை நட்பு நிலையுடன் தவிர்த்துள்ளோம்.
சொல்கோட்டம் இல்லது செப்பும் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்
இன்போதமிழ் குழுமம்
ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்
வெகுஜன ஊடகங்கள் ஒரு சமூகப் பிரஞ்ஞையுடன் செயற்பட வேண்டும். மக்கள் சரியான திசை வழியே பயணிப்பதற்கு ஊடகங்களின் செயற்பாடு முக்கியமான பாத்திரத்தை வகிக்க முடியும். ஒரு சமூக மாற்றத்திற்கு, சமூக முன்னேற்றத்திற்கு, சமூக விழிப்பிற்கு ‘வித்திடலில் ஆரம்பித்து அது பூத்துக் குலுங்கி காய் கனியாகி’ முழுமை பெறுவதற்கு ஊடகங்கள் பெரும் பங்களிப்பை ஆற்ற முடியும். எனவே அவர்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்ததவர்களாக, உண்மையானவர்களாக செயற்பட முயல வேண்டும். ஊடகத்துறை சமூகத்தின் முதுகெலும்பாக செயற்பட வேண்டும். இவர்களின் பிழையான செயற்பாடுகள் தனிநபர்களை மட்டும் அல்ல ஒரு சமூகத்தையே ஏன் ஒரு நாட்டையே நடுத்தெருவில் கொண்டு வந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுத்திவிடும்;. இதுவே அண்மையில் நாம் இலங்கையில் கண்ட வரலாற்று உண்மை.
- ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கும், இன்றைய மக்களின் சீரழிவு நிலமைகளுக்கும் இலங்கைத் தமிழரால் நடாத்தப்படும் ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. இவ் ஊடகங்களில் பெரும்பான்மையானவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது சிலரின் செல்வாக்கிற்கு உட்பட்டவையாகவே இருந்தன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ‘லக்காபுவத்’ செய்த கைங்கரியங்களை நாம் நிறையவே ஜேஆர், பிரேமதாச கால கட்டத்தில் இலங்கையில் கண்டோம். இவர்களும் அன்று வெளியிட்ட செய்திகள் இலங்கையில் அன்றைய காலகடட்டத்தில் நடைபெற்ற இனக்கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும், ‘இனச் சுத்திகரிப்பு’ இற்கும் பெரும் பங்காற்றின.
இதற்கு எந்த வகையிலும் சளைக்காமலே சில சார்பு நிலை ஊடகங்கள் கடந்த காலங்களில் இருந்து செயற்பட்டு வருகின்றன. அரசு சார்பு ஊடகங்களும், ஏன் ஏனைய இனவாத அரசியலை தமது வாழ்வாக கொள்ளும் கட்சிகளின் ஊடகங்கள்; இது போன்ற மக்கள் விரோத செயற்பாடடைக் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கு நடுவே சரியான நிலைப்பாட்டை எடுத்து முடிந்தளவிற்கு உண்மையான செய்திகளை, விடயங்களை வெளிக் கொணர்ந்த ஊடகங்கள் இலங்கையிலும், தமிழர் புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலும் இல்லாமல் இல்லை. இவை மிகச் சிறிய அளவிலேயே இருந்தன, இருக்கின்றன. இவர்களால் பெரிய அளவில் செயற்பட்டு ஈழத்து உண்மை நிலமைகளை பரந்துபட்ட மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியவில்லை என்பதுவும் உண்மையே.
கூடவே அதிகாரத்தில் இருக்கும் அரசுகள் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடும் இச் செயற்பாடுகளை மட்டுப்படுத்தியே வந்தது. இதன் விளைவாக இவர்களில் சிலர் மிரட்டல்களுக்கு ‘பயந்து’ தமது குடும்பம், குழந்தை, குட்டிகளை நினைந்து தமது ஊடகச் செயற்பாடுகளை மௌனித்துக் கொண்டனர்.
ஈழநாடு பத்திரிகை திரு. சபாரத்தினம் ஆசிரியராக இருந்த கால கட்டத்திலும், தினகரன் பத்திரிகை பெரும்பான்மையான (சிறப்பாக சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்திலிருந்து) கால கட்டங்களிலும் பத்திரிகைத் தர்மத்தை நிலைநாட்டி சரியான செய்திகளை வெளியிட்டு வந்தன. அதுவும் ஈழநாடு பத்திரிகையிற்கு பல நெருக்குவாரம் துப்பாக்கிகளினால் ஏற்பட்டபோதும் அவற்றை ‘தந்திரோபாய நடைமுறை’ ஊடாக முகம் கொடுத்து பத்திரிகையை வெளிக் கொணர்ந்தனர்; என்பது 1980 களில் அங்கிருந்தவர்கள் நன்கு தெரியும்.
இலங்கையிலும், இந்தியாவிலும், புலம் பெயர் நாடுகளில் பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியிலும் மிகச் சில பத்திரிகைகளே சரியான நிலைப்பாட்டின் அடிப்படையில் உண்மைச் செய்திகளை வெளிக் கொணர்வதில் தங்கள் இயலுமைக்கு உட்பட்டு செயற்பட்டு வந்தனர். அவர்கள் யார் யார் என்பது வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன. என்றோ ஒருநாள் அவர்கள் மக்கள் மன்றங்களில்; கௌரவிக்கப்படுவார்கள், கௌரவிக்கப்பட வேண்டும். இவ் சமூக நலம் சார்ந்த ஊடகச் செயற்பாட்டின் மூலம் மரணத்தை தழுவிக் கொண்டவர்கள் பலர். அவர்களை நாம் இவ்விடத்தில் தலை வணங்கி நினைவு கூர்கின்றோம்.
- மற்றையபடி புலம் பெயர் நாடுகளில் வெளிவந்த பெரும்பான்மையான பத்திரிகைகள் யாருக்கோ சாமரம் வீசுவது என்று சொல்லிக் கொண்டு முழு மக்களையும் பிழையான திசை வழிச் சிந்தனையில் சாய்த்துச் சென்ற ‘அருங்கரியத்தை’ செய்ததுதான் உண்மை நிலை. இதற்கு எந்த வகையிலும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் செயற்பட்டவர்கள் தமிழ் வானொலி, தொலைக் காட்சியாளர்கள்.
இவ் ஊடகங்களின் செய்திகளையே பெரும்பான்மையான மக்கள் சென்றடையக் கூடிய நிலமைகள் இருந்து வருகின்றன. இவ் ஒரு பக்க திரிபுச் செய்திகளினால் தமிழ் மக்கள் ஒரு பக்கத்திற்கு சாய்ந்து செல்லப்பட்டது ஈழவிடுலைப் போராட்டம் சம்மந்தமான கள, தள உண்மை நிலமைகளை அவர்கள் அறிந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் மக்கள் பிழையான பிழையான செயற்பாடுகளை ஆதரிக்க முற்பட்டதற்கான முக்கிய காரணம் ஆகும்.
கொலை என்பதுவும், யுத்தம் என்பதுவும், மரணம் என்பதுவும், அழிவுகள் என்பதுவும் வேண்டப்பட்டவை.
கனவுலகத்தில் மக்களை திளைக்க விட்ட ‘அரும் பெரும்’ செயல்களை செய்தவர்கள் இந்த ஊடகவியலாளர். இதில் நகைப்புக்கிடமான விடயம்; இவ் ஊடகத்துறையில் ஈடுபட்ட பலரின் ‘தகமைகள்’ பற்றிய உண்மை நிலை.
இவ் ஊடகத்துறையில் ஈடுபட்ட பலரின் ‘தகமைகள்’ பற்றிய உண்மை நிலை.
- தகைமைகளுடன் யாரும் பிறந்து வருவதில்லை. ஆனால் அதனை அவர்கள் வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். இவர்கள் இதற்கு எப்போதும் தயாராக இருக்கவில்லை.
விளம்பரங்களை பத்திரகையில் நிரப்பி தமது பாக்கெற்றுக்குள் பணத்தை திணிப்பதில் இவர்களின் குறி இருந்ததே தவிர தம்மை அறிவியல் ரீதியாக வளர்தெடுப்பதில் இவர்கள் எப்போதும் கவனம் செலுத்தியது கிடையாது.
தேசியம், சுயநிர்ணய கோட்பாடு, தாயகம் என்று கூறிக்கொண்டு சிலரை சார்ந்து நிற்பது பண வருவாயைக் கூட்டும் என்ற சிந்தனையைத் தவிர இவர்களிடம் வேறு ஏதும் இருக்கவில்லை. காவடி எடுத்து தமது விசுவாசத்தை தெரிவித்து மக்களை பிழையான திசை வழியில் மேய்த்த மீட்போர்கள் இவர்கள்.
புலிகள் இருந்த போது தாம் பயத்தின் காரணமாக அவர்களை ஆதரித்து செயற்படுவதாக தமது நெருங்கிய ‘நண்பர்கள்’ இடம் சாக்கு போக்கு சொன்னாலும் இவர்கள் ஒருவகை ‘மன நோயாளிகளே’. மனித கொலைகளில், அழிவுகளில் சுய இன்பம் கண்ட மன நோயாளிகள்.
சந்தேகம் இருப்பின் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகள் வெளியிட்ட செய்திகளும், கலந்துரையாடல்களும், கலந்துரையாடலில் ஈடுபட்ட ‘பொதுமக்கள்’ தெரிவித்த ‘நெறிபடுத்திய’ விதங்களையும் மீண்டும் உங்கள் நினைவலைகளில் கொண்டு வந்து பாருங்கள் புரியும் உண்மை நிலை.
ஏன் இப்பவும் கூட ‘சிங்களவனைக் கொல்ல சிங்களக் கிராமங்களில் குண்டு வைக்க வேண்டும்’ ‘இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வேண்டும்’ போன்ற ‘மக்கள்’ கருத்துக்களுக்கு எண்ணை ஊற்றி ஊக்கிவிப்பது வானொலிகளில் ‘வீச்சாக’ நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இன்று புலிகளின் ஆயுதச் செயற்பாடுகள் இல்லாது ஒழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற பாணியில் (மே 18 இல் இருந்து சிறிது காலம் காணமல் போய் மீண்டும் ஆரம்பித்திருக்கும் பத்திரிகைகள் உட்பட) திரிபுச் செய்திகளையும், பொய்களையும் மீண்டும் அள்ளி வீச ஆரம்பித்திருக்கின்றன. இன்னும் ஒரு தலை முறை தமிழ் மக்களையாவது தலையெடுக்க விடுவதில்லை என்ற கங்கணம் கட்டி செயற்பட புறப்பட்டு விட்டார்கள் என்பது போல் எண்ணத் தோன்றுகின்றது.
போதும் இவ்வளவு காலமும் நீங்கள் எங்கள் சமூகத்திற்கு செய்த ‘சேவைகள்’. இனிமேல் அவர்கள் தமது சுயசிந்தனையின் அடிப்படையிலாவது சரியானவற்றை தேட அனுமதியுங்கள். நீங்கள் வெளி நாடுகளில் காப்புறுதி உட்பட சகல வசதிகளுடனும் குடும்ப சமேதர்களாக இருந்து கொண்டு இவ் நயவஞ்சக செயற்பாட்டை செய்யாதீர்கள். முள்ளுக் கம்பியிற்கு பின்னால் நிற்கும் மக்களுக்கும் எம் ஊரில் தமது எதிர்காலத்தை கட்டியமைக்க முயன்ற கொண்டிருக்கும் மக்களையும் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்.
- அது போல புலம் பெயர் நாடுகளில் பனியிலும், குளிரிலும்; இரவும், பகலும்; கட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும்; ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைக்கும் மக்களை விட்டு விடுங்கள் அவர்கள் பாவம் அப்பாவிகள் பிழையான தகவல்களை அவர்களுக்கு கிடைக்கும் சிறிய ஓய்வு நேரங்களில் திணித்து மூளைச்சலவை செய்யாதீர்கள். உங்கள் பிழைப்பிற்காக ஒரு இனத்தை, சமூகத்தை படு குழியில் தள்ளாதீர்கள். ஒரு பாவத்திற்கே உங்களால் பரிகாரம் செய்ய முடியவில்லை, பதில் செல்ல முடியவில்லை. மீண்டும் இதே பாவச் செயல்களை செய்யாதீர்கள்.
1960 களில் அமெரிக்கா - வியட்நாம் போரில் அமெரிக்காவின் நேபாம் (Nயியடஅ) எரிகுண்டுத் தாக்குதலை சர்வ தேசத்திற்கு அம்பலப்படுத்தி சர்வ தேச மக்களை மட்டுமல்லாது அமெரிக்க மக்களையே தனது அரசிற்கு எதிராக போராட வைத்த பெருமை ஊடகங்களையே சாரும். இதன் தொடர்சியாக வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியடைந்ததை நாம் யாவரும் அறிவோம். இதே போல் 1880 களில் எலிசபத் ஜேன் கோசரன் என்ற ‘நியூயார்க் வெர்ல்ட்’ பத்திரிகையின் பெண் நிருபர் மனநல காப்பகத்தில் நிகழும் கொடுமைகளை அம்பலப்படுத்த பைத்தியக்காரி வேடமிட்டு மனநலக் காப்பகத்திற்குள் 10 நாட்கள் அடைபட்டு சகல துன்பங்களையும் அனுபவித்து கிடந்தார். ஆம். உண்மைகளை கண்டறிய-அந்த பெண் நிருபர் தன்னையே பைத்தியக்காரியாக்கிக் கொண்டு காப்பகத்தில் அடைப்பட்டு உதைபட்டு ரத்தம் சிந்தி உண்மைகளை வெளிக்கொணர்ந்தாள். “பைத்தியக்கார வீட்டில் பத்துநாட்கள்” என்ற தலைப்பில் அந்த கொடூர அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டார்.
சோவியத் யூனியனின் புரட்சியின் போதும், சீனப் பரட்சியின் போதும், வியட்நாம், கியூபா புரட்சியின் போதும் ஊடகங்கள் ஆற்றிய மகத்தான, சரியான பங்களிப்பு அப் புரட்சிகள் வெற்றிடைய முக்கிய காரணமாக அமைந்தன. இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் ஏகாதிபத்தியங்களின் பிடியில் இருந்து விடுதலை வேண்டிப் போரிட்ட நாடுகளிலும் மக்களை ஐக்கியப்படுத்தி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பலமிக்க போராட்டங்களை நடத்த ஊடகங்கள் பெரும் பங்காற்றின. இங்கெல்லாம் ஊடகங்கள் விடுதலைப் போராட்டதிற்கு பசளையாகவும் ஊட்டச்சத்தாகவும் அமைந்தன.
ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் .............?,
இதுவே போராட்டத்தில் பலவீன நிலமையை ஏற்படுத்தி இறுதியில் ‘தடை முகாங்களுக்கள்’ அடைத்து விட்டது. ஆனால் போரின் முடிவில் ........
இது போன்ற பல நல்ல உதாரணங்களை நாம் உள்வாங்கி செயற்பட வேண்டும்;. மாறாக மரணித்தவரை கையில் பத்திரிகை கொடுத்து நவீன புகைப்பட தொழில் வித்தை மூலம் ஏமாற்று வித்தை செய்து பின்பு அப்பலப்பட்டுப் போன நிகழ்வுகள் ஊடகத்தின் மீதான நம்பிக்கைகளை தவிட்டுப் பொடி ஆக்கிவிடும். இது போன்ற பல செயற்பாடுகளையே ஈழப் போராட்டத்தில் தமிழ் ஊடகங்கள் செய்தன, செய்து வருகின்றன. இதனாலேயே தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசபடைகளின் நடவடிக்கைகள் பற்றிய உண்மையான தகவல்களையும் சர்வதேசம்; பல சந்தர்பங்களில் நம்பும் நிலையில் இருக்கவில்லை என்ற துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டிருந்தது, இருக்கின்றது.
இதுவே சனல் 4 இன் ஒளிப்பதிவு நாடாவின் உண்மைத் தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டதற்கும் காரணம். தேவை ஏற்படின் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் குற்றவாளிகளை குற்றவாளிக் கூட்டில் நிறுத்தி தமிழ் மக்களின் உரிமைகளை சர்வ தேசத்தின் ஆதரவுடன் வென்றெடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உண்மையான செய்திகள், விபரங்கள் எமக்கு தேவை இதனை ஊடகத்துறைகள் இனிமேலாவது செய்யுமா?
பொறுப்புடன் சமூக பிரஞ்ஞையுடன் செயற்படுவார்களா?
நன்றிகள்
சாகரன்
Comments