பிரபாகரன் தயார்! - நெடுமாறன்

ஈழத் தமிழர் பிரச்னையை அணையாத தீபமாகக் கொண்டுசெலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல்ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இணைத்துச் செல்வது இவர்தான்.

இதனால் முதல்வர் கருணாநிதிக்கு முதல் எதிரியானார்!'முள்வேலி முகாமில் இருந்து மூன்று லட்சம் தமிழர்களை முழுமையாக வெளியே அனுப்பு' என்ற முழக்கத் துடன் டாக்டர் ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன் மற்றும் நெடுமாறன் ஆகிய நால்வரும் தமிழகத்தின் நான்கு பகுதிகளில் இருந்து புறப்பட்டு பிரசாரம் செய் கிறார்கள். இந்த ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்த நெடுமாறனைச் சந்தித்தோம்...

''தமிழக எம்.பி-க்கள் ஈழத்து முகாம்களை நேரில் பார்த்துத் திரும்பிய பின்னால், அங்கே இருக்கும் மக்கள் அவரவர் வீடுகளுக்குப் படிப்படியாக அனுப்பிவைக்கப்படுகிறார்கள். இது தூதுக் குழுவுக்கும் கருணாநிதிக்கும் கிடைத்த வெற்றிதானே?''''அப்படி நடக்கவில்லை என்பதுதான் உண்மை! கடந்த மாதம் செப்டம்பர் 15-ம் தேதி கிழக்கு மாகாண முகாமில் இருந்த மக்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் சென்றது சிங்கள ராணுவம். ஆனால், நடுவழியில் வேறு முகாமில் கொண்டுபோய் அடைத்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இரண்டாயிரம் பேர் முகாமில் இருந்து விடுவித்ததாகச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் தங்களது வீடுகளுக்குப் போய்ச் சேரவில்லையே? இதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால், யாழ்ப்பாணம் முகாமில் இருந்த 568 பேர், அவர்களது வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்ததாகச் சொல்லப்பட்டது.

அவர்களும் போய்ச் சேரவில்லை. அது மாதிரிதான் இப்போதும் நடக்கிறது. இந்த உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்ல அங்கு நடுநிலையாளர்கள் யாரும் இல்லை.''''யாருமே பார்க்க முடியாத முகாம்களை, தமிழக எம்.பி-க்கள் போய்ப் பார்த்ததே சாதனை அல்லவா?''''அங்கே உள்ள தமிழர் கூட்டமைப்பு எம்.பி-க்கள், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினர், ஐ.நா. அதிகாரிகள், சர்வதேசப் பார்வையாளர்கள் என யாரையும் அனுமதிக்காத ராஜபக்ஷே, கருணாநிதிக்கு மட்டும் அழைப்பு அனுப்பி அனுமதி கொடுத்திருப்பதன் உள்நோக்கம் என்ன? தமிழக எம்.பி-க்கள் அனைத்து முகாம்களையும் போய்ப் பார்த்தார்கள் என்று சொல்லப்படுவது உண்மை அல்ல. முகாமில் உள்ள அனைவரின் பெயர்ப் பட்டியலையும் வாங்கி, தங்களுக்கு விருப்பமான பெயர்களைச் சொல்லி, அவர்களை அழைத்து கருத்துக் கேட்டிருக்க வேண்டாமா? அதைச் செய்யாமல் ராணுவம் கூட்டிவைத்த மக்களிடம் கருத்துக் கேட்டால், எப்படி உண்மையாக இருக்க முடியும்? கருணாநிதிக்கு எம்.பி-க்கள் கொடுத்த அறிக்கையில், 'அனைவரும் ஒரே உடையுடன், அழுக்கு உடையுடன் இருக்கிறார்கள்' என்று சொல்லப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான மதிப்புள்ள உடைகளை அவர்களுக்கு அனுப்பிவைப்பதாக கருணாநிதி பார்வையிட்டு, இங்கு புகைப்படங்கள் வந்தனவே. அந்தத் துணிமணியாவது ஒழுங்காகக் கிடைத்தனவா என்று கேட்டார்களா? கிடைத்திருந்தால், அந்த மக்கள் ஏன் அழுக்காக இருந்திருக்க வேண்டும்? காயம்பட்டவர்களுக்கு ஒழுங்காக மருந்து கிடைத்ததா என்று கேட்டு, வாங்கிக் கொடுத்ததா இந்தக் குழு? உலகம் அறிந்த பிரபாகரனின் பெற்றோரை இந்தக் குழு பார்த்ததா? பிறகு, எப்படி இவர்களை உண்மை அறியும் குழுவாகச் சொல்ல முடியும். எனவே, இது சுற்றுலாக் குழுதான்!''''அங்கு சாந்தி நிலவுவதாக மகிழ்ச்சியைத் தெரிவித்து இருக்கிறாரே முதல்வர்?''''மயானத்தில்கூடத்தான் சாந்தி நிலவும். ஈழ பூமி இப்போது அப்படித்தானே இருக்கிறது.

வாய்விட்டுச் சொல்லக்கூட முடியாத சோகத்தில் இருப்பவரைப் பார்த்து சாந்தி நிலவுவதாக கருணாநிதி சொல்வது அவரது கற்பனை வளமாக இருக்கலாம். யதார்த்தம் அதுவல்ல. ஓர் உதாரணத்தை மட்டும்தான் அவருக்குச் சொல்ல முடியும். சுவிட்சர்லாந்தில் சிகிச்சை பெற்று இறந்துபோன மனைவி கமலாவின் உடலைப் பார்க்க ஜவஹர்லால் நேரு சென்றார். அதற்குப் பக்கத்து நாடுதான் இத்தாலி. அந்த நாட்டின் கொடுங்கோலன் முசோலினி, இரங்கல் செய்தி கொடுத்தார். தன்னுடைய நாட்டுக்கு நேரு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் அபிசீனியா மீது போர் தொடுத்து, அந்த மக்கள் மீது நச்சுக் குண்டுகளை முசோலினி வீசியிருந்தார். 'ரத்தக் கறை படிந்த பாசிஸ்ட் முசோலினியின் அழைப்பை ஏற்று அவர் கரங்களைக் குலுக்க மாட்டேன்' என்று கம்பீரமாக மறுத்து சந்திப்பைத் தவிர்த்தார் நேரு.
அந்த மனிதநேயத்தை கருணாநிதியிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த முன்மாதிரியைப் பின்பற்றும் பக்குவம் கருணாநிதிக்கு இருந்திருக்க வேண்டும்! அபிசீனிய மக்களுடன் நேருவுக்கு எந்த ரத்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களுடன் கருணாநிதிக்குத் தொப்புள்கொடி உறவு உண்டு. ரத்தக் கறை படிந்த ராஜபக்ஷேவின் அழைப்பை ஏற்க கருணாநிதிக்கு எப்படி மனம் வந்தது?''''அங்கு சகோதர யுத்தம் நடந்ததால் போர் வெற்றி பெறாமல்போனதாக கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?''''இந்தப் பொய்யான குற்றச்சாட்டை பல ஆண்டுகளாக அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். சகோதர யுத்தத்தைப் பின்னால் இருந்து நடத்தியதே இந்தியப் புலனாய்வு அமைப்புதான். திம்பு பேச்சுவார்த்தையில் அனைத்துப் போராளி இயக்கங்களும் ஒன்று சேர்ந்து வைத்த கோரிக்கைகளை சிங்கள அரசு ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை நடக்கும்போதே வவுனியாவில் 300 தமிழர்களைக் கொன்றார்கள்.

இதனால் அனை வரும் பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தார்கள். எனவே, போராளிகளின் ஒற்றுமையைச் சிதைக்க உளவுப் பிரிவு செயல்பட்டது. அன்றைக்கு கருணாநிதி, வீரமணி ஆகியோருடன் நானும் சேர்ந்து டெசோ அமைப்பை வைத்திருந்தோம். 'போராளிகளைப் பிளவுபடுத்தாதே' என்று ஊர் ஊராகப் போய்ப் பேசினோம். அந்த உண்மையை கருணாநிதி இப்போது மறைக்கிறார். மேலும், சகோதர யுத்தம்பற்றி பேசுவதற்கு அவருக்குத் தகுதியே இல்லை. தன்னுடைய குடும்பத்தில் உள்ள சகோதர யுத்தத்தை முதலில் அவர் அடக்கட்டும்!''''முதல்வரைக் கொல்லச் சதி நடப்பதாகவும் அதில் உங்களுக்குப் பங்கு இருப்பதாகவும் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறாரே?''''அரசியலில் நெருக்கடி வரும்போதெல்லாம், கட்சிக்குள் தனக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் தன் உயிருக்கு ஆபத்து என்று நாடகம் ஆடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை.

தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடந்தபோது, தன்னைக் கொல்ல குடமுருட்டி பாலத்தில் குண்டுவைத்ததாக அவர்தான் சொன்னார். அதை வைத்தவர்களை அவரால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. சொந்தக் கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டு வைகோ விலக்கப்பட்டார். 'வைகோவின் ஆதாயத்துக்காக புலிகள் என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்' என்று சொன்னவரும் அவர்தான். பின்னர் வைகோவை, சிறையில் போய் பார்த்தவரும் அவர்தான். தூத்துக்குடி கே.வி.கே.சாமி முதல் தா.கிருஷ்ணன் வரை எத்தனை முக்கியத் தலைவர்கள் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே கொல்லப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இத்தகைய உட்கட்சிக் கொலைகளைத் தடுக்க முடியாதவர், தனது உயிருக்கு ஆபத்து என்று ஓலமிடுவது அவருக்குத் தனது கட்சிக்காரர்கள் மீது உள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது!''''இன்றைய நிலையில் இலங்கையில் போர் முடிந்து விட்டது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?''''தமிழர்கள் இன்னமும் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் இருக்கிறார்கள். அந்த நிலைமை மாறவில்லையே! தமிழ் மக்கள் இதுவரை பட்ட கஷ்டத்துக்கு என்ன அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது? அதைச் சொல்ல ராஜபக்ஷே தயாராக இல்லை. எத்தனையோ ஜனாதிபதிகள் இதுவரை வந்து போய்விட்டார்கள். ஒப்பந்தங்கள் போட்டார்கள். ஆனால், அதை அவர்களே மதிக்காமல் காலில் போட்டு மிதித்தார்கள். வடக்கு, கிழக்கு மாகாணம் இணைப்பு என்பதுதான் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம். அதை ராஜபக்ஷே முடக்கியபோது இந்திய அரசு தட்டிக்கேட்டதா? தனி நாடு கோரிக்கையைக்கூடத் தள்ளிவைத்துவிட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய மாநிலம் என்று புலிகள் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தைக் குலைத்தது சந்திரிகாதானே.

எனவே, தமிழர்களுக்கு அரசியல் தீர்வை இவர்கள் தர மாட்டார்கள். அதுவரை போராட்டம் ஓயாது!''''பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால், அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?''''இந்தியாவும் இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்துகொண்டு இருக்கிறது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்த கட்டப் போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை மட்டும்தான் இன்றைய நிலையில் என்னால் வெளியில் சொல்ல முடியும். மே 17-ம் தேதி பிரபாகரன் இறந்ததாக அறிவித்தார்கள். 20-ம் தேதி நாங்கள் சென்னையில் எழுச்சிப் பேரணி நடத்தினோம். பல்லாயிரம் தமிழர்கள் உற்சாகத்துடன் வந்தார்கள். கடந்த 18-ம் தேதி லண்டனில் 50 ஆயிரம் தமிழர்கள் பேரணி நடத்தியிருக்கிறார்கள். பிரபாகரன் இறந்துவிட்டார், புலிகள் தோற்றுவிட்டார்கள் என்ற செய்தியை அவர்கள் துளியளவும் நம்பவில்லை. எனவேதான் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன!'''

புலிகள் அமைப்பு இன்னமும் இருப்பதாகச் சொல்கிறீர்களா?''''அதே வலிமையுடன் இருப்பதாகவே சொல்கிறேன். ஒன்றே கால் லட்சம் வீரர்களுடன் போன இந்திய அமைதிப் படையை இரண்டாயிரம் பேரை வைத்து எதிர்கொண்டார் பிரபாகரன். 650 புலிகள் வீரச் சாவை அடைந்தார்கள். பலரும் சிதறடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குத் தப்பினார்கள். ஆனால், மிச்சம் இருந்த சொற்பத் தொகையான புலிகளை மட்டும் வைத்து கெரில்லா தாக்குதல் மூலமாக அமைதிப் படையைத் திருப்பி அனுப்பினார் பிரபாகரன். 'புலிகளால் இனி தலையெடுக்க முடியாது. பிரபாகரன் கதை முடிந்துவிட்டது' என்று சென்னையில் வைத்து ராணுவத் தளபதி கல்கத் சொன்னார். அதன் பிறகுதான் தமிழீழத்தின் முக்கியப் பகுதிகள் அத்தனையையும் பிடித்தார்கள்.

எனவே, இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை. அதை அவர்கள் வெல்வதும் இயற்கை!''''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் அரசியல்ரீதியாக அணிகளை மாற்றிக்கொள்ள இருக்கிறார்கள். இது உங்களது போராட்டத்தைப் பாதிக்காதா?''''இந்த அமைப்பை ஆரம்பிக்கும்போதே அவர்கள் வெவ்வேறு அணிகளில்தான் இருந்தார்கள். அரசியல் எல்லைகள் கடந்து இனத்துக்காகச் சேர்ந்து நிற்பதாக முடிவெடுத்தார்கள். இன்று அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம். தேர்தல் நேரத்தில் அவர்கள் சில முடிவுகளை எடுக்கலாம். ஆனால், ஈழத் தமிழர்க்குப் போராட அவர்கள் ஓர் அமைப்பாகவே என்றும் இருப்பார்கள். யாருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம்!'

நன்றி: தமிழ்செய்தி மையம்

Comments