- ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கை தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது
- இலங்கை இடம்பெயர்ந்தோர் நிலவரம் தொடர்பில் ஜப்பான் அழுத்தம் கொடுக்க வேண்டும் மனித உரிமை அமைப்புக்கள்
- சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு?
- போர்க்காலத்தில் இடம்பெற்ற மனிதாயத்திற்கெதிரான குற்றங்களும் அது தொடர்பான தீங்குகளும் இடம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிக்கை காங்கிரஸிடம் கையளிப்பு
- அமெரிக்க காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவை – சிறீ லங்கா அமெரிக்க காங்கிரஸின் அறிக்கையில் பிழையில்லை – அமெரிகா
விரிவான செய்தித் தொகுப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கை தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது
- இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது தற்காலிகமாக நிறுத்துவதான பிரேரணையைத் தயாரிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கை தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜி.எஸ்.பி வரிச் சலுகையைப் பெறுவதற்கான சர்வதேச மனிதாய அடிப்படைகளை இலங்கை பின்பற்றியிருக்கிறதா என்பதைக் கண்டடைவதற்கான ஆணைக்குழுவின் விசாரணைகள் முற்றுப்பெற்றுள்ளன என ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் லூற்ஸ் குல்னர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்ற முடிவுக்கே ஆணைக்குழு விசாரணைகள் வந்தடைந்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்துவதான பிரேரணையைத் தயாரிப்பது தொடர்பில் நாங்கள் இப்போது உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அறிக்கையில் இனங்காணப்பட்டுள்ள மனித உரிமை மீறல் பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் கவனத்திற் கொள்ளும் வகையில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இது தொடர்பாக ஆக்கபூர்வமான முறையில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மனித உரிமை நிலைமையை முன்னேற்றகரமானதாக்குவதோடு உண்மையானதாகவும் உறுதியானதாகவும் அந்நடவடிக்கைகள் வேகமானதாகவும் அமைதல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை, சித்திரவதைக்கெதிரான சாசனம் ,சிறுவர் உரிமை சாசனம் ஆகிய மூன்று முக்கியமான ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான சாசனங்களை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளமையை விசாரணை அடையாளம் கண்டுள்ளது. இந்த சாசனங்களை இலங்கை அரசாங்கம் பயன்தரு முறையில் பயன்படுத்தவில்லை எனவும் அவ்விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐநாவின் விசேட பிரதிநிதிகள், ஏனைய ஐநா அமைப்புக்கள், அங்கீகாரம் படைத்த மனித உரிமை நிறுவனங்கள் ஆகியவற்றின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இவ்விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் அடிப்படையான மூன்று ஐநா மனித உரிமை சாசனங்களையும் தனது சட்டவாக்கத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தியதா என ஆணைக்குழு 2008 ஒக்.14ஆம் திகதி ஆராய்ந்தது. இம்மூன்று ஐநா மனித உரிமை சாசனங்களோடு, 27 சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக சானங்களையும் நிறைவேற்றியிருந்தால் மட்டுமே ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகள் இலங்கைக்குக் கிடைக்கும்.
ஜி.எஸ்பி பிளஸ் சலுகைகளைப் பெறும் நாடுகள் அவற்றைப் பெறுவதற்கு இந்நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். இவை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவை நியமிக்கும். ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு நிலைமைகளை அறிந்து கொள்ளும். அது கண்டடையும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதாவது ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகள் தொடருமா அல்லது தற்காலிகமாக அவை நிறுத்தப்படுமா என முடிவெடுக்கப்படும். இலங்கையின் நிலைமைகளை ஆராய்ந்த ஆணைக்குழு இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளைத் தற்காலிகாலிகமாக நிறுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கை விவகாரம் குறித்த தீர்மானமொன்று 22.10.2009 அன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை விவகாரம் குறித்து சமர்ப்பிக்கப்பட் யோசனைத் திட்டத்திற்கு ஆதரவாக 57 உறுப்பினர்கள் வாக்களித்ததாகவும், 3 பேர் வாக்களிப்பின் போது பிரசன்னமாகவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
அகதிகளை மீள் குடியேற்றுதல் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பில் இந்தத் தீர்மானங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மனிதாபிமான ரீதியில் ஆதரவு வழங்குவதற்கு உலக நாடுகள் தயார் நிலையில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய விவகாரப் பொறுப்பாளர் ஜேன் லம்பார்ட் தெரிவித்துள்ளார்.
அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டியது மிகவும் அவசியமானதென சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான மனித உரிமை நிலைமைகளை அபிவிருத்தி செய்யவும், அகதிகளை மீள் குடியேற்றவும் அரசாங்கம் அதிக முனைப்பு காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட அரசியல் தீர்வு ஒன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென பல உறுப்பினர்கள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் முக்கிய நிபந்தனைகளை இலங்கை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும் இதனால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை வழங்க முடியாது எனவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் லியோனார்டு; ஒர்பான் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என பிரித்தானிய உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு மற்றுமொரு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிப்ரி வென் ஓர்டன் தெரிவித்துள்ளார்.
அகதிகள் மீள் குடியேற்றம், 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வு போன்றவை குறித்து இந்த அமர்வின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை தாம் அடைந்த ஓர் விடுதலையாக தமிழ் மக்கள் நோக்கக் கூடிய வகையில் இலங்கை அரசாங்கம் தமிழர் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விரைவில் மீள் குடியேற்றத் தேவையான சகல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை நிலைமை தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை இடம்பெயர்ந்தோர் நிலவரம் தொடர்பில் ஜப்பான் அழுத்தம் கொடுக்க வேண்டும் மனித உரிமை அமைப்புக்கள்
- யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உரிய தீர்வுத் திட்டங்களை வழங்குமாறு ஜப்பானிய அரசாங்கம், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
250,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு ஜப்பானியர்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள ஜப்பானிய அரசாங்கம் இலங்கை மனிதாபிமான நிலைமைகள் குறித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பான கடிதமொன்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயு ஒக்கடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினாலும், அரசாங்கப் படையினராலும் மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உதவி வழங்கும் முக்கிய நாடு என்ற வகையில் ஜப்பான் காத்திரமான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகம், அஹிம்சை சமாதானப் படையணி, ஹியூமன் ரைட்ஸ் நவ், சர்வதேச மன்னிப்புச் சபை, சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சர்வதேச அமைப்பு உள்ளிட்ட முக்கிய மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
முகாம் மக்களை விடுவிப்பதற்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கவும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வல்லமை ஜப்பானிடம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை நடாத்தப்படுவதற்கு ஜப்பான் வலியுறுத்த வேண்டுமென குறித்த மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் கோரிக்கை
- இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 25 ஆண்டு காலமாக நீடித்த யுத்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் இயன் கெலி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தரப்பினாலும், விடுதலைப் புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சகல குற்றச் செயல்களும் விசாரிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் சிறுமியரை பலவந்தமாக தமது கெரில்லா போராட்டத்திற்கு பயன்படுத்தியதாகவும், அரசாங்கப் படையினர் சரணடைய வந்த போராளிகளை சுட்டுக் கொன்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க மற்றும் அரசாங்க ஆதரவு துணை இராணுவக் குழுக்கள் கடத்தல் மற்றும் கப்பம் கோரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்ட சகல குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இவர்களை அடையாளம் காட்ட முடியுமா? ஊடன் தொடர்பு கொள்ளுங்கள் மனித உரிமைகள் அமைப்பை அல்லது லங்காகார்டியனை (இணைக்கப்பட்ட படங்கள் அகோரமானவை)
- அரச படைகளால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்கள் உட்பட நான்கு தமிழரது படங்களை லங்கா கார்டியன் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இந்தப் படங்கள் எப்போது எங்கே எடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவில்லை எனக்குறிப்பிட்டிருக்கும் அவ்விணையத்தளம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து சரணடைந்து அதன் உறுப்பினர்கள் இனம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதுவதாகத் தெரிவித்திருக்கிறது.
இப்படங்களில் உள்ள எவரையாவது யாராவது அடையாளம் காட்ட முடியுமாயின் லங்கா கார்டியனுடன் அல்லது ஏதாவது சர்வதேச மனித உரிமை நிறுவனமொன்றுடன் தொடர்பு கொள்ளுமாறு அவ்விணையத்தளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு?
- ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவலொன்று பரவி வருவதால் குழப்பமடைந்துள்ள ஜனாதிபதி இராணுவ சேவையில் பணியாற்றிவரும் அதிகாரியான சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா என ஆராய்ந்து பார்த்து உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டமா அதிபர் மொஹான் பீரிஸிற்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது இராணுவத்தில் பணியாற்றிவரும் பிரதான அதிகாரியொருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என ஜனாதிபதிக்கு நெருங்கிய சட்டத்தரணிகள் சிலர் சுட்டிக்காட்டியதை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இராணுவத்தின் சிரேஷ்ட உறுப்பினரான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி வழங்கிய பணி நீடிப்பு டிசம்பர் மாதம் 18ம் திகதி முடிவடையவுள்ளது. இவ்வாறான நிலையில், ஜனாதிபதி கடந்த ஜூலை 15ம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக இரண்டு வருடகாலத்திற்கு நியமித்தார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் பணி நீடிப்பை எதிர்பார்க்கப் போவதில்லையென சரத் பொன்சேகா ஏற்கனவே தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புச் சபைக் கூட்டம் இரண்டு வாரங்கள் கூட்டப்படவில்லை?
ஜனாதிபதியினால் வாரந்தோறும் கூட்டப்படும் பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஜனாதிபதிக்கும் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் இடையே நிலவும் உட்பூசல்கள் காரணமாக இரண்டு வாரங்கள் கூட்டப்படவில்லையென ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வாரந்தோறும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் மதியம் வரை நடைபெறும் பாதுகாப்புச் சபைக் கூட்டம் இறுதியாக கடந்த 7ம் திகதி புதன்கிழமையே நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி, முப்படைத் தளபதிகள், காவல்துறைமா அதிபர், புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்வதுடன், நிதியமைச்சின் செயலாளர் வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் கலந்துகொள்வதுண்டு.
இவர்கள் அனைவருக்கும் புதன்கிழமை முற்பகலில் பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த இரண்டு வாரங்களாக பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்படமாட்டாது என கடந்த செவ்வாய்க்கிழமை இரவே அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகாவின் தலைமையில் கூட்டு நடவடிக்கைத் தலைமையகத்தில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைக் குழுவின் கூட்டங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாக மேற்கூறிய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதியோ பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ, ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகளோ கலந்துகொள்வதில்லை. இந்த நிலையில், நாளை சரத் பொன்சேகா வெளிநாடு சென்ற பின்னர் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி எண்ணியிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடகத்தகவல் மையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக 1 மணி நேரம் மக்கள் அவதி?
இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஆர். பிரேமதாஸா விளையாட்டரங்கில் நடைபெறும் இராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருந்த ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 4.30 முதல் 5.30 வரை அலரி மாளிகையிலிருந்து பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைந்துள்ள அருகிலுள்ள வீதிகள் மூடப்பட்டதால் அலுவலகப் பணி முடிவடைந்து வீடு செல்லும் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சுமார் 5 நிமிடங்கள் மாத்திரமே வீதியை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் சிரந்தி ராஜபக்ஷவின் ஒப்பனை நடவடிக்கைகளுக்கு அதிக காலம் சென்றதால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீதித் தடை காரணமாக தொடரூந்தில் பயணிக்கும் பலர் தமது நேரத்திற்குரிய தொடரூந்துகளை தவறவிட்டு, நடு இரவு வரை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
போர்க்காலத்தில் இடம்பெற்ற மனிதாயத்திற்கெதிரான குற்றங்களும் அது தொடர்பான தீங்குகளும் இடம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிக்கை காங்கிரஸிடம் கையளிப்பு
- இலங்கை அரசாங்கத்திற்கும் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்குமிடையேயான மோதலின் இறுதி மாதங்களில் இடம் பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட உரிமை மீறல் அல்லது மனிதாயத்திற்கெதிரான குற்றங்களும் அது தொடர்பான தீங்குகளும் இடம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் அமெரிக்க காங்கிரஸிடம் கையளித்துள்ளது என இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதரகம் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸின் வேண்டுகோளைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் ஒரு பிரதி இலங்கைத் தூதுவரகத்திற்கும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
அவ்வறிக்கையில் மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பாரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்ட விடயங்கள் அனைத்தும் விரிவான அளவில் முதல்தர மற்றும் இரண்டாம் தர தகவல் மூலங்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வறிக்கை சட்ட ரீதியான அல்லது திட்டவட்டமான முடிவுகள் எவற்றையும் குறித்துக்காட்டவில்லை. இவ்வறிக்கையில் குறித்துக்காட்டப்பட்டுள்ள பெரும்பாலான சம்பவங்கள் போர்ப்பிராந்தியத்திற்கு அண்மையாக இருந்தவர்களிடம் இருந்தும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்துள் இருந்தவர்களிடமிருந்தும் நேரடியாகப் பெறப்பட்டுள்ளன.
அரசுக்கெதிரான சக்திகளிடமிருந்து வரும் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை அரசுக்கு இருக்கிறது என்பதை ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது. அதேவேளை அரசும் அரசு சாரா சக்திகளும் பொதுமக்களை ஆயுத மோதல்களிலிருந்து பாதுகாப்பது உட்பட்ட சர்வதேச சட்ட விதிகளுக்கு இணங்கிச் செயற்பட வேண்டும் எனவும் ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
தேசிய இணக்கப்பாட்டின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் கடப்பாடு என்பது. இலங்கை அரசாங்கம் அக்கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கான சாத்தியமான பொறிமுறையை அடையாளம் கண்டுள்ளதா என்பதை ஐக்கிய அமெரிக்கா அவதானித்து வருகிறது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவை – சிறீ லங்கா அமெரிக்க காங்கிரஸின் அறிக்கையில் பிழையில்லை – அமெரிகா
- இறுதிக் கட்ட யுத்த காலத்தில் இலங்கை அரசாங்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் அறிகi;க ஆதாரமற்றதென வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் காணப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸினால் வெளியிடப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தம் காணப்பட்ட சமயத்தில் யுத்த களத்தில் திரட்டப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என ஜனாதிபதி படை அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தார் எனவும், மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இலங்கை சட்ட விதிகளின் அடிப்படையில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க காங்கிரஸின் அறிக்கையில் பிழையில்லை – அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம்:
- வடகில் அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அண்மையில் நிறைவடைந்த மோதல்களின் போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக அமெரிக்க காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிழையில்லை என இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற காலத்தில் யுத்த சூன்ய மற்றும் யுத்த வலயங்களில் வசித்த நபர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்பயைடாகக் கொண்டே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கப் படையினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்பட்டிருக்கலாம் என அமெரிக்க காங்கிரஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயங்களிலிருந்தே இந்த அறிக்கைக்கு அதிக தகவல்கள் திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்க வேண்டியது மிகவும் இன்றிமையாததென அமெரிக்க காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
Comments