இந்திய ஆதரவு என்ற பொங்கு சனி பார்வையில் அனைத்தையும் விருப்பம்போல் நிறைவேற்றிய ராஜபக்ஷக்களுக்கு இப்போது போதாத காலம்தான். மேற்குலகிலிருந்து வெளிவரும் அறிக்கைகளும், அறிவுறுத்தல்களும், கண்டனங்களும் ஒரு பக்கம் கலக்கத்தைக் கொடுத்தாலும், இருப்புக்கே ஆபத்தாக சரத் பொன்சேகா வயிற்றில் புளி கரைத்து வருகின்றார். வளர்த்த கடா மார்பில் பாய்வதற்குத் தயாராகி வருவதான செய்திகள் ராஜபக்ஷக்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது.
சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தை சிங்கள கடும்போக்கு அரசியல் கட்சிகளான ஜே.வி.பி.யும், சிஹல உறுமயவும் வரவேற்றுள்ளன. ஈழத் தமிழர்கள் மீதான போர் வெற்றியின் மொத்த சொந்தக்காரராகத் தம்மைக் காட்டி அரசியல்களத்தில் வெற்றிகளைக் குவித்துவரும் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நின்று ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தனது இடத்தை சரத் பொன்சேகாவுக்கு வழங்க முடிவு செய்துவிட்டார். சரத் பொன்சேகாவும் இதற்கு இணங்கியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
பராக் ஒபாமாவே போட்டியிட்டாலும் இன்னமும் 30 வருடங்களுக்கு மகிந்தவே ஜனாதிபதியாக இருப்பார் என்ற அரச தரப்பு எச்சரிக்கைகளும், இராணுவத்தினர் அரசியலில் ஈடுபட முடியாது. அத்துடன் அவர்களை இணைத்து யாரும் செய்திகள் வெளியிட முடியாது என்ற அறிவித்தல்களும் ஆளும் கட்சி மிரண்டு போயுள்ளதையே உணர்த்துகின்றது. மகிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான போட்டியாளராக சரத் பொன்சேகா சிங்கள தேசத்தில் நோக்கப்படுகின்றார். சிங்களத்தின் யுத்தகள வெற்றியை பங்கு போடும் வேட்பாளராகவும், சிங்கள கடும் போக்காளர்களின் ஆதரவுக்குரியவருமான சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டால் நிச்சயம் அவர் வெற்றி பொறுவார் என்பதே சிங்கள தேசத்தின் கணக்காக உள்ளது.
இதனால், உத்தியோகபூர்வமாக ஐக்கியதேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கப்பட்டதும் தற்போதைய ஆளும் அரசில் அமைச்சர்களாக உள்ள பலரும் கட்சி மாறுவதற்கும் ஆயத்தமாக உள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் அணி மாறுவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயதசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். குடும்ப அரசியலைக் கோலாகலமாக நடாத்திய மகிந்த ராஜபக்ஷவுக்கு அருகிலிருந்தே பலர் குழி பறிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கள தேசத்தில் அரசியல் களம் கூடு பிடித்துள்ள நிலையில் தமிழர்கள் எவரும் இது குறித்துக் கவலை கொள்ளப் போவதில்லை.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு தடவை திருமதி சந்திரிகாவின் பேச்சுக்களை நம்பி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களித்ததைத் தவிர, வேறு எந்த ஜனாதிபதி தேர்தலிலும் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழின அழிப்பைக் கொடூரமாக நடாத்தி முடித்ததுடன் அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதும், வன்னி மக்களை வதை முகாம்களில் அடைத்ததுவும் தமிழர்களால் மறக்கப்படக்கூடிய, மன்னிக்கக்கூடிய விடையங்களாக இல்லை. சிங்கள தேசிய இனவாதிகளில் யாரையும் வெற்றிபெற வைக்க வேண்டிய தேவையும் தமிழீழ மக்களுக்குக் கிடையாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப் புலிகளின் அழைப்பை ஏற்று, அந்தத் தேர்தலைப் புறக்கணித்தது போலவே, இந்தத் தேர்தலும் அவர்களால் புறக்கணிக்கப்படும் என்பதே யதார்த்தமாக உள்ளது.
அதனை அவர்கள் யாழ். மாநகரசபைத் தேர்தலிலும் உணர்த்தியுள்ளார்கள். வேண்டப்படாத அரசியல்வாதியான மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக அரியணை ஏறுவதை மேற்குலகு விரும்பப் போவதில்லை. ஐக்கியதேசியக் கட்சி சார்பாக ரணில் போட்டியிட்டு வெல்வதையே அவர்கள் விரும்புவார்கள். அதற்கு சார்பாக, இனவாத சிந்தனையூட்டப்பட்ட சிங்கள இனத்தைத் திருப்ப முடியாது என்ற யதார்த்தத்தையும் மேற்குலகு புரிந்து கொள்ளும். இந்தியாவுக்கு களம் அமைத்துக் கொடுத்து, சீனாவுடன் சீட்டட்டம் நடாத்தி வந்த மேற்குலகு சீனா பக்கம் முற்றாகச் சாயக்கூடிய சரத் பொன்சேகா ஆட்சிக்கு வருவதை விரும்பாது. இந்த நிலையில் மேற்குலகு கடும் நிலையை எடுக்க முற்பட்டால் இலங்கைத் தீவு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோற்றுப்போவதை இந்தியா விரும்பப் போவதில்லை. தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் துணை நின்றதுடன், அதன் பின்னரான மேற்குலகினதும், ஐ.நா.வினதும் அழுத்தங்களிலிருந்து இன்றுவரை மகிந்தவைப் பாதுகாத்து வரும் இந்தியா மீண்டும் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதன் மூலமாகத் தனது நலன்களைப் பாதுகாக்கவே முன்வரும்.
அதற்காக, இலங்கைத் தீவின் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்கவும், மகிந்தவை வெல்ல வைப்பதற்கான பொருளாதார பலத்தை வழங்கவும் முன்வரும். தமிழர்கள் மீதான யுத்த வெற்றியை சொந்தம் கொண்டாடும் இரு சிங்கங்களும் உறுமல்களோடு தேர்தல் களத்தை சூடாக்க ஆரம்பித்துள்ளன. போகப் போக இந்தக் கர்ச்சிப்புக்கள் அதிகமாகி, அதன் மூலம் பல யுத்தகள உண்மைகளும் வெளிவரக் கூடும்.
எந்தப் படுபாதகத்திற்கும் அஞ்சாத மகிந்த ராஜபக்ஷ தனது எதிர்காலத்திற்கு சவாலாக உருவெடுக்கும் சரத் பொன்சேகாவை அழித்து விடவும் முயற்சிக்கக் கூடும். அதற்கும் இருக்கவே இருக்கிறது 'விடுதலைப் புலிகள்' என்ற பிரம்மாஸ்திரம். ராஜபக்ஷக்களின் திட்டங்கள் எதுவானாலும் நிறைவேற்றக் காத்திருக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களும் அவர் வசம் உள்ளன.
மாறாக, சரத் பொன்சேகாவும் அவருக்குச் சளைத்தவரல்ல. இராணுவ தளபதியாக இருந்த அவர் பின்னால் அணி வகுக்கக்கூடிய ஆயுத படையினர் இருக்கவே செய்வார்கள். இராணுவத்தின் வெற்றியை, தனது குடும்ப வெற்றியாக்க மகிந்த முயற்சி செய்கிறார் என்ற பிரச்சாரத்துடன் வெற்றியைத் தனதாக்க முடியாமல் போனால், ஒரு இராணுவப் புரட்சி மூலம் சாதிக்க முயற்சிக்கமாட்டார் என்றும் உறுதியாக நம்ப முடியாது. ஆக மொத்தத்தில், சிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.
சி. பாலச்சந்திரன்
ஆசிரியர்:ஈழநாடு
Comments