சொந்தங்களைப் பலிகொடுத்து அதில் கலந்துகொண்ட உறவுகளின் மனக்குமுறல்கள்
போருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் எமது நாடும் ஒன்று. காணாமல் போனவர்கள் பற்றிய கணக்கெடுப்பு மீளவும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இவற்றைக்கடந்து முன்னோக்கச் செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்றே. ஆனாலும் அதைப்பற்றிப் பேசியாக வேண்டியுள்ளது. இவர்களில பலர் கைது செய்யப்பட்டுக் காணாமல் போயிருக்கிறார்கள். இன்னும் பலர் கடத்தப்பட்டுக் காணாமல் போயிருக்கிறார்கள். வேறு சிலருக்கோ என்ன நடந்ததே என்று தெரியாது. அவர்களுடைய குடும்பத்தினருடைய துயரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த மக்களுடைய கேள்விகளுக்கு விடைகாணும் முகமாக கானாமற் போவோரை கண்டறியும் மக்கள் கண்காணிப்புக்குழு ஒரு போராட்டத்தை அண்மையில் நடத்தியிருந்தது.
சொந்தங்களைப் பலிகொடுத்து அதில் கலந்துகொண்ட உறவுகளின் மனக்குமுறல்கள் ஆங்கில சிங்கள தமிழ் உரையாடல்களின் எழுத்து வடிவம்
- எமது பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா அல்லது கொல்லப்பட்டு விட்டார்களா? தடுத்து வைக்கப்பட்டிருந்தால் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் – பிள்ளைகளை இழந்த பெற்றோர்
நான் திருகோணமலையில் இருந்து வந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். எனது மகனைக் கடந்த ஒரு வருடமாகக காணவில்லை. கொழும்பில் செட்டித் தெருவில் உள்ள ரம்யா ஜுவலர்ஸ் என்ற நகைக்கடையில் தொழில் பார்த்து வந்தார் அவர். கைது செய்யப்பட்டுக் கொண்டு போன அவர் பற்றி கடந்த ஒருவருடமாக எந்தத் தகவலும் தெரிய வரவில்லை என்றார் இந்தப் போராட்டத்தில் திருகோணமலையில் இருந்து வந்து கலந்து கொண்ட ஒரு தாயார்.
2006ஆம் ஆண்டு ஒக்ரோபர் 16ஆம் திகதி எனது மகன் வெளிநாடு போவதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ரயில் ஏறினார். ரயில் ஏறிய பிற்பாடு அவருடைய தொலைபேசி வேலை செய்யவில்லை. நாங்கள் அதற்கு அழைப்பை எடுத்த போது சிங்களத்தில் பதிலளித்தார்கள். அதன்பிறகு அதுவும் வேலை செய்யவில்லை. அதன்பின்னர் அவரைத் தேடாத இடமில்லை. ஆனால் எங்களுக்கு இன்னமும் அவர் பற்றிய எதுவித தகவலும் தெரிய வரவில்லை என்றார் மட்டகக்ளப்பிலிருந்து கலந்து கொண்ட ஒரு தந்தை.
2007 பெப்.முதலாம் திகதி பேலியகொட பொலிஸார் எமது வீட்டிற்கு வந்து எமது மகன் மீது குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. அதுபற்றி விசாரிக்க வேண்டும் என மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். அப்போது நான் வீட்டில் இல்லை. ஏனது மனைவி தான் வீட்டிலிருந்தார். பொலிஸார் மகனை அழைத்துச் செல்வதாக அவர் எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். நான் உடனடியாகவே பேலியகொட பொலிஸிற்குப் போனேன். ஆனால் அவர்கள் தாம் அவ்வாறு யாரையும் அழைத்து வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். அதன்பிறகு அவர் பற்றி எதுவித தகவலும் இல்லை. புழனிச்சாமி கொட்டாஞ்சேனை.
காணாமல் போனவர்களுடைய உறவுகளான பெற்றார்களும், மனைவியரும், பிள்ளைகளும், நண்பர்களும் வடக்கு கிழக்கில் இருந்தும் மலையகத்திலிருந்தும் தெற்கிலிருந்தும் கொழும்பிலிருந்தும் வந்திருந்தார்கள். இவர்களில் சிலர் தடுப்புமுகாம்களிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் பலருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த இவர்களுடைய துயரமும் வலியும் கண்ணீரும் பொதுவான ஒன்றானதாக தங்களுடைய காணாமல் போன உறவுகள் பற்றியதாவே இருந்தது.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் போன்றோரைக் கொண்டு 2006இல் ஒருங்கமைக்கப்பட்ட மக்கள் கண்காணிப்புக்கு குழு இவ்வாறு காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவை தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. காணாமல் போனவர்கள் தொடர்பாக சில வழக்குகளை அது தாக்கல் செய்துள்ளது.
துணை இராணுவக் குழுக்களால் நடாத்தப்படும் சட்டபூர்வமற்ற தடுப்பு முகாம்களை மூடி அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் அரசாங்கம் விடுவிக்க வேண்டும். அத்தோடு தெற்கில் பூசா தடுப்பு முகாமிலும், கொழும்பு அநுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கைதிகளதும் பெயர் விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிடல் வேண்டும் என்றார் மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஒருங்கமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன்.
இலங்கையின் வரலாற்றில் 1980களிலும் 1990 இவ்வாறு பெருந்தொகையானோர் காணாமல் போயுள்ளனர். மீளவும் தற்போது 2006இல் இருந்து பெருந்தொகையானோர் காணாமல் போனமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏமது சமூகத்தில் இளைஞர்கள் பெரும்பாலானோர் காணாமல் போயிருக்கிறார்கள். ஏமது இளைஞர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவசரகாலச்சட்டத்தின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீது நீதிமன்றத்தின் முன் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை. காரணமற்ற வகையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அன்றையைப் போல் இன்றும் தமது காணாமல் போன புதல்வர்களின் புகைப்படங்களைத் தாங்கியவாறு அவர்களுடைய தாய்மாரும் தந்தையரும் காத்திருக்கிறார்கள் என்றார் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர.
போர் முடிவடைந்து விட்டது. போர் முடிவடைந்து விட்டதன் பின்னர் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி, அவர்களில் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இனம் கண்டு அவர்கள் பற்றிய குற்றச்சாட்டோ ஆதாரங்களோ இல்லாதவர்களை விடுவிக்க வேண்டும். சுpறு குற்றங்கள் இழைத்தவர்களையும் விடுவிக்கலாம். ஏனையவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒரு சிறிய குழுவினர் மீது மட்டும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தான் சாதாரண நடைமுறை. இந்நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என மகிந்த ராஜபக்ச முன்னர் வலியுறுத்தியவர். இப்போது ஜனாதிபதியாக இருக்கும் அவர் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க.
2006இலிருந்து காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் பற்றிய 2800 பேருடைய தகவல்களை மக்கள் கண்காணிப்புக்குழு திரட்டிள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டில் உள்ள மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை அறியும் வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சு இவ்விடயங்களை ஒருங்கமைத்து வருகின்றது. இவ்வாறான சம்பவங்களில் புலன் விசாரணைகள் மிகமுக்கியமானவை. இது ஒரு சிறிய விடயம். குறுகிய காலத்துள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளியிலிருந்து யாராவது சொல்லக் கூடும். உண்மையாகச் சொல்வதென்றால் நாம் இது பற்றிய சில தகவல்களைப் பெறவேண்டும். மிக இயல்புநிலை இருந்த காலத்தில் கூட இவ்வாறான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன
சிலர் தமது பெண் நண்பிகளோடு சென்றது தொடர்பாகக் கூட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் அவர்களுடைய வேறு பிரச்சினைகள் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு விடயமாக இவை பற்றியெல்லாம் விசாரணை செய்ய வேண்டும். அமைச்சு பொலிஸ் இராணுவத்தின் துணையோடு இவை பற்றியெல்லாம் விசாரிக்க வேண்டும். இதற்கு எமக்கு கால அவகாசம் தேவை. ஆனாலும்கூட நாம் இந்தக் காணாமல் போனவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதனைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் ஊடக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா.
தமது பிள்ளைகள் இன்னமும் உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர்களுடைய குடும்பத்தினர் இன்னமும் உயிர் வாழ்ந்து கெண்டிருக்கிறார்கள்.
எமது பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா அல்லது கொல்லப்பட்டு விட்டார்களா? தடுத்து வைக்கப்பட்டிருந்தால் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றார் அப்போராட்டத்தில் கலந்து கொண்ட பெற்றார் ஒருவர்.
Comments