![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_KDAfpD6bdRLB3_iNmao-plG9vD_ENG98YLvFl7eNacCegWDVMyXZEer3DdFAtIT3CI4n1k-67htHW1x9OlqR4kbt1UVemDR3DqXunFaGKvgkYB3NKM_zkESm2g882MakSO4ATwWUz74K/s400/Terriste_Tamil.jpg)
'நாங்கள் இங்கு இறக்கப் போகின்றோம். அதற்கு முன்பாக எங்களைக் காப்பாற்றுங்கள்' என்று கதறி அழும் வவுனியா வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் உறவுகளின் அவலக் குரல்கள் எங்களுக்குக் கேட்கிறதோ, இல்லையோ உலகின் மனச்சாட்சியை உருக வைத்துள்ளது.
முல்லைத்தீவில்... விசுவமடுவில்... முள்ளிவாய்க்காலில்... எமது உறவுகள் மனிதப் பேரவலத்தை எதிர்கொண்ட போது பொங்கி எழுந்து போராடிய... வீதி மறியல்களில் இறங்கிய புலம்பெயர் தமிழர்களை வீதி வீதியாகத் தேடுகின்றேன். யாரையும் காணவில்லை.
'எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்களை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள்!!' என்று எங்கள் உறவுகள் அவலக் குரல் எழுப்புகிறார்களே... எங்கே போய்விட்டீர்கள்?
விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னி மக்களை மீட்கின்றோம் என்ற சிங்களத்தின் வார்த்தைகளை நம்பிய மேற்குலகும், அமெரிக்காவும் அந்த மக்களின் அவலங்களைக் கண்டு அதிர்ச்சி கொண்டுள்ளன.
சிங்கள ஆட்சியாளர்களுக்கெதிரான கண்டனக் கணைகள் பெரும் அழுத்தங்களாக மாறி வருகின்றன. எங்கள் தேச மக்களின் அவலங்கள் அவர்களது கண்களைத் திறக்க வைக்கின்றன. ஆனால், நாங்கள் எமது கண்களை மூடிக்கொள்ளவே விரும்புகின்றோம். அந்த வன்னி மக்களின் அவலங்களையும், அழு குரல்களையும் தவிர்த்துவிடவே விரும்புகின்றோம். நாங்கள் பாக்கியவான்கள். சிங்கள தேசத்தின் இன அழிப்பிலிருந்து ஆண்டவனால் காப்பாற்றப்பட்டவர்கள். நாங்கள் வாழும் தேசத்தில் வசதியாக வாழ அனுமதிக்கப்பட்டவர்கள். எங்களை மழையும், வெய்யிலும், காற்றும் தீண்டப் போவதில்லை.
எனவே அந்த வதைமுகாம்களில் அடைபட்டு நாளாந்தம் இறப்பினுள் தள்ளப்படும் மக்களைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற தீர்மானம் உங்களால் எடுக்கப்பட்டு விட்டது போலவே தெரிகின்றது. இப்போதெல்லாம் நடாத்தப்படும் ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும், ஒன்றுகூடல்களும் நீங்கள் இல்லாததனால் யார் கவனத்தையும் ஈர்ப்பதில்லை.
நீங்கள் பங்குபற்றாத எங்கள் ஒன்றுகூடல்களைப் பார்த்து எங்களது பாதுகாப்பிற்கு வரும் காவல்துறையினரே பச்சோதாபம் கொள்கின்றனர். நாங்கள் சந்திகளில் எங்கள் மக்களுக்காக ஒன்று கூடும்போதெல்லாம் நீங்கள் தெருவெங்கும் உள்ள கம்பிகளிலும், வீதியோரங்களிலும் வம்பளந்துகொண்டு நிற்கிறீர்களே.
உங்களை நினைத்து நாங்கள் வெட்கத்தால் தலை குனிந்து நிற்கின்றோம். சிங்கள தேசம் மட்டுமா...?
இந்திய தேசமும் எங்களைக் கருவறுக்கும் சதிகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. கடந்த வாரமும் இந்தியப் போர்க்கப்பல் கொழும்பிற்குச் சென்று சிங்களக் கடற்படையுடன் போர் ஒத்திகை நடாத்தியுள்ளது. எந்த நாட்டுடன் போர் தொடுக்க சிங்களப் படைக்கு இந்தியா பயிற்சி வழங்குகின்றது?
எந்த மக்களைக் கருவறுத்த சிங்கள தேசம் இந்தியாவுடன் இணைந்து பயிற்சி பெறுகிறது?
ஆம்! இந்திய தேசம் சிங்கள தேசத்துடன் இணைந்து நடாத்தும் எம்மீதான இன அழிப்பை நிறுத்தப்போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றது.
இன்றுவரை எமக்காகத் தமது கருணைப் பார்வையைத் திருப்பவிடாமல் உலக நாடுகளைத் தடுத்த பெரும் பாவத்தையும் இந்தியா சுமந்துள்ளது. இனியும் அதன் எண்ணத்திலும் எதிர்காலத் திட்டத்திலும் மாற்றம் இல்லை என்பதையே அதன் தொடரும் நடவடிக்கைகள் எமக்கு வலியுறுத்துகின்றன. இந்தியாவின் துரோகங்களை நாம் அல்ல தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் வார இதழ் வெட்கத்துடனும் வேதனையுடனும் தமிழகத்துத் தமிழர்களின் சார்பில் ஆசிரியர் தலையங்கமாகப் பதிவு செய்துள்ளது.
'ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்குத் துணிச்சலை இவர்களுக்கு யார் தந்தது? ஒருபக்கம் முள்வேலி முகாம்களுக்குள் அப்பாவித் தமிழர்களை வதைத்துக்கொண்டே, மறுபக்கம் தன்னைப் புத்தராகவும் புனிதராகவும் காட்டிக்கொள்ள அங்கே இருப்பவர்கள் வேண்டுமானால் வெட்கம் கெட்டவர்களாக இருக்கலாம்.
'தப்பாக எதுவும் நடக்கவில்லை' என்று இந்திய அரசுமா வெட்கம்கெட்டு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டும்?
அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ இலங்கை அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசுதான் மறைமுகத் தடையாக இருக்கிறது என்று இதுநாள் வரை நிலவிவந்த குற்றச்சாட்டுகளை இப்போதாவது பொய்யாக்க வேண்டாமா?' என்று ஆனந்த விகடன் விம்மி எழுதுகின்றது.
இந்தியா இந்தத் தமிழுணர்வுக்கும், மனித நாகரிகத்திற்குமான இந்த வேண்டுகோளை செவி சாய்க்கவா போகின்றது?
சிங்கள தேசத்தின் கொடூரமான தமிழின அழிப்பிற்குத் துணை நிற்பதுடன், அவ்வப்போது சிங்களக் கடற்படையினரின் இரத்தப் பசிக்குத் தமிழக மீனவர்களையும் அல்லவா இலவச இணைப்பாக வழங்குகின்றது.
எங்கள் தாய்த் தமிழகமே! உச்சி மோந்து எங்களை அரவணைப்பாய் என்றல்லவா நாங்கள் நம்பி இருந்தோம். எங்களுக்கு ஆபத்து என்றால் நீ கண்ணகியாகக் களம் புகுவாய் என்றல்லவா காத்திருந்தோம்.
உன் காற்சிலம்பையும் கயவர்கள் களவாடிவிட்டார்களா?
உன்னை நிர்வாணமாக்கித் தம்மை வளப்படுத்திக்கொண்டார்களா?
எங்கள் மக்களைப் போல் நீயும் அடைத்து வைக்கப்பட்டுள்ளாயா?
தாயே! எம் தமிழே!! நீ போதும்... நீ மட்டும் போதும்... எம் நிலம் மீட்டு உன்னை மீண்டும் அரியணையில் அமர வைப்போம் என்றுதானே உன் வீர மறவர்கள் களமாடிப் பலியானார்கள்.
எம் மக்கள் நிலமெல்லாம் வீழ்ந்து உனக்கான திசை மீட்கப் போராடினார்கள். நீயும் வீழ்ந்துவிட்டாயே...
நீயும் தாழ்ந்துவிட்டாயே...
நீயும் தொலைந்துவிட்டாயே...
நாம் எழுவோம்! நாம் விழ விழ எழுவோம்!!
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!!
உன்னைச் சிறை மீட்போம்!
எம் தேசத்தில் உன்னை அரசாள வைப்போம்!!
இது சத்தியம்!
நன்றி - ஈழநாடு
- children genocide images / சிறார்களின் படுகொலை
- Tamil genocide images 8 /வன்னிப்படுகொலை படங்கள் 8
- Tamil genocide images 7 /வன்னிப்படுகொலை படங்கள் 7
- Tamil genocide images 6 /வன்னிப்படுகொலை படங்கள் 6
- Tamil genocide images 5 /வன்னிப்படுகொலை படங்கள் 5
- Tamil genocide images 4 /வன்னிப்படுகொலை படங்கள் 4
- Tamil genocide images 3 /வன்னிப்படுகொலை படங்கள் 3
- Tamil genocide images 2 /வன்னிப்படுகொலை படங்கள் 2
- Tamil genocide images 1 /வன்னிப்படுகொலை படங்கள் 1
- வன்னி இடப்பெயர்வு அவலம்/vanni display
Comments