தமிழ் ஈழத்தை சூறையாடிய - பிரிக் கூட்டணி நாடுகள் மற்றும் ஐ.நா மன்றம் - ஓர் பார்வை
G - 20 நாடுகளின் மாநாடு அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் நகரில் நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டில்...!
G - 20 நாடுகளின் அதிபர்கள் - நிதியமைச்சர்கள் கலந்து கொண்டு உரை ஆற்றினார்கள். இம்மாநாட்டின் தலைமை உரையை அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்த்தினார். G - 20 மாநாட்டின் நோக்கம் உலகின் பொருளாதார நெருக்கடி - மந்தத்தை போக்குவது .. பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதே ஆகும்.
G - 20 மாநாட்டிற்கு சில மாதங்களுக்கு முன்னதாக G - 8 நாடுகளின் மாநாடும் ( அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ்,ஜெர்மனி, இத்தாலி,ரசியா,ஜப்பான்,ஆஸ்திரேலியா உள்ளிட்டவை ) பிரிக் கூட்டணி மாநாடும் ( பிரேசில்,ரசியா,இந்தியா,சீனா உள்ளிட்ட ) மற்றும் உலகெங்குமுள்ள பல்வேறு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு அல்லது அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ளது.. இவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று..
1970 - களில் தோன்றிய உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முதலாளிய நாடுகள் திட்டமிட்டு உருவாக்கிய ஒன்று தான் தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல்.
உலகமயத்தை செயல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் சோசலிசம் பழங்கதையாகி விட்டது ; மார்க்சியம் தோற்று விட்டது. முதலாளியமே இறுதியானது வெல்லப்பட முடியாதது என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மேலும், சோசலிச உலகத்தை அழிப்பதிலும், அந்நாடுகளில் முதலாளியப் பொருளாதார அமைப்பாக மாற்றுவது முதலாளியக் கலாச்சாரத்தை கொண்டு வருவது என்பதில் தனிக் கவனம் செலுத்தி வந்தனர்.
அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உலகமயமாக்கலை நடைமுறைப்படுத்த உலக நாடுகளை - அரசுகளை இனம், நாடு, தேசம் கடந்து செயலாற்றத் தூண்டினர். இன்றைய உலகிற்கு தடையற்ற முதலீடு, தடையற்ற வர்த்தகம் இவையே சிறந்தது.இலாபகரமானது,தேவையானது என்றனர். இத்திட்டத்தை ஏற்காத நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை நிறுத்தினர் அல்லது குறைத்தனர். இராணுவ ரீதியான அச்சுறுத்தல் மூலம் தமது நோக்கத்தை ஏற்கச் செய்தனர். அதன் ஒரு பகுதியே ஆப்கான், ஈராக் மீதான ராணுவ நடவடிக்கைகள் எனலாம்..
உலகமயத்தை எதிர்க்கும் வகையில் உலகில் எந்த ஒரு நாடும் வலிமையாக இருக்கக் கூடாது என்று நினைத்தனர். கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாராம் அளவுக்கு அதிகமாக தூண்டிவிடப்பட்டது.
இன்று உலகமயத்தை முன் எடுத்த அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மீண்டெழவே முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நெருக்கடி உலகமயம் தொடங்கிய 20 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆண்டு வளர்ச்சிவிகிதம் கணிசமாக குறைந்துள்ளது. உற்பத்திப் பொருட்கள் மிகுந்து இருந்த போதிலும் சந்தையில் பொருட்களை வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி 40 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் பால் உற்பத்தியாளர்கள் பாலின் விலையை உயர்த்தக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 27 சென்ட் செலவு.. நடப்பில் ஒரு லிட்டர் பாலின் விலையே 23 சென்ட் தான். எனவே தான் பால் விலையை உயர்த்தக் கோரி பாலை தெருக்களில் ஊற்றியும், வயல் வெளிகளில் நிரப்பியும், போக்குவரத்து மிகுந்த இடங்களில் வாகனங்களில் பாலை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கியும் அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றனர். இது காய்கறி, பழங்கள், மற்ற தொழிற்சாலைகள் உற்பத்திப் பொருட்களிலும் தொடரவே செய்யும்.
டாலர் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. உலகெங்கும் வர்த்தகம் பெரும்பாலும் டாலர் மதிப்பில் நடந்து வருகின்றன...அதன் காரணமாக டாலர் ஐ முன்னிறுத்தி ஏற்றுமதி இறக்குமதி செய்த நாடுகள் அனைத்தும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன.. அமெரிக்க டாலரை விட சீனாவின் பண மதிப்பு உயர்ந்துள்ளது .. இது ஒருபுறம் இருக்க, டாலர் மதிப்பை நிலை நிறுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று உலக வங்கி இயக்குனர் தெரிவித்துள்ளார்.. அமெரிக்க அரசின் நலத் திட்டங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது நிலைமைக்குத் தகுந்தவாறு மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
உலக சமூதாயத்தில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. எண்ணற்ற சலுகைகள்,வேலைவாய்ப்புகள்,மானியங்கள் ரத்து செய்வது,அல்லது குறைப்பது காரணமாக பல்வேறு இடைநிலை வர்கங்கள் அழிவதை நோக்கி பொருளாதார சிக்கல் வலுவடைந்து செல்கிறது..இதன் மூலம் ஒரு வர்க்கக் கூர்மை அடைந்து வருவதாக அவதானிக்கலாம்.
சமூகத்தில் எழுந்து வரும் வர்க்க பகைமைகளை தணிக்கும் விதமாக அரசே வங்கிகளை ஏற்று நடத்துவது, தேவைப்பட்டால் பெரும் தொழிற் நிறுவனங்களை நடத்துவது எனும் நிலைக்கு அமெரிக்க அரசு தள்ளப்பட்டுள்ளது தற்செயல் நிகழ்வல்ல ...
மேலும், அந்நிய பொருட்களை புறக்கணியுங்கள் ..! நமது நாட்டு பொருட்களையே வாங்குங்கள் ..! வேலை வாய்ப்பில் அந்நியரை புறக்கணியுங்கள் எனச் சொல்லும் அளவிற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வந்துள்ளது ஒரு சாதாரண விடயமல்ல..!
அந்நிய நாட்டவரை வேலை வாய்ப்பில் புறக்கணிப்பது என்ற நோக்கில், விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை,சட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அல்லது நாட்டின் பாதுகாப்பு காரணமாக என்று அந்நிய நாட்டவரை வேலை வாய்ப்பில் புறக்கணிப்பது என்ற நோக்கில் தான் விசா வழங்குவதில் மிக கடுமையான கட்டுப்பாடுகளை, சட்டதிட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளனர்..
இந் நடவடிக்கைகள் உலகமயத்திற்கு எதிராக, நாட்டைக் காப்போம் ! தேசத்தைக் காப்போம் ! என்று முழங்கியவர்கள் கண்ணோட்டத்திற்கு ஏற்ப அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வந்துள்ளது இவர்களின் மீண்டு எழ முடியாத பொருளாதார சரிவின் உட்சம் என்றே கொள்ளலாம்..!
வளர்ச்சி அடைந்த நாடுகள் பொருளாதார நெருக்கடி காரணமாக அன்னியப் பொருட்களை புறக்கணியுங்கள் ! வேலை வாய்ப்பில் சொந்த நாட்டவருக்கே முன்னுரிமை ! என்பது வளரும் நாடுகளுக்கு எதிரான ஒன்று என இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ( BRIC) மாநாட்டில் முழங்கியது குறிப்பிடத்தக்கது.
G - 20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி வளரும் நாடுகளுக்கு வழங்கும் நிதி உதவியை குறைக்கக் கூடாது என அவரது உரையில் குறிப்பிட்டார். தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாதவன் அடுத்தவனை எப்படி காப்பாற்ற முடியும்? என்பது அறியாமல் பிரணாப், மன்மோகன் சிங் கோரிக்கைகள் G - 20 மாநாட்டில்..! நிதி உதவி அளிக்க வேண்டும் என்று ..!
எனவே வளர்ச்சி அடைந்த நாடுகள் மீண்டெழ முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில், வளரும் நாடுகளின் கோரிக்கையை பெயரளவுக்கு, கருத்தளவில் ஏற்றுக் கொள்ளும்; உதவி செய்யும் என அறியலாம்..
அதே நேரத்தில், பிரித்தானியக் கூட்டணி நாடுகள் நடப்பில், அமெரிக்க கூட்டணி நாடுகளை விட பொருளாதாரக் கட்டமைப்பிலும், கூடுதல் புதிய சந்தை வாய்ப்புகளை தேடிக் கொள்வதில் வலிமையாகவே உள்ளன.குறிப்பாக அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகம் உள்ள நாடாக சீனா விளங்குகிறது இங்கு கவனம் கொள்ளத்தக்கது.
பிரித்தானியக் கூட்டணி நாடுகள் புதிய சந்தை வாய்ப்புகளை பெற, கடந்த காலத்தில் அமெரிக்க கூட்டணி நாடுகளை விட கொடூரமாக நடந்து கொள்ள தயாராகி விட்டன. உதாரணமாக பிரித்தானியக் கூட்டணி நாடுகள் இந்தியா, சீனா தமிழ் ஈழ போராட்டத்தை அழித்து இலங்கை அரசிடம் கூடுதல் சந்தை வாய்ப்புகளை பெற்றது கண்கூடு.
ஐ.நா மன்றம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பரஸ்பரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக ஐ.நா வின் 2009 செப்டம்பர் ஆண்டுக் கூட்டத்தில் ஈரான் அதிபர் அகமது நிஜாதும், லிபிய அதிபர் காடாபியும் - கடந்த காலத்தில் அமெரிக்க கூட்டணி நாடுகளின் செயல்பாடு குறித்து பட்டியலிட்டனர். வீட்டோ அதிகாரத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 2007 - ம் ஆண்டு கூட்டத்தில் வெனிசுலா அதிபர் சாவேசும் இதே கண்ணோட்டத்தில் உரையாற்றியதும் நாம் நினைவில் கொள்ளத்தக்கது.
லத்தின் அமெரிக்க நாடுகளான, அர்ஜெண்டினா ,கியூபா, வெனிசுலா,சிலி போன்ற நாடுகளும் கூட பிரித்தானியக் கூட்டணி யை ஆதரிக்கின்றன..இதற்கு அமெரிக்க எதிர்ப்பை கடந்த காலத்தில் முன் நிறுத்தி வந்ததும், அதோடு மட்டுமில்லாது வர்த்தக நலன்களை முன்னிட்டும் தான் என்றால் மிகையான ஒன்றல்ல..
ஆகவே தான் ஈழப் படுகொலை குறித்த விவாதம் ஐ.நா வில் வந்த போது இலங்கை அரசை இந்தியா,சீனா,கியூபா ஆதரித்தனர். அது போலவே வெனிசுலா நிலையும், வெனிசுலா அதிபர் சாவேஸ் லிபியாவில் இலங்கை அதிபர் ராஜப்க்சே வை சந்தித்த போது பயங்கரவாத ஒழிப்பில் வெற்றி பெற்றமைக்கு பாராட்டு தெரிவித்ததை எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.
இடதுசார் சிந்தனையை ஏற்றுக் கொண்ட நாடுகளே தனது சுய நலனை முன்னிட்டு தவறான விசயத்துக்கு துணை போகும் சூழலில், இந்தியாவின் கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சுய நலனை மறந்து வளரும் நாடுகளின் நலனுக்காய் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.
ஆகவே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தேசத்தை, நாட்டைப் பாதுகாப்போம் என்ற நிலை எடுப்பது தவிர்க்க இயலாத ஒன்று. இக்கண்ணோட்டம் சமூகத்தில் மேலோங்கி வரும் வர்க்க போராட்ட உணர்வை திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டது, மற்றும் உலகெங்கும் உரிமைகளற்று ஒடுக்கு முறைக்கு ஆளாகி வரும் தேசிய இனவிடுதலை இயக்கங்களை ஆதரிப்பதாகவே இருக்கும். அது தனக்கு புதிதாக, கூடுதலான சந்தை வாய்ப்புகளை பெற்றுத் தருகின்ற நடவடிக்கையும் கூட. மேலும் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு புதிய தலைவலியாக குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவே உள்ளது.
உலகமயத்தை கொண்டு வர முன் நிபந்தனையாக ரசியாவை சிதைத்தது போல் இந்தியாவை, சீனாவை பல நாடுகளாக சிதைப்பது தான் தனது நலனுக்கு உகந்தது.
ஆகவே தான் ஈழ விடுதலையை ஆதரிப்பது, திபெத் விடுதலை, சீனாவின் உய்குர் இன மக்களின் விடுதலை, பர்மாவில் சனநாயகத்தை மீட்டெடுக்க ஆங்சாங் சூகி விடுதலைக்கு குரல் கொடுப்பது என அமெரிக்க கூட்டணி நாடுகளின் செயல்பாடு உள்ளது..
G - 20 நாடுகளின் மாநாடு அமெரிக்க கூட்டணி நாடுகளுக்கு ஒரு முன் நகர்தலை ஏற்படுத்தியுள்ளது..சந்தைப் பகிர்வில்..
என்றாலும் முதலாளிய சந்தைகள் கடும் நெருக்கடியில் இருந்து தப்புவது கடினமே.இதெல்லாம் கணக்கில் கொண்டால் முதலாளிய பொருள் உற்பத்தி இன்னும் சில பத்தாண்டுகளில் இதனினும் மோசமான நெருக்கடியில் சிக்குவது திண்ணம். வளர்ந்து வரும் வர்க்க முரண்பாடுகள் உலகின் போக்கை,சமுக மாற்றத்தை, சோசலிசத்தை துரிதப்படுத்தும் என நம்பலாம். இந்த இடது சாரி முயற்சிகளை திசை திருப்பவே அமெரிக்க கூட்டணி நாடுகளின் தேசிய உணர்வு அடிப்படையிலான அரசியல் நடவடிக்கைகள் இருக்கும் என்றே அவதானிக்கலாம்..
பால சுப்பிரமணியன்,
நன்றி ஈழதேசம்
Comments