ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றுமில்லா மக்களுக்கு ஓர் கணமும் - கிளியே வாழத் தகுதியுண்டோபாரதி இப்படிச் சாடியது யாரை?
இந்தக் கேள்வி நீண்ட காலமாகவே எனக்குள் பதுங்கியிருந்தது. சென்றவாரம்தான், அதிலும் குறிப்பாக அக்டோபர் 17ம் தேதி இரவு தான், இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்தது.
அந்த ஆவேசக் கவிஞன் மக்கள் என்று குறிப்பிட்டது நம்மையன்றி வேறெவரையும் அல்ல. சென்ற ஆண்டு அக்டோபரிலிருந்து இந்த ஆண்டு மே மாதம் வரை, இங்கிருந்து இருபத்தாறாவது மைலில் ஓய்வொழிச்சல் இல்லாமல் வெடிச் சத்தம் கேட்டதை, உலகே கவலையுடன் கவனித்தது. சொந்த நாட்டின் மக்களையே விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொன்ற இலங்கையை பல நாடுகள் கண்டித்தன. இந்தியாவும் நாமும் தான் அறிதுயிலில் ஆழ்ந்திருந்தோம். விண்ணிலிருந்து வீசப்பட்ட கொத்துக் குண்டுகளாலும், பல்குழல் பீரங்கிகளிலிருந்து சீறிப்பாய்ந்த குண்டுகளாலும், பாஸ்பரஸ் குண்டுகளாலும், ஏவுகணைகளாலும் தமிழினம் அழிக்கப்பட்டது.
வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டி அழிக்கப்பட்டது. அங்கே குண்டுகள் வெடித்த சத்தமும் நமக்குக் கேட்கவில்லை, கொன்று குவிக்கப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களின் மரண ஓலமும் கேட்கவில்லை. மச்சான் என்று நமீதா நம்மை அழைத்துவிட, அந்தப் புல்லரிப்பில் நமது நாட்கள் நகர்ந்த காலம் அது. கூப்பிடு தொலைவில் ஷெல்லடிப்பது பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கமுடியுமா? நமீதாவை மீறி வேறெதுவும் நம் காதில் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, காதுகளில் எம்.பி.3 மாட்டிக்கொண்டு திரிந்தது இளைய தலைமுறை. மே மாதம் குண்டுச் சத்தம் ஓய்ந்தமாதிரி தெரிந்தது. மரண ஓலம் ஓயவில்லை. 'எங்கள் தாய் மண்ணை எங்களுக்குக் கொடு' என்று கேட்ட கொடிய குற்றத்துக்காக, 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் விலங்குகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது தொப்புள்கொடி உறவுகளான நாம், வெட்கமேயில்லாமல் வெறிபிடித்தவர்களைப் போல் தீபாவளிக்கு வெடிவெடித்துக் கொண்டிருக்கிறோம்.
17ம் தேதி மாலை 6 மணியிலிருந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. இரவு 7 மணிக்குப் பிறகு, அதிரடியாக அதிகரிக்கத் தொடங்கிய வெடிச்சத்தம் அடங்கவேயில்லை. மேலும் மேலும் உச்சஸ்தாயிக்குப் போய்க்கொண்டே இருந்தது. எங்கள் வீட்டு மொட்டை மாடிக்குப் போய்ப் பார்க்கிறேன். எங்கள் தெருவே வெடித்துக் கொண்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என்று எல்லோர் கையிலும் ஏதாவதொரு வெடி. வெடிச் சத்தத்தில் தெருவே குலுங்குகிறது. படுக்கையறைக்குள் ஓடிப்போய் கதவைச் சாத்திக்கொண்டு காதைப் பொத்திக்கொண்டும், கதவைத் தகர்த்தபடி வெடிச்சத்தம் ஊடுருவ, தாங்கமுடியாத தலைவலி. எதைப் பற்றியும் கவலைப்படாமல், தொடர்ந்து 3 மணிநேரம் வெடித்துச் சிதறியது சென்னை. தீபாவளிக்கு முன்தினம் பட்டாசு குடோன் வெடித்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கருகிச் செத்த பள்ளிப்பட்டு, சென்னையிலிருந்து அதிக தூரமில்லை.
தீபாவளியன்று சென்னையில் மட்டுமே சுமார் 250 தீவிபத்து. குடியிருப்புப் பகுதிக்கான உச்ச ஒலி வரம்பான 55 டெசிபலையும் மீறி, சென்னையின் பல பகுதிகளில் 85 டெசிபல், 87 டெசிபல் என்று எகிறியது வெடிச்சத்தம். இதெல்லாம் மாநகர் சென்னை தீபாவளி கொண்டாடிய லட்சணம். தீபாவளிக்காக வெடிக்கப்பட்ட வெடிகளால், சென்னை மாநகராட்சி 1000 டன் குப்பையை கூடுதலாக அள்ளியது என்பது தமிழனென்று சொல்வதற்கும் தலை நிமிர்ந்து நிற்பதற்குமான தகுதிகளாகத் தெரியவில்லை. நாம் குப்பை கொட்டவும், மாநகராட்சி குப்பை அள்ளவுமே லாயக்கு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. புதிதாகத் தெரியவந்திருப்பது ஒன்றே ஒன்றுதான்... ஈழத்தில் மனிதர்கள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர், தமிழகத்திலோ மிருகங்கள் சுதந்திரமாக நடமாடவிடப்பட்டுள்ளன.
அந்த மனிதர்கள் பற்றி இந்த மிருகங்கள் ஏன் கவலைப்படவில்லை என்பதெல்லாம் அர்த்தமற்ற கேள்வி. சுற்றியிருப்பவர்களைப் பற்றியோ சுற்றுச் சூழலைப் பற்றியோ கவலைப் படாமல் காட்டுமிராண்டிகளைப் போல் வெடிவெடிக்கும் இந்தத் தீபாவளி, குறைந்தபட்சம் தமிழனின் பண்டிகையா என்றால் அதுவும் இல்லை. வட்டிக்கடை நடத்துபவர்கள் புதுக் கணக்கு எழுதத் தொடங்கும் நாள் அது. லாபக் கணக்கு ஆரம்பிப்பதை வாணவேடிக்கையுடன் கொண்டாடுவதற்கு, வர்த்தக அடிப்படையிலான ஒரு காரணமாவது இருக்கிறது அவர்களுக்கு! நமக்கு? மனைவியின் தாலியை அடகு வைத்துவிட்டு, வட்டிக்காசு போக கிடைத்த பணத்தில் டாஸ்மாக்குக்குப் போய் சரக்கு அடிப்பதைக் கொண்டாடுகிறோமோ! உழவர் திருநாளாம் பொங்கலை மறந்துவிட்டு, வட்டிக்கடைக்காரர்கள் கணக்குத் தொடங்கும் தீபாவளியை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். பேச்சுக்குப் பேச்சு 'தமிழ்தான் எங்கள் மூச்சு' என்று சவுண்ட் கொடுக்கும் தமிழக அரசு, தீபாவளிக்கு போனஸ் கொடுத்து, தமிழினத்தைக் காவு கொடுக்கிறது.
போராடிப் போராடி வாங்கிய போனஸில் பட்டாசு வெடிக்கிறது தமிழ்நாடு. ஊடுருவியிருப்பது தீபாவளி மட்டுமல்ல. ஜர்தா பீடா, பான்பராக், பான்மசாலா, குட்கா, ஹன்ச் என்று சகலத்தையும் கடை விரிக்க அனுமதித்துவிட்டுத்தான் செம்மொழி மாநாடு நடத்தப் போகிறோம். தமிழ் வாழ்க! இந்த இடத்தில் ஓர் உண்மையை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது. சில மாதங்களுக்குமுன், கலைஞர் குடியிருக்கும் கோபாலபுரம் அருகேயுள்ள நட்சத்திர ஹோட்டலில், ஒரு திரைப்படத்துக்கான கதை விவாதம். மதிய உணவுக்குப் பின், தயாரிப்பாளர் வெற்றிலைப் பாக்கு போட விரும்ப, எதிரே தெரிந்த வெற்றிலைப் பாக்குக் கடைக்கு நானும் அவரும் சாலையைக் கடந்து சென்றோம். அந்தக் கடை, கோபாலபுரத்தின் நுழைவாயிலிலேயே இருக்கிறது. கடைக்காரரிடம் வெற்றிலைப் பாக்கு கேட்க, 'அதெல்லாம் இல்லை, ஜர்தா இருக்குது' என்றார்.
அப்போதுதான் கவனித்தோம். அது வெற்றிலைப் பாக்குக் கடை தான். ஆனால், தமிழ்நாட்டு வெற்றிலை இல்லை. ஜர்தா பீடா, பான்பராக், குட்கா என்று சகலமும் இருந்தது. இது எங்க ஏரியா, உள்ளே வராதே என்று சொல்கிற தைரியம் தமிழனுக்கு இல்லை. வெற்றிலை என்பது தமிழன் காலம்காலமாக பயன்படுத்தும் மூலிகை. சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஒரு சேவையாகவே ஆரோக்கியா மருத்துவ மையத்தை நடத்தும் மருத்துவர் சிவராமன், மதிய உணவுக்குப் பிறகு ஒரே ஒரு வெற்றிலையை மட்டும் சாப்பிடச் சொல்லியிருந்த நாட்களில் நானும் வெற்றிலையைத் தேடி அலைந்ததுண்டு. அது ஜீரணத்துக்காக. தாம்பத்தியத்துக்குக் கூட வெற்றிலை உகந்தது என்பதை நம் முன்னோர் உணர்ந்திருந்தனர். அந்த வெற்றிலைக்கு விடை கொடுத்துவிட்டு தமிழக முதல்வரின் ஏரியாவிலேயே ஜர்தா பீடா விற்க முடிகிறது. இந்திய ஒருமைப்பாடு ஜிந்தாபாத்! இன்னொருபுறம், எந்த நாகரிக சமூகத்தையும் முகஞ்சுளிக்க வைக்கும் ஹோலிப் பண்டிகை தமிழக நகர்ப்புறங்களில் வேர்விடுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மீது சாயம் பூசும் சந்தர்ப்பத்துக்கென்றே காத்திருக்கும் பொறுக்கிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. சாயம் பூசுவது மட்டுமே அவர்களது நோக்கமல்ல என்பதை அரசும் அறிந்திருக்கிறது, காவல்துறையும் அறிந்திருக்கிறது. அறிந்து என்ன பயன்? ஈழத்தில் நடப்பது இனப்படுகொலைதான் என்பதை அறியாமலா இருந்தோம்? நாம் இப்படியிருக்கிற வரை, இலவச வேஷ்டி சேலையும், இலவச கலர் டி.வி.யும், இலவச நிரோத்தும் தருகிறவர்கள்தான் நமக்குத் தலைவர்களாய் இருப்பார்கள். தேர்தலுக்குத் தேர்தல் வோட்டுக்கு ரேட் அதிகரிக்கும். எவர் அதிக விலை கொடுத்து நம்மை ஏலத்தில் எடுக்கிறாரோ, அவரே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நமது எஜமானர். நம்முடைய தகுதிக்கேற்ற தலைவர்களைத் தானே நாம் பெறமுடியும்! டன் கணக்கில் வெடிகுண்டுகளைச் சுமந்தபடி நெல்லியடி ராணுவ முகாமுக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறி அந்த மெகா சைஸ் முகாமை நிர்மூலமாக்கிய மில்லர் என்கிற மாவீரனுக்கு, சிலை வைத்தவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல.
அந்த ராணுவமுகாமிலிருந்த சிங்கள மிருகங்களால் நொடிக்கு நொடி அவதிக்குள்ளான அப்பாவி மக்கள் வைத்தார்கள் அந்தச் சிலையை. புறநானூற்றை மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டு, தீபாவளிக்குப் பட்டாசு வெடித்துவிட்டு, நான்கே நாளில் முள்வேலி முகாம் தமிழர்களை முதல்வர் விடுவித்துவிட்டதாக மனசாட்சிக்கு விரோதமாக போஸ்டர் ஒட்டிவிட்டு, தமிழினமே அழிந்துவிட்டாலும் செம்மொழி மாநாடுகளால் தமிழை வளர்த்துவிட முடியும் என்று வெள்ளந்தியாக நம்பும் நமக்கு நாடு சிலை வைக்கும் என்று நினைக்கிறீர்களா? எப்படியிருந்த இனம் இப்படி ஆகிவிட்டதே என்கிற தார்மீகக் கோபம்தான், மாக்கள் என்று நம்மை பாரதி அழைக்கக் காரணம். அவன் சொல்வதை நிரூபிக்கத் தான் முயல்கிறோமேயன்றி, திருந்தும் உத்தேசம் நமக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சாவு ஊர்வலங்களின்போது, பிணம் வருகிறது என்று உணர்த்துவதற்காக பட்டாசு வெடிக்கிறோம். அரசியல் பிரமுகர்கள் வந்தால், தலைவர் வருகிறார் என்று தெரிவிப்பதற்காக பட்டாசு வெடிக்கிறோம். பிணங்களுக்கும் பட்டாசு, நம்மை நடைப்பிணமாக்குவோருக்கும் பட்டாசு. முண்டாசுக் கவிஞன் கேட்கத் தேவையில்லை.... நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்... ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றுமில்லாத நமக்கு, வாழும் தகுதி இருக்கிறதா?
-புகழேந்தி தங்கராஜ்
23.10.09ல் வெளிவந்த 'தமிழக அரசியல்' வார இதழில் எழுதிய கட்டுரை
Comments