இதன் உண்மைத் தன்மை குறித்து சரியான தகவல்கள் இல்லை, புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் கே.பி, பாலகுமாரன் உட்பட, சிலரின் பெயர்கள், அரச புலனாய்வுப் பிரிவினராலேயே கசிய விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர், கோத்தபாய ராஜபக்ச, வெளிநாட்டு அமைச்சர் றோகித போகொல்லாகம போன்றோரின் அமெரிக்க விஜயத்தை அடுத்தே இத்தகவல்கள் வெளி வருகின்றது. செப்டம்பர் 21 ஆம் திகதியன்று, அமெரிக்க இராஐங்க திணைக்களம், போர்க் குற்றம் தொடர்பான விரிவான அறிக்கையயான்றினை காங்கிரஸ் சபைக்கு சமர்பிக்க விருந்ததாகவும் அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில், இவ் விருவரினதும் விஜயம் திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக, மேற்குலகைச் சாடி வந்த சிறீலங்கா அரசு, திடீரென்று அமெரிக்காவோடு உறவுப்பாலம் அமைக்க முனைவதில், மனித உரிமை மீறல் குற்றசாட்டு அறிக்கையும், ஜி.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையும் பெரும்பங்கு வகிப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். நாடு கடந்த அரசு உருவாக்கத்தின் முதன்மைச் செயற்பாட்டாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களை கைது செய்து, அவரின் பணிகளை முடக்க வேன்டுமென்கின்ற வேண்டுகோளையும், அமெரிக்க அரசிற்கு கோத்தபாயா விடுத்திருக்கலாம். அதாவது பெளத்த சிங்களப் பேரினவாதமானது, தமது நகர்வுகளில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது என்பதனை தமிழ் மக்கள் உணருகின்றார்கள்.
விடுதலைப் புலிகளுக்குச் சட்டபூர்வமான அந்தஸ்தினை பெற்றுத்தர, சில மனித உரிமை அமைப்புக்கள் முற்படுவதாக, அமெரிக்க அரசு தெரிவிக்கும் கருத்துக்களின் பின்னணியில் கோத்தபாய கூட்டத்தின் இராஜதந்திர நகர்வுகள் அம்பலமாகிறது. முகாம்களிலும், சிறைக்கூடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை என்ன செய்வது என்பது குறித்து ஆராயவும், அமெரிக்காவின் அறிவுரைகளைப் பெறவும், கோத்தபாயாவின் அதிரடி விஜயம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே மலேசியாவில் கே.பியின் கைது அரங்கேறிய வேளையில், கொழும்பில் தரித்து நின்ற மூன்று அமெரிக்க முக்கியஸ்தர்கள் கோத்தாபாய ‡ போகொல்லாகம கூட்டு வாசிங்டனில் தேசிய நல்லிணக்க(?) சூழ்ச்சியில் ஈடுபட்ட போது கொழும்பில் இருந்தார்களென்கிற தகவலும் உண்டு.
இத்தகைய ‘நல்லிணக்க' முயற்சியால், அமெரிக்காவிற்கு என்ன இலாபம் என்ற கேள்வியும் எழாமலில்லை. அதாவது இந்திய ‡ சீனா ஆதிக்கம் சிறீலங்காவில் விரிவடைவதை, அமெரிக்க எகாதிபத்தியத்தினால் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. ஆசியாவில் சீனா மேலாதிக்க வளர்சியை தணிப்பதற்கோ அல்லது அதனை முறியடிப்பதற்கோ, இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பங்கினை அமெரிக்கா ஓரளவிற்கு அனுமதிக்கும்.
அதேவேளை இந்தியாவுடன் எட்டப்படும் ஆசியா குறித்த உடன்பாடுகளிலும், தனது ஓருலக மேலாண்மைப் பண்பினை உதறிவிட்டு சமபாங்காளி என்கிற அந்தஸ்தினை அமெரிக்கா வழங்காது. ஆகவே விடுதலைப் புலிகளின் இராணுவ, நிர்வாகக் கட்டமைப்பினை அழிப்பதற்கு பேருதவி புரிந்த இந்திய‡சீனா பிராந்திய வல்லாதிக்கங்கள், தமது இருப்பினை தொடர்ந்து சிறீலங்காவில் பலப்படுத்தி கொள்ள அனுமதிக்கக் கூடாதென்பதே அமெரிக்காவில் தற்போதைய நிலைப்பாடாக இருக்கலாம்.
20 பில்லியன் டொலர் முதலிட்டில், பிராந்திய அபிவிருத்தி வங்கி ஒன்றினை நிறுவிட, பிரேசில் தலைமையில், தென் அமெரிக்க நாடுகள் முயற்சிப்பதாக வரும் செய்திகளும் அமெரிக்ககா அச்சுறுத்துகின்றது. அத்தோடு ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகள் பிரேசிலோடு இணைந்து, ஐரோப்பிய ஒன்றியம் போன்றதொரு அமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளன. அதற்கான மாநாடொன்றும் நடாத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆபிரிக்கா, இலத்தீன், அமெரிக்க பிராந்தியங்கள் தமது கையை விட்டு நழுவிச் சென்று விடலானமென்று அமெரிக்க கவலை கொள்வதில் நியாயமான காரணிகள் உண்டு. அமெரிக்க எதிர்ப்பரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ரஷ்யா, சீனா, ஈரான் அணிகளை உடைக்கும் காய்நகர்த்தலில் ஈடுபட்ட அமெரிக்கா, ரஷ்யாவைச் சுற்றி அமைக்கவிருந்த ஏவுகணைப் பொறி முறைத் திட்டத்தை ஒத்திவைத்ததன் ஊடாக,
அவற்றிடையே பிளவினை உருவாக்கி விட்டது. ஐ.நா .வின் 64வது கூட்டத்தெடரில், ரஷ்யா - ஈரான் உறவு சீர் குலைக்கப்பட்டதிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம். இதில், ஜோர்ஜியா, கொசோவோ உருவாக்கிய நவீன அமெரிக்க ‡ ரஷ்ய பனிப்போர்களும், உருகி மறைந்து விட்டன.ஏனெனில் சந்தை ஆதிக்கப் போட்டியில், முரண்நிலைகளை விட சமரசங்களே, இப் புதிய உலக மாற்றத்திற்கு அவசியமாகிறது. நாட்டின் பாதுகாப்போடு, வர்த்தக நலன்களும் முக்கியத்துவம் பெறுவதால், அமெரிக்க விட்டுக் கொடுப்புக்களை ஏற்று உடன்பட வேண்டிய தேவை ரஷ்யாவிற்கு இருக்கிறது. இந்நிலையில், தமது அடுத்த இராஜதந்திர நகர்வுகளுக்கான களமாக, ஆசியாவை அமெரிக்க தேர்ந்தெடுக்க முனைவதை இப்போது காணலாம்.
அதேவேளை இந்தியாவின் நேரடிப் பங்களிப்பில்லாத இன்னுமொரு பாதையைத் திறப்பதற்கு, சிங்களம் முயற்சிப்பதையே, அமெரிக்க விஐயம் புலப்படுகிறது. அதாவது சர்வதேச அரசியல் காய்நகர்த்தல்களை உன்னிப்பாக அவதானிக்கும் சிங்களம், அமெரிக்க எதிர்ப்பரசியல் கூட்டினை பூரணமாக நம்பினால், பொருளாதாரச் சீரழிவுச் சகதிக்குள், நிரந்தரமாக வீழ்தப்பட்டு விடுமோவென்று கணிப்பிடுகிறது. ஆனாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் விவகாரத்தை, சட்டபூர்வமாக எவ்வாறு கையாளலாமென்பதை, காந்தீய இந்தியாவிடம் கலந்தாலோசிக்காமல், அமெரிக்காவிடம் சென்று விவாதிப்பதுதான் பல சந்தேகங்களை உருவாக்குகிறது.
இந்தியாவின் அறிவுரைப்படியே, கோத்தபாய அமெரிக்கா சென்றதாகச் சிலர் விளக்க மளிக்க முன்வரலாம். அதாவது இந்தியாவை மீறி சிறீலங்காவில் எதுவுமே அசையாது என்கிற கருத்தினை வலுப்படுத்த இவ்வாறு கூறலாம். ஆனாலும் ஜே.வி.பி. இயக்கமானது, ஆயுதக் கிளர்ச்சியைக் கைவிட்டு, நாடாளுமன்ற ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதற்கு, அமெரிக்க அறிவுரையோடு சிறீலங்கா அரசு முன்னெடுத்த அரசியல் நகர்வுகளை மீட்டிப் பார்க்க வேண்டிய நேரமிது. ஜே.வி.பி. போன்று விடுதலை புலிகளையும் கையாள சிங்களம் முயற்சிக்கலாம்.
- இதயச்சந்திரன்
Comments