இடம்பெயர்ந்த மக்களை வைத்து ஆடப்படும் அரசியல் விளையாட்டு
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் மக்கள் தான் இப்போது அரசியல் விளையாட்டுக் களத்தில் பகடைக் காய்களாகியுள்ளனர். இலங்கை அரசின் மீது அதிருப்தி கொண்டிருக்கின்ற சர்வதேச சமூகம்- அதனை தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான கருவியாகவும், சலுகைகளை வழங்குவதற்கான திறவுகோலாகவும் இடம்பெயர்ந்த மக்களைப் பயன்படுத்தி வருகிறது.
இன்னொரு புறத்தில் இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை வைத்து அரசியல் நடத்தப் புதிது புதிதாகப் பலர் கிளம்பி வருகின்றனர். முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக ஐதேகவும், ஜேவிபியும் இப்போது வலுவாகக் குரல் கொடுக்கின்றன. அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுப்பெற்று வருகிறது. ஆனால் அரசாங்கமோ அதற்குத் தயாராக இல்லை. அதேவேளை தற்போதைய நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தி வருவதாகப் பிரசார யுத்தம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
அண்மையில்; சுமார் பத்தாயிரம் பேரை விடுவித்ததாக அரசாங்கம் பெரியளவில் பிரசாரங்களை மேற்கொண்டது. இவர்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 563 பேர் மட்டுமே இதுவரையில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எஞ்சியோர் இன்னமும் வவுனியா முகாம்களுக்குள் தான் அடைபட்டுக் கிடக்கின்றனர்.படிப்படியாகவே அவர்கள் விடுவிக்கப்படுவர் என்கிறது அரசாங்கம்.அப்படியானால் எதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறாயிரத்;துகும் அதிகமானோரை விடுவித்ததாக அரசாங்கம் கூறியது? அதற்கென்றொரு விழாவை நடத்தியது?
முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டவர்களாவது சுதந்திரமாக அவர்களின் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கபப்பட்டிருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது.ஐகதடியில் அவர்கள் மீளவும் முகாமுக்குள் தான் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.இவர்கள் விசாணைகள் முடிந்த பின்னர் கட்டம் கட்டமாகவே விடுவிக்கப்படவுள்ளனராம்.பத்தாயிரம் பேரை முகாம்களில் இருந்து விடுவித்ததாக- கடந்த வாரம் அரசாங்கம் செய்தது வெறும் பிரசாரமே. சர்வதேச, உள்ளுர் அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காகவே இந்தப் பிரசாரம்.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அங்குள்ள முகாம்களுக்கு மாற்றும் நடவடிக்கையே இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.அதுபோலவே வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தோரை யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்றப் போகிறது அரசாங்கம். முகாம்களை மாற்றும் இந்த நடவடிக்கையையே- அகதிகளை விடுவிப்பதாகக் கூறி நாடகமாடுகிறது அரசாங்கம்.
இதேபோன்று தான் யாழ்.மாநகரசபைத் தேர்தல் நடைபெறுவதற்குச் சில தினங்கள் முன்னதாக- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52 ஆயிரத்துக்கும் அதிகமானோரை விடுவிக்கவுள்ளதாகவும், அவர்களைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ தொலைபேசி மூலம் கேட்டிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பத்திரிகைகளுக்கு தகவல் அளித்திருந்தார்.
ஆனால் அப்போது யாருமே விடுவிக்கப்படவில்லை. இப்படி அரசாங்கத் தரப்பு அகதிகளின் பிரச்சினையை சிறந்த அரசியல் விளையாட்டாகப் பயன்படுத்த வருகிறது. போரில் இவர்கள் எப்படிப் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டார்களோ அதைவிட மோசமான அரசியல் விளையாட்டுக்குள் இப்போது சிக்கிப் போயுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜேவிபி தலைவர்களுக்கும் இடம்பெயர்ந்த மக்கள் மீது பெரியளவில் அனுதாபம் தோன்றியிருப்பதற்குக் காரணம் மிக விரைவாக ஜனாதிபதித் தேர்தல் வரப் போவது தான்.
வன்னி முகாம்களுக்குள் சுமார் 3இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளைக் கவர்வதற்கே இந்த நடவடிக்கை. அதேவேளை இடம்பெயர்ந்த மக்களின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க கேட்கும் கேள்விகளில் நியாயம் இல்லை என்று ஒதுக்கி விடவும் முடியாது.பிரபாகனுடன் சேர்ந்து நின்ற தயா மாஸ்ரர், ஜோர்ஜ் போன்றோரை விடுவிக்க முடியுமென்றால்- அப்பாவி மக்களை மட்டும் எதற்காக அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்ற அவரது கேள்வி நியாயம் நிறைந்ததே.அத்துடன் முகாம்களில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பத்தாயிரத்துக்கும் அதிகமானேரின் கதி என்ன என்ற அவரது கேள்விக்கும் அரச தரப்பில் இருந்து சரியான பதில் இல்லை.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதாக, மீளக்குடியமர்த்துவதாகக் கூறிக் கொண்டாலும் அதை உடனடியாக நடைமுறைப்படுத்தும் எண்ணம் அதற்குக் கிடையாது. வன்னியில் படைத்தளங்களை நிறுவிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதற்கு இருக்கிறது. அதற்குப் பின்னரே மீள்குடியமர்வை மேற்கொள்ளும்.இதை ஜெனரல சர்த்பொன்சேகா உள்ளிடட பாதுகாப்புதரப்பைச்சேர்நத அnஅதிகாரிகள தெளிவுhக் கூறிவிடடார்கள்.இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதில்லை என்பது எண்ணம் அரசின் உறுதியானதும் மாற்றத்துக்குட்படாததுமான முடிவாக இருக்கிறது.
அதேவேளை உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் இது முக்கியமானதொரு அரசியல் விளையாட்டாக மாற்றப்பட்டிருப்பதால் தான்- வவுனியா கூண்டுக்குள் இருந்து யாழ்ப்பாணக் கூண்டுக்குள் மாற்றும் புதிய விளையாட்டைத் தொடங்கியிருக்கிறது அரசு. இந்தக் கூண்டு மாற்றங்கள் வெறும் அரசியல் நாடகமே தவிர மக்களுக்கான விடுதலையாக அமையாது.மழைக்காலத்தில் ஏற்படப் போகின்ற நெருக்கடியைச் சமாளிப்பதற்கான திட்டமாகவும் இதைக் கருதலாம்.இந்தக் காலகட்டத்தில் இடம் பெயர்ந்த மக்களின் சார்பாக உலகமே குரல் கொடுக்கிறது.இதை வைத்துத் தான் அரசியல் விளையாட்டில் பல தரப்பினரும் இறங்கியுள்ளனர்.
ஆனால் இந்த அரசியல் விளையாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் வெறும் பகடைக்காய்களே தவிர- இதனால் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கின்ற அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
சத்திரியன்
Comments