மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளிகள் சிந்தும் வியர்வையும், குருதியும் இலங்கைத் தேயிலையாக உலகில் வலம் வருகின்றது. இன ஒடுக்குதலுக்கு உள்ளாகும் அம்மக்களின் வாழ்வில் விடியல் ஏற்படவில்லை.
முள்ளிவாய்க்காலில் ஓடிய தமிழ் தேசிய இனத்தின் குருதி, பேரினவாதத்தின் ஆடைகளில் படிந்துள்ளது. மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்த கரங்கள் ஏற்றுமதிசெய்யும் ஆடைகளில், விடுதலைக்காகப் போராடும் மக்களின் இரத்த வாடை வீசுகிறது. இனவெறியின் விளைநிலமாம், சிங்கள தேசத்தின், உற்பத்தி உறவுகளை, அறுத்தெறிய உலகமக்கள் முன்வரவேண்டும். இயன் போத்தாவின், நிறவெறி கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் போராடிய மக்களோடு, உலக மக்களும் ஓரணியில் இணைந்திருந்தார்கள்.வணிக நிலையங்களில், நிறவெறி அரசின் உற்பத்திப் பொருட்கள் பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டன. அதனை உள்நாட்டு போராட்ட ஆதரவுச் சக்திகள் முன்னெடுத்தார்கள்.
தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், தென்னாபிரிக்க விடுதலைக்கான போராட்ட கருத்தாதரவுக் குழுமங்கள் யாவும் இது குறித்த விழிப்புணர்வினை கறுப்பின மக்களோடு இணைந்து மக்களுக்கு ஏற்படுத்தினார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையோடு, பாலஸ்தீன மக்கள் மீது, சியோனிச இஸ்ரேல் ஆட்சியாளர்கள் இழைத்த கொடூரங்களுக்கு எதிராகவும், பல புறக்கணிப்புப் போராட்டங்கள் மேற்குலகில் இடம்பெற்றன. அந்த வரலாற்றுப் படிப்பினைகளை ஈழத் தமிழினமும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பொதுத் தேர்தலை எதிர்நோக்கும் பிரித்தானிய அரசியல்வாதிகள், வாக்கு வேட்டைக்காக எமை நோக்கி வரும் காலமிது. வெறும் மனிதாபிமானப் பிரச்சனையாக மட்டுமே, தமிழினத்தின் அரசியல் போராட்டத்தைப் பார்க்க இவர்கள் முற்படுவார்கள்.
இவர்களின் தேர்தல் நலன் சார்ந்த தேவையினை, விரிவான தளத்திற்கு இழுத்துச் செல்லவேண்டிய கடப்பாடு, அவர்களோடு இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டும். அதற்கும் அப்பால், மக்களோடு நேரடியான உறவினை ஏற்படுத்தும் அமைப்புக்கள் பல உண்டு. மக்கள் ஜனநாயகத்தின் உண்மையான பிரதிநிதித்துவம், இச்சக்திகளாலும் நிரப்பப்பட்டுள்ளது.உதாரணமாக பிரித்தானிய தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில், தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் வெளிப்படுத்தி ஈழமக்களின் போராட்ட ஆதரவு நிலைப்பாடு, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தால் முன் வைக்கப்படும் நிபந்தனைகளில், தொழிலாளர் நலன் குறித்த விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதாவது மனிதஉரிமை, சீரிய ஆட்சி முறைமை, அபிவிருத்தி என்பவற்றோடு தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரமும், ஐரோப்பிய ஒன்றிய நியமங்களில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய சில்லறை வர்த்தக சம்மேளனத்தோடு, இந்த தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் அனேகமானோர், ஏதாவதொரு தொழிற்சங்கத்தில் நிச்சயமாக உறுப்பினர்களாக இருப்பார்கள்.ஆகவே தொழிற்சங்கங்கள் ஊடாக பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், இப்பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் அங்கம் வகிக்கும், சில்லறை வர்த்தக சம்மேளனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டால், முதலீடுகளும், உள்நாட்டு வர்த்தகமும் பாதிக்கப்படும் என்கிற தமது நலன் சார்ந்த நியாயப்பாட்டினையே, அரசு முன் இவர்கள் வைப்பார்கள்.
இந்த வர்த்தகர்கள் மூலம், அரசிற்குக் கிடைக்கும் விற்பனைவரியை இழக்க நேரிடலாமென்று ஆட்சியாளர்களும் கவலைகொள்வார்கள். ஒப்பீட்டளவில் இது மிகச் சிறிய அளவுதான். ஆனாலும் சிறீலங்கா அரசின் 43 பில்லியன் தேசியமொத்த வருமானத்தைப் பொறுத்தவரை, ஆடை ஏற்றுமதியால் பெறப்படும் 5 பில்லியன் டொலர் வருமானம் பெரிய தொகைதான்.2005ஆம் ஆண்டு, “சுனாமிப் பேரழிவு போட்ட பிச்சைதான் இந்த வரிச்சலுகை, ஆனாலும் ஆழிப்பேரழிவில் பாதிக்கப்பட்ட எந்தவொரு இடத்திலும், ஆடை உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை என்பது வேறு விடயம். உலகச் சந்தையில் காலணிப் பொருட்களை உற்பத்தி செய்யும் “நைக்’ (NIKE) நிறுவனமும், “மாஸ் ஹோல்டிங்’ என்கிற பன்னாட்டு கம்பனியும் இணைந்து, துல்கிரியாவில் ஆடை உற்பத்திக்கான பயிற்சி நிலையங்களை நிர்மாணிக்கப் போகின்றன.
அவுஸ்திரேலியப் பன்னாட்டுக் கொம்பனியான “பேர்ஸ்ராவ் ஹோல்டிங்’(perstaff holdinu) உள்நாட்டு முதலாளிகளோடு இணைந்து, ஆடை உற்பத்திக்கான “ஏற்றுமதி வர்த்தக இல்லம்’ ஒன்றினை நிறுவுகின்றது. இவையயல்லாம் தென்னிலங்கையிலேயே தமது வர்த்தக முதலீடுகளை விஸ்த்தரிக்கின்றன என்பதைப் புரிதல் வேண்டும். சிறீலங்காவின் தேசிய முதலாளிகள் நடாத்தும் “ரைஸ்டார் ஆடை ஏற்றுமதி’ வர்த்தக நிறுவனம், பிரித்தானியாவை மையமாகக்கொண்டு இயங்கும் “டெபனம்’ (Debenhams) என்கிற மேற்குலகக் கொம்பனிக்கு, 5 இலட்சம் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் அனுமதியைப் பெற்றுள்ளது. அதேவேளை, சிறீலங்கா முதலீட்டுச் சபையானது, உள்ளுர் முதலாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தம்மோடு இணைந்து முதலிட வருமாறு, புலம்பெயர்ந்த மக்களுக்கு அழைப்பும் விடுக்கிறது.
ஆனாலும் ஏற்கனவே சிறீலங்காவில் தமது முதலீடுகளை குவித்துள்ள மேற்குலக வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படும்வகையில், ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வருமாவென்று தெரியவில்லை.வியாபார உறவானது, மனிதாபிமானம், மனித உரிமை போன்ற அறம்சார்ந்த விடயங்களுக்கு அப்பாற்பட்ட விடயமென்பதுதான் உண்மையானது. இங்கு இன்னுமொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது வரிச்சலுகையால் வரும் வருமானத்தினை 45 சதவீதம், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களால் பெறப்படுகிறது. கிளிண்டன் – மொனிக்கா உறவு குறித்து, தனிநபர் விமர்சனங்களை முன்வைக்கும்,
தன் வாயால் தான் கெட்ட இரட்னசிறி விக்ரமநாயக்கா போன்ற தவளைகளால், அமெரிக்காவால் வழங்கப்படும் 1.5 பில்லியன் டொலர்களையும் சிறீலங்கா இழக்க நேரிடலாம். போர்க்குற்ற விசாரணை, மற்றும் வதைமுகாம் மக்களின் மீள் குடியேற்றத்தை முன் நிபந்தனையாக வைத்து வழங்கப்படும் வரிச் சலுகையை, ஏற்றுக்கொள்ளத் தேவையில்லையயன்று, தனது சுய கெளரவ முனைப்புடன் பேசும் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்களால் ஐரோப்பிய யூனியனும் அதிர்ச்சியடையலாம்.ஆகவே சிறீலங்காவிற்கும் மேற்குலகிற்குமிடையே உருவாகிவரும் முரண்பாடுகளை, புலம்பெயர் மக்கள் சரியாகக் கணித்துக்கொண்டால், அடுத்த நகர்வு பலமாக அமையும்.
-இதயச்சந்திரன்
Comments