இந்திய தேசமே! ஏன் எங்கள் வாழ்வை அழித்தாய்?


விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டு, அவர்களுடன் இறுதிவரை இருந்த காரணத்தால் மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமினுள் முடக்கப்படடுள்ள நிலையில் புலம் பெயர் தேசத்து மக்களின் அணையாத எழுச்சியானது சிறிலங்காவிற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

'விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள்' என்ற சிங்கள தேசத்தின் அறிவிப்புடன் பரஸ்பரம் நன்றிகள் தெரிவித்து மகிழ்ந்த இரு தேசங்களும் இலங்கைத் தீவில் தமிழர்கள் மவுனமாக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது புலம்பெயர் தமிழர்களை நோக்கி சதி வலை விரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

புலம்பெயர் தேச மக்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களும் அரசியல் நகர்வுகளும் சிங்கள தேசத்தின்மீது மேற்குலகின் அழுத்தங்களை அழுத்தங்களை அதிகரிக்கச் செய்து வருகின்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்ததன் மூலமும், விடுதலைப் புலிகளின் நிதி மூலங்களைத் தடுத்ததன் மூலமும் சிங்கள தேசத்தின் இன அழிப்பிற்குத் துணை நின்ற மேற்குலக நாடுகள், போருக்குப் பின்னரான சிறிலங்காவின் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளினாலும், தொடரும் தமிழினப் படுகொலைகளினாலும் அதிருப்தி கொண்டுள்ளன.

சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்திற்கு வேண்டிய அத்தனை வளங்களையும் அள்ளி வழங்கி ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த இந்தியா தற்போது யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்ட நிலையை அடைந்துள்ளது.

தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் தன் பிடிகள் தளர்ந்த நிலையில், இலங்கைத் தீவையாவது தனது கைக்குள் வைத்துக்கொண்டு, தெற்காசியப் பிராந்தியத்தின் பிதாமகனாகத் தன்னை நிலைநிறுத்த எண்ணிய இந்தியக் கனவுக்கு முடிவுரை எழுதும் காலம் வந்து விட்டது போன்றே தோன்றுகிறது. இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையை வைத்து இதுவரை நடாத்திவந்த இந்திய அரசியல் நாடகம் முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் முடிவுக்கு வந்தேயாகவேண்டிய நிலையை அடைந்துள்ளது.

தமிழகத்து மக்களுனான ஈழத் தமிழர்களது தொப்பிள்கொடி உறவினை இதுவரை இந்தியா தனது நலனுக்காகப் பாவித்த கொடுமைகளால் ஈழத் தமிழ் மக்கள் இழந்ததும் அழிந்ததும் அளவிட முடியாதது. இறுதியாக இந்தியாவின் முழு ஆதரவுடன் வன்னி மண்ணில் நடாத்தப்பட்ட தமிழின வேட்டைக்குப் பின்னர் ஈழத் தமிழர்கள் இந்தியாவுடனான தமது உறவு பற்றி மீளாய்வு செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் இந்த மனிதப் பேரவலத்திற்கு மேற்குலகம் கொருளாதாரத் தடை விதித்திருக்கும். நாங்கள் முஸ்லிம்களாக இருந்திருந்தால் இஸ்லாமிய நாடுகள் சிறிலங்காமீது ஜிகாத் அறிவித்திருக்கும். நாங்கள் இந்துக்களாக இருந்ததனால் இந்தியாவும் சேர்ந்தே எம்மைப் படுகொலை செய்தது. முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்திற்குப் பின்னர் இந்தியாவை மன்னிக்கும் மனநிலையை ஈழத் தமிழர்கள் இழந்துவிட்டார்கள்.

இந்தியாவின் உள்ளங்கையில் இருந்த நேபாளம் தற்போது சீனா பக்கம் முற்றாகவே சாய்ந்துவிட்டது. எண்பது வீதமான இந்துக்களைக் கொண்ட நேபாளம் சீனா பக்கம் சாய்ந்ததற்கு இந்தியாவின் முட்டாள்தனமான வெளிநாட்டுக் கொள்கைகளே காரணம். தற்போது சிறிலங்காவை ஆரத் தழுவுவதற்காக ஈழத்தமிழர்களைப் பலிக்கடா ஆக்கியதன் மூலம் இந்தியாவுடனான தமது உறவு பற்றி ஈழத் தமிழர்கள் மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இந்திய ராஜதந்திரத்திற்கு இந்தியாவின் இறுதி ஆதரவுத் தளமும் இப்போது நழுவத் தொடங்கிவிட்டது.

ஈழத் தமிழர்களது இந்த முடிவை மாற்றும் முயற்சியில் தற்போது இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழீழ ஆதரவுக் குரலோடு களத்தின் போராளிகள் போல் தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இந்தியாவுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்த தமிழகத்து சொற்சிலம்பர்கள் கூட, இந்தியாவுக்கான நியாயங்களை புலம்பெயர் தேசத்துத் தமிழாகளிடம் சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். தமிழீழ மக்கள் இந்தியாவை விட்டு விலகிச் சென்று எதையும் சாதிக்க முடியாது என்று ஆற்றல் மிக்க அறிவுரைகளைக் கொட்டித் தீர்க்கின்றனர்.

இந்தியாவால் உருவாக்கப்பட்ட வங்காளதேசம் இந்தியாவை சார்ந்து நிற்காததால் எதை இழந்தது?

சீனாவின் செல்லப்பிள்ளையாக மாறிய மீயான்மார் எதை இழந்தது?

சீனா பக்கம் முற்றாகச் சாய்ந்துவரும் நேபாளம் எதை இழந்தது?

ஈழத் தமிழர்கள் இந்தியா பக்கம் நின்று, இந்தியாவே கதி என்று நின்று உயிரை இழந்தார்கள், உடமையை இழந்தார்கள், மானத்தை இழந்தார்கள், நிம்மதியை இழந்தார்கள், வாழ்வையே இழந்துபோய் வதை முகாமில் வாடுகின்றனர்.
நாம் இழந்தது மட்டுமாக இந்தியத் துரோகம் நின்றுவிடப் பேவதில்லை என்பது தற்போதைய சாத்தான்கள் ஓதும் வேதத்திலிருந்து தெளிவாகின்றது. இத்தனை இழப்பிற்குப் பின்னரும், இத்தனை அழிவுகளுக்குப் பின்னரும் சிங்கள தேசம் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு, அதன் பின்னர் மேலதிகமாகப் பெறுவதற்கு முயற்சிக்கலாம் என்று புலம்பெயர் தமிழர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது. அதாவது, பிரச்சினைகள் எப்போதுமே தீரக்கூடாது. அது எப்போதும் நெருப்பாகக் கனன்றுகொண்டு இருந்தால் மட்டுமே அது இந்தியக் கனவுக்குச் சாத்தியமாக இருக்கும் என்பதே இலங்கை குறித்த இந்தியாவின் கொள்கை வகுப்பாக உள்ளது. சிங்களவருடன் தமிழர்கள் இணக்கமாகப் போனாலும் இந்தியக் கனவு சிதைந்துவிடும். இலங்கை இரண்டு நாடுகள் ஆக உடைந்தாலும் இந்தியக் கனவுக்கு ஆபத்தாகிவிடும். மொத்தத்தில் இலங்கைத்தீவு தொடர்ந்து எரியவேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்காக தனது சொந்தக் குடிகளான தமிழக மீனவர்களையே சிங்கள தேசத்திற்குப் பலி கொடுத்து வரும் நிலையில் ஈழத் தமிழர்களை இனியாவது வாழவிடும் என்பதெல்லாம் வெறும் கற்பனாவாதம் மட்டுமே. இலங்கைத் தீவில் உருவான இன முரண்பாடு கூர்மைப்படுத்தப்பட்டு துருவப்படுத்தப்பட்டதன் பின்னணியில் இந்தியாவே செயற்பட்டது. தரப்படுத்தலுக்கு எதிராகவும், திறமையின் அடிப்படையிலான வேலை வாய்ப்பிற்காகவும் போராட முற்பட்ட தமிழீழ இளைஞர்கள் கைகளில் போர் ஆயுதங்களையும் அதற்கான பயிற்சிகளையும் வழங்கி ஆயுத மோதலை உருவாக்கியது இந்தியாவே.

இந்திய தேசமே! ஏன் எங்கள் வாழ்வை அழித்தாய்?

- பாரிசிலிருந்து வெளிவரும் 'ஈழநாடு' -

Comments