காலத்தைத் தவறவிட்டால் கண்டவனும் தீர்வு சொல்வான்

சிறீலங்காவின் இன முரண் நிலைத் தீர்விற்கான அடிப்படையாக, 13வது திருத்தச் சட்டத்தினை முன்வைக்கலாமென்கிற ஆலோசனையை, ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கிறது.

இதேவிதமான அதிகாரப் பரவலாக்கல் தீர்வுத் திட்டத்தினையே, இந்தியாவும் முன்மொழிவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னாசியப் பிராந்திய இராஜதந்திர நகர்வுகளில், இந்தியாவுடன் ஒத்துப்போகும் தன்மையை, மேற்குலகம் கடைப்பிடிப்பதனை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர், 1960ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி, ஐ.நா சபை நிறைவேற்றிய 1514 இலக்கத் தீர்மானத்தில், "காலனிய நாடுகளுக்கும் மக்களுக்கும் சுதந்திரம் அளிப்பதற்கான பிரகடனம்' குறிப்பிடப்பட்டது. ஆனாலும் காலனிய ஆதிக்கத்தில் இருந்த நாடுகளுக்கான சுயநிர்ணய உரிமையையே இப் பிரகடனம் வெளிப்படுத்தியது. அதேவேளை அங்கு வாழும் பூர்வீக தேசிய இனங்களின் (Native Nation) பிரதேச உரிமையும், பிரிந்துசென்று அரசமைக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.

இதில் தேசிய ஐக்கியத்தையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் மறுதலிக்கச் செய்யப்படும் எந்தவொரு நகர்வுகளும் ஐ.நா. சாசனத்திற்கு முரணானது எனப் பிரகடனப்படுத்துகிறது. ஒரு தேசிய சமூகம், தான் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியல் வடிவத்தை நிர்ணயிக்கும் பிறப்புரிமையே "சுய நிர்ணய உரிமை என்று கொள்ளப்படுகிறது. வேறெந்த தேசிய சமுகமும் அதனைத் தீர்மானிக் சுயநிர்ணயம்(SELF DETERMINATION) என்கிற கருத்துருவம், 1776ம் ஆண்டு அமெரிக்க சுதந்திர பிரகடனம் மற்றும் 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் தோன்றியதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

"சுயநிர்ணய உரிமை' பற்றியதான மக்கள் விடுதலைக் கோட்பாட்டினை, முதன்முறையாக, மிகத் தெளிவான வரையறையுடன், சர்வதேச சமூகத்தின் முன் வைத்தவர் இரஷ்யப் புரட்சியாளர் விளாடிமீர். லெனின் ஆகும். 1915-1916 ம் ஆண்டுகளில் எழுதிய தனது "ஏகாதிபத்தியம்' என்கிற நூலில், இது குறித்த விரிவான விளக்கங்களை லெனின் முன்வைத்தார். ஏனைய நாடுகளில், சோசலிசப் புரட்சியை ஏற்றுமதி செய்வதற்காக, சோவியப் புரட்சியாளர்களால், "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை' என்ற கோட்பாடு, உயர்த்திப் பிடிக்கப்பட்டதாக, முதலாளித்துவ கோட்பாட்டு நம்பிக்கையாளர்கள் எதிர்வாதம் செய்வதையும் காணலாம். தத்துவார்த்த அடிப்படையில், உலக சமூகம் இரு கூறாகப் பிளவுபட்டவேளையில், மேற்குலகின் காலனியாதிக்கப் பிடியில் பல நாடுகள் சிக்குண்டு கிடந்தன.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான பனிப்போர் காலத்திலும், இம் மோதல் நீடித்தது. ஆனாலும் சுயநிர்ணய உரிமை என்பது, காலனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கு மட்டும் பொருந்தக்கூடிய விடயமென்று கூறிய முதலாளித்துவ சக்திகள், பூர்வீக தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் வெளியக சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை மூன்று முகாம்களாக பிளவுபட்ட உலக சமூகத்தில், தமக்குச் சார்பாக, தமது நலனிற்கு ஒத்துப்போகக்கூடிய தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கு இவர்கள் ஆதரவு வழங்கியதை நோக்கவேண்டும். சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்தபின்னர், ஓருலக நாயகனாக அமெரிக்க ஏகாதிபத்தியம் பரிணமித்து, சில நாடுகள் உருவாகுவதற்கு உதவி புரிந்தது.

அதாவது ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், தென் ஒசேசியா, அப்காசியா, கொசோவோ போன்றவை தோற்றம் பெற்றது, இதற்கு வலுச் சேர்க்கக்கூடிய சில உதாரணங்களாகும். ஆனாலும் தனித்தமிழீழம் நோக்கிய தேசிய விடுதலைப் போராட்டத்தில், மிகவும் வித்தியாசமான சக்திகளின், பிராந்திய அரசியல் சார்ந்த பார்வை பெரும்பங்கு வகிப்பதைக் காணலாம். மாறிவரும் உலக ஒழுங்கில், சீனாவின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியும், அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சியும், மேலும் பல சிக்கல்களை இங்கு உருவாக்கியுள்ளது. வல்லரசுகளின், பாதுகாப்பு மற்றும் சந்தைப் பொருளாதார ஆதிக்கப் போட்டியில், ஆசியக் கடல்பாதை மையத் தரிப்பிடமாக விளங்கும் சிறீலங்காவின் கேந்திர முக்கியத்துவம், தமிழ்தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இங்கு சகல முகாம்களின் கழுகுப் பார்வைகளும், சிறீலங்காவில் குவிவதால், சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது, பயங்கரவாதச் செயற்பாட்டின் வடிவமாக பார்க்கப்படுகிறது. தேசிய விடுதலைப் போராட்ட எழுச்சியின், உச்ச படிநிலையில் நின்ற தமிழீழ விடுதலைப்புலிகளை, "பயங்கரவாத முகாம்களுக்குள் முடக்கி, தமது நலன்களை உறுதிப்படுத்த, சகல வல்லரசாளர்களும் முன்னின்றார்கள். ஆயுதப் போராட்ட ஓய்வு நிலையை அடைந்தாலும், அவர்களின் அடிநாதமாக விளங்கிய "பிரிந்து செல்லும் வெளியக சுயநிர்ணய உரிமைப் கோட்பாட்டினை நிராகரிப்பதற்காக, அவர்கள் மீதான தடையை, வெறுப்புணர்வை இன்னமும் நீடிக்கிறார்கள்.

வெளியக சுயநிர்ணய உரிமையை ஆதரித்தால், எதிர்ப்பரசியல் நடாத்தும் சீனா, இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகளின் மோதல்களமாக சிறீலங்கா அமைந்துவிடுமென்கிற அச்சமே, ஐரோப்பிய ஒன்றியத்தையும் அமெரிக்காவையும் வாட்டுகிறது. இதேபோன்ற அச்சம் இந்தியாவிற்கும் உண்டு. ஆகவே ஐ.நாவின் உலக சட்டவரையறைக்கு உட்பட்ட உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையில், ஏதாவது தீர்வினை பேசிப்பெற்றுக்கொள்ளலாமென்பதே மேற்குலகின் நோக்கமாகவிருக்கிறது. இதில் சுயாட்சி, சமஷ்டி, கூட்டாட்சி போன்ற விடயங்களைத் தவிர்த்து, இந்தியப் பார்வையோடு அநுசரித்துப் போகக்கூடிய 13வது திருத்தச் சட்டத்தை, உள்ளக சுயநிர்ணய உரிமையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை, தமிழ்மக்கள் மீது திணிக்க மேற்குலகம் விரும்புகிறது.


புலம்பெயர் மக்களின் அழுத்தங்களும், ஆசியப் பிராந்தியம் பற்றியதான இவர்களின் நலன்களும், இவ்வகையானதொரு தீர்வை நோக்கிய பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இதில், தமது அரசியல் தீர்வுத் திட்டத்திற்கான தெரிவு எதுவென்பதை, மேற்குலகிற்குத் தெரியப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம், புலம்பெயர்ந்த ஈழத் தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ளதை உணரவேண்டும். தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கிற " நாடுகடந்த தமிழீழ அரசு' உருவாக்கிகளின் கோட்பாட்டில், "சுயநிர்ணயம்' என்பதற்கான தெளிவாக விளக்கம் முன்வைக்கப்படல் வேண்டும். மேற்குலகும், இந்தியாவும் இதனை "உள்ளக சுயநிர்ணயம்' என்கிற வகையில் தமக்கேற்றவாறு திரிபுபடுத்திப் பார்க்கும் வாய்ப்புமுண்டு.

"சுதந்திர இறைமையுள்ள தமிழீழம்' எமது சுயநிர்ணயத்தின் பிறப்புரிமை என்பதனை முன்வைத்தால், "கருத்துப் பிறழ்வு' நிகழக்கூடிய சாத்தியப்பாடுகள் நீக்கப்பட்டுவிடும். ஐ.நா.வின் சர்வதேச சட்ட திட்டத்திற்கு இசைவாக, "நாடு கடந்த அரசு' செயற்படுமென்கிற பார்வையினைக் கொண்டிருந்தால், அது உள்ளக சுயநிர்ணய உரிமையின் கீழ்மட்ட படிநிலையிலேயே இயங்க அனுமதிக்கப்படும். "இலங்கைத் தீவில், தமிழ் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு தேசத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறைமையுள்ள மத சார்பற்ற சோசலிச தமிழீழ அரசு அமைக்கப்படவேண்டும்' என்கிற, மே 14-1976, வட்டுக்கோட்டை பண்ணாகத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம், உலக நாடுகளின் பார்வைக்குச் செல்லவில்லை.

தனித் தமிழீழ அரசு அமைக்கும் முடிவினை எடுத்தவர்கள், அதற்கான முன்னெடுப்புக்கள் எதனையும் செய்யவில்லை. அவர்கள் எதிர்க்கட்சி தலைமைப் பதவி பெற்று, மாவட்ட அபிவிருத்திச் சபையோடு சங்கமமாகியதே வரலாறாகிவிட்டது. காலத்தைத் தவறவிட்டால்... மக்கள் ஆணையை, உயிர்ப்புள்ள இயங்கு தளமாக்கும் செயற்திறனையும் அத்தலைமை பெற்றிருக்கவில்லை. ஆனாலும், அரசியல் போராட்டத்தின் இன்னுமொரு பரிமாணமான ஆயுதப் போராட்டத்தில், 4 கோட்பாடுகள் சிங்கள அரசிடம் முன்வைக்கப்பட்டன. தமிழினத்தின் தனித்துவ தேசிய இனத்துவம், தாயகம், சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழ்பேசும் மக்களிற்கான பூரண குடியுரிமை என்கிற நான்கு கோட்பாடுகளும், 1985 யூலை திம்பு மாநாட்டில் தமிழர் தரப்பால் உலகிற்கு கூறப்பட்டவையாகும்.

ஆனாலும் ஒஸ்லோ கூட்டறிக்கையில், உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்பேசும் மக்களின் பூர்வீகத் தாயகத்தில், தீர்வு ஒன்றினை ஆராய்ந்து பார்ப்பதற்கான இணக்கம் காணப்பட்டது. எதனையும் ஆராய்ந்து பார்ப்பதற்கு தாம் தயார் என்பதைக் கூறிய விடுதலைப்புலிகள், உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாகக் கற்பிதம் கொள்ளமுடியாது."போரும் சமாதானமும்' என்கிற நூலில் திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்கள், இச்சர்ச்சை குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார். ஆகவே உள்ளக சுயநிர்ணய உரிமையை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டதால், அதனை அடிப்படையாகக்கொண்டு, அரசியல் தீர்வு நோக்கி நகர்வது, சரியானது என்கிற வாதம் தவறானது.

இவை தவிர, 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தமானது, திம்புக் கோட்பாட்டின் "சுயநிர்ணய உரிமை' யைத் தவிர்த்து ஏனையவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது என்பது போன்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில், இவ்வொப்பந்தப்படி, வட-கிழக்கு, தமிழர்களின் தாயகமென்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், தற்காலிக இணைப்பு என்கிற விவகாரம் எழுந்திருக்க நியாயமில்லை. சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டமானது, இவ்விணைப்பை, பிரிக்கக்கூடிய வலுக்கொண்டது என்பதை, இந்த ஒப்பந்தத்தை உருவாக்கிய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்துகொள்ளவில்லையா? ஜே.வி.பி தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், தற்காலிகமாக இந்தியாவால் உருவாக்கப்பட்ட இணைப்பை, பிரித்த வரலாறு பதிவாகியிருக்கிறது.

இந்நிலையில் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் ஊடாக, சிங்களம் ஏற்றுக்கொள்ளும் போலியான, நடைமுறைச் சாத்தியமற்ற தீர்வினை, இந்த சர்வதேச வல்லரசாளர்கள் எம்மீது திணிப்பதற்கு முன்பாக, எமது பிறப்புரிமை சார்ந்த அரசியல் அபிலாசையை, உரத்துச்சொல்லவேண்டிய தருணமிது. தமது அரசியல் நியாயத்தைக் கூறமுடியாத, குரலற்ற மனிதர்களாகவுள்ள எமது தாயக மக்களின் உணர்வினை, உலகிற்கு தெளிவாக உறுதியாக, புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் கூறவேண்டும். பிரிக்க முடியாத அரசியல் பிறப்புரிமையான-பூர்வீக தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடான சுதந்திர தமிழீழமே ஒரே தீர்வென்பதை ஜனநாயக முறைமை ஊடாக தெரிவிக்கலாம். இக்கருத்துச் சுதந்திரத்தின் வீரியம் ஐ.நா. சபையின் சர்வதேச சட்டங்கள் சொல்லும், திரிபுபடுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளையும் தகர்த்துவிடும் வல்லமை கொண்டது.

Comments