புலிகள் இயக்கம் உலகின் மிக வலுவான போராட்ட இயக்கமாவே உலகம் முழுவதிலும் பார்க்கப்பட்டது.

ராணுவங்களுக்குள் பேதமில்லை அவை பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்பதிலும் ஊடகங்களும் தெளிவாகவே இருக்கின்றன – என உன்னதம் இதழில் சோமிதரன் என்பவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். உலகம் ஊடகம் இலங்கை அரச இராணுவ வன்முறை என்று பல்வேறு விடையங்களை குறிப்பிடும் கட்டுரையாளர். தமிழர்களின் அவலங்களை இந்திய ஊடகங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்ததாகவும் குற்றம் சாட்டுகின்றார். அவரது ஆக்கபூர்வனான கருத்துடைய இக் கட்டுரையினை இங்கு மீள் பதிவு செய்கின்றோம்

- இன்போதமிழ் குழுமம் -

  • ஊடக அரசியல் குறித்தும் ஊடகங்கள் ஈழப் போராட்டத்தில் நடந்து கொண்ட முறைமை, இந்திய ஆங்கில ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றியெல்லாம் பேசாமல் இந்த கட்டுரையை எழுதுவதில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

கைகள் கட்டப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்ட தமிழர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் காட்சிகள் உலகின் பல தொலைக்காட்சிகளிலும் இணையத் தளங்களிலும் மீள்பதிவாகிக் கொண்டிருக்கிறது. எனது நண்பர் ஒருவர் டெல்லியில் இருந்து தொலைபேசினார். நான் நினைக்கவில்லை இத்தனை கொடுமைக்காரர்களாக சிங்கள ராணுவத்தினர் இருப்பார்கள் என்று. ஈராக்கில் அமெரிக்க படைகள் செய்த கொடுமைகளை விட கொடுமைகளையெல்லாம் செய்வார்கள் போலிருக்கிறதே என்றார் அப்பாவியாக.

என்னுடைய அந்த நண்பர் அத்தனை அரசியல் அறிவு இல்லாத அப்பாவியல்ல. இந்தியாவில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் உரிமைக்காக போராடிவரும் மராத்திக்காரரான அந்த நண்பருக்கு சிங்கள ராணுவம் இத்தனை கொடுமைகளைச் செய்யும் என்பதை இவ்வளவு தெளிவாக எந்த ஊடகமும் அண்மைக் காலத்தில் சொல்லியிருக்கவில்லைப் போலும்.

ஈராக்கிலும் ஆப்கானிலும் நடந்த கொடுமைகளை அல்ஜசீரா மூலம் உலகம் கண்டது. இப்போது ஈழத்தில் நடந்த கொடுமைகளை சனல் 4 தொலைக்காட்சி கொண்டு வந்திருக்கிறது. உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் பல தரப்பு அச்சுறுதல்கள் காரணமாக உள்நாட்டு ஊடகங்களின் நம்பகத்தன்மை தவிர்க்கவியலாதபடி கேள்விக்குள்ளாகும். அப்போது குறைந்த பட்ச நம்பிக்கை தருபவை வெளிநாட்டு ஊடகங்கள் என்பது மறுக்கவியலாத உண்மை.

என் நண்பர் சொன்னது போல் சிங்கள ராணுவம் இத்தனை கொடுமையானது என்பதை உலகுக்கு உணர்த்திய முக்கிய பங்கினை சனல் 4 தொலைக்காட்சி செய்திருக்கிறது. நான் அந்த நண்பருக்கு சொன்னேன். சிங்கள மற்றும் அமெரிக்க ராணுவங்களின் கொடுமைகளை நீங்கள் இப்போது நிறைய அறிந்திருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேட்டால் ராணுவங்களுக்குள் பேதமில்லை அவை பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. அதேபோல் எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்பதில் ஊடகங்களும் தெளிவாகவே இருக்கின்றன.

உண்மையில் போர்க் காலத்தில் எல்லா ராணுவங்களும் கட்டுப்பாடுகள் இல்லாது போனாலோ அல்லது அரசு வழங்கும் அதிகாரம் எல்லை மீறினாலோ மிகக் கொடுமைகள் செய்பவைகளாகத்தான் இருக்கும். இலங்கை மற்றும் இந்திய ராணுவங்களின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்த ஈழத்த தமிழருக்கு இந்த இரண்டு ராணுவத்தினருக்கும் இடையிலான வித்தியாசம் அதிகம் இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல முடியும் என அந்த டெல்லி நண்பருக்கு நான் சொன்னேன். அவர் எனக்கு கனத்த மௌனத்தைப் பதிலாகத் தந்தார். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர் இந்திய தேசிய ஆங்கில தொலைக்காட்சிகளையே அதிகம் பார்த்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் ஒருவர் பேசிய கூட்டம் ஒன்றிற்கு சில காலம் முன்பு சென்றிருந்தேன். அவர் ஆப்கானில் ஆரம்பித்து ஈராக், ஜோர்டான் போர்களில் எல்லாம் அமெரிக்கா ஏகாதிபத்தியமும் மேற்குலக அதிகார மையங்களின் அத்து மீறல்களும் எத்தனை கொடுமைகளுக்கு காரணமானவைகளாக இருந்தன. இந்த கொடுமைகளையெல்லாம் மறைத்து அமெரிக்கா விரும்பும் கருத்தை ஓதுபவைகளாகவும் அடிவருடிகளாகவும் மேற்குலக ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை விளக்கினார்.

மேற்குலகுக்கு எதிரான மாற்று ஊடகங்கள் மற்றும் சில இந்திய ஊடகங்கங்கள் மூலம் இந்த நாடுகளில் நடந்த கொடுமைகளின் உண்மைகளை அறிய முடிந்த போதுதான் இத்தனை மோசமான வன்முறையின் உண்மை நிலவரம் தெரிய வந்ததாகச் சொன்னார்.

அந்த தோழரின் பேச்சின் அடுத்த பகுதியில் ஈழப்பிரச்சினை ஆக்கிரமித்தது. ஈழத்தில் கட்டாய சிறுவர் படையணிகளைப் போராளிகள் வைத்திருப்பது. கட்டாயமாக மக்களைத் தடுத்து வைத்திருப்பது குறித்தெல்லாம் அவர் பேசினார். சிங்கள ராணுவத்தின் கொடுமைகளைப் போல் புலிகளும் சில தவறுகள் செய்தார்கள் என்று சொன்னாலும் அவர் புலிகளைக் குறிவைத்து பல செய்திகளை சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவர் சொன்ன விடயங்களில் புலிகளின் சில தவறுகள் நமக்கும் தெரிந்தது தான், ஆனால் அதைத் தாண்டி மிகப் பெரும் கொடுமைகள் ஈழ மண்ணில் புதைந்திருப்பது குறித்து அவர் எதுவும் பேசவில்லை. அந்த தோழரிடம் கேட்பதற்கு என்னிடம் ஒரே ஒரு கேள்வி இருந்தது. நான் எழுந்து என்னுடைய கேள்வியைக் கேட்டேன். இத்தனை மக்களின் அவலங்களுக்கும் காரணம் புலிகள் என்பதாக உங்கள் பேச்சு இருக்கிறதே சரி இருக்கட்டும் இந்த தகவல்களையெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது என்றேன்.

இந்திய ஊடகங்கள் சிலவற்றின் பெயரை அவர் சொன்னார். அவற்றில் எழுதப்பட்ட கட்டுரைகளையும் சில ஆங்கில தொலைக் காட்சிகளையும் கூட அவர் குறிப்பிட்டார். அதில் நிச்சயமாக தி இந்து என்ற ஆங்கில நாளேட்டின் பெயரும் இருந்திருக்கும் என்பதில் இதைப் படிக்கும் யாருக்கும் சந்தேகம் இருக்காது.

தோழரே ஈராக் போரில் அமெரிக்க ஊடகங்களின் பங்கு பற்றி அத்தனை தெளிவாகப் பேசினீர்களே....... ....

என்னுடைய இந்த கேள்விக்கு விடையளித்தால் அது விவாதமாகி அதிகம் நேரம் எடுக்கும் என்பதால் இதுகுறித்து தனியாகப் பேசலாம் அல்லது பிறிதொரு கூட்டத்தில் பேசலாம் என்ற கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் வேண்டுதலை ஏற்று நான் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

என்னுடைய இந்த கட்டுரையின் நோக்கம் சனல் 4 தொலைக்காட்சி மற்றும் அல்ஜசீராவின் பங்கு இலங்கையில் நடந்த வன்முறையின் கொடுமைகளை வெளிக்கொண்டுவருவதில் எவ்வாறானதாக இருந்தது. எதற்காக இவை கடும் அபாயத்துக்கு மத்தியில் இந்த வேலையைச் செய்ய வேண்டும். இந்த ஊடங்களின் பின்புலம். சனல் 4 தொலைக் காட்சி காணொளி; மற்றும் ஆதரங்கள் இலங்கைக்கு எதிரான குற்றவியல்; குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்குமா என்பது குறித்துப் பேசுவதுதான். ஆனால் ஊடக அரசியல் குறித்தும் ஊடகங்கள் ஈழப் போராட்டத்தில் நடந்து கொண்ட முறைமை, இந்திய ஆங்கில ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றியெல்லாம் பேசாமல் இந்த கட்டுரையை எழுதுவதில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

சனல் 4 தொலைக்காட்சி ஈழப் போரில் இத்தனை அபாயங்களுக்கு மத்தியில் அபூர்வமான ஆதாரங்களை திரட்டியிருந்தமை ஒருவகையில் அதன் ஊடக வியாபரத்திற்கான ஒரு உத்திதான். அல்ஜசீரா தொலைக் காட்சியை உலக பழமைவாத அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தொலைக்காட்சிகளுக்கு நிகராக மக்கள் விறுவிறுப்போடும் ஆர்வத்தோடும் பார்க்கச் செய்தது எக்ஸ்குளுசிவ்வான அதன் செய்திகளும் ஒசாமாவின் முதல் காட்சிகள் மற்றும் ஈராக்கில் நடந்த கொடுமைகள் குறித்த ஆதாரங்களும்தான்.

இவற்றை அல்ஜசீரா வெளியிட்டதன் மூலம் இலவசமான பிரச்சாரம் இந்த தொலைக்காட்சி செய்தி அலைவரிசைக்கு கிடைத்திருக்கிறது. அதிகம் பேர் இணையம் உட்பட சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்த தொலைக் காட்சியை பார்ப்பதற்கு தலைப்பட்டனர். இன்றைக்கு ஆயுத வியாபாரிகள் மற்றும் கட்டுமான கம்பனிக்காரர்ளைப் போல ஊடகங்களும் வன்முறை மற்றும் போர் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு ஹொலிவூட் திரிலர் படங்களைப் போல செய்திகளைத் தருவதற்கு அதிகம் விருப்புக் கொண்டவையாக ஊடகங்கள் இருக்கின்றன.

போர்களத்தில் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு அபாயகரமான சூழ்நிலையில் செய்திகளைத் தருவதற்கு ஊடகங்கள் விரும்புகின்றன. பெரும் போர்களைக் கண்டிராத இந்திய ஆங்கில ஊடகக்காரார்கள் நவம்பர் 26 மும்பாய் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு மும்பாயில் போர் என்று தலைப்பிட்டு 48 மணி நேரடி ஒளிபரப்பில் நாட்டையே தங்கள் பக்கம் திருப்பி வைத்திருந்தார்கள். இந்தனை கொடுமைகள் நடப்பதாக சொல்லிக் கொண்டே இடையிடையே பிரியங்கா சோப்ரா, டோனி வகையறாக்களின் விளம்பரங்களும் ஓடிக் கொண்டிருந்தன.

இதே வேலையை இலங்கைப் போரின் போது முக்கியமான இந்திய ஆங்கில ஊடகங்கள் சில செய்திருந்தன. இலங்கைப் போருக்கு அவர்கள் வைத்திருந்த பெயர் இறுதி அத்தியாயம் அதாவது முடியபோகும் விளையாட்டு. இந்த முடியப்போகும் விளையாட்டை அவர்கள் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். இலங்கை அரசின் அறிவிப்புகளையும் புதிய படக்காட்சிகளையும் அவர்கள் ஒளிபரப்பினார்கள். புலிகளின் தலை நகரமாக இருந்த கிளிநொச்சி வீழ்ந்ததில் இருந்து இந்த ஊடகங்கள் இலங்கை ராணுவத்தோடும் இந்திய உளவுத்துறையோடும் சேர்ந்து பிரபாகரனைத் தேடத்தொடங்கின.

இறுதி அத்தியாயம்? என்று தலைப்பிடப்பட்ட இந்த தேடுதலுக்கிடையில் சுப்பிரமணியசாமி, சோ.ராமசாமி ஆகியோர் இந்த போரின் நியாய தர்மங்களையும் புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதற்கான வேத, ஆகம மகாபாரத போதனைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவற்றை மறக்காமல் ஒளிபரப்பிய இந்த காட்சி ஊடகங்கள் அவ்வப்போது மக்கள் கொல்லப்படுகிறார் என்று வேறு வழில்லாமல் சொன்னார்கள்.

அதுவும் ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவம் வழங்கிய அல்லது வேறு ஏதோ ஒரு இலங்கையின் நட்பு நாடோ பக்கத்து நாடோ கொடுத்த செய்மதிகளின் மூலம் எடுக்கப்பட்ட இராணுவத்தரப்பு வீடியோக்களை திரும்பத் திரும்ப ஒளிபரப்பினார்கள்.

புலிகள் மக்களை துப்பாக்கி முனையில் தடுக்கும் அந்தக் காட்சிகளை திரும்ப திரும்ப இந்திய தேசிய ஆங்கில தொலைக்காட்சிகள் சிலவற்றில் ஒளிபரப்பட்டன.அதேநேரம் மக்கள் மருத்துவ வசதியின்றி வீதிகளில் பிணங்களாகும் காட்சிகள் வன்னியில் இருந்து எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டன. இந்த காட்சிகளை விட புலிகளின் தலைவர்களின் பரபரப்பு பேட்டிகளை ஒளிபரப்பவும் இந்த ஊடகங்கள் விருப்பப்பட்டன. இராணுவத்தினர் மக்களை விடுவிப்பதற்காக நடத்தும் போராகவே இந்த ஊடகங்களால் முல்லைத்தீவில் நடந்த இறுதிப் போர் சித்திரிக்கப்பட்டது. இதன் போது மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று சொன்னாலும் இவர்களால் எந்த உண்மைகளையும் வெளிக் கொண்டு வரவோ சொல்லவோ முடியவில்லை.

போரக்களம் வரை அழைத்துச் செல்லபட்ட இந்த ஊடகவியலாளர்கள் இராணுவ டாங்கிகளுக்குள் பதுங்கிக் கொண்டும். இடம்பெயரும் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் இருந்து கொண்டும் நேரடிச் செய்திகள் என்ற பெயரில் இலங்கை இராணுவம் மற்றும் அரசு சொன்ன மூலச் செய்திகளின் அடிப்படையில் தங்கள் தங்கள் ஊடக நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் ஒப்புவித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அவர்கள் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் நகர்ந்து செல்லும் பொது மக்களின் அவலம் குறித்து அவர்களால் பேச முடியவில்லை. அங்கு சென்று வந்த இந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு நிச்சயமாக நிறைய உண்மைகள் தெரிந்திருக்கும். ஆனால் அவற்றைக் குறித்தோ அல்லது மறுக்கப்படும் ஊடக சுதந்திரம் அவர்களால் குறித்தோ பேச முடியவில்லை.

இதன் உச்சக்கட்டமாக பிரபாகரன் கொல்லப்பட செய்தியும் அவரின் உடல் எனக் காட்டப்பட்ட உடலும் இலங்கையில் பட்டாசு கொளுத்தி நடத்தப்பட்ட வெற்றிக் குதூகலிப்பும் ஒளிபரப்பபட்டது. கொழும்பு நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற களியாட்டங்களின் நேரடி றிப்போட்டுகளும் ஒளிபரப்பப்பட்டது. இதன் முடிவாக இலங்கை அதிபர் ராசபக்சவின் உரை நேரடியாக இந்திய தேசிய ஆங்கில தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டது. இப்படி நான் சொல்வதன் பொருள் இவர்கள் மக்கள் பற்றி பேசவில்லை என்பதல்ல எதை அதிகம் பேசினார்கள் என்பதை.

பெரும்பாலான இந்த ஊடங்களுக்கு போராளிகளின் மீதான தாக்குதலே பிரதானமாக தோன்றியிருக்கும். இந்த நிலையில்தான் பிபிசி யின் மென்போக்கு செய்தியிடலை மீறி இலங்கையின் உண்மை நிலையினை குறைந்தளவிற்க்காவது வெளிக்கொண்டுவரும் வேலையைச் செய்திருந்த பல வெளிநாட்டு ஊடகங்களில் அல்ஜசீராவும் சனல் 4 தொலைக்காட்சியும் குறிப்பிடத் தக்கவை. இவற்றின் செய்திகளின் பின்னரே இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சிகள் சில செய்திகளை வெளியிட்டன.

போர் நடக்கும் காலங்களில் தமது செய்தி அறிக்கையில் தொடர்ச்சியாக இரண்டு பக்கத்து செய்திகளையும் மக்களின் அவலங்கலையும் அல் ஜசீராவும் சனல்4 தொலைக்காட்சியும் பதிவு செய்தன. பாரிய ஆயுதங்களை உபயோகிக்கப் போவதில்லை என இலங்கை அரசு அறிவித்து, அமைச்சர் சிதம்பரம் அந்த தகவலை முதலமைச்சர் கலைஞருக்கு சொல்லி தமிழினத் தலைவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு வெற்றிக் களிப்போடு வீடு திரும்பிய பின்னர் இலங்கையில் பாரிய மற்றும் இரசாயன ஆயுதங்களின் தாக்குதல்கள் நடந்ததை புகைப்பட ஆதாரங்களோடு அல்ஜசீரா மற்றும் சனல் 4 தொலைக்காட்சிகள் உலகிற்கு அறிவித்தன. சனல்4 மற்றும் அல்ஜசீராவின் ஆதாரங்களுக்கு பொய் சொல்ல முடியாமல் இலங்கை வெளியுறவு செயலர் பாலித கோகண தவித்துப் போனார்.

போர் நடந்து கொண்டிருந்த போது போர்பகுதியில் இருந்து வவுனியாவுக்கு மக்கள் வந்து கொண்டிருந்தனர். இந்த மக்கள் அனைவரையும் திறந்தவெளிச் சிறைக் கூடங்கள் போன்ற முகாம்களுக்குள் இலங்கை ராணுவம் தடுத்து வைத்திருந்தது. உச்சக்கட்டமாக போர் நடந்த போது புலிகளின் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு அதாவது ராணுவப் பகுதிக்கு வருமாறு அரசு அறிவித்தது. அந்த பாதுகாப்பு பகுதி எத்தனை பாதுகாப்பு அற்று இருக்கிறது என்பதை சனல்4 தொலைக்காட்சியே முதன் முதலில் வெளியிட்டது. 2009 ,மே மாதம் ஒளிப்பட ஆதரங்கள் நேர்காணல்கள் என்பவற்றினை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பெண்கள் முகாம்களுக்குள்ளேயே பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாவதும் கொலை செய்யப்படுவது. அகதி முகாமில் உள்ள தமிழர்கள் காணாமல் போவது என்பவற்றை பொய் என இலங்கை அரசு கூறி வந்த நிலையில் சனல் 4 தொலைக்காட்சி யின் வீடியோ ஆதாரங்கள் உலக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் இதனை மீள் ஒளிபரப்ப வேண்டிய நிலை உருவானது.

இலங்கை அரசின் முகாம்கள் தங்கு முகாம்களல்ல தமிழர்களின் வதை முகாம்கள் என உலகிற்கு உணர்த்திய இந்த தொலைக் காட்சியைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களையும் திருகோணமலையில் வைத்து இலங்கை அரச படைகள் கைது செய்தனர். இலங்கையின் பாதுகாப்பு துறை செயலர் மட்டதில் இருந்து தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும். கைது செய்து லண்டனுக்கு அனுப்பப்படும் வரை ஆபத்தான நிலையில் இருப்பதாகவே தாங்கள் உணர்ந்ததாகவும் அந்த ஊடகவியலாளர்கள் கூறினர். இந்த நிலையில் சனல்4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு இலங்கை அரசு தடைகள் விதித்தது. தேச விரோத குற்றச் சாட்டுக்களை முன் வைத்தது. இங்கிலாந்து அரசிடம் முறையிட்டது.

ஆனாலும் தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையினை வெளிக் கொண்டு வருவதில் தனது பங்கினை சனல்4 தொலைக்காட்சி செய்தது. புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் முதல் முதலில் சனல் 4 மூலமே வெளியுலகோடு பேச ஆரம்பித்தார். இதன் மூலம் உலகின் கவனம் சனல் 4 பக்கம் திரும்பியிருந்தது. ஒரு சிறிய நாட்டில் விடுதலைக்காக போராடும் இயக்கமாக இருந்தாலும் புலிகள் இயக்கம் என்பது உலகின் மிக வலுவான போராட்ட இயக்கமாவே உலகம் முழுவதிலும் பார்க்கப்பட்டது. அத்தகைய சூழலில் உலகம் முழுவதில் தன்னுடைய தொலைக்காட்சியின் அறிமுகத்தையும் பிரபலத்தையும் இலங்கை பிரச்சினையினை அதிரடியாகக் காண்பிப்பதன் முலம் சனல் 4 தொலைக் காட்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒருவகையில் ஊடக வியாபாரத்தின் உத்திதான். ஆனால் தமிழர்களின் நியாயங்களைப் புரிந்து கொண்டு இந்த தொலைக்காட்சி செயற்பட்டிருக்கிறது என்பது அடக்கப்படும் மக்களுக்கு சார்பான ஒன்று.

செப்டம்பர் மாதத்தில் வெளியான படக்காட்சி இன்னும் உலகை உலுக்கிப் போட்டது. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல பலரையும் இலங்கை ராணுவத்தின் கோர முகத்தை உணர வைத்த அந்த காட்சிகளை வெளியிட்டதன் மூலம் தனது தொலைக்காட்சிக்கு பரபரப்பையும் விளம்பரத்தையும் தேடிக் கொண்டது என்ற விமர்சனம் எழுந்தாலும் கூட, இதன் மூலம் அந்த தொலைக்காட்சி செய்திருக்கும் வேலை மிக முக்கியமானது. நிர்வாணப்படுத்தப்பட்டு பின்புறம் கைகள் கட்டப்பட்டு தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் சுடப்படும் அந்தக் காட்சிகள் இலங்கை அரசை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனாலும் இது போலியாக சித்தரிக்கப்பட்டது என ஆதாரங்களோடு இலங்கை அரசு சொன்னாலும் சனல் 4 தனது செய்தியின் உண்மைத் தன்மையில் உறுதியாக இருக்கிறது.

இதேவேளை சனல் 4இன் தலைமை அதிகாரி அன்டி டன்கன் தமது தொலைக்காட்சி இவ்வீடியோ கிளிப்பை வெளியிட்டமை சரியான முடிவு என்றும், இதனுடைய நம்பகத்தன்மை அல்லது உண்மைத்தன்மை குறித்து எங்களால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், இவ்வாறான ஒரு விடயம் மக்களின் பார்வைக்குச் செல்ல வேண்டும் என்றே நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சி நிதிப் பற்றாக்குறையில் இருக்கிறது அதனால் தனக்கு சுய விளம்பரம் தேடப் பார்க்கிறது. இதனை இங்கிலாந்து அரசு கண்டிக்க வேண்டும் என இலங்கை அரசு சொன்னாலும், 1982 இல் இருந்து இயங்கி வரும் இந்த தொலைக்காட்சிக்கு இலங்கை பிரச்சினையில் தமிழர்கள் பக்கத்து நியாயத்தைச் சொல்லி சுய விளம்பரம் தேடுவது மட்டும் நோக்கமாக இருக்காது. இது அந்த தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரக் கூடியதுதான் என்றாலும் ஒரு மனித அவலத்தை உலகிற்கு கொண்டு வருவதில் அந்த தொலைக்காட்சி சிறப்பு கவனம் கொண்டிருக்கிறது எனபதை அதன் தொடர்ச்சியான செய்திகளும் அதன் தலைமை செயல் அதிகாரியின் பேச்சுகளும் உறுதி செய்கின்றன.

மார்க் அன் ஸ்பென்ஸர் நிறுவனத்துக்கு எதிராக சனல் 4 தலைமை அதிகாரியின் பேச்சு அந்த தொலைகாட்சியின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னர் அகற்றப்பட்டது. இலங்கைப் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரம் மேற்குலகில் முன்னெடுக்கப் பட்டது. இதற்கு இலங்கையில் தொழிற்சாலையைக் கொண்டிருக்கும் மார்க் அன் ஸ்பென்ஸர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து பேசிய சனல் 4 தலைமை அதிகாரி இலங்கையில் உற்பத்தியாகும் ஒவ்வொரு ஆடைக்கு பின்னாலும் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான உடல்களும் குருதியும் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 300000 மக்களின் அவலமும் இருக்கிறது என்றார். இவரின் இந்தப் பேச்சு வர்த்தக நிறுவனங்களை தாக்குவதாக இருந்ததால் அது நிச்சயமாக சனல்4 இன் விளம்பர முகாமைக்கு சிக்கலானதே.

இங்கிலாந்தின் புகழ்மிக்க தொலைக்காட்சி அலைவரிசையான சனல் 4 தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை நடத்தும் பிக் பிரதர் நிகழ்ச்சி மிகப் பிரபலமானதும் நம் இந்தியர்களுக்கும் தெரிந்ததும் தான். இது தவிர இன்னும் சில உப அலைவரிசைகளையும் சனல் 4 கொண்டிருக்கிறது. பழமைவாத பிபிசி போன்ற நிறுவனங்களுக்கு மாற்றான இந்தத் தொலைக்காட்சியின் பார்வையாளர் வீச்சு எப்போதும் அதிகமானதே. அத்தகைய ஒரு மேற்குலக தொலைக்காட்சி தமிழர் உரிமைகள் குறித்து கவனம் செலுத்துவது தமிழர்களின் போராட்டத்துக்கும், அடக்கப்படும் தமிழர்களைக் காப்பதற்கும் மிக அவசியமானது. ஆனால் இந்த தொலைக்காட்சி ஆதாரங்கள் மூலம் மட்டும் இலங்கை அரசை கிரிமினல் குற்றவாளியாக்கிவிட முடியாது. ஆனாலும் உலகின் கவனத்தை திருப்புவதற்கு இது உதவும்.

Comments