மகிந்தவின் தேர்தலுக்கு எதிராக தமிழ்மக்கள் வகுக்கவேண்டிய வியூகம்

அங்கேறப்போகும் அடுத்த ஐனாதிபதித்தேர்தலை மையப்படுத்திய அரசியல் நகர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மையில் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல்களின் முடிவுகள் அரச தலைவர் ராஐபக்சவுக்கு சாதகமாக அமைந்தாலும் மகிந்த தனது வெற்றி வாய்ப்பு தொடர்பில் அச்சமடைந்ததாகவே தெரிகின்றது. யுத்தவெற்றியைக் காட்டி சிங்கள வாக்குகளை பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டாலும் அதை மட்டும் நம்பமுடியாத நிலை ராஐபக்சவுக்கு உள்ளது.

கடந்த ஐனாதிபதித்தேர்தலின் வெற்றிக்காக பாடுபட்டு உழைத்த மங்கள சமரவீரவின் அதிருப்தியாளர் குழுவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சரத் பொன்சேகாவாலும் யுத்தவெற்றியை மையப்படுத்தப்படும் சுதந்திரக்கட்சியின் வாக்குகள் சிதைவடையும் வாய்ப்புள்ளது.
Mahinda_wif_baffollow
ஜீ.பி.எஸ் பிளஸ் வரிச்சலுகை நீக்கத்தால் உடனடியாக வேலை வாய்ப்பை இழக்கக்கூடிய நிலையிலிருக்கும் ஆடையுற்பத்தித் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஏழைத்தொழிலாளர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் மற்றும் ஆடை உற்பத்தி சார்ந்த தொழிலாளர்களும் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். பொருட்களின் விலை உயர்வு ஆறு சதவீதத்தால் உயர்வடையும். ஆகவே, பணவீக்கம், விலைவாசியேற்றம், வேலையில்லாத்திண்டாட்டம் போன்ற பொருளாதார ரீதியாக பாரிய பாதிப்புக்களைச் சமாளிக்க இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உதவிகளில் தங்கியிருந்தாலும் இப்பொருளாதார சிக்கலைச் சமாளிப்பது சுலபமில்லை. பெரும்பான்மை அடிமட்ட மக்களின் அன்றாட பொருளாதார விடயங்களைக் கையாள்வதே ராஐபக்ச அரசிற்கு சிக்கலாக இருக்கின்றது. எனவே பொருளாதாரத்தை மையப்படுத்தி தேர்தலில் மகிந்த மிகப்பெரிய சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது.

கடந்த ஐனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிப்பை புறக்கணித்ததால் ராஐபக்சவிற்கு சார்பாக தேர்தல் வெற்றி அமைந்துவிட்டது. ஆனால், இம்முறை தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் தனது வெற்றி வாய்ப்பிற்கு அவசியம் என்பதை மகிந்த உணர்ந்துள்ளார். எனவே தனக்கு ஆதரவான தமிழின விரோத சக்திகளான கருணா, டக்ளஸ் போன்றவர்களினூடாக வடக்கு மற்றும் கிழக்கு நோக்கிய தேர்தல் உத்திகள் அரங்கேறத்தொடங்கியுள்ளன. குறிப்பாக தனக்குச்சார்பான இந்தத் தமிழின விரோத சக்திகளைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்நகர்த்தி வாக்குகளை அடைவதற்கான காய்கள் நகர்த்தப்படத் தொடங்கியுள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி வடக்கு கிழக்கில் - தமிழ்மக்களின் மதிப்புப்பெற்ற - கடந்த தேர்தல்களில் பங்குகொண்ட - தமிழர்களையும் அரசுக்குள் உள்வாங்கக்கூடிய முயற்சிகள் நடைபெறத்தொடங்கிவிட்டன. தற்போது ஆளும் கட்சியைச்சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா போன்று பல மாவட்டங்களில் செல்வாக்குப் பெற்ற தமிழர்களை உள்வாங்கும் நோக்குடன் கலந்துரையாடல்களுடன் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளையும் தொடங்கிவிட்டனர்.

சர்வதேச அழுத்தம் காரணமாகவும் இந்தியாவின் ஆலோசனைகளின் பிரகாரமும் ஜனாதிபதித்தேர்தலின் வெற்றியை கருத்தில் கொண்டு தற்போது மீள்குடியேற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சொந்த வீடுகளில் குடியேறும் யாழ் குடாநாட்டு மக்களிற்கான உதவிப்பணத்தை டக்ளஸ் ஊடாக வழங்குவதானது தமிழ்மக்களை தென்னிலங்கைச் சக்திகளிடம் அடிமையாக்கும் சம்பவத்திற்கான சமீபத்திய உதாரணமாகும். சிலவேளை இச்சம்பவங்கள் மக்கள் மத்தியில் மயக்கங்களை கொண்டுவந்தாலும் இச்சூழ்ச்சிவலையை மக்கள் சரியாக புரிந்து கையாளவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி பெறப்படும் பணத்தை கொண்டு தங்களது வாக்குவங்கியை நிரப்பும் அரசியல் கபடநாடகத்தை புரிந்துகொள்ள வேண்டும். உதவி வேறு, ஈழமக்களின் அரசியல் விடுதலை வேறு என்பதை பிரித்தறிந்து கையாள வேண்டும். இவ்வுதவியினூடாக தென்னிலங்கை சிங்களத்திடம் தமிழன் அடிமைப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வுயும் கருத்துப்பரம்பலையும் செய்வது காலத்துக்குரிய கடமைகளில் ஒன்றாகும்.

தமிழர்களுக்கான அரசியல் ஆபத்து

தமிழர்களினது தேசியம், தாயகம், சுயநிர்ணயக்கோட்பாடுகளை இல்லாதொழித்து தென்னிலங்கை சிங்களத்திடம் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் தங்கியிருக்கவைப்பதனூடாக, தமிழ்த்தேசிய சிந்தனையை இல்லாதொழிக்கும் கொள்கையை சிங்களக்கட்சிகள் கட்சிபேதமின்றி பின்பற்றிவருகின்றன. அதேவேளை, தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலத்தைபற்றி கவலைப்படாமல் இருக்கும் சுயநல நோக்கம்கொண்ட தமிழ்அரசியல்வாதிகளை கொண்டே தமிழ்மக்களை தென்னிலங்கைச்சக்திகளிடம் நிரந்தர அடிமையாக்கி, தமிழ்பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்தி, தமிழ்தேசியக்கருத்தை வலுவிழக்கச்செய்வதற்கு பொருத்தமாக, வாழ்வரசியல் அடிமைகளான கருணா, டக்ளஸ் போன்றவற்றுடன் தமிழின விரோத தமிழ்அரசியல்சக்திகள் துணைபோகின்றன.
mahinda-rajapaksa-2009-5-19-9-20-45
தென்னிலங்கை சக்திகளுடன் சாராத தமிழ்அரசியல் கட்சிகளை இல்லாதொழிக்கும் அல்லது பலவீனமடையச்செய்யும் முயற்சிகள் இன்னொருபுறத்தில் நடைபெற்றவண்ணம் உள்ளன. தமிழ் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அழுத்தங்களைக்கொடுப்பதும் அகதிமுகாம்களிற்கு மக்களைச்சென்று சந்திக்க அனுமதிக்காமையும் எடுத்தியம்பும் செய்தி என்னவெனில் தென்னிலங்கை சாராத தமிழ் கட்சிகளை தமிழ் மக்கள் மத்தியில் வலுப்பெறாமல் செய்வதாகும். இந்த ஆபத்திலிருந்து தமிழ் மக்களின் அரசியலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியத்தை அடிப்படைக்கொள்கைகளாக கொண்ட கட்சிகளுக்கு மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் உள்ளது.

தமிழ் அரசியல் பேசுவோரின் கடமை

தமிழினம் பலவீனமுற்று இருக்கும் இந்தச்சமயத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமிழ் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து, தமிழ்மக்களிற்கான அரசியல் எதிர்காலத்தை அடைவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து, அதற்கேற்ற மூலோபாயத்தை வகுத்து, ஈழ மற்றும் புலம்பெயர்மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி இருதண்டவாளங்களாக விடுதலைவண்டியை சுமந்து, நகர்த்த ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அரசியல்கருத்து வேற்றுமைகளை களைந்து ஒத்தகருத்துடன் தளமும் புலமும் சரிநேர்கோட்டில் பயணிக்க வேண்டும். முதலில் தனித்தனியாக தளத்தில் புலத்தில் ஒன்றிணைவை உறுதிப்படுத்தவேண்டும். பின்னர், அரசியல் கோட்பாடு ரீதியாக தளமும் புலமும் ஒருமைப்படவேண்டும். தங்களிற்கான நிகழ்ச்சி நிரல்களை சரியாக வகுத்து, மக்களை ஒருமுகப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும். தமிழினம் துன்புற்று அரசியல் ஏதிலிகளாக பலவீனமுற்று இருக்கும் இச்சமயத்தில், ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகள் விவேகத்துடனும் தந்திரோபாயத்துடனும் சாணக்கியத்துடனும் சமயோசிதமாகவும் செயற்படுவதனூடாக மட்டுமே ஈழ அரசியலை இக்கட்டான கட்டத்திலிருந்து சரியான பாதையில் முன்னெடுத்து செல்லமுடியும்

ஈழஅரசியலைப்பற்றி பேசுபவர்கள் குற்றஞ்சாட்டுவதை நிறுத்தி, ஒற்றுமைப்படவேண்டும். குறிப்பாக, தேசியத்தலைவர் சொன்னதைப்போல “நான் பெரிது நீ பெரிது என வாழாதீர்கள் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்கு பெரிதானால் நாமெல்லாம் அதற்குள் சிறியவர்களே” அதன் வழி பற்றி நிற்கவேண்டும். தமிழருக்குரிய அரசியல் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் பின்னடைவைச்சந்தித்துள்ள நிலையில் எவ்வாறு புத்திசாலித்தனமாக, சாணக்கியமாக அரசியல் விடுதலையை முன்னெடுப்பது என்பதுதான் தற்போது முக்கியமானது தவிர செங்கொல் யாருக்கென்பதல்ல. தமிழ்மக்கள் பலமாகவும் ஒற்றுமையுடனும் இருந்தால் எந்த சக்திகளாலும் அழிந்துவிடவும் முடியாது. அதேவேளை தமிழ்மக்களை தவறான அரசியல் சிந்தனைக்கமைவாக நகர்த்தவும் முடியாது.

ஈழநேசன்

Comments