ஈழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரும் திருப்பமான காலத்தில் இன்று புலம்பெயர் தமிழர்களுடன் ஈழத்தமிழர்கள் கைகோர்த்துள்ளனர்.
இற்றைவரை ஆயுதப்போராட்டம் எமது மக்களின் குரலை சர்வதேசம் எங்கும் ஒலிக்கச்செய்தாலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவென்பது வெகு மந்தமாகவே இருந்துவந்தது என்பது உண்மையே.
ஈழத்தமிழர்களின் கைகளில் இருந்த ‘தமிழீழ விடுதலைப்போராட்டம்’ இன்று புலம்பெயர் மக்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் அதனைக்கண்டு இலங்கை அரசு அச்சம் கொள்ள ஆரம்பித்துள்ளதானது இந்த போராட்டத்தின் வெற்றியின் முதல் படியாகும்.
கடந்த காலங்களில்போல் அல்லாமல்; ஈழத்தமிழர்கள் தொடர்பில் உறுதியான தீர்வுத்திட்டதுடன் சட்டத்தரணியும் தமிழ் உணர்வாளருமான உருத்திரகுமார் தலைமையில் வெளிக்கிளம்பியுள்ள 59 உறுப்பினர்களைக்கொண்ட ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ செயற்குழுவினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கையே இன்று இலங்கை அரசை நிலைகுலைய வைத்துள்ளது.
இதுவரை இலங்கையில் நிலவுவது ‘பயங்கரவாத பிரச்சினையென’ கூறிவந்த நாடுகள் கூட இன்று தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆதரவு வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதற்கு முக்கிய காரணமாக இலங்கையில் தமிழ் மக்கள் முள்வேலிக்குள் தடுத்துவைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்படுவதும், கடந்த காலத்தில் சிங்கள படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் சாட்சியங்கள் மூலம் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுசெல்லப்பட்டதுமாகும்.
இந்த நிலையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு உறுதியான தீர்வுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என பல்வேறு நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தபோதெல்லாம் இராணுவ வெற்றியினை மட்டும் மனதில் கொண்டு இறுமாப்புடன் ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’இருந்துவந்தது.
இந்த நிலையில் இலங்கை அரசு தொடர்பில் கையாலாகா தனத்தில் இருந்துவந்த சர்வதேச நாடுகள் இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்துவந்துள்ளதுடன் இலங்கையின் நட்பு நாடான இந்தியா மூலமாகவும் கோரிக்கை விடுத்து வந்தது.
எனினும் இலங்கை தமிழர்கள் தொடர்பில் எந்தவித பிரதிபலிப்புகளும் ஏற்படாத நிலையில் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’செயற்குழுவின் செய்றபாடுகள் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் சர்வதேச சமூகத்தை அவர்கள் பால் ஈர்க்கவைத்துள்ளது.
கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, நோர்வே, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளிடம் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’செயற் குழுவின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசு விடுத்தவேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளமையானது ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ செயற் குழுவின் செயற்பாடுகளை இந்த நாடுகள் வெளிப்படையாக ஏற்றுள்ளன என்பது புலனாகிறது.
இது புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ‘தமிழீழ விடுதலைப்போராட்டம்’உறுதியான நிலையில் சென்றுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியடையசெய்துள்ளது.
அதுமட்டுமன்றி இந்த ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’அமைப்பது தொடர்பில் ஈடுபட்டுவரும் அறிஞர்களை கைதுசெய்வது தொடர்பில் அந்தந்த நாட்டு இலங்கை தூதரகங்கள் மூலமாக இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் தோல்வியில் முடிவடைந்துள்ளதுடன் ‘அவ்வாறு செய்யமுடியாது’சர்வதே நாடுகள் கூறியுள்ளமையானது புலம்பெயர் மக்கள் இதில் ஈடுபட இருந்த தடைகள் அறுத்தெறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புலம்பெயர் மக்களின் கைகளில் பலமான கையிறு வழங்கப்பட்டுள்ளது.அதற்கு பக்கத்துணையாக ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’அமைப்பது தொடர்பில் ஈடுபட்டுவரும் செயற்குழவினர் உள்ளனர்.
அவர்களின் தீர்வுத்திட்டங்கள் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லையென்பது இன்று நிதர்சனமாகிவருகின்றது.
இதற்கு புலம்பெயர் மக்கள் தம்மத்தியில் உள்ள கசப்புணர்வுகளையும் மாற்றுக்கருத்துகளையும் தூக்கியெறிந்துவிட்டு அவர்களின் கைகளை பலப்படுத்த முன்வரவேண்டும்.
உங்களின் இந்த செயற்பாடே எதிர்காலத்தில் முள்வேலிக்குள் அகப்பட்டு சொல்லொணா துன்பங்களை அனுபவித்துவரும் உங்கள் உறவுகளை விடுவிக்க வழிகோலாக அமையும் என்பது திண்ணம்.
- வா.கி.குமார்
Comments