இப்போது தமிழருக்குத் தேவை அரசியல் விவேகம்


தங்களுடைய இனப்பிரச்சினைக்கு நீதி, நியாயமான தீர்வுவேண்டி நீண்டகாலம் போராடி போரழிவுகளையும், பேரழிவு களையும் சந்தித்து இன்று துரும்பாகித் துவண்டு போய்க் கிடக்கின்றது ஈழத் தமிழினம். ஈழத் தமிழர்கள் தங்களுடைய அரசியல் காய்நகர்த்தல்களை தந்திரோபாயமாக முன்னெடுக்கவில்லை, வேகத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விவேகத்துக்குக் கொடுக்கவில்லை, காரியம் பற்றிச் சிந்திக்காமல் வீரியம் மட்டும் பேசியமையால் வந்த வினை இது என்றெல்லாம் இப்போது நம் மத்தியில் இருந்தே சுயவிமர்சனங்கள் கிளம்பியுள்ளன. அவை சரியாகவும் இருக்கலாம் அல்லது பிழையாகவும் இருக்கலாம். அத்தகைய விமர்சனங்களைக் குறைகூறும் எண்ணம் எமக்கு இல்லை.

  • ஆனால், தமிழினம் இன்று நொந்து போயிருக்கின்றது; பலவீனமுற்று இருக்கின்றது என்பது மட்டும் உண்மை. இந்தச் சமயத்தில் ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகள் விவேகத்துடனும், தந்திரோபாயத்துடனும், சாணக்கியத்துடனும், சமயோசிதத்துடனும் செயற்படுவதன் மூலம் மட்டுமே மிக இக்கட்டான இந்தக் கட்டத்துக்குள் இருந்து தமிழினத்தை மீட்டு முன்னகர்வுப் பாதையில் வழிநடத்திச் செல்லமுடியும் என்பது கண்கூடு.

நமது அரசியல் தலைமைகள் குறிப்பாக ஈழத் தமிழர்களின் அதிக எண்ணிக்கையான பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு அரசியல் முதிர்ச்சியுடன் காரியங்களை ஆற்றுகின்றதா என்ற கேள்வி இயல்பாகவே தமிழ்மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது என்பது உண்மையாகும். கூட்டமைப்பு எம்.பிக்கள் பலரின் செயற்பாடுகள், பேச்சுகள், அறிக்கைகள், இவை எல்லாவற்றையும் விட அவர்களில் பலரின் செயற்றிறனின்மை போன்றவை இத்தகைய சந்தேகங்களை வினாக்களை தமிழர்கள் மத்தியில் எழுப்பியுள்ளன என்பது மறுக்கமுடியாத விடயமாகும்.

இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போது இலங்கையின் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிப் பொதுக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாகத் தாங்கள் எதிர்க்கின்றார்கள் என்று நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தா அவசரப்பட்டு அறிவித்தமை இத்தகைய அரசியல் முதிர்ச்சியற்ற அரசியல் சாணக்கியமும், விவேகமுமற்ற அரசியல் தந்திரோபாயமற்ற அறிவிப்பாகவே பல தரப்புகளினாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது நாட்டின் தேசிய அரசியலை இராணுவ மயப்படுத்தும் எத்தனம் என்று காட்டி, அதை எதிர்க்கின்றோம் என்று ஸ்ரீகாந்தா எம்.பி. கூறுவதில் முழு நியாயம் உள்ளது என்பதில் தமிழர் தரப்பில் இரண்டு கருத்து இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், இவ்விவகாரத்தில் தமிழர் தரப்பின் தமிழ்க் கூட்டமைப்பின் தீர்மானம் இதுதான் என்ற அர்த்தப்பட "எடுத்தேன், கவிழ்த்தேன்" என்ற பாணியில் அவசரப்பட்டு அவர் அறிவிப்பதற்குத் தேவையோ, காரணமோ, கட்டாயமோ இல்லை என்பதுதான் உண்மை.

  • ஜனாதிபதித் தேர்தல் தற்போதைக்கு நடக்குமா என்பது கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நடக்கலாம் என்ற ஊகங்களே கூறப்படுகின்றன.

  • அப்படித் தேர்தல் நடந்தாலும், அதில் தாம் போட்டியிடுவதற்கான சம்மதத்தை ஜெனரல் பொன்சேகா இன்னும் வெளிப் படுத்தவில்லை.

  • அப்படித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் போட்டியிட ஜெனரல் பொன்சேகா முன்வந்தாலும், அவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தும் இணக்கப்பாடும் பூர்வாங்கமாகக்கூட இன்னும் எட்டப்படவில்லை.

  • அப்படித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் போட்டியிட ஜெனரல் பொன்சேகா முன்வந்து, அவரே எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டாலும்கூட, அந்த எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டமைப்பில் சேர்ந்து செயற்படும் தீர்மானம் எதையும் தமிழ்க் கூட்டமைப்பு இன்னும் எடுக்கவேயில்லை.

அப்படியிருக்கையில், இப்படி முந்திக்கொண்டு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக பொன்சேகா நிறுத்தப்பட்டால், அதை எதிர்ப்போம் என்று அவசரப்பட்டு ஸ்ரீகாந்தா பிரகடனப்படுத்துவதற்கு என்ன தேவை எழுந்திருக்கின்றது?

  • அப்படி பொது வேட்பாளராகப் பொன்சேகா நிறுத்தப்பட்டால் அவரை எதிர்ப்பதுதான் தமிழர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கட்டும். அக்கருத்தில் யாரும் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் இல்லை. ஆனால், அதை அவசரப்பட்டு ஸ்ரீகாந்தா இவ்வளவு நேரத்துடன் அறிவிக்கவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? இந்த அறிவிப்பு மூலம் யாரைத் "தாஜா" செய்ய அல்லது சமாளிக்க அவர் முயல்கின்றார்? இத்தகைய முடிவை எடுத்து இவ்வாறு முற்கூட்டியே அறிவிப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானமா?

இன்றைய அரசியலில் தனது அடுத்த அரசியல் காய் நகர்த்தலை எப்படி முன்னெடுப்பது என்பதற்கு வழி தெரியாமல் பற்றிப் பிடிப்பதற்குத் துரும்பு இல்லாமல் தடுமாறுகின்றது தமிழினம்.அத்தகைய சூழலில் ஜனாதிபதித் தேர்தல் முற்கூட்டியே அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவே அறிவிக்கப்படும் சூழல் ஏற்படுமானால் அதற்கான வாய்ப்புகள் இன்றைய நிலையில் குறைவாக இருந்தாலும், அப்படி நேருமானால் அச்சூழலில், அதை வைத்துக்கொண்டு, அரசியல் பேரம் பேசும் வலு அல்லது சிறு துரும்பு, தமிழர் தரப்புக்குக் கிடைக்காதா? அத்தகைய வாய்ப்பை இப்போதே இவ்விடயத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்துப் பகிரங்கமாக முற்கூட்டியே அறிவிப்பதன் மூலம் போட்டு டைக்கலாமா?

  • இது "நந்தவனத்து ஆண்டி, தனக்குக் கிடைத்த தோண்டியை போட்டுடைத்தாண்டி" என்ற மாதிரியல்லவா இருக்கின்றது?

"சபைக்குக் கைதட்டல் அப்ளாஸ்" வாங்குவதற்கான பேச்சுகளை விடுத்து, காரியம் ஆற்றும் விடயத்தில் கவனத்தைச் செலுத்துவதே இன்றைய தேவையாகும். கவனிப்பார்களா தமிழர் தரப்பினர்....?

கொழும்பிலிருந்து நிகேதன் (உதயன்)

Comments