ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் உறுதித்தன்மையை சீர்குலைத்துள்ளதாகவும், அது மேலும் அதனை சீர்குலைக்கும் எனவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் தெரிவித்துள்ளார்.
நன்றி: ஈழமுரசு
அதாவது சிறீலங்காவில் சீனாவின் அதிகரித்த தலையீட்டுக்கு எதிராக இந்தியா போராடிக்கொண்டிருக்கையில் அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக மேற்குலகம் இலகுவாக உள்நுளைந்துவிடும் சாந்தியங்கள் வலுப்பெற்று வருவதை இந்திய மிகவும் தாமதமாக உணர்ந்து கொண்டுள்ளது. திருமலைத்துறைமுகத்தின் கனவில் இருந்த இந்தியா அம்பாந்தோட்டையை சீனாவிடம் தொலைத்திருந்தது. தற்போது தமிழ் மக்களுக்கு எதிரான தனது போக்கு தொடர்பாக சிந்தித்து கொண்டிருக்கையில் ஒட்டுமொத்த இலங்கைத்தீவும் அதன் கையைவிட்டு நகர்ந்து போகின்றது என்பதை காலம் கடந்து உணர்ந்துள்ளது.
விடுதலைப்புலிகளின் மரபுவழியிலான போரிடும் வலுவை சிறீலங்காவுடன் கூட்டு சேர்ந்து இந்தியா முறியடித்ததே இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரும் சக்தி ஒன்றை அனைத்தலகத்தில் உருவாக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை மேற்குலகம் தவறவிடப்போவதிலலை. மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத ஆட்சிமுறை போன்ற காரணிகளை கூறியே மேற்குலகம் ஆபிரிக்க நாடுகளிலும், அரபு நாடுகளிலும் உள்நுளைந்திருந்தது. தற்போதும் அதற்கான சந்தர்ப்பத்தை சிறீலங்கா மட்டுமல்லாது இந்தியாவும் ஆசியப் பிராந்தியத்தில் உருவாக்கியுள்ளன.
உக்கிர போர் நடைபெற்ற போது செயற்திறன் இன்றி முடங்கிப்போயிருந்த ஐக்கிய நாடுகள் சபை மீது அதிக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் ஐ.நா தற்போது தனது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான தலைவர் லியான் பெஸ்கோ சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டு சென்ற பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பிரதிநிதி கொலின் வோல்டன் கடந்த புதன்கிழமை (23) சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கெலின் கடந்த ஏப்பிரல் மாதமும், கடந்த வருடமும் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சுவிற்சலாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கெலின் மனித உரிமைகள் தொடர்பான கற்கைநெறியில் நிபுணத்துவம் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நகர்வுகளுக்கு அப்பால் அமெரிக்காவும் தனது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
சிறீலங்காவில் நடைபெற்ற போர் தொடர்பான விரிவான அறிக்கை அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் கடந்த திங்கட்கிழமை (21) போரியல் குற்றங்களுக்கான தூதுவர் ஸ்ரீபன் ராப்பினால் சமர்ப்பிக்கப்படவிருந்த போதும் அது சில தினங்கள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அறிக்கை அமெரிக்க அரச தலைவர் ஒபாமாவுக்கும் அனுப்பப்படவுள்ளது. அறிக்கை தொடர்பான விடயங்களை அறிய முற்பட்டபோதும் அது தொடர்பான தகவல்களை அமெரிக்க வெளியுறவு திணைக்களம் தெரிவிக்கவில்லை. எனினும் நாம் மிகவும் முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்பதை சிறீலங்கா அரசு உணர்ந்துகொள்ள வேண்டும் என ஸ்ரீபன் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து வாழும் 280,000 மக்கள் தொடர்பாகவும், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவுமே அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்த மனிதாபிமான அரசியலுக்கு எதிராக எந்தவொரு ஜனநாயக நாடும் குரல் கொடுத்தால் அது ஜனநாயக விரோத நடவடிக்கையாகவே ஏனைய நாடுகளினால் பார்க்கப்படும். அதாவது ஆசிய நாடுகளில் தனது ஆளுமையை கொண்டுவர அமெரிக்கா மனித உரிமைகள், போரியல் குற்றங்கள், சர்வாதிகார ஆட்சி முறை போன்ற காரணங்களை முன்நிறுத்த போகின்றது.எனவே தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா முதல் முதலாக இணைந்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இஸ்ரேலுக்கு எதிரான பிரேரணைகளே இதுவரையில் அதிகம் விவாதிக்கப்பட்டிருந்தது. அங்கு ஆதிக்கம் செலுத்தியிருந்த ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் இஸ்ரேல் தொடர்பான விடயங்களையே பெருமளவில் முன்னிறுத்தியிருந்தன. ஆனால் சிறீலங்கா, சூடான், பர்மா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை முன்நிறுத்துவதே தமது நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேலும் பலப்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது. முக்கியமாக சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்காவும், முக்கிய ஐரோப்பிய நாடுகளும் தமது நடவடிக்கைகளை வலுப்படுத்த முயன்று வருகின்றன. போர் குற்ற விசாரணைகளையே அவர்கள் முதன்மைப்படுத்த முற்பட்டு வருகின்றனர். ஸ்ரீபன் ராஃப் இன் அறிக்கை சமாப்பிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்ன என்பது தொடர்பாக நிட்சயமற்ற தன்மை ஒன்று காணப்பட்டாலும், சிறீலங்கா மீதான போர் குற்ற விசாரணைகளை நோக்கி அது அமெரிக்காவை தள்ளும் என்றே பலரும் கருதுகின்றனர். சிறீலங்கா மீது பொருளாதார தடைகளும் ஏற்படுத்தப்படலாம்.
ஜரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையானது சிறீலங்காவுக்கு வழங்கப்படுவதை தடுப்பதற்கு பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. சிறீலங்கா விவகாரத்தில் தலையிடுமாறு கடந்த வார இறுதி நாட்களில் 17 அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் அனுப்பியிருந்தன. இந்த நிலையில் தான் ஐ.நா தனது அரசியல் விவகாரங்களுக்கான தலைவரை அவசரமாக அனுப்பியிருந்தது. அவரின் விஜயம் தொடர்பான தெளிவான தகவல்களை அரசு அறிந்துகொள்ள முடியவில்லை எனவும், ஆனால் குழப்பமான நிலை ஒன்று கொழும்பில் தோன்றியிருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மறுவாழ்வு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்காவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பேசும் கடந்த புதன்கிழமை (23) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள உறுதிமொழியையும் பற்றிப்பிடிக்கவும் ஐ.நா திட்டமிட்டுள்ளது. சிறீலங்காவுக்கு விஜயம் செய்த பெஸ்கோவிடமே சிறீலங்கா இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அவசியமானது எனவும் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டில் அதற்குரிய சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளது சிறீலங்காவை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. மேற்குலகத்தின் பொருளாதாரத்தடைகளை அல்லது வேறு தண்டணைகளை சிறீலங்கா எதிர்கொள்ளப் போகின்றது என்ற கருத்துக்கள் வலுப்பட்டு வரும் இந்த சமயத்தில் இந்தியாவும் சிறீலங்கா மீது தனது அழுத்தங்களை வலுப்படுத்தி வருகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்புக்களுக்கு நன்றியை பல அமைச்சர்கள் தெரிவித்த போதும், பூகோள பிராந்திய வல்லாதிக்க போட்டிகள் இந்தியாவிற்கு பாதகமான நிலையை எட்டியுள்ளது இந்தியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சிறீலங்கா அரச தலைவர்களை சந்தித்த சிறீலங்காவுக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கடுமையான அழுத்தங்களை முன்வைத்திருந்தாக கொழும்பு தகவல்கள் தெரிவித்திருந்தன. அதே சமயம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணனும் சிறீலங்கா அரசுக்கு காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த கடிதத்திலேயே நாராயணன் இந்து சமுத்திர பிராந்தியத்தின் உறுதித்தன்மைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.அதாவது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் பலம், அவர்களுக்கு சார்பாக மேற்குலகம் கொண்டுள்ள நிலைப்பாடுகள், சிறீலங்கா அரசின் புறக்கணிக்க முடியாத இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் என்பன ஐக்கிய நாடுகள் சபையின் நேரடி தலையீட்டை சிறீலங்காவில் ஏற்படுத்த போதுமானது என இந்தியா அஞ்சுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் நேரடியான தலையீடு சிறீலங்காவில் இருக்குமானால் அது மேற்குலகத்தின் தலையீட்டிற்கு மறைமுகமாக வழியமைத்து கொடுத்துவிடும். அவ்வாறு மேற்குலகம் சிறீலங்காவில் கால்பதிக்குமாக இருந்தால் சிறீலங்காவில் இந்தியாவின் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததாகவே கொள்ளப்படுவதுடன், சிறீலங்காவின் இராஜதந்திர நகர்வுகளும் இறப்பு நிலையை அடைந்துவிடும்.
- வேல்ஸ் இல் இருந்து அருஷ்
Comments