வன்னி மண் என்றுமே, யாருக்குமே தலை வணங்காது நிமிர்ந்து நின்ற மண். அதனால்தான் அதற்கு ‘வணங்கா மண்' என்றும் சிறப்புப் பெயருண்டு. இன்று அந்த மண் தமிழ் மக்களின் இரத்தச் சகதியால் நனையுண்டு சிங்களப் படுகொலையாளர்களின் கால்களின் கீழே தலை குனிந்தபடி காத்துக்கிடக்கின்றது.
2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் இந்தப் போர்ப் பூமிக்கு ஒரு அமைதியைத் தேடித் தந்தது. அதற்குப் பின்னான காலத்தில் வன்னி கட்டியெழுப்பப்பட்ட வேகத்தைப் பார்த்து உலகமே வாயடைத்து நின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் பெரும் அபிவிருத்தியைக் கண்டன. இப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள், புலம்பெயர்ந்து வாழும் உறவினர்களின் நிதியுதவியுடன் புதிய பல வீடுகளை அழகாகக் கட்டினார்கள். வீதிகள் அமைத்தார்கள், ஊர்திகள் வாங்கினார்கள், வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை பூர்திசெய்து வாழ்க்கையைத் தொடங்கியபோதுதான் போர் அரக்கன் வன்னிக்குள் நுழைந்தான். மக்களின் வாழ்விடங்களை வல்வளைத்த சிறீலங்காப் படையினர் மக்களின் சொத்துக்களை சூறையாடினர்.
இன்று அந்த மக்கள் கட்டிய வீடுகள் முகாம்களாகவும், இராணுவத்தினரின் தங்குமிடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறுதான், சிறீலங்கா படைப்பிரிவின் தாக்குதல் படையணிகளின் இரண்டு டிவிசன் படையணிகள் தமிழ் மக்களின் வாழிடங்களில் ஓய்வுக்காக அமர்த்தப்பட்டுள்ளன. இதில் 58 டிவிசன் படையணியின் ஓய்வு தளமாக கிளிநொச்சியின் நகர்ப்பகுதி காணப்படுகிறது. இதில் 58 டிவிசன் படையணிகள் பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியில் விசுவமடு வரையிலும், பரந்தன் - பூநகரி வீதியிலும், பரந்தன் - ஆனையிறவு வீதியிலும் மற்றும் கிளிநொச்சி - அக்கராயன் வீதியிலும் மற்றும் இரணைமடு - முறிகண்டி வரையான பகுதிகளில் மற்றும் வட்டக்கச்சி மக்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ளனர்.
இங்கு பயிற்சி தளங்களை அமைத்துள்ளதுடன், அந்தப் பிரதேசங்களைச் சுற்றி பாரிய மண் அரண்களையும் அமைத்துள்ளனர். கிளிநொச்சி நகரில் தமிழ் மக்களின் வர்த்த நிலையங்களில் படையினரின் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொலைத்தொடர்பு சேவை நிலையங்கள், மதுபானக் கடைகள் என்பன இங்கு திறக்கப்பட்டுள்ளன. அங்கு பெண் படையினரும் நிலைகொண்டுள்ளனர். இரணைமடுகுளத்தின் கீழ் அடுத்த பிரதேசமாக தென்னைவளத்துடன் காணப்பட்ட பிரதேசம் வட்டக்கச்சி பிரதேசம். இது படை அதிகாரி தரத்திலானவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குபெரும்பாலான படை அதிகாரிகள் நிலைகொண்டுள்ளார்கள்.
இங்குள்ள மக்களின் வீடுகள் மிகவும் வசதிகளுடன் காணப்படுவதாலும், நல்ல பயன்தரு மரங்கள் நிறைந்திருப்பதாலும் இப்பகுதியை படை அதிகாரிகள் தங்களுக்கென ஒதுக்கி அங்கு நிலைகொண்டுள்ளார்கள். இதனிடையே விமானப்படையினர் கிளிநொச்சியின் நகர்பகுதியில் பாரிய முகாம் ஒன்றினை அமைத்து, உலங்குவானூர்தி தளங்களும் அமைக்கப்பட்டு செயற்படுகின்றனர். இவ்வாறு படையினர் தங்களுக்கான தளங்களையும், நிலைகளையும் கட்டியமைத்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணில் எவ்வாறு குடியமர அனுமதிக்கப்படப் போகின்றார்கள்?. கிழக்கில், யாழ்குடாவில் மேற்கொள்ளப்பட்டது போன்று உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பெரும் பகுதிகள் படையினரின் நிரந்தரமான வசிப்பிடமாக்கப்படும்.
எஞ்சியிருக்கும் பகுதிகளில் மக்களை குடியமர்த்தினாலும், படையினரின் முகாம்களுக்கு அண்மையாகத்தான் குடியமர்த்துவார்கள். இங்கு மக்களிடையே காணப்படும் படையினர் ஓய்வில் விடப்பட்ட படையணிகள், அதாவது றிசேவ் படையணி, இவர்கள் ஒய்வில் இருக்கும் போது என்ன என்ன செய்வார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவர்களுக்கு மத்தியில் தமிழ்ப் பெண்கள் அங்கு எவ்வாறு நடமாடுவது?
அதைவிட இன்னுமோர் விடயம் இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியது. கிளிநொச்சி நகரில் பல மதுபானக்கடைகள் உள்ளமை. 58 டிவிசன் படையணி மன்னாரில் கட்டுக்கரை, பாலைக்குழி பகுதிகளில் இருந்து படை நடவடிக்கையில் ஈடுபட்டது. அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் பாரிய அடியினை வாங்கி அழிந்துபோகும் நிலையில் இருந்தது.
பின்னர் சீர் செய்யப்பட்ட இந்த 58வது டிவிசன், முழு ‘வெறி'யுடன்தான் தாக்குதலில் ஈடுபடும் ஒரு டிவிசன் படை அணி என்பது அன்று விடுதலைப் புலிகளால் மன்னார் களமுனையில் நன்கு உணரப்பட்டிருந்தது. இவர்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் வாழ்வதென்பது எதிர்காலத்தில் எவ்வாறான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குப் புரியும்.
மேலும் பல கிருசாந்திகள் கிளிநொச்சி மண்ணில் வேர் விடுவார்கள் என்பது உண்மையாகும். 53வது டிவிசன் மாங்குளத்தை தளமாக கொண்டு ஓய்வெடுக்கிறார்கள். சிறீலங்காப் படைப்பிரின் இரண்டு படையணிகள் றிசேர்வ் படையணிகளாக மற்றப்பட்டுள்ளன. அதில் ஒன்று 58 டிவிசன் மற்றது 53 டிவிசன். இதில் மாங்குளத்தில் 53 டிவிசன் காணப்படுகிறது.
53வது டிவிசன் படையணியினை எடுத்துகொண்டால், யாழ், முகமாலை களமுனையில் நின்று விடுதலைப் புலிகளிடம் அடிவாங்கி அடிபட்டு இழுபறிபடப்ட படை அணியாக காணப்பட்டது. தற்போது படையினர் புதிதாக இணைக்கப்பட்டு இப்படையணி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நிலங்களை வல்வளைக்கும் இறுதிப்போரில் இந்த இரண்டு படையணிகளும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டன. இருந்தாலும் இவ்விரு படையணிகளிலும் உள்ள பெரும்பாலான படையினர் இறந்தும், ஊனமாகிய நிலையிலும் தான் இவ்விரு படை அணிகளும் சிறீலங்கா தரைப்படை தளபதியால் றிசோவ் படையணியாக அறிவிக்கப்பட்டு, தங்குதளங்களும் அறிவிக்கப்பட்டன. 53 டிவிசன் முகமாலை, வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம், விசுவமடு, உடையாத்கட்டு, சாலை, புதுக்குடியிருப்பு, மாத்தளன், பொக்கனை, முள்ளிவாய்கால்வரை சமராடிய டிவிசனாக காணப்படுகிறது.
இவர்கள்தான் மாங்குளத்தில் நிலைகொள்ளப்போகிறார்கள். மாங்குளம் - ஒட்டிசுட்டான் வீதியிலும், மாங்குளம் - மல்லாவி வீதியிலும் மற்றும் மல்லாவி - துணுக்காய் பகுதிகளிலும் மாங்குளம் - கொக்காவில் ஏ9 வீதியிலும் புளியங்குளம் - மாங்குளம் வரையான வீதியிலும் மற்றும் மக்களின் கட்டடங்களிலும் படையினர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதனிடையே இவர்களுக்கான பயிற்சி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சூட்டுப்பயிற்சி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏன்? மாங்குளம் சந்தியில் படையினரின் தொலைத்தொடர்பு கடை, குளிர்பான, மதுகடைக் எல்லாம் திறந்து செயற்படுகின்றன. இவ்வாறு இருக்கையில் மாங்குளத்திற்கு அண்மிய இடம் ஒன்றில் குறிப்பிட்ட அளவு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். அதாவது சொந்த வீடுகள் இவர்களுக்கு இருக்க வெறும் காணிகளில் தறப்பாள்கள், கொட்டகைகளுக்குள் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான படையினரின் நிலைப்பாடுகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் எவ்வாறு குடியிருப்பது? பெண்களுக்கு பாதுகாப்பு ஏது? வீதிகள் எங்கும் 100 மீற்றருக்கு ஒருகாவலரண் காணப்படுகிறது. காவலரண் ஒன்றில் 5 படையினர் வரை நிலைகொண்டுள்ளார்கள். இவர்கள் சும்மாவா இருக்க போகிறார்கள்? என்பதை உணர்ந்து பாருங்கள். அடுத்த கட்டமாக விடுதலைப் புலிகளின் இரணைமடு விமானத்தளம் சிறீலங்காப் படையின் விமானப் படைபிரிவினர் விஸ்தரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை வடபகுதியின் மிகை ஒலிவிமானங்கள் இறங்கி ஏறக்கூடிய தளமாக மாதற்றம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறாயின் இவற்றுக்கொல்லாம் பாதுகாப்பு என்பது வேண்டுமென்பதற்காக தான் மாங்குளம் அபிவிருத்தி மேற்கொள்ளப்படபோகிறது.
படையினரின் பாதுகாப்பு என்பது அங்கு எப்போதும் கேள்விக்குரியதொன்றாகவே விளங்குகிறது.அடுத்து கொக்காவில் பகுதியில் சிறீலங்கா அரசு தொலைக்காட்சி சேவை மற்றும் வானொலி சேவைக்கான கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாண மக்களும் வன்னியில் குடியமர்த்தப்பட்டால், அவர்களின் தொலைத்தொடர்பு இலகுவிற்காக இவை அமைக்கப்படுவதாக சிறீலங்காப்படை அறிவித்துள்ளது. இவற்றுக்கொல்லாம் பாதுகாப்பு தேவை என்பதற்காகத்தான் சிறீலங்கா அரசு மக்களை குடியமர்த்தலாம். மக்களை குடியமர்த்துவதற்கு முதலில் அவர்களின் அடிப்படை உள்கட்டுமான வசதிகள் தேவை. அவற்றிற்காகவே இவை முதன்மை வகிக்கின்றன. வடமாகாணத்தின் தலைநகரமாக மாங்குளம் மாறுவதல்ல சிறீலங்காப் படையினரின் கவசமாகவே மாங்குளம் மாறப்போகின்றது என்பதுதான் உண்மை.
-சுபன்-
நன்றி:ஈழமுரசு
Comments