தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்மக்களின் உரிமைப்போரும்


முள்ளிவாய்க்கால் இறுதிச் சமருக்குப் பின்னர் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெறுமை நிலை தோன்றியிருக்கிறது.

விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக நம்பியிருந்த மக்கள்- அடுத்து என்ன செய்வதென்ற குழப்பத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

அவ்வப்போது இந்த வெறுமை நிலையையும், குழப்பத்தையும் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்னமும் உருப்படியான பலனைத் தரவில்லை.

அதேவேளை இந்த வெறுமை நிலையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளிலும் தமிழ் மக்களுக்குத் தாமே தலைவர்கள் அல்லது வழிகாட்டி என்ற தோரணையிலும் பல்வேறு தரப்புகளும் களம் இறங்கியிருப்பது வெளிப்படை.

தமிழ் மக்களின் உரிமைகளை மீட்பதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தப்பட்டடு அது பின்னடைவைச் சந்தித்த பின்னர்- அரசியல் ரீதியான போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்தக் கட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் வழிகாட்டுதல்களை வழங்கக்கூடிய தலைமைத்துவக் கட்டமைப்பு ஒன்று இருக்க வேண்டியது அவசியம்.

தற்போதுள்ள வெறுமை நிலையைப் பயன்படுத்திக்கொண்டு தமிழர்களின் பிரதிநிதிகள் தாமே என்று மூடிசூடிக் கொள்ளும் முயற்சியில் ஒரு தரப்பும்- தேசிய அரசியலுக்குள் கலந்து விட்டால் எல்லாவிதமான உரிமைகளையும் பெற்று விடலாம் என்று ஆசைகாட்டும் மற்றொரு தரப்புமாக இப்போது கிளம்பியிருக்கின்றன.

குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை விஸ்தரிப்பதற்கு சில கோடரிக்காம்புகள் முயற்சிக்கின்றன.

இவர்கள் தேசிய அரசியலுக்குள் தமிழ் மக்கள் வரவேண்டும் என்றும் அப்படி வந்தால் உரிமைகளைப் பெறலாம் என்றும் போதையூட்டுகின்றன.

இன்னொரு பக்கத்தில் அரசாங்கத்துக்கு கால்பிடித்து விடும்- சாமரம் வீசும் அரசியல் கட்சிகள், புலிகள் போய்விட்டார்கள், இனிமேல் எங்களோடு வாருங்கள், சரியான அரசியல் தீர்வைத் தருகிறோம் என்கிறார்கள்.

ஆனால் அவர்களே உருப்படியாகத் தனித்து நிற்க முடியாதிருக்கும் போது- அவர்களை நம்பி ஒட்டுமொத்தத் தமிழர்களும் செல்வது எந்த வகையில் பொருத்தமானதென்பது தெரியவேயில்லை.

மற்றொரு புறத்தில் ஏதோ தமிழ் மக்கள் தான் இனவாதம் பேசுவது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

புலிகளுடன் தமிழ் இனவாதம் செத்து விட்டதாகக் கூறும் இவர்களுக்கு- யார் இனவாதத்தைக் கிளப்பியது என்றோ, யாருடைய இனவாதம் மனித வேட்டையாடியதென்றோ தெரியாது போலிருக்கிறது.

காலம் காலமாக- 1958இல், 1977இல், 1983இல் என்று இனக்கலவரங்களின் போது தமிழ் இனவாதம் இருந்ததா? 1983இல் தான் புலிகள் இருந்தார்கள். அதற்கு முன்னர் புலிகள் இல்லாமல் தானே தென்னிலங்கையில் இருந்து தமிழர்கள் விரட்டப்பட்டார்கள். தமிழ் இனவாதம் பேசுவதாகக் கூறி தமிழர்களை அடக்கும் சதியே இது.

சிங்களப் பேரினவாதத்துக்கு முகமூடி போட்டுப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியே இது. இப்படிப்பட்டவர்களின் மத்தியில் தமிழ ;மக்களின் போராட்டத்தை முன்கொண்டு செல்வதும், உரிமைப் போராட்டத்தை வலுப்பெற வைப்பதும் முக்கியமான தேவைகளாக உள்ளன. இந்தக் கட்டத்தில் யாரை நம்பி தமிழ் மக்கள் முன்னே செல்ல முடியும் என்ற கேள்வி எழுகிறது.

அண்மையில் நடந்த யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கணிசமான வாக்குகள் கிடைத்தன.

பல்வேறு பிரசாரங்கள், அழுத்தங்கள், கெடுபிடிகள், மோசடிகளுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகள் தமிழ்த் தேசியத்தின் மீதான மக்களின் பிடிமானத்தை வெளிப்படுத்தியது.

தமிழ்த் தேசியம் செத்துப் போய் விட்டதாகக் கூறி- ஒப்பாரி வைத்தவர்களுக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில் இந்தத் தேர்தல் முடிவு அமைந்திருந்தது. இந்த அடியினால் அரசாங்கமே அரண்டு போயிருக்கிறது.

வடக்கில் அடுத்தடுத்து உள்ளுராட்சி, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் கனவுடன் இருந்தது சிங்கள அரசு.

இந்தப் பின்னடைவுக்குப் பின்னர் அந்தத் தேர்தல்கள் குறித்து அரசு வாய் திறப்பதேயில்லை. இப்போதுள்ள நிலையில் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே நம்பியிருக்க வேண்டியதொரு நிலை உருவாகியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பொருத்தமானதொரு அமைப்பு தானா அல்லது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டதை முன்னெடுப்பதற்கான தகைமை அதற்கு உள்ளதா என்று முதலில் பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புத் தான் இது. அதேபோன்று புலிகளின் தலைமைத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பும் கூட.

இந்த வகையில் தமிழ் மக்களின் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான தகைமை இதற்கு உள்ளது. அதேவேளை மக்களாதரவு இதற்கு இருப்பது மேலதிக தகைமை.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற முரண்பாடுகளும், பூசல்களும் அதனை மக்கள் மத்தியில் செல்வாக்கற்ற அமைப்பாக மாற்றி விடும் ஆபத்தும் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுவான கட்டமைப்பாக பேணிக் கொள்வதற்கு உகந்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதுள்ளது கவலைக்குரியது.

அதேவேளை, எப்படி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற தொனியிலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் பேசி வருவது மக்கள் மத்தியில் ஒருவித மாயையை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது.

மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு அதரவு கொடுக்க கூட்டமைப்பு முயற்சி என்பது போன்ற தொனியில் வெளியாகும் செய்திகளின் உட்கருத்துகள் நியாயமானவையாக இருக்கலாம்.

என்றாலும்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமை மகிந்தவுக்குக்கோ அவரது அரசுக்கோ ஆலவட்டம் பிடிப்பதல்ல என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

வெறும் பானையை வைத்திருக்கும் மகிந்தவிடம் இருந்து உருப்படியான அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியாது.

13 ஆவது திருத்தம் என்றார். பிறகு 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாலும் சென்ற தீர்வு என்றார். இப்போது என்னவென்றால், 13 ஆவது திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களையே பிடுங்கப் போகிறாராம். இதுதான் மகிந்தவின் கடைசி நிலைப்பாடு. மகிந்தவிடம் சொந்தமாக ஒரு அரசியல் தீர்வுத் திட்டமும் கிடையாது.

இந்த நிலையில் அவரிடம் இருந்து தீர்வுத் திட்டத்தை எதிர்பார்ப்பதும், திருப்திகரமான தீர்வு என்றால் அவருக்கு ஆதரவளிப்பதாகப் பிரசாரம் செய்வதும் அபத்தமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பல கடமைகள் உள்ளன. அவர்கள் முதலில் அதை மறந்து விடக்கூடாது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கான கோட்பாடுகளை மறந்து விட்டு எப்படியெல்லாம் மகிந்தவின் ஆட்சிக்கு முண்டு கொடுக்கலாம் என்று பேசித் திரிவது முட்டாள்த்தனம். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரின் அபிலாசைகளை மறந்து விட்டது- பாதை மாறிவிட்டது என்று கூறவரவில்லை. அத்தகைய நிலைக்குச் செல்லக் கூடாதென்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்ற கடமைகளை அது சரியாக நிறைவேற்றத் தவறினால் தமிழ் மக்களிடத்தில் இருந்து அது விலகி நிற்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போதைய வெறுமை நிலையை நிரப்ப எத்தனையோ சக்திகள் முயற்சிக்கின்றன.

சலுகைகள் அள்ளி வீசப்படுகின்றன. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் உரிமைகள் விலை பேசப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.

சலுகைகள் வழங்கப்பட்டாலும் தமிழருக்கு உரிமைகளை வழங்க அரசு தயாரில்லை. அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு வெளியே வந்து சுதந்திரமாக நடமாட முடியாது. தமது சொந்த நிலத்தில் குடியமரும் சுதந்திரமும் கிடையாது.

திறந்தவெளிச் சிறையான யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவத்தின் அனுமதியின்றி யாருமே வெளியே செல்ல முடியாது. சலுகைகளைக் கொடுத்து தமிழ்மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற முயற்சிகளிலேயே அரசாங்கம் சார்ந்த சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன.

இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிதாக எதையும் செய்து விட்டதாகத் தெரியவில்லை. இன்னமும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதற்குத் தயார்படுத்துகின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைபடபு சுறுசுறுப்போடு செயலாற்றுவதையும் காண முடியவில்லை.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதல்ல முக்கியம். தமிழ்த் தேசியம் தோல்வியதைத் தழுவி விடக் கூடாதென்பதே முக்கியமானது.

புலிகளால் அங்கீகரிக்கப்பட்டதென்ற ஒரே காரணத்தினால் தான் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள். அந்த ஆதரவைத் தொடர்ந்து தக்க வைப்பதிலும் சரி- தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கைத் தக்க வைப்பதிலும் சரி கூட்டமைப்பு முழு முயற்சிகளில் இறங்க வேண்டும்.

பலமான நிலையில் இருந்தால் தான் அடுத்த நாடாளுமன்றத்திலும் தமிழ் மக்களின் பலத்தை உணர்த முடியும். மாறாக அடுத்த தேர்தலில் சறுக்கினால் தமிழ்மக்கள் விலை பேசப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதை உணர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதே செயலாற்ற வேண்டும்.

இப்போதைய வெறுமை நிலையில் தமிழ்த் தேசியத்தைத் தோற்கடிக்க செய்யப்படும் சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பதே கூட்டமைப்புக்கு இருக்கும் முக்கிய கடமை.

இந்த நோக்கங்களை அடையத் தவறினால்- அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டும் பாதகமாக அமைந்து விடாது. தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கும் ஆபத்தாக மாறிவிடும்.

நன்றி: நிலவரம்

Comments