ஈழத்தமிழர் கண்ணீரால் நிரம்பியுள்ள இந்தோனேஷியக் கடல்

இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி படகில் சென்று கொண்டிருந்த 260 ஈழத்தமிழர்கள் இந்தோனேஷியக் கடற்படையினரால் நடுக்கடலில்வைத்துப் பிடிக்கப்பட்டு இந்தோனேஷியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட விடயம் ஆஸ்திரேலியாவில் பாரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறு இந்தோனேஷியாவிலிருந்து படகு ஒன்று புறப்பட்டு ஆஸ்திரேலியா வந்து கொண்டிருப்பதாகவும் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் நேரடியாக இந்தோனேஷிய அரச தலைவருக்குத் தொலைபேசி மூலம் அறிவித்து உள்நாட்டில் மேற்கொண்ட அரசியல் ஸ்டன்ட் அவரது அரசை பூமராங் போல திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளது.


srilanka8-600x400
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியக் கடற்படையினரால் கடலில் வைத்துப் பிடிக்கப்பட்ட 260 ஈழத்தமிழர்களுடனான படகு இந்தோனேஷியக் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே படகிலிருந்தவர்கள் தம்மை சிறிலங்காவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பவேண்டாம் என்று கோரி உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொண்டு அது முடிவுக்கு வந்து தற்போது அவர்களை ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்புடன் பதிவு செய்து அவர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், இவ்வாறு வந்தவர்களை ஆஸ்திரேலியா ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பாக சிறிலங்காவிலிருந்து வந்த தமிழ்ர்களை ஆஸ்திரேலிய பிரதமர் இவ்வாறு இன்னொரு நாட்டிடம் காட்டிக்கொடுத்து கைது செய்யக்கோரியது அநியாயமான அரசியல் அக்கிரமம் என்றும் ஆஸ்திரேலிய மக்களும் ஆஸ்திரேலிய ஊடகத்தினரும் அரசுக்கு எதிராக வசைபாடத் தொடங்கியிருக்கிறார்கள்.

"மனித உரிமைகளை மதிக்காத நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா இன்று உச்சத்தில் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த போர் ஒன்றை முடித்துவிட்டு, இராணுவத்தினரால் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும் முள்வேலி முகாம்களுக்குள் தனது சொந்த நாட்டு மக்கள் மூன்று லட்சம் பேரைத் தடுத்துவைத்து பெருங்கொடுமை புரிந்துவருகிறது. அங்கே பணிபுரிவதற்கு வெளிநாட்டுத் தொண்டு அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பணிபுரிந்த பல அமைப்புக்கள் அரசினால் வெளியேற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகங்கள் அங்கே சென்று அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் செய்தி வெளியிட அனுமதி மறுக்கப்பட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டுள்ளார்கள். போர்க்குற்றம் புரிந்த நாடாக குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டு அரசின் மீது பன்னாட்டு அமைப்புகளும் அது தொடர்பாக வழக்கைத் தொடர்வதற்கு ஆயத்தமாகிவருகின்றன. சிறுபான்மை மக்களான தமிழர்கள் போர் முடிந்த பின்னரும் அங்கே பெரும் கொடுமைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.
1_srilanka4-600x400
"இவ்வாறு இருக்கையில், இப்படியான ஒரு அரசு தான் நினைத்தவாறு போர் தொடுத்து பாரிய மனித உரிமைமீறல்களை மேற்கொண்டு மிகப்பெரிய மனிதப்பேரவலத்தை நடத்தும்போது, "சிறிலங்கா நிலைவரத்தை ஆஸ்திரேலியா தீவிரமாகக் கண்காணித்து வருகிறது, அங்கு இடம்பெறும் சம்பவங்கள் குறித்து ஆஸ்திரேலியா ஆழ்ந்த கவலை கொள்கிறது" என்ற கண்துடைப்பு அறிக்கைகளை விடுத்து தன்பொறுப்புக்களைத் தட்டிக்கழித்த ஆஸ்திரேலிய அரசு -

"இன்று, அந்த போரின் உஷ்ணம் தாங்க முடியாமல் அங்கிருந்து அகதிகளாக பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு வரும்போது அதனை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுகிறதே. இது என்ன நியாயம்? உண்மையிலேயே ஆஸ்திரேலியப் பிரதமருக்கு இது விடயத்தில் அக்கறை இருந்திருந்தால் - அந்த மக்களின் மீது மட்டுமல்லாமல் இவ்வாறு சிறிலங்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்ற கரிசனை இருந்திருந்தால் - சிறிலங்கா அரச அதிபருக்கு தொலைபேசி எடுத்திருப்பாரே தவிர இந்தோனேஷிய அரச அதிபருக்குத் தொலைபேசி எடுத்திருக்கமாட்டார்.

" ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் தற்போது மேற்கொண்டிருப்பது தனது அரசியல் இருப்பைப் பலப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பவாத நடவடிக்கையே ஆகும்" - என்று விமர்சித்திருக்கும் ஆஸ்திரேலிய ஊடகங்கள், அதற்கு என்ன காரணம் என்பதையும் எடுத்துக்கூறியுள்ளன.

அதாவது, தற்போது ஆட்சியிலிருக்கும் கெவின் ரட் தலைமையிலான ஆளும் தொழிற்கட்சி சில வேளைகளில் இந்த ஆண்டு இறுதியில் திடீர் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆகவே, அந்தத் தேர்தலில் கெவின் ரட் தலைமையிலான அரசை விமர்சித்து ஆட்சியை பிடிப்பதற்கும் மக்கள் முன் தமது பலத்தை எடுத்துக்கூறுவதற்கும் எதிர்க்கட்சியாக குடியரசுக்கட்சிக்கு போதிய பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. நாட்டின் பொருளாதாரம் உட்பட முக்கிய விடயங்கள் அனைத்திலும் கெவின் ரட் தலைமையிலான அரசு தற்போது நேர் சீராகவே நாட்டை வழிநடத்திவருகிறது. ஆனால், அண்மைக்காலமாக சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகை ஆஸ்திரேலியாவுக்குள் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் மெல்ல மெல்லப் புலம்பத் தொடங்கியிருந்தன. இந்த ஆண்டு ஆரம்பம் முதல் சுமார் 32 படகுகளில் 1800 க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்குள் வந்துவிட்டதாக புள்ளிவிவரங்களுடன் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் துள்ளிக்குதிக்கத் தொடங்கிவிட்டன.
1_srilanka5-600x400
" கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. எதிர்க்கட்சிகளின் இந்தப் பிரசாரம் பூதாகாரமாகி மக்கள் நம்பிவிடும் விடயமாக திரிபுபடுத்தப்பட்டு தனது ஆட்சிக்கு ஆப்பு வைக்கும் விவகாரமாக மாறிவிடுமோ என்ற பீதியிலிருந்த பிரதமர் கெவின் ரட், இந்த விடயத்தில் தான் கறாரான பேர்வழி என்று மக்களுக்குக் காண்பிப்பதற்கு இந்த 260 ஈழத்தமிழர்களுடன் வந்த படகு விவகாரத்தைக் கையிலெடுத்தார். துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதாக நினைத்துக்கொண்டு அவர் மேற்கொண்ட காரியம் இன்று நாட்டுமக்களாலேயே தாறு மாறாக விமர்சிக்கப்படும் காரியமாகிவிட்டது." - என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் அரசை ஒரு காட்டு காட்டத் தொடங்கியுள்ளன.

ஆஸ்திரேலிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் செய்தி இணையத்தளங்கள் அனைத்தும் இவ்வாறு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 260 பேரை ஆஸ்திரேலிய அரசு ஈவிரக்கமின்றி இன்னொரு நாட்டிடம் காட்டிக்கொடுத்து தனது கைகளைக் கழுவிவிட்டது என்று விமர்சித்திருப்பதற்கு அப்பால், அந்த அகதிகள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பது கூடவா அரசுக்குத் தெரியாது என்று சீற்றமடைந்து, சிறிலங்கா என்ற நாட்டரசின் மீதான தமது வெறுப்பையும் வெளிக்காட்டியிருக்கின்றன.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, சட்டவிரோத குடியேற்றவாசிகளாவின் வருகை அதிகரித்திருப்பதாக வாய்க்கு வக்கனையாக எதிர்கட்சிகள் அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்தவுடன் அதற்கு அஞ்சி அரசும் தனது கொள்கைகளைச் சுயநல அரசியலிற்குள் புதைத்துவிட்டு, நடுக்கடலில் வைத்து இவ்வாறான ஒரு காரியத்தை மேற்கொண்டு மனிதாபிமான விவகாரத்தை அரசியல் விவகாரமாக மாற்றியிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

ஏனெனில், இந்த எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டு எந்தவகையில் நியாயம் என்று புள்ளிவிவர ரீதியாக பார்க்கப்போனால், 2007 - 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில்

60 மில்லியன் சனத்தொகையும் 3 லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவும் கொண்ட இத்தாலியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் வருகை 122 வீதத்தால் அதிகரித்துள்ளது.

4.5 மில்லியன் சனத்தொகையும் 3.9 லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவும் கொண்ட நோர்வேயில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் வருகை 121 வீதத்தால் அதிகரித்துள்ளது.

16 மில்லியன் சனத்தொகையும் 42 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவும் கொண்ட நெதர்லாந்தில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் வருகை 89 வீதத்தால் அதிகரித்துள்ளது.

7.5 மில்லியன் சனத்தொகையும் 41.2 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவும் கொண்ட சுவிற்சர்லாந்தில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் வருகை 53 வீதத்தால் அதிகரித்துள்ளது.

33 மில்லியன் சனத்தொகையும் 10 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவும் கொண்ட கனடாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகை 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.

ஆனால், 22 மில்லியன் சனத்தொகையும் 7.6 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவும் கொண்ட ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகை வெறும் 19 வீதத்தால் மாத்திரமே அதிகரித்துள்ளது.

அதுவும், ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களில் சராசரியாக 7 சதவீதமானவர்கள் மாத்திரமே கடல்மார்க்கமாக படகுகளில் வருகிறார்கள். 90 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் விமானநிலையங்கள் ஊடாகவே நாட்டிற்குள் வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு 43 படகுகளில் 5516 பேர் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தனர். அப்படியிருக்கையில், இந்த ஆண்டு - தற்போது முடியும் தறுவாயில் - ஒக்டோபர் வரையில் - 1800 பேர் மாத்திரமே சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்திருப்பதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடுப்பகுதி முதல் உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ள இரண்டு சம்பவங்கள் ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் வருகையை அதிகரித்துள்ளன. ஒன்று, ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ள வன்முறைகள். மற்றையது, சிறிலங்கா அரசின் கொடூர யுத்தம். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வந்த ஆப்கானிஸ்தான் மக்களின் எண்ணிக்கை 85 சதவீதத்தாலும் சிறிலங்காவிலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்களின் எண்ணிக்கை 25 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.srilanka2-600x400

மேற்படி, புள்ளிவிவரங்கள் ஆஸ்திரேலியா இன்னமும் இறுக்கமான குடிவரவுக் கொள்கையைக் கடைப்பிடித்துவருகின்றது என்பதைத் தெளிவாகக் காண்பிக்கிறது. ஆகவே, தற்போதைய அரசு அண்மையில் படகில் வந்த ஈழத்தமிழ் மக்களின் விடயத்தில் காண்பித்திருக்கும் அணுகுமுறை அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டது.

இந்தோனேஷியாவில் தற்போதுள்ள 260 ஈழத்தமிழர்களையும் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பாது வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பி அங்கிருந்து படிப்படியாக அவர்கள் போக விரும்பும்நாடுகளுக்கு உரிய முறையில் அகதிவிண்ணப்பங்களை மேற்கொள்ளும் படிமுறைகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தாபனம் நடவடிக்கை எடுக்கப்போவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்த அகதிகளை சுமாத்ரா தீவில் தற்காலிகமாகத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்போவதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.

இதுஇவ்வாறிருக்க, இந்த 260 பேரில் விடுதலைப்புலிகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருப்பதாகவும் அவர்களை விசாரிப்பதற்கு தமக்கு அனுமதி அளிக்கவேண்டும் எனவும் சிறிலங்கா அரசு இந்தோனேஷியாவிடம் கோரவுள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவித்திருக்கின்றன. இதுவிடயத்தில், தற்போது பன்னாட்டுச் சமூகம் பாரிய பொறுப்பாளிகளாகியுள்ளனர்.

சிறிலங்காவிலிருந்து அந்நாட்டு அரசின் கொடூர போர்க்கரங்களிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் தப்பி தமது உயிரைக் கையிற் பிடித்துக்கொண்டு தமது சொத்துக்களை விற்றுப் பணம்கொடுத்து இந்த 260 பேரும் பயங்கரமான ஒரு பயணத்தில் குதித்து இன்று இந்தோனேஷியாவில் நிர்க்கதியாக நிற்கிறார்கள். உயிர்வாழ வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம்வைத்து இவர்கள் மேற்கொண்ட பயணம் தற்போது இலக்கின்றிய கப்பலாக இடைநடுவில் நிற்கிறது. இந்நிலையில், மீண்டும் அந்த மக்கள் அதே கொடுமையாளர்களின் கைகளில் அகப்படாமல் உறுதிசெய்துகொள்வது மனித நேயம் கொண்ட அனைத்துத் தரப்பினதும் பொறுப்பாகும்.

ஈழநேசன்

Comments