ஈழத்தமிழரின் ஆயுதவழியிலான விடுதலைப்போராட்டமானது வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், அடுத்தகட்ட முன்னெடுப்புக்கள் பற்றி பல விவாதங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கும் நிலையில் அவைபற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த ஆயுதப் போராட்டமானது ஒவ்வொரு தமிழரிலும் தேசிய உணர்வை ஆழமாக விதைத்துள்ளது. முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளின் ஈகமும் ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் இழப்பும் விடுதலைக்கான எழுச்சியை வீச்சாகியிருக்கிறது. ஆனால் இவ்வளவு ஈகத்திற்கும் இழப்புக்கும் பின்னர் அடுத்தகட்டத்தை நோக்கிய நகர்வில் எவ்வாறு எம்மைச் செம்மைப்படுத்திக்கொள்வது என்பது முக்கியமானது.
தமிழீழம் என்ற இலட்சியத்தை முன்னெடுத்துவந்த விடுதலை போராட்டத்தை தமிழர்களின் கொடியான புலிக்கொடியின் கீழேயே அணிவகுத்து வந்திருக்கிறோம்.
தற்போது ஆயுதவழி போராட்டமானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் அரசியல்வழியிலேயே போராட்டத்தை முன்னெடுக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
மீண்டும் ஓர் ஆயுதவழியிலான போராட்டம்தான் ஈழத்தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கவேண்டுமா என்பதை சிறிலங்கா ஆட்சியாளர்களே முடிவுசெய்யவேண்டும்.
ஈழத்தமிழர்களின் அரசியற்பலம் என்பது இராணுவவலிமையின் அடிப்படையிலேயே இதுவரை கட்டமைக்கப்பட்டிருந்தது. குறித்த இராணுவவலிமை சிதைக்கப்பட்ட நிலையில் புதிய கட்டமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் தமிழர்களின் அரசியல் பலத்தைக் கட்டியெழுப்பமுடியும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. இங்கு புதிய கட்டமைப்புக்கள் என்பது சர்வதேச நியமங்களுக்குட்பட்ட கட்டமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் புலம்பெயர் தமிழர்கள் எல்லோரையும் உள்வாங்குவதற்கே என்பதையும் புதிய கட்டமைப்புக்களுக்கான குறிக்கோள்கள் என்பது சனநாயக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு எமது விடுதலைக்கான இலட்சியங்களைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கே என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதனைவிடுத்து புதிய அமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் மட்டும் தமிழர்களின் பலத்தை வெளிப்படுத்தி எமது பிரச்சனைகளை வெளியுலகத்திற்குக் கொண்டுசென்று நீதிகேட்க முடியும் என நினைத்தால் அது மிகவும் தவறான கணிப்பாகவே இருக்கும். தமிழர்களுக்காக யார் குரல்கொடுத்தாலும் அவர்கள் புலிகளாகவே கணிக்கப்படுவார்கள்.
தமிழீழத் தனியரசுக்கான போராட்டம் என்பது விடுதலைப்புலிகளாலோ அல்லது அதன் தலைவர் வே. பிரபாகரன் அவர்களாலோ முன்மொழியப்பட்டு தொடங்கப்பட்ட போராட்டம் அன்று.
1972 இல் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டபோது அதனுடைய பெயர் ”புதிய தமிழ்ப் புலிகள்” எனத்தான் இருந்தது. அதனுடைய கொள்கை என்பதும் இனவிடுதலைக்கான ஆயுத போராட்டமாகவே முன்னெடுக்கப்பட்டது.
1972 இல் சிறிலங்கா பாராளுமன்றத்தால் அமுல்படுத்தப்பட்ட புதிய யாப்பு தமிழர்களை தொடர்ந்து இரண்டாம் தர மக்களாக நடத்தியதுமே தமிழீழத் தனியரசு என்ற எண்ணக்கரு மீண்டும் உருவாகக் காரணமானது. சனநாயக விழுமியங்களுக்கு அமைவாக 1976 ஆம் ஆண்டு மேமாதம் 14 ஆம் திகதி ஒருமனதாக பிரேரிக்கப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனம் தமிழீழம் என்ற தனியரசே தமிழர்களுக்கான வழியாக குறிப்பிட்டது.
சனநாயக பண்புகளுக்கு அமைவாக ஈழத்தமிழ் மக்களால் ஆதரவளிக்கப்பட்ட தமிழீழ தனியரசு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அதனை வென்றெடுப்பதற்காக ”தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பு 1976 ஆம் ஆண்டின் அதே மாதத்தில் மீள்கட்டமைப்பு செய்யப்பட்டது. அப்போதிருந்தே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழீழம் என்ற கோட்பாட்டில் உறுதியாக தனிநாட்டுக்கான விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது. அந்த வீறுகொண்டெழுந்த போராட்டமே எல்லோரையும் ஓர் அணியில் திரட்டி இன்று எல்லோர் மனத்திலும் விடுதலைக்கான அவாவை ஊட்டியிருக்கிறது.
எனவே தனிநாடுதான் தீர்வென்று தமிழீழ விடுதலைப் புலிகளாலோ அல்லது வேறு ஆயுத போராட்ட அமைப்புக்களாலோ முன்மொழியப்பட்ட ஒரு முடிவு அன்று. மாறாக ஈழத்தமிழ் மக்களால் பிரகடனப்படுத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் செயல்வடிவம் கொடுத்தனர்.
தனிநாட்டுக்கான போராட்டத்தை முன்னெடுத்த அதேவேளை சர்வதேசக் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற அடிப்படைகளை ஏற்றுக்கொண்ட ஒரு தீர்வுதிட்டத்தை பரிசீலனை செய்யவும் தயாராக இருந்தனர்.
ஆயுதவழியிலான ஈழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச நாடுகள் பயங்கரவாதம் என முத்திரை குத்தின. அதனை முன்னெடுத்துவந்த புலிகளை பயங்கரவாதிகள் என கூறி தடைசெய்தன. தற்போது ஆயுதவழியிலான போராட்டம் ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. எனவே சனநாயகவழியில் எமது அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு எந்த நாடும் தடைபோட முடியாது. எமக்கு தனிநாடுதான் தேவை என சனநாயகவழியில் முன்னெடுக்கும் எந்த போராட்டத்திற்கும் வெளிநாடுகள் எவையும் தடைபோடப் போவதில்லை.
ஒரு போராட்டவடிவம் தற்போது தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. எமது மக்கள் மீதான அடக்குமுறை தொடரும் வரை எமது இலட்சியங்களை எவரும் தவறென்று சொல்லமுடியாது.
இதனை தொடர்ந்துவரும் போராட்ட வடிவங்களே தொடர்ந்து எமது உரிமைக்குரலை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
அதனைத் தவறவிட்டால் நாளைய சந்ததியும் எம்மைப்போல மீண்டும் முகவரியைத் தேடிக்கொண்டிருப்பார்கள்.
கொக்கூரான்
ஈழநேசன்
Comments
In between, turn your face to your creator asd ask help from him.
(These are from Al Quran)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
எங்கள் இறைவா! உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.
எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன்
எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்
என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக!
என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் ஆக்குவாயாக!
எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும் மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!
எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும் எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன்.
I am sure, Srilankan Tamils will achieve their freedom with the help of God very soon.
Construct your plan as per Islamic point of view, you will success. God willing.
By Mohamed