தமிழகமே விழித்தெழுந்து தெருவுக்கு வாருங்கள். ஆர்ப்பாட்டம் நடத்துங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

அமெரிக்காவைச் சார்ந்த மனித உரிமைப் போராளி டாக்டர் திருமதி. எல்லின் சாண்டர் அவர்கள் ஈழத்தில் கொலையுண்டு மடியும், வதைபட்டுச் சீரழியும் தமிழ் இனத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ஈழத் தமிழர்களுக்காக உரிமைக் குரல் கொடுக்க இந்தியாவுக்கு வருகை தர இருந்த இவருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்து விட்டது.

‘ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்! அவர்களுக்காக குரல் கொடுங்கள்!’ என்று இதயம் விம்ம வேண்டுகோள் விடுக்கும் டாக்டர் எல்லின் சாண்டர்சின் உரை திருச்சி மண்டல மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது.

இதோ, அந்த உரை...

  • டாக்டர் எல்லின் சாண்டர்சின் உரை

    “இலங்கையிலே தங்கள் இன்னுயிருக்காகப் போராடுகின்ற தமிழர்களுக்கும், அங்கே வீரமரணம் அடைந்தவர்களுக்கும் என்னுடைய உரையை அர்ப்பணிக்கின்றேன்.

நெஞ்சை உறைய வைக்கின்ற வகையில் ஜெர்மனியில் நாஜிகளால் யூதர்கள் கொல்லப்பட்டதைப் போல, தமிழர்கள் இலங்கை அரசால் கொல்லப்படுவது, தமிழர்களுக்காகப் போராட வேண்டிய கட்டாயத்தை எனக்கு ஏற்படுத்தியது.

கடந்த மே மாதம் 15ஆம் தேதி, இலங்கை அரசு பெரிய அளவிலே இராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்தி 20,000 தமிழர்களைக் கொன்று, 50,000 தமிழர்களைப் படுகாயத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

3,00,000 தமிழர்கள் தற்போது ‘பாதுகாப்பு’ முகாம்களிலே அடைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழர்கள்தான் இலங்கையின் யூதர்கள். இலங்கை அரசுதான் நாஜிகள். இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் படுகொலைக்கு ஆளானார்கள், தற்போது தமிழர்கள் படுகொலைக்கு ஆளாகி உள்ளனர்.

ஒட்டு மொத்தத் தமிழ் இனத்தையும் கண்மூடித்தனமாகத் தாக்கிக் கொன்று குவிப்பது போர்க் குற்றம் ஆகும்.

மானிப்பார்ம் முகாமை நேரடியாகக் கண்ணுற்றவர் சொல்கின்ற கூற்றுப்படி, அந்த முகாமில் தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது.

குழந்தைகள் மாசு, அழுக்கு படிந்த தண்ணீரை, கை கூப்பி அள்ளிக் குடிக்கக் கூடிய அவலநிலை. கழிவு அறைகள் போதுமானதாக இல்லை.

திறந்தவெளியில் மனிதக் கழிவுகள் கிடக்கின்றது.

மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மக்கள் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். கொடிய நோய்களான சின்னம்மையும், மஞ்சள் காமாலை நோயும் பரவிக் கொண்டு இருக்கிறது என்று ‘டைம்ஸ்’ தன்னுடைய பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு உள்ளது. இறந்து போனவரின் உடல்கள் கூடாரத்தின் நாலாப்பக்கங்களிலும் சிதறிக் கிடக்கின்றன.

வாரத்துக்கு 1400 அப்பாவித் தமிழர்கள் மடிவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தினந்தோறும் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். முகாம்களில் இருந்து இளம் பெண்களையும், மகளிரையும் பலவந்தமாக வெளியே கொண்டு செல்கிறார்கள். அவர்களில் சிலர் முகாம்களுக்கு திரும்புகிறார்கள். பலர் திரும்புவது இல்லை. அவர்களிடம் கேள்விகள் கேட்டால் நம்மைக் கொன்று விடுவார்கள்.

ஈழத்தில் இருக்கக்கூடிய தமிழர்களின் அபயக் குரல் என்ன தெரியுமா?

முகாம்களை விட்டு வெளியே செல்ல விடுதலை வேண்டும். விடுதலை வேண்டும் அவர்களை முகாம்களிலிருந்து மீட்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் அனைவரும் கடுமையாக உழைத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

தமிழ் மக்களை அழித்து ஒழிக்கின்ற இனப்படுகொலை நடவடிக்கையில் மக்கள் சிந்தும் இரத்தம், தமிழ் மண்ணை இரத்தக்கறை படிந்த மண்ணாக்கி உள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றம் புரிந்த போர்க் குற்றவாளி மகிந்த ராஜபக்சேவால், கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி, நாயைவிடக் கேவலமாகக் (கடற்கரையோரம்) சுடப்பட்டுப் படுகொலைக்கு ஆளான வீடியோ காட்சிகளைப் பார்த்தோம்.

மகிந்த ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி.

கொசொவாவின் மிலோசெவிக், சூடானின் பசீர், லிபியாவின் கடாபி புரிந்த படுகொலைகளுக்கும் ராஜபக்சே செய்த படுகொலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

யூதர்களை நாஜிகள் எப்படி படுகொலை செய்தார்களோ, அதேபோல, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய இலங்கை அரசு திட்டமிடுகிறது. இது ஒரு மாபெரும் இனப்படுகொலை.

தமிழரின் பெருமையை அழித்து ஒழிப்பது, தமிழனின் கலாச்சாரப் பெருமையை நிர்மூலமாக்குவதுதான் ராஜபக்சேவின் குறிக்கோள்.

ஒரே இனம் மட்டும் உள்ள - சிங்கள இனம் மட்டும் உள்ள - இலங்கை தேசத்தை உருவாக்க ராஜபக்சே துடிக்கின்றான். அங்கு தேர்தல் சுதந்திரமாக நடைபெறவில்லை. முகாம்களில் சிக்கி உள்ள 3,00,000 தமிழர்கள் வாக்கு அளிக்க முடியாது. பத்திரிகைகள் முடக்கப்பட்டு உள்ளன.

  • தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழனுக்கு உதவவில்லை என்றால் யார் உதவுவார்கள்? இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுது?

இலங்கை இராணுவத்தால் எத்தனை ஆயிரம் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள்? எவ்வளவு மீனவர்கள் குற்றுயிரும், குலை உயிருமாகத் தாக்கப்பட்டார்கள்?

பாசிச சிங்கள அரசு - அசுர ஆயுதபலம் கொண்ட சிங்கள அரசு - தமிழக மீனவர்களை கெளரவமாக - மரியாதையாக நடத்தும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

  • தமிழகமே விழித்தெழுந்து தெருவுக்கு வாருங்கள். ஆர்ப்பாட்டம் நடத்துங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - படக்காட்சிகளாகப் பதிவு செய்யுங்கள்.

அவர்களுக்காகக் குரல் கொடுங்கள். சொல்லொணாக் கொடுமைக்குப் பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்களே செய்யவில்லை என்றால் யார் செய்வது?

Comments